பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
42. தாய்
உலகில் உன்னதமான உறவு தாய்தான். எத்தனையோ உறவுகள் வரலாம், போகலாம், ஆனால் தாய் எனும் உறவு ஒன்றே எப்போதும் இதயத்துடன் உறவாடும் உறவாகும். எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும் மாறாத எதையும் போறுமையாக ஏற்றுக் கொள்கின்ற உறவே தாய் எனும் புனிதமான உறவாகும். ஒவ்வொரு உயிருக்கும் இறைவனே தாயாக விளங்குகிறான். தாய்தான் உலகில் ஒவ்வொருவருக்கும் உயர்வான உறவாக விளங்குகிறாள். இத்தாய்மையின் சிறப்பினைக் குறித்து சில பழமொழிகள் வழக்கில் மக்களால் வழங்கப்படுகின்றன. அவை தாய்மையின் பெருமையை எடுத்துரைப்பனவாக உள்ளன.
தாய் – ஒரு கோவில்
நீ எங்கு வசிக்கிறாய்? என்று ஒருவனைப் பார்த்துக் கேட்டால் அவன் நான் இல்லத்தில் வசிக்கிறேன் என்பான். சிலர் எனது தாய் தந்தையருடன் வசிக்கிறேன் என்பான், தாய் தந்தையருடன் அன்போடு வசிப்பவன் கோவிலுள் இறைவனுடன் வாழ்கிறான் என்று பொருள். தாய் தந்தையே உலகம். அதுதான் கோவில். தாயைவிடச் சிறந்த கோவில் எதுவும் இல்லை. அவள், நாம் ஒவ்வொருவரும் குடியிருக்கும் கோவிலாக, குடியிருந்த கோவிலாக விளங்குகிறாள். இத்தாயின் பெருமையினை,
“தாயின் காலடியிலேதான் சொர்க்கம் உள்ளது”
என்றார் நபிகள் நாயகம்.
இதனையே,
“தாயிற் சிறந்த கோவிலுமில்லை”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
தாய் நம்மைப் பேணிப் பாதுகாக்கின்ற கடவுளாக விளங்குகிறாள், அதனால்தான் தாயைக் குடியிருந்த கோவில் என்று கூறுகின்றனர். தாயின் சிறப்பினையும், தெய்வீகத்தையும் விளக்குவதாக இப்பழமொழி அமைந்துள்ளது எனலாம்.