பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
32. பிள்ளையார்
முழுமுதற் கடவுள் என்று அனைவராலும் வணங்கப்படக் கூடியவர் யானைமுகக் கடவுளான பிள்ளையார் ஆவார். எந்தச் செயல் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் யானை முகக் கடவுளை வணங்கிவிட்டே தொடங்குவர். எல்லாச் செயல்களுக்கும் முன்னின்று நடத்திக் கொடுப்பவராக இப்பிள்ளையார் விளங்குகிறார். இப்பிள்ளையாரை யானை முகக் கடவுள், கணபதி, விநாயகர், மூசிக வாகனன் என்றெல்லாம் பல்வேறு பெயர்களையிட்டு அழைப்பர்.
பிற தெய்வங்களை வழிபடுவதென்றாலும் முதலில் கணபதியை வழிபட்ட பின்னரே பிற தெய்வங்களுக்கு வழிபாடியற்றுவர். அனைத்து மக்களின் வாழ்விலும் பிள்ளையார் இரண்டறக் கலந்து வழிபடு தெய்வமாக விளங்குகின்றார்.
கிராமம் நகரம் என்று எல்லா இடங்களிலும் இப்பிள்ளையார் வணக்கம் என்பது மக்களிடையே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்பிள்ளையாரை வைத்து மக்களிடையே பல்வேறு விதமான பழமொழிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை பிள்ளையார் வழிபாடு குறித்த நம்பிக்கை மற்றும் கதைகளை விளக்குவதாக அமைந்துள்ளன.
பிடித்து வைத்த பிள்ளையார்
பிள்ளையாரை வழிபட வேண்டும் என்றால் எப்படி வேண்டும் என்றாலும் வழிபடலாம். மண்ணாலோ, மஞ்சளாலோ, சர்க்கரையாலோ எது அப்போதைக்குக் கிடைக்கின்றதோ அதில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து மக்கள் வழிபடுவர். வெல்லத்தில் பிடித்து வைத்து வழிபட்டால் வெல்லப் பிள்ளையார், மஞ்சளில் பிடித்து வைத்து வழிபட்டால் மஞ்சள் பிள்ளையார் என்று அப்போது பிள்ளையாரை பெயரிட்டு அழைப்பர்.
வீடுகளிலும், கழனியிலும் இத்தகைய பிள்ளையாரைப் பிடித்து வைத்து வழிபட்டு தங்களது செயல்களை மக்கள் தொடங்குவர். இப்பிள்ளையார் ஒரே இடத்தில் மட்டுமே இருப்பார். இதனை வைத்து மக்கள் எங்கும் செல்லாது ஒரே இடத்தில் இருந்து கொண்டு இருப்பவரைப் பார்த்து,
‘‘பிடிச்சு வச்ச பிள்ளையாரு மாதிரி ஒக்காந்து இருக்காதே’’
என்ற பழமொழியைக் கூறி வெளியில் சென்று வா என்று கூறுவர்.
இதில் பிடித்து வைத்த பிள்ளையார் என்பது எங்கும் நகராமல் இருக்கின்ற தன்மையையே குறிக்கும். செயல்படாத தன்மை என்பது பொருள் அல்ல. ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் நோயே ஏற்படும். அதனால் சற்று வெளியிடங்களுக்குச் சென்றால் ஒருவர் மனதளவிலும் உடலளவிலும் மலர்ச்சியைப் பெறுவார். அதனால்தான் பெரியோர்கள் இவ்வாறு வெளியில் சென்று வருமாறு கூறுகிறார்கள். வாழ்க்கையில் பல்வேறு சிக்கலான விஷயங்களுக்கு முடிவெடுக்கப் பயன்படும் நடைமுறை வாழ்க்கை நெறியை இப்பழமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது.
