பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
30. முடி (மயிர்)
முடி என்பதனை, குஞ்சி, கூந்தல், மயிர், என்று பலவாறு கூறுவர். மயிர் என்பது இன்று ஒருவரை இழிவாக ஏசுவதற்குப் பயன்படுகின்றது. தலையில் உள்ள மயிர் நம்மைப் பாதுகாப்பதற்கு இயற்கையளித்த வரமாகும். மனிதனுக்குள்ளதைப் போன்றே பிற உயிரினங்களுக்கும் இம்மயிர் உயிர்காக்கும் கவசமாகத் திகழ்கின்றது.
தலைமுடி, தாடி, மீசை, புருவம், இமை என்று இடத்திற்கு ஏற்றாற்போன்று முடிக்குப் (மயிர்க்கு) பெயர் வழங்கப்படுகின்றது. உயிரற்ற செல்களே மயிராகும் என்று அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இம்மயிர் இரவில் வெகுவேகமாக வளர்கிறது என்று கூறுவர். இறந்த செல்களால் ஆன இம்முடியை வெட்டினால் நமக்கு வலி ஏற்படாது. பழங்காலத்தில் ஆண்கள் குடுமி வைத்துக் கொள்வர். இதற்குக் குடுமி, உச்சிக் குடுமி என்று பெயர். பெண்களின் முடியைக் கூந்தல் என்று நம்முன்னோர்கள் கூறுகின்றனர்.
சுருட்டி முடிந்த கூந்தலுக்குக் குழல் என்றும், உச்சிக்குடுமியைக் குஞ்சி என்றும் கூறுவர். வடமொழியில் இம்முடியை(மயிர்) கேசம் என்று குறிப்பிடுகின்றனர். குண்டலகேசி என்றால் சுருண்ட முடியை உடையவள் என்றும், நீலகேசி என்றால் நீண்ட முடியை உடையவள் என்றும் பொருள் வழங்கப்படுவதும் நோக்கத்தக்கது. நமது முன்னோர்கள் இம்முடியை(மயிர்) வைத்துப் பழமொழிகள் பலவற்றைக் கூறி அதன் வழியாக நமக்குப் பண்பாட்டினை விளக்கியுள்ளனர்.
மயிரும் – மலையும்
வாழ்க்கையில் முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். முயல்பவருக்கே வெற்றி கிடைக்கும். முயற்சி செய்யாது இருப்பவர்களுக்கு முன்னேற்றம் என்பது கானல் நீரே ஆகும். இயன்றவரை முயன்று பார்த்தல் வேண்டும். வெற்றி கிடைக்காவிடினும் முயற்சித்த அனுபவமாவது கிட்டும். ஒரு பெரிய செயலைச் செய்யக் கருதி அதனைச் செய்ய முயற்சித்துத் தோல்வியுற்றாலும் அதனால் குறையொன்றுமிராது. இதனை,
‘‘மயிரக் கட்டி மலையை இழுப்போம்.
வந்தா மலை. போனால் மயிரு’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
மலை என்பது அரிய செயல். அதனை இழுப்பது என்பது முயற்சித்தல். அரிய செயலைச் செய்வதற்கு முயற்சித்துத் தோல்வியுற்றாலும் அதில் எதுவும் இழப்பு ஏற்படாது என்ற வாழ்வியல் முன்னேற்றச் சிந்தனையை இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் தெளிவுறுத்தியுள்ளனர். இப்பழமொழி,
‘‘கானமுயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல்ஏந்தல் இனிது’’ (772).
என்ற திருக்குறளுடன் ஒப்பு நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது.
யாராலும் செய்ய இயலாத செயலைச் செய்ய முயன்று அது முடியாது போனாலும் அது இனிமையைத் தரும். நமது குறிக்கோள் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை இப்பழமொழி உள்ளீடாகக் கொண்டுள்ளது.
