மனிதர் ஒவ்வொருவரும் எதையாவது நினைத்துக் கொண்டே இருப்பார்கள். யாருடனும் பேசிக் கொண்டிருந்தாலும், எந்தச் செயலைச் செய்து கொண்டிருந்தாலும் மனித மனம் எதைப் பற்றியாவது ஓயாது சிந்தித்துக் கொண்டே இருக்கும். இது இயல்பானது. மனம் ஒரு நிலையில் நில்லது அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அதனால்தான் மனதைக் குரங்கிற்கு ஒப்பிட்டுப் பெரியோர்கள் கூறினர், இம்மனித மனம் சதா ஏதாவதொன்றை நினைத்துக் கொண்டே இருக்கும்.
மனம் நினைப்பதை நடத்திக் காட்டவேண்டும் என்றும் நினைக்கும், தாம் நினைக்கும் அனைத்துச் செயல்களும் உடனே நிகழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். மனிதனின் இத்தகைய பண்பினை பழமொழிகள் பல நமக்கு எடுத்துரைக்கின்றன.
மனிதன் நினைப்பது அனைத்தும் நடப்பது என்பது அரிது. அவ்வாறு நடத்து விட்டால் எந்த ஒரு மனிதனும் தரையில் நடக்க மாட்டான். வானத்தில் பறந்து கொண்டே இருப்பான். நினைப்பு என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும். சிலர் நல்லனவற்றை நினைப்பர். வேறு சிலர் எப்போது பார்த்தாலும் தீயனவற்றையே நினைத்துக் கொண்டிருப்பர்.
நன்மை நடந்தால் மனிதன் மகிழ்கிறான். தீயன நடந்தால் வருந்துகிறான், நல்லனவற்றை நினைப்பவரை நேர்மறைச் சிந்தனையாளர் என்று அழைப்பர், எப்போதும் தீயனவற்றையே நினைத்துக் கொண்டு பேசுபவர்களை எதிர்மறைச் சிந்தனையாளர் என்று அழைப்பர். இந்த எதிர்மறைச் சிந்தனையாளரிடம் நாம் சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களும் விரக்தி அடைந்து, மற்றவரையும் அத்தகைய மனநிலைக்குக் கொண்டு வந்து விடுவர்.
நாம் இந்தச் செயல் இப்படித்தான் நடக்கும் என்று கருதிச் செய்தல் கூடாது. செயல் நம்முடையதாக இருப்பினும் அதன் முடிவு இறைவனது கைகளில்தான் உள்ளது. நல்லதில் போய் முடியும் என்று நாம் நினைத்து ஒன்றைச் செய்தால், அது தீயதில் போய் முடியும். அப்போது என்ன இப்படிச் செய்துவிட்டாயே என்று பிறர் நம்மைப் பார்த்துக் கேட்கின்ற போது, “இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கவில்லை. நல்லதுல முடியும்னு நெனச்சேன். ஆனா இப்படித் தவறா முடிந்து விட்டது” என்று கூறுவோம். இதனை,
“நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
மகாபாரதத்தில் ஒரு காட்சி வருகிறது. வியாச பகவான் தருமனும் அவன் தம்பிகளும் இருக்கின்ற இந்திரபிரஸ்தத்திற்கு வருவார்.
பாண்டவர்கள் அனைவரும் சென்று, அவரை வணங்கி வரவேற்று, அவரை உயர்ந்த ஆசனத்தில் அமருமாறு கூறுவார்கள், அவரும் அவர்களது அன்பினில் மனதைப் பறிகொடுத்து அவர்கள் கூறியபடியே அமர்வார்.
அப்போது வியாச முனிவரைப் பார்த்துத் தருமர், “முக்காலமும் உணர்ந்த முனிபுங்கவரே! எங்களக்கு நல்லனவற்றை உபதேசித்து அருள வேண்டும், இனி என்ன நிகழப்போகிறது என்பதைக் கூறி நாங்கள் அதற்கேற்ப எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் எங்களுக்குத் தேவரீர் எடுத்துரைக்க வேண்டும்” என்று பணிந்து வேண்டினான்.
அதற்கு வியாசர் கண்களை மூடித் தியானித்துவிட்டு தருமனைப் பார்த்து, “தருமா உன்னால் இந்தக் குலம் அழியக்கூடிய செயல் தொடங்கப் போகிறது. அதற்கு நீயே காரணமாக இருக்கப் போகிறாய். அதனால் நீங்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும்” என்று கூறி அவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறிவிட்டுச் சென்று விட்டார்.
அவரை வழியனுப்பி வைத்தவுடன் தன் தம்பியருடன் மிகவும் கவலையுடன் இருந்தான் தருமன். “தம்பியரே நம் குலநாசத்திற்கு நான் காரணமாக இருக்கப் போகிறேன் என்று வியாச பகவான் கூறிவிட்டாரே! நான் என்ன செய்வது? என்று கூறிக் கவலையுற்றான்.
தம்பியர்கள் சமாதனம் கூறியும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நீண்ட நேர யோசனைக்குப் பின்னர் தருமபுத்திரன் ஒரு முடிவுக்கு வந்தவனாகத் தன் தம்பியரையும் அவையினரையும் அழைத்தான். அவர்களைப் பார்த்து, “இனிமேல் யார் எதைச் செய்யச் சொன்னாலும் அதை அப்படியே செய்வேன். மறுத்து எதுவும் கூறமாட்டேன். இது சத்தியம். இவ்வாறு செய்தால் என்னால் எதுவும் பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் காரணமாக நமது குலம்அழியாதல்லவா?” அதனால்தான் இவ்வாறு செய்கிறேன்” என்று சபதம் எடுத்தான்.
அதனைக் கேட்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர் “என்ன தருமபுத்தரர் இவ்வாறு விநோதமாகச் சபதம் செய்கின்றாரே?” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
தருமன் மற்றவர்கள் சொல்வதற்கு மறுப்பேதும் கூறாது சம்மதித்து விட்டால் எந்தச் சிக்கலும் வராது. அனைத்தும் நல்லதாகவே முடியும் என்று நினைத்தான். ஆனால் அவ்வாறு நடந்ததா? எனில் இல்லை என்று கூறலாம்.
துரியோதனன் புதிய மண்டபத்தைப் பார்க்க அழைப்பு விடுத்ததும் அதனைத் தருமன் ஏற்றுக் கொண்டான். புதிய சபா மண்டபத்தைப் பார்த்தவுடன் அவனைச் சூதினுக்குத் துரியோதனனும், சகுனியும் அழைக்க எங்கே மறுத்தால் பிரச்சனை வந்துவிடுமோ என்று கருதி தருமன் சம்மதித்துச் சூதாடி அனைத்தையும் இழந்து, தம்பி, மனைவி என்று எவற்றை இழக்கக் கூடாதோ அவற்றையும் இழந்து காட்டிற்குச் சென்று துன்புற்று இறுதியில் குலம் முழுவதும் அழிவதற்கும் காரணமாகி விட்டான்.
அவன் நினைத்தது ஒன்று ஆனால் நடந்தது ஒன்று. இது தருமபுத்திரனின் வாழ்க்கையில் மட்டுமல்ல சாதாரண மனிதர்கள் அனைவருடைய வாழ்க்கையிலும் நடக்கும்.
ஒருவனும் ஒருத்தியும் விரும்புகின்றனர். இருவரும் மனதிற்குள்ளேயே ஆசையை வளர்க்கின்றனர். மணம் செய்து கொள்ளலாம் என நினைக்கின்றனர். ஆனால் இருவரும் வேறுவேறு நபரை மணந்து கொள்கின்றனர். அவர்கள் நினைத்ததோ ஒன்று. ஆனால் நடந்ததோ வேறு. இதனைத்தான், “பால்வரைத் தெய்வம் கூட்டுவிப்ப” என்று உரையாசிரியர்கள் கூறினர் போலும்.
இத்தகைய உலக இயல்பை விளக்குவதாகவும் மகாபாரதக் கதையையும் எடுத்துரைப்பதாகவும் மேற்குறித்த பழமொழி அமைந்துள்ளது.
நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதென்றால் தெய்வத்தை யாரும் நினைக்கவோ பொருட்படுத்தவோ மாட்டார்கள். அதனால்தான் கண்ணதாசன்,
“நினைப்ப தெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை”
என்று பாடினார். மனிதன் தாம் எப்போதும் நிலைத்த வாழ்வு வாழ்வோம் என்று கருதுகிறான். ஆனால் அவனது பருவங்களை ஒவ்வொன்றாக இழந்து முடிவில் அவன் நினைப்பது நடக்காது போய்விடுகின்றது. இளமையோடு எப்போதும் சிரித்து, ‘அட உனக்கு இவ்வளவு ஆசையா? முட்டாள்’ என்று ஏளனம் செய்கிறது.
மனிதன் நினைப்பது ஒன்றாகவும், தெய்வம் நினைப்பது வேறொன்றாகவும் முடிகின்றது, இது உலக இயல்வு. இதனை உணராது மனிதன் வாழ்கின்றான். இதை உணர்ந்து மனிதன் திருந்தி வாழ வேண்டும் என்பதை,
“நாம ஒண்ணு நெனச்சா தெய்வம் ஒண்ணு நினைக்கும்”
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. எல்லாவற்றிற்கும் இறைவனே காரணமாக இருக்கிறான், அதுவே உண்மை என்பதை இப்பழமொழி நமக்கு வலியுறுத்திப் பண்பட்ட வாழ்வுக்கு அது வித்திடுகின்றது.
நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவே நடக்கும். அது உலக இயற்கை. அதனால் நல்லனவற்றையே நாம் நினைக்க வேண்டும். ஏனெனில் எண்ணங்களுக்கு அதிகமான வலிமை உண்டு. நல்ல எண்ணங்களை நாம் நினைக்க நினைக்க அவை அனைத்தும் செம்மையாக நடைபெறும். தீயனவற்றை நாம் நினைத்தால் தீமையே விளையும். இதனை,
“நல்லதே நினை நல்லதே நடக்கும்”
என்ற பழமொழி மொழிகின்றது.
நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்களோ அதுவாகவே ஆகிவிடுவீர்கள் என்ற பொன்மொழியையும்,
“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்”
என்ற திருக்குறளையும் உட்பொதிந்த பழமொழியாக இப்பழமொழி அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
நல்லனவற்றையே நினைத்து நல்லனவற்றையே செய்வோம். பிறருக்கும் நல்லதை நினைப்போம். அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்போம், நாம் மட்டுமல்ல உலகில் உள்ள அனைவரும் மனமகிழ்ச்சியுடன் வாழ்வோம். வாழ்க்கையில் வசந்தம் வீசும்.