பிள்ளையாரும் திருமணமும்
வாழ்க்கையில் திருமணம் என்பது முக்கியமான ஒன்றாகும். திருமணம் தான் ஒருவரைச் சமுதாயத்தில் ஒருவராக மாற்றுகின்றது. தனியாக வாழ்கின்ற போது ஒருவருக்கு மதிப்பில்லை. திருமணமாகி மனைவியோடு சேர்ந்து வாழ்கின்ற போதுதான் அவருக்கு மதிப்பு. சிலர் உயர்ந்த நிலையில் இருந்தாலும் அவருக்குத் திருமணம் விரைவில் நடைபெறாது. தள்ளிக் கொண்டே போகும். அது மட்டுமல்லாது சிலர் தங்களுக்கு இப்படித்தான் பெண் வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பர். அத்தகையோருக்கு அவர் எதிர்பார்க்கும் பெண் கிடைக்காது. இன்னும் சிலர் பணத்திற்கும் நகைக்கும் ஆசைப்பட்டு பணக்கார வீட்டில் பெண் எடுக்க வேண்டும் என்று கருதுவர். அவர்களுக்கும் பெண் கிடைப்பது அரிதாக இருக்கும். இதனால் அவர்களது திருமணம் தள்ளிக் கொண்டே போகும். இவர்களின் மனநிலையைப் பார்த்து,
‘‘பிள்ளையாருக்குக் கலியாணம் நடந்தாலும் நடக்குமே
தவிர ஒனக்கு நடக்காது’’
என்று கூறுவர்.
இப்பழமொழி பிள்ளையாரை வைத்து வழங்கப்பட்டு வருகின்ற பழமொழியாக அமைந்துள்ளது. பிள்ளையாருக்குச் சித்தி, புத்தி என்ற இரு மனைவிகளும், இலாபம், இலக்கம் என்ற குழந்தைகளும் உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன. ஆனால் மக்களிடையே பிள்ளையாருக்குத் திருமணம் நடைபெறவில்லை என்பது போன்ற நாட்டுப்புறக் கதை வழக்கு வழங்கி வருவதை மேற்குறித்த பழமொழி தெளிவுறுத்துகின்றது.
சிவபெருமானும், பார்வதிதேவியும் பிள்ளையாருக்குப் பெண் பார்த்தனர். ஆனால் பிள்ளையாரோ பெற்றோர் தனக்காகப் பார்த்த பெண்களைப் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார். அதன் பின்னர் சிவனும் பார்வதியும் உனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் கூறுவாயாக என்று கேட்ட போது, பிள்ளையார் தனது தாயைப் போன்று பெண் வந்தால்தான் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தார். அதற்கு சிவன் சரி நீயே அப்படிப்பட்ட பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வா உனக்குத் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறிவிட்டார். தமக்கேற்ற பெண்ணைத் தேர்வு செய்வதற்காகப் பிள்ளையார் ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமரத்தின் நிழலிலும், குளத்தங்கரை ஓரத்திலும் அதனால் தான் தங்கி இருக்கின்றார். ஆனால் பி்ள்ளையார் எதிர்பார்த்திருக்கும் பெண் இன்றுவரை கிடைக்கவில்லை. அதனால் அவருக்குத் திருமணம் நடைபெறவில்லை என்று பிள்ளையாரைப் பற்றி அதிகமான கதைகள் மக்களிடத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனை வைத்துத்தான் பிள்ளையாருக்கும் திருமணம் நடக்காதது போல் பெண்களைக் குறை கூறி வேண்டாம் வேண்டாம் என்று கூறுபவருக்கும் திருமணம் நடைபெறாது என்று மக்கள் வழக்கில் பழமொழியாகக் கூறினர் எனலாம். ஆனால் பிள்ளையாருக்குத் திருமணம் நடைபெறவில்லை என்று புராணங்கள் கூறவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். மக்களிடையே தொன்றுதொட்டு நிலவி வரும் கர்ணபரம்பரைக் கதையே பழமொழியாக வழக்கில் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது.
பிள்ளையாரும் – குரங்கும்
விநாயகப் பெருமானும், குரங்கு என்று வழங்கப்படும் அனுமனும் தமிழகத்திலும் இந்தியாவிலும் அனைத்து மக்களாலும் வழிபடப்படும் கடவுளர்களாக விளங்குகின்றனர். இவ்விரு பெருந்தெய்வங்களுக்கும் மகாபாரதத்திற்கும் தொடர்பு உள்ளது. இருவருமே மகாபாரதக் கதை மாந்தர்களாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தொடர்பு படுத்தி,
‘‘பிள்ளையார் பிடிக்கக் குரங்கா முடிஞ்ச கதைதான்’’
என்ற பழமொழி மக்களிடையே வழங்கப்பட்டு வருகின்றது.
இப்பழமொழியானது ஏதோ ஒன்று செய்யப் போய், அது வேறொன்றாக முடிவதைக் குறிப்பதற்கு மக்களால் கூறப்பட்டு வருகின்றது. ஆனால் இதன் பொருள் மகாபாரதக் கதையைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. மகாபாரதக் கதையைப் பிள்ளையார் எழுத்தாணி கொண்டு எழுத, இறுதியில் மகாபாரதப் போரை அனுமன் முடித்து வைக்கின்றார் என்பதே இதனுடைய பொருளாகும்.
பிள்ளையார் பிடித்தல்
வியாச பகவான் மகாபாரதக் கதையை எழுத வேண்டும் என்று முடிவு செய்தார். அவர் விரைந்து எழுவேண்டும் என்று கருதினார். தன்னால் அது முடியாத காரியம், தான் சொல்ல வேறொருவர் எழுதினால் விரைவாக எழுத முடியும் என்று நினைத்து அதற்குத் தகுந்தவர் விநாயகப் பெருமானாகிய பிள்ளையாரே என்று முடிவு கட்டிப் பிள்ளையாரிடம் சென்று வணங்கித் தனது கருத்தைக் கூறினார்.
தன்னிடம் வந்த முனிவரைப் பார்த்த விநாயகப் பெருமான், ‘‘நான் எழுதுவேன் ஆனால் இடையில் நிறுத்த மாட்டேன். தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன். நீரும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நீரும் சொல்வதாக இருந்தால் நான் எழுதுவதற்குச் சம்மதிக்கின்றேன்” என்று கூறினார்.
அதனைக் கேட்ட வியாசர், ‘‘சரி ஆனால் நான் கூறுவதைப் பொருள் புரிந்து கொண்டு விளக்கமாகவும் விரிவாகவும் தாங்கள் எழுத வேண்டும் என்று கூற அதற்கு விநாயகர் ஒப்புக் கொண்டு எழுதத் தொடங்கினார். வேகமாக எழுதுவதற்குத் தனது கொம்பை ஒடித்துக் கொண்டு எழுதினார்.
வியாசர் ஆங்காங்கு பல்வேறு விதமான பொருள் பொதிந்த சுலோகங்களைக் கூறுவார். அதனை விரித்து எழுத ஒருகணம் பிள்ளையார் சிந்திக்கும்போது மனதிற்குள் வியாசர் பல்வேறு விதமான சுலோகங்களைக் குறித்துக் கொண்டு சொல்லத் தயாராகி விடுவார். இவ்வாறு எழுதப்பட்டதே மகாபாரதக் கதையாகும். இதனையே பழமொழியின், பிள்ளையார் பிடிக்க (பிள்ளையார் எழுத்தாணி பிடித்து எழுதத் தொடங்க) என்ற முற்பாதித் தொடர் விளக்குகின்றது.
குரங்கு (காய்) முடித்த (முடிந்த) கதை
மகாபாரதப் போர் 18 நாள்கள் நடந்தது. போரில் துரியோதனன் பாம்புக் கொடியையும் தருமன் முரசுக் கொடியையும், அருச்சுனன் அனுமக் கொடியையும் கொண்டிருந்தனர். போர் தொடங்குவதற்கு முன்னர் பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்த சூழலில் ஒரு சம்பவம் நடந்தது.
ஒருமுறை திரௌபதி தனியாக இருக்கும்போது காற்றில் ஒரு மலர் அடித்து வரப்பட்டது. அதனை எடுத்து முகர்ந்து பார்த்த திரொளபதி அதன் அழகிலும் நறுமணத்திலும் மனதைப் பறிகொடுத்தாள். அது போன்று ஒரு மலர் தனக்கு வேண்டும் என்று கருதி, அங்கிருந்த பீமனிடம் சென்று அம்மலரைப் பறித்து வருமாறு கூறினாள்.