மயிரும் – சீமாட்டியும்
ஆடம்பர வாழ்வை விரும்புவோர் பலர். வரவு அதிகமாக உள்ளவர்கள் ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை வாழ்வர். வசதியற்ற வறுமையாளர்களால் சொகுசான வாழ்க்கை வாழ முடியாது. செல்வம் படைத்தவர்கள் எப்படி வேண்டுமானாலும் செலவு செய்து வாழ்க்கைய வாழலாம். ஏழைகளால் அவ்வாறு இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே வாழ முடியும். இதனை.
‘‘மயிருள்ள சீமாட்டி அள்ளியும் முடிஞ்சுக்கலாம்
அவுத்தும் விட்டுக்கலாம்’’
என்ற பழமொழி விளக்குகிறது.
செல்வம் படைத்த பெண்களைச் சீமாட்டி என்பர். அவர்கள் பணம் அதிகம் வைத்துள்ளதால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். நீளமான கூந்தலுடைய பெண்ணால் மட்டுமே விதவிதமாகக் கூந்தலை அழகுபடுத்திக் கொள்ளமுடியும். கூந்தல் இல்லாத பெண்ணால் அவ்வாறு செய்ய இயலாது. அதுபோன்றே வறுமையில் வாடும் பெண்ணும்(வறுமையில் வாடுவோரையும் குறிக்கும்) செல்வச் சீமாட்டிபோன்று நடந்து கொள்ள இயலாது. ஆடம்பர வாழ்வினை ஏழைகளால் வாழ முடியாது. அத்தகைய ஆடம்பரமான வாழ்வு தேவையற்றது என்ற வாழ்வியல் சிந்தனையை இப்பழமொழி உணர்த்துகிறது.
உயிரும் – மயிரும்
உயிர் மிகப் பெரியது. உயிர் இல்லையெனில் எவ்வியக்கமும் நடைபெறாது. ஆனால் மயிர் உயிர் இருந்தால் மட்டுமே இருக்கும் தன்மை உடையது. ஆனால் மானம் இழக்கின்றபோது உயிரைவிட்டுவிடுவர். இதனை,
‘‘மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்’’
என்று திருவள்ளுவர் தெளிவுறுத்துகிறார். தன்னுடைய உடலில் உள்ள ரோமமானது உதிர்ந்துவிட்டால் பனிப்பிரதேசத்தில் உள்ள கவரிமா என்று அழைக்கப்படக் கூடிய விலங்கு உயிரிழந்துவிடும். அதுபோன்று மானம் இழக்கும் செயல் வரின் பழிக்கஞ்சுவோர் உயிர்விட்டுவிடுவர்.
இதுபோன்றே தலையில் இருக்கும் வரைதான் முடிக்கு மதிப்பு. தலையிலிருந்து உதிர்ந்து கீழே விழுந்துவிட்டால் அது மதிப்பு இழந்துவிடும். அத்தலைமுடி போன்றோர் இழிவான செயல் செய்பவர். இத்தகையவர்களை,
‘‘தலையின் இழிந்த மயிரனையர்’’
என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். தலையில் உள்ள முடிவெட்ட வளர்ந்து கொண்டே இருக்கும். தனக்கு ஏதேனும் நன்மை விளைய வேண்டுமெனில் இறைவனிடம், ‘‘இறைவனே எனக்கு நான் நினைத்துச் செய்யக் கூடிய காரியம் கைகூடிவந்துவிட்டால் உனது கோவிலுக்கு வந்து மொட்டை போட்டுக்(முடியிறக்கிக் கொள்கிறேன்) கொள்கிறேன்’’ என்று நேர்த்திக்கடன் நேர்ந்து கொள்வர். காரியம் வெற்றிபெற்ற பின்னர் கோவிலுக்குச் சென்று முடியிறக்கி இறைவனை வழிபாடு செய்துவிட்டு வருவர்.
சிலர் இதெல்லாம் வேடிக்கையான செயல்கள் என்னால் இவ்வாறு தலையை மழித்துக்கொள்ள இயலாது என்று செய்ய மறுக்கும்போது, அடபோப்பா, ‘‘உயிரக் கொடுத்த சாமிக்கு மயிரக் கொடுத்தா என்ன கொறைஞ்சா போயிடும்’’ என்று கூறுவர். இறைவன் நமக்கு உயிரைக் கொடுத்தான். அத்தகைய அரிய உயிரைக் கொடுத்த இறைவனுக்கு வேண்டாத தலைமுடியைக் கொடுப்பதால் எந்தவிதமான குறைவும் ஏற்பட்டுவிடாது. மாறாக நன்மையே நடக்கும் என்ற மக்களின் தெய்வத்தின் மீதுள்ள நம்பிக்கையை விளக்குவதாக இப்பழமொழி அமைந்துள்ளது.
முடிக்குப்பை
வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லாத மனிதர்கள் யாருமிலர். நடந்தவை, நடப்பவை, எதிர்கொள்ள வேண்டியவை ஆகியவற்றை நாம் எதிர்கொள்ளத் தயங்கக் கூடாது. மேலும் நடந்து முடிந்தவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டு நிகழ்கால வாழ்வை இழந்துவிடக் கூடாது. அவ்வாறு நினைத்துப் பேசிக்கொண்டே இருந்தால் சிக்கல் வந்துகொண்டே இருக்கும் முடிவுறாது. அதனால் நடந்து முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும். இனி நடக்கப் போவது நல்லவையாக இருக்கட்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவர். இத்தகைய மனதிற்கு வலுவூட்டும் விதமாக,
‘‘அம்பட்டையன்(முடிதிருத்துவோர்) கடைக் குப்பையைக்
கிளறினா வெறும் மயிராத்தான் வரும்’’
என்ற பழமொழி அமைந்துள்ளது.
இப்பழமொழியானது வேறொரு சூழலையும் விளக்குவதற்குக் கூறப்பட்டு வருவது நோக்கத்தக்கது. கணவன், மனைவி இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு, கணவனை விட்டுவிட்டு மனைவியானவள் அவளது பெற்றோருடன் வாழ நேரிடும்போது, அவளைக் கணவனுடன் சேர்த்து வைக்க விரும்பும்போதோ, அல்லது கணவன் வீட்டார் வந்து அழைத்துச் செல்ல வரும்போதோ வீட்டில் இருவருக்கும் இடையில் நடந்த சச்சரவைப் பேசுவர். அப்போது யாராவது ஒருவர் முன்னர் நடந்த பிரச்சனைகளை எல்லாம் பேச முயலும்போது அவர்களைப் பார்த்து, ‘‘இந்தாப் பாருங்க முன்னால நடந்ததெல்லாம் இப்பப் பேசக் கூடாது, ‘‘அம்பட்டையன் கடைக் குப்பையக் கிளறினா வெறும் மயிராத்தான் வரும்’’ அதனால இப்ப நடக்கப் போறதப் பத்திப் பேசுங்க’’ என்று கூறிவிடுவர்.
நடந்தவைகளைத் திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருந்தால் எந்தச் செயலும் நடைபெறாது. சிக்கல் மேலும் சிக்கலாகிக் கொண்டே போகும். சுமூகமான உறவு ஏற்படாது. அதனால் பழையனவற்றை (பிரச்சனைகளை) விடுத்து அடுத்தடுத்துச் செய்ய வேண்டியனவற்றுள் கவனம் செலுத்த வேண்டும் என்று இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர் நமக்கு அறிவுறுததியுள்ளனர்.
முயற்சி செய்து பொருளீட்டி ஆடம்பர வாழ்வினைத் தவிர்த்து எளிமையான வாழ்வு வாழ வேண்டும். மேலும் நடந்த பழைய பிரச்சனைகளைப் பற்றிப் பேசாது நடக்கப் போவனவற்றில் கவனம் செலுத்தி வாழ வேண்டும் என்ற அரிய வாழ்வியல் நெறிகளை இப்பழமொழி தெளிவுறுத்துகின்றன. எளிய வாழ்வு வாழ்வோம். பெருமையுடன் வாழ்வோம். வாழ்க்கை வசப்படும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.