பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
45. நிறங்கள்
உலகில் ஒவ்வொன்றும் ஒரு நிறத்தில் காணப்படுகின்றது, நிறங்கள் வாழ்க்கையில் ஒன்றி நம்மை வழி நடத்துவனவாக உள்ளன. இன்னும் கூட நம்மை ஆளுகின்றன; ஆட்டுவிக்கின்றன. நம் உணர்வுகளை வெளிப்படுத்தவும் பயன்படுகின்றன. ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு குணம் அதாவது பண்பு உண்டு. ஒவ்வொரு நிறமும் ஏதாவது ஒரு தகவலை அல்லது நிகழ்வுகளை நமக்கு அறிவுறுத்துகின்றன. நிறங்கள் இயற்கையானவை; செயற்கையாகவும் மனிதனால் உருவாக்கப்படுபவை. இத்தகைய நிறங்கள் நமது வாழ்வை வழி நடத்துபவையாக, வாழ்வைத் தீர்