பீமனும் அவளிடம் இருந்து மலரைப் பெற்றுக் கொண்டு அம்மலர் இருக்கும் இடம் தேடிச் சென்றான். காட்டில் மலரின் நறுமணத்தைக் கொண்டே பீமன் வெகுதூரம் வந்துவிட்டான். அவ்வாறு பீமன் காட்டுவழியில் வரும்போது வழியினை மறித்துக் கொண்டு ஒரு பெரிய வானரம் (குரங்கு) ஒன்று படுத்திருந்தது. அதன் அருகில் சென்ற பீமன் அக்குரங்கை அதட்டி எழுந்து பாதையை விடுமாறு கூறினான்.
அதற்குப் படுத்திருந்த குரங்கு, “அப்பா பீமா போக வேண்டுமெனில் என்னை ஒரே தாண்டாகத் தாவிச் செல். என்னால் எழுந்திருக்க முடியாது. நானோ ஒரு கிழக்குரங்கு” என்று சொல்லிவிட்டுப் படுத்துக் கொண்டது. அதனைக் கேட்ட பீமன், “நான் அவ்வாறெல்லாம் தாவிச் செல்ல முடியாது. மரியாதையாக வழியை விடு!” என்று கர்ஜித்தான். அதற்கு அக்குரங்கு, ‘‘அப்பா ஏன் சத்தமிடுகிறாய்? என்னைத் தாவிச் செல்ல உனக்கு விருப்பமில்லை என்றால் எனது வாலை எடுத்து நகர்த்தி வைத்துவிட்டு அப்பால் செல்வாயாக’’ என்று கூறியது.
அதைக் கேட்ட பீமன் ஒரு சாதாரணக் குரங்கின் வாலை நம்மால் தூக்க முடியாதா? என்று மனதில் எண்ணிக் கொண்டே அந்த வாலை எடுத்து நகர்த்த முயன்றான். ஆனால் அவனால் முடியவில்லை. அவனுக்கு மூச்சு முட்டியது. என்ன முயன்றும் பீமனால் முடியவில்லை. பீமன் தனது இயலாமையை உணர்ந்து அக்குரங்கை வழிபட்டு, ‘‘ஐயா தவமுனிவரே என்னை மன்னியுங்கள். நான் தவறு செய்து விட்டேன்’’ என்று வணங்கி நின்றான்.
அவனது பணிவைக் கண்ட அனுமன் எழுந்து, பீமனைக் கட்டி அணைத்துக் கொண்டான். பீமனைப் பார்த்து, ‘‘அப்பா பீமா நான் வாயுபுத்திரன். என் பெயர் அனுமன். உனது சகோதரன். உனக்கு உதவுவதற்காகவே இங்கு வந்தேன். நீ தேடி வந்துள்ள மலர்கள் இதோ பார் இருக்கின்றன. நீ பறித்துக் கொள்’’ என்று கூறி அவனை ஆசீர்வதித்தார்.
பீமன் மகிழ்ச்சியடைந்தான். அனுமனைப் பார்த்து, ‘‘தவமுனிவரே தங்களின் விஸ்வரூபத்தை நான் கண்டு மகிழ வேண்டும்’’ என்று கூற அனுமனும் பீமனுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்தார். அதைக் கண்டு மகிழ்ந்த பீமன், அனுமனைப் பார்த்து, ‘‘பாரதப் போர் வரும்போது எங்களுக்கு நீர்தான் உதவவேண்டும்” என்று வரம் கேட்டான். அதற்கு அனுமன், ‘‘அப்பா பீமா, உனது சகோதரனான அருச்சனனின் கொடியில் நான் இருந்து உங்களையெல்லாம் காப்பேன். நான் இருக்கும் வரையில் உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.’’ என்று கூறி அவனுக்கு வரம் அளித்துவிட்டு மறைந்தார்.
பீமனும் மலர்களைப் பறித்துக் கொண்டுவந்து திரௌபதியிடம் கொடுத்து மகிழ்ந்தான். பின்னாளில் பாரதப் போர் ஏற்பட்டபோது அனுமன் வாக்களித்தபடியே அருச்சுனனின் கொடியில் இருந்து பாண்டவர்களைக் காத்தார். பாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றிபெற்றனர். போர் முடிவுக்கு வந்தவுடன் அருச்சுனன் தேரிலிருந்து பார்த்த சாரதியான கண்ணனை இறங்குமாறு கூறினான். சாரதி இறங்கிய பின்னரே அரசன் தேரிலிருந்து இறங்க வேணடும் என்பது அந்தக் காலத்து வழக்கம். அந்த வழக்கப்படி கண்ணனை முதலில் இறங்கும்படி அருச்சுனன் கூறினான்.
ஆனால் கண்ணன் இறங்காமல் அருச்சுனனை முதலில் இறங்குமாறு கூறி அவனை இறங்கச் செய்தான். அருச்சுனன் இறங்கியவுடன் கண்ணன் தேரிலிருந்து இறங்கினான். கண்ணன் இறங்கியவுடன் அனுமன் கொடியிலிருந்து போர் முடிந்தது என்று கருதிச் சென்றுவிட்டார். அதனால் அதுவரை தேரை அழிக்காதிருந்த பகைவரின் மந்திர சக்தி நிறைந்த ஆயுதங்கள் அத்தேரினைத் தாக்கத் தொடங்கின. தேர் தீப்பற்றி எறிந்தது. ஆபத்திலிருந்து அருச்சுனன் காப்பாற்றப்பட்டான். இக்காரணம் குறித்தே கண்ணன் முதலில் அருச்சுனனைத் தேரிலிருந்து இறங்க வைத்தான். இதனை அறிந்த அருச்சுனன் கண்ணனை வீழ்ந்து வணங்கினான். பிள்ளையார் தொடங்கிய பாரதக் கதையானது அனுமனால் முடிக்கப்பெற்று முடிவுக்கு வந்தது. அதனையே மேற்குறிப்பிட்ட பழமொழியானது தெளிவுறுத்துகின்றது.
பிள்ளையாரும் கோவிலில் பூசை செய்பவரும்
பிள்ளையார் கோவிலில் வழிபாடு செய்பவர்களை ஆண்டி (துறவி) என்று கூறுவர். ஆண்டி என்பது பற்றுக்களைத் துறந்தவர் என்று பொருளாகும். ஊரில் மழை பொழியவில்லை என்றாலோ, அல்லது ஏதாவது தீயது நடந்தாலோ அதற்குக் காரணம் இப்பிள்ளையார் கோவிலுக்குச் சரியாகத் துறவியானவர் வழிபாடு செய்யவில்லை. அதனால்தான் இந்தத் தீங்கு நேரிட்டது என்று ஊரார் குறைகூறுவர். நன்மை நடந்தாலும், தீமை நடந்தாலும் அதற்குப் பிள்ளையார் கோவில் ஆண்டியே காரணம் என்று கருதுவர்.
அது போன்றே சிலருக்கு ஏதாவது குறைபாடு நேர்ந்தால் அதற்கு இவர்தான் காரணம் என்று தேவையின்றி அவரைச் சுட்டிக் குறைகூறிக் கொண்டே இருப்பர். இதனைப் பல இடங்களில் நாம் காணலாம். இந்நிலையை,
‘‘ஊருக்குத் தொக்குப் பிள்ளையார் கோயில் ஆண்டி’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. இப்பழமொழி எந்த நிலையிலும் பிறரைப் பழிகூறிக் கொண்டே இருத்தல் கூடாது என்ற பண்பாட்டினை நமக்கு உணர்த்துகின்றது.
இங்ஙனம் பிள்ளையாரைப் பற்றிய பழமொழிகள் மகாபாரதக் கதையை நமக்கு எடுத்துரைப்பதுடன், செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் வாழ்வில் முன்னேற முடியும் என்ற வாழ்வியல் நெறியையும், பிறரை எப்போதும் குறைகூறிக் கொண்டே இருக்கக் கூடாது என்ற பண்பாட்டு நெறியையும் தெளிவுறுத்துகின்றன. பிறர் மீது பழி கூறாது நல்லெண்ணத்துடன் நல் வாழ்வு வாழ்வோம். வாழ்வு வசந்தமாகும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.