பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
43. போலி மதிப்பு
ஒவ்வொருவருக்கும் மதிப்பு உண்டு. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மரியாதையும் மதிப்பும் உண்டு. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினங்களும் மதிப்புக்குரியவைதான். ஒவ்வொருவருக்கும் இருக்கும் மதிப்புகள் அவரவர்களுக்குத் தெரியாது. அவ்வாறு தெரிந்து கொள்வதைச் சிலர் விரும்புவதில்லை. இருப்பினும், ஒவ்வொரு மனிதரும் தனக்கு சமுதாயத்தில் உரிய மதிப்பு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
தன் மதிப்புக்கு ஊறு நேரும்போது, தன் மதிப்பை நிலைநாட்ட முனைகின்றனர். தனக்குரிய மதிப்பு சமுதாயத்தில் குறைந்து விடக்கூடாது என்று கவனத்துடன் ஒவ்வொரு மனிதனும் நடந்து கொள்கிறான்.
வழக்கில் மதிப்பு, மரியாதை என்ற இரு சொற்கள் மக்களிடையே வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது. மரியதை என்றால் என்ன? மதிப்பு என்றால் என்ன? ஒருவர் இளைவர்; மற்றொருவர் முதியவர். இளையவர் முதியவரைப் பார்த்து “ஏய் நீ இங்க வா?” என்று அழைக்கின்ற போது அம்முதியவர், இளையவரைப் பார்த்து, “தம்பி மரியாதையா நடத்துக்குங்க. ஒங்க வயசென்ன? என்னோட வயசென்ன?” யாரிடம் எப்படி நடந்துக்கணும்னு ஒரு கணக்கு இருக்கு. அது மாதிரி மரியாதையா நடக்கப் பழகிக்கங்க” என்று கோபத்துடன் கூறுகின்றார். இங்கு ஒரு மனிதனின் நடத்தை, பேச்சு, சொல், செயல் ஆகியவை மரியாதையைக் குறிக்கின்ற ஒழுங்கு முறைகளாக அமைகின்றன.
வயது முதிர்ந்த ஒருவர் உதவி கேட்பதைப் பார்த்த இளைஞன், “ஐயா நான் செய்யறேன். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க” என்று கூறும் போது அப்பெரியவர் மனம் நெகிழ்ந்து, “ரொம்ப மரியாதை உள்ள பையனா இருக்கற. நீ நல்லா இருப்பா!” என்று வாழ்த்துவதைப் பார்க்கிறோம். இங்கும் பேச்சு, செயல் உள்ளிட்ட நன்னெறி சார்ந்த ஒழுக்க முறைகளையே மரியாதை என்பது குறிக்கின்றது.
சிலரது வீட்டிற்குப் போகும் போது அவர்கள் நம்மை ‘வாங்க’ என்று அழைக்க மாட்டார்கள். நமக்கு வருத்தமாகப் போய்விடும். நாம் திரும்ப வந்து, நமது நண்பர்களிடம், “அவனெல்லாம் அடுத்தவன மதிக்கத் தெரியாதவன்” என்று கூறுவதுண்டு. இங்கு ஒருவரது சுயமதிப்பைப் புலப்படுத்துவதாக மதிப்பு என்பது அமைந்துள்ளது.
சிலருடைய வீட்டிற்கு நாம் செல்கின்ற போது வாயிற்படியருகே வந்து, “வாங்க வாங்க” என்று அகமும் முகமும் மலர வரவேற்பார்கள். நாம் மனதிற்குள் எப்படி மதிப்போடு நம்மை வரவேற்கிறார் என்று வியந்து நம் நண்பர்களிடம் “அடுத்தவங்கள மதிக்கத் தெரிஞ்சவரு” என்று பெருமையாகக் கூறுவதை மதிப்பு என்பதும் மரியாதை என்பது போன்று அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
சிலர் இயல்பாக இருப்பதை மதிப்பு என்றும் அதனை வெளிப்படுத்திக் காட்டுவதை மரியாதை என்றும் குறிப்பிடுவர். பழமொழிகளில் இம்மதிப்பு குறித்த செய்திகள் இடம் பெற்று நமது பண்பாட்டு நெறிகளை விளக்குவனவாக உள்ளன.
மரியாதையுள்ளவர்
மரியாதை தெரிந்தவர்தான் பிறருக்கு உரிய மரியாதையினை வழங்குவர். மரியாதை தெரியாதவர் பிறருக்கு எந்தவிதமான மரியாதையையும் வழங்க மாட்டார். பிறரை இழிவுபடுத்துவதிலேயே கண்ணுங் கருத்துமாக இருப்பர். அறிவுள்ளவர்களைப் பற்றி அறிவுள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். பாம்புக்குக் கால் இருப்பது இன்னொரு பாம்பிற்கு மட்டுமே தெரியும் என்று பழமொழி நானூறு குறிப்பிடுகின்றது. பழமொழி குறிப்பிடுவது போன்றே மதிப்பு மிக்கவரை மதிப்பு மிக்கவர்களால்தான் அறிந்து கொள்ள இயலும். இதனை,
“கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
கற்பூரத்தின் நறுமணத்தை கழுதை உணர முடியாது. அது போன்றே மரியாதைக்குரியவர்களை மரியாதை இல்லாதவர்கள் உணர்ந்து கொள்ள முடியாது என்பதை இப்பழபமாழி தெளிவுறுத்துகிறது.
போலி மரியாதை (போலி கெளரவம்)
தங்களுக்கு மதிப்பு இருக்கிறதோ? இல்லையோ? சிலர் தங்களுக்கு மதிப்பு இருப்பது போல் வெளியில் போலியாக மதிப்புள்ளவர்களாகக் காட்டிக் கொள்வர். தங்களுக்கு அதிகமான மதிப்புள்ளது என்று கருதிக் கொண்டு சிலர் போலித்தனமான வாழ்க்கை வாழ்வர். பணமில்லதவர்கள் பணமிருப்பவரைப் போன்றும், வீரமில்லாதவர்கள் வீரமுடையவர்கள் போன்றும், கல்வியறிவில்லாதவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர்களைப் போன்றும் பிறரிடம் நடித்துக் கொண்டு போலி வாழ்க்கை வாழ்வர். இவ்வாறு இருப்பது தவறான வாழ்க்கையாகும், இத்தகைய வாழ்க்கை பின்னர் பிறருக்குத் தெரிந்து விட்டால் அவர்களுக்குள்ள குறைந்த பட்ச மதிப்பு கூட இல்லாது போய்விடும். இத்தகைய போலி மரியாதையுடன் போலி வாழ்க்கை வாழக்கூடாது என்பதை,
“மதிப்பு மசால்வடை
தட்டிப்பார்த்தா ஊசவடை”
“ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்
அதுல உள்ளே இருக்கறது ஈறும்பேனாம்”
என்பது போனற பழமொழிகள் எடுத்துரைக்கின்றன.
சிலர் பார்ப்பதற்கு வெளித்தோற்றத்தில் அழகுறத் தோன்றினாலும் உள்ளத்துள் நயவஞ்சகத்தன்மையுடன் இருப்பர். அந்த நயவஞ்சக எண்ணம் வெளியில் வெளிப்படாதவாறு பகட்டுச் சிரிப்புடன் நடந்து கொள்வர். நம்மை மதிப்பது போல் வெளியில் தெரிந்தாலும் அவர் நம்மை மனதளவில் ஏளனப்படுத்தும் நோக்கத்துடனேயே நடந்து கொள்வர்.
மசாலாப் பொருள்களைச் சேர்த்துச் செய்யப்பட்ட உண்ணக்கூடிய வடையானது மணமாக இருந்தாலும் அதை உண்பதற்காகப் பிட்டுப் பார்த்தால் கெட்டுப் போயிருக்கும். அது போன்றே, அழகான நீண்ட கூந்தலில் தாழம்பூவை வைத்து அது நறுமணம் கமழ்ந்தாலும், அதை அவிழ்த்துப் பார்க்கும்போது தலை முழுக்க ஈறும் பேனுமாகக் காட்சியளிக்கும். இதைப் போன்று போலியாகப் பிறரை மதிப்பது போன்று நடந்து கொள்பவர்கள் உள்ளத்தில் கரவொழுக்கத்துடன் இருப்பர். போலியான மதிப்புடனேயே பிறரை நடத்துவர்.
இன்னும் சிலர் நான் அப்படிச் செய்வேன்! இப்படிச் செய்வேன்! என்னிடம் அது இருக்கிறது. இது இருக்கிறது என்று பகட்டிற்காக, ஆடம்பரமாகத் தம்மைப் பற்றிக் கூறுவர். சரி இவ்வாறெல்லாம் கூறிக் கொண்டிருக்கின்றார்களே என்று அவரிடம் சென்று, ஏதேனும் உதவியொன்றைக் கேட்போம் என்று போனால் அவர் கூறியது போன்ற நிலை அவருடைய இல்லத்தில் இராது, அனைத்தும் தலைகீழாக இருக்கும், அவர் கூற்று உண்மையில்லை என்பது தெரிந்துவிடும். அவர் போலியான மதிப்பிற்கு ஆசைப்பட்டே பல பொய்களைக் கூறி இருக்கிறார் என்பது தெரியவரும். இவ்வாறு சமுதாயத்தில் போலி கெளரவம் பார்க்கும் சிற்றினத்தோரின் பண்பினை வெளிப்படுத்துவதாக மேற்குறித்த பழமொழிகள் அமைந்துள்ளன.
போலி கெளரவத்துக்கு ஆசைப்பட்டுப் போலியான வாழ்க்கையை ஒருவன் வாழ முற்படக் கூடாது. அங்ஙனம் வழ முற்படும்போது அது வெளிப்படத் தெரியும் போது அனைவராலும் அத்தகையவர்கள் இகழ்ந்துரைக்கப்படுவார்கள். உண்மைத்தன்மையுடைய வாழ்க்கையே ஒருவருக்கு உண்மையான சமூக மதிப்பைத் தரும் என்ற பண்பாட்டு நெறியையும் இப்பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன.
போலியான மதிப்பு
சிலரிடம் பாரியம் சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகக் கீழான ஒழுக்கமுடையவர்களுக்கு மரியாதை கொடுப்பர். இதனை உண்மை என்று கருதும் இழிநடத்தை உடையவர்கள் அதனைத் தனக்குக் கிடைத்த பெரிய மதிப்பு என்று கருதுவர். தங்களுக்குரிய செயல் நடைபெற வேண்டுமென்பதற்காகப் பிறர் போலியாகச் செலுத்துகின்ற மரியாதை உண்மையான மதிப்பு கிடையாது. தன்காரியம் வெற்றி பெற வேண்டுமெனில் ஒழுக்கமில்லாதவரிடத்தும் போலியான மரியாதையைக் காட்டுதல் வேண்டும் என்பதை,
“காரியம் முடியற வரைக்கும் கழுதையைக் கூடக் காலைப் பிடின்னானாம்”
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
கயவர்களுக்குக் காட்டும் மரியாதை போலியான மதிப்பாகும். அ.து உண்மையானதன்று. இத்தகைய போலிகளிடம் போலியான மதிப்பைக் காடடியே தமது காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்ற உலக நடைமுறையினை இப்பழமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது.
போலி மதிப்பால் பலர் வாழ்வை இழந்துள்ளனர். போலி மதிப்பு அப்போதைக்கு நமக்குப் பெருமை தருவதாக இருந்தாலும் அது நீர்க்குமிழி போன்ற ஒன்றாகவே இருக்கும். உண்மையாக நடந்து, உண்மையான வாழ்க்கை வாழ்தல் வேண்டும். அதுவே என்றும் நிலைத்திருக்கும். போலி மறைந்து விடும். பகட்டான வாழ்க்கை வாழாது, பண்பாடான வாழ்க்கையை வாழ்வோம். நாமும் வாழ்ந்து நம்மைச் சார்ந்தோரையும் வாழ வைப்போம். வாழ்க்கை வசப்படும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.