பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
44. கிணறு
நாம் கிணறு, ஆறு, குளம், ஏரி, கண்மாய், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள நீரை எடுத்து நமது தேவைகள் அனைத்திற்கும் பயன்படுத்துகிறோம். இதில் உள்ள நீர் ஒவ்வொரு தன்மை உடையது. கிணறு என்பதற்கு “கூவல்” என்ற பெயரும் உண்டு. கூவல் சாத்திரம் என்ற நூல் தமிழில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சாத்திரம் எந்த இடத்தில் கிணறு தோண்டினால் நீர் ஊறும், வற்றாது கிடைக்கும் என்பதை எடுத்துக் கூறுகிறது. கிணற்றை, உறைக்கிணறு, மனைக்கிணறு, கமலைக் கிணறு, கிளிக்கூண்டுக் கிணறு, ஆழ்துளைக் கிணறு என்று அதன் அமைப்பை வைத்துக் கிணற்றைப் பல பெயர்களில் வழங்குவர். இக்கிணற்றை அடிப்படையாக வைத்து நமது முன்னோர்கள் பல்வேறு பழமொழிகளைக் கூறி நமது வாழ்க்கைக்கு வழி காட்டியுள்ளனர். அவை நம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் நன்மொழிகளாகத் திகழ்கின்றன.
கிணறும் நீரும்
பூமித்தாயின் மடியில் இருந்து சுரக்கும் அன்பின் ஊற்றுதான் கிணற்று நீர். பழங்காலத்திலிருந்து கிணற்று நீரை மக்கள் தங்களின் அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். கிணற்று நீர் ஆழத்தில் இருப்பதால் அதனை எதுவும் கொண்டு செல்ல முடியாது. அது அப்படியே கிடக்கும். மிகவும் நெருங்கிய உறவில் பெணிணிருந்தால் அதனைக் காலந்தாழ்த்தித் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருப்பர். பெண் தன்னை விட்டு விட்டு வேறு எங்கும் திருமணம் செய்து கொடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பிறகு மெதுவாகச் செய்து கொள்ளலாம் என்று இருந்து விடுவர். பெண் வீட்டார் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினால் அட,
“கிணத்துத் தண்ணீர என்ன வெள்ளமா கொண்டு போயிரும்”
என்று கூறுவர்.
தம்மை விட்டுப் பெண் போய் விடமாட்டாள் என்பதைக் குறிப்பிடுவதற்காகவே இப்பழமொழியை உறவினர்கள் பயன்படுத்துகின்றனர். அதிகமாக மழை பொழிந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும் கிணற்று நீர் அப்படியே இருக்கும். குறையாது. அது போன்றே உரிமைப்பட்ட பெண்ணும் தனக்காகக் காத்திருப்பாள்; உறவு விட்டுப் போகக் கூடாது என்பதற்காகவாவது பெண்ணைப் பிறருக்குத் திருமணம் செய்து கொடுக்காது உறவுக்காரருக்காகவே பொறுத்திருப்பர். இதனையே இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.
உறவுகள் எந்த நிலையிலும் மாறிவிடக் கூடாது என்ற மக்களின் வாழ்க்கை நெறியை விளக்குவதாக இப்பழமொழி அமைகிறது. இங்கு கிணற்று நீர் என்பது பெண்ணையும், கிணறு என்பது வீட்டையும், ஆற்று வெள்ளம் என்பது திருமணம் செய்ய விரும்பும் அயலாரையும், திருமணம் செய்வதை கொண்டு செல்வதையும் குறிப்பாக இப்பழமொழியில் குறிக்கப் பெற்றுள்ளது நோக்கத்தக்கது.
கிணறும் கல்லும்
சிலர் வாழ்வில் எது நடந்தாலும் அது குறித்து கவலைப்படாது இருப்பர். அல்லது எந்தப் பிரச்சனையாக இருப்பினும் அதனைக் கண்டு கொள்ளாது நடந்து கொள்வர். தன்னிடம் பிறர் கொண்டு வரும் எந்தச் சிக்கலையும் நான் முடித்துத் தருகிறேன் என்று கூறிவிட்டுப் பேசாமல் எப்போதும் போன்று அமைதியாகவே மெளனம் சாதிப்பர். இத்தகைய குணம் உடையவரின் நிலையை,
“கிணத்துக்குள்ள கல்லப் போட்ட மாதிரி”
பேசாம இருக்கிறான் என்று கூறுவர்.
கிணற்றில் கல்லைப் போட்டால் சலசலப்பும் சலனமும் ஓசையும் ஏற்படும். அதன் பின்னர் எதுவும் நிகழாது. எப்போதும் போல் கிணறு காணப்படும். அது போன்றே சிலர் நான் அதைச் செய்வேன்; இதைச் செய்வேன் என்று பெரிதாகக் கூறுவர். ஆனால் அதன் பிறகு எதனையும் செய்ய மாட்டார். இவர்கள் கையாலாகாதவர்கள் ஆவர். வாய்ச்சொல் வீரர்களாக இருப்பர். அத்தகையவர்களைப் பற்றிய பண்பு விளக்கப் பழமொழியாக இப்பழமொழி அமைந்துள்ளது.
கிணறும் கயிறும்
மனிதர்கள் சிலர் தங்களிடம் ஏதாவது ஒரு சிக்கல் நிறைந்த பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை விட்டுவிட மாட்டார்கள். அப்பிரச்சனையின் இறுதி வரை சென்று அதனைத் தீர்த்துவிட முனைவார்கள். இடையில் விட்டுவிட்டுச் செல்லமாட்டார்கள். சிக்கலுக்குத் தீர்வுகண்டு அதனை முடிக்கவே முயல்வர். அவர்களின் இத்தகைய நிலைப்பாட்டை,
“கிணத்தோட ஆழத்தையும் கயித்தோட நீளத்தையும் பார்த்து விடுவோம்”
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
இங்கு கிணற்றுடைய ஆழம் என்பது பிரச்சனையின் அளவைக் குறிப்பிடுகின்றது. கயிற்றின் ஆழம் என்பது அதனைத் தீர்க்க எடுக்கும் முயற்சியின் தன்மையினைக் குறிப்பிடுவதாக உள்ளது. கிணற்றிலுள்ள நீர் மட்டம் மேலாக இருந்தால் நீரிரைக்கச் சிறிதளவு நீளம் கொண்ட கயிறு இருந்தால் போதும். அது போன்று நீர் மட்டம் மிகவும் கீழே போய்விட்டால் கயிறின் நீளம் அதிகரிக்கும். சிக்கலின் தன்மையைப் பொறுத்தே அதற்கான முயற்சிகளின் தன்மையும், அளவும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டால் அதன் இறுதிவரை சென்று அதன் நிலைமையினை உணர்ந்து அதனை நிவர்த்தி செய்திடுதல் வேண்டும் என்பது இப்பழமொழியின் உள்ளீடாக அமைந்துள்ளது.
இருவரிடையே சிக்கல்கள் ஏற்படும் போது சிலர் எதையும் விட்டுக் கொடுக்காது பேசுவர். அப்போது மற்றவர் அவரைப் பார்த்து, “எவ்வளவு தூரம்தான் போய்விடுவான். அதையும்தான் பார்த்துவிடுவோம்” என்று கூறி மேற்குறிப்பிட்டுள்ள பழமொழியைக் குறிப்பிடுவர். பிரச்சனைகள் தொடர்கின்றபோதுதான் இப்பழமொழி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்படுகின்றது என்பது நோக்கத்தக்கது.
கிணறும் பூதமும்
நாம் ஒன்று நினைக்கின்ற போது மற்றொன்று நடக்கும். அதுதான் உலக இயற்கையாகும். இதுதான் நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது வேறொரு நிகழ்வு நிகழும். அது மட்டுமல்லாது ஒருவர் ஒரு செயலைச் செய்யும் போது அதன் விளைவு வேறுவிதமாக அமையும். அப்போது அவர்,
“கிணறு வெட்டப் பூதம் கிளம்பின கதைதான்”
என்று கூறுவார்.
கிணறு வெட்டுகின்ற போது தண்ணீர்தான் ஊற்றெடுக்க வேண்டும். மாறாக வேறு ஒன்று வெளிவருகிற போது அது மனப்பதற்றத்தை ஏற்படுத்தும். பூமியில் இருந்து பூதம் என்பது வராது. இந்தச் சொல்லானது, “பூகம்பம்” என்றே இருந்திருக்க வேண்டும். பூகம்பம் என்பதுதான் பேச்சு வழக்கில் பூதம் என்று மருவி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
தண்ணீருக்குப் பதிலாக நில அதிர்வும் சரிவும் ஏற்பட்டால் எவ்வாறு இருக்குமோ அது போன்று நாம் ஒரு செயலைச் செய்யப் போய் அதன் விளைவுகள் விரும்பத்தகாததாக இருக்கும் போது அது நமக்குப் மிகப் பெரிதாகத் தெரியும். அதனைப் பார்த்து நாம் பயந்து விடாது இருத்தல் வேண்டும என இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.
கிணறும் தவளையும்
பல இடங்களுக்கும் சென்று நாம் பல்வேறு அனுபவங்களையும் பெற வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சிறப்படையும். சிலர் தாம் இருந்த இடத்திலேயே இருப்பர். அவர்கள் தாங்கள் இருக்கும் இடமே உலகமாகத் தெரியும். யாராவது வேறு எதுவும் கூறினால் அவர் அது குறித்து கவலைப்பட மாட்டார். தான் கூறியதே பெரிது என்றும் தான் இருக்கும் இடம் மட்டுமே உயர்வானது என்றும் கருதி, அதனையே வலியுறுத்திப் பேசிக் கொண்டிருப்பார். இவர்களது பண்பினை,
“கிணத்துத் தவளை மாதிரி இருக்காதே”
என்று கூறுவர்.
கிணற்றுள் வாழும் தவளை வெளி உலகைப் பாராது கிணறுதான் உலகம் என்று நினைக்கும். வேறு எதுவும் அத்தவளைக்குத் தெரியாது. அதுபோன்று தன்னுடைய இடத்தில் இருந்து கொண்டு எதுவும் தெரிந்து கொள்ளாது குறுகிய கண்ணோட்டத்துடனேயே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பர். அவ்வாறு மனிதன் வாழக் கூடாது. பல இடங்களுக்கும் சென்று பல தகவல்களை அறிந்து கொண்டு உலகம் தெரிந்தவனாக வாழ்தல் வேண்டும் என்ற நன்னெறியை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.
கிணறு என்ற ஒரு காட்சிப் பொருளை வைத்துப் பண்பாட்டு விளக்கமாகிய பல்வேறு வாழ்க்கை நெறிமுறைகளை நமது முன்னோர்கள் விளக்கமுற எடுத்துரைத்திருப்பது என்றும் படித்தின்புறத் தக்க வகையில் அமைந்துள்ளது. நல்ல செயல்பாட்டுடன், நல்ல எண்ணத்துடனும் உலக நடப்பை நன்கு தெரிந்தறிந்து கொண்டு வாழ்தல் வேண்டும் என்ற பண்பாட்டு நெறிமுறைகளை இப்பழமொழிகள் எடுத்துரைக்கின்றன. உலக நடப்பறிந்து உன்னதமாய் வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்; வாழ்க்கை வசந்தமயமாய் அமையும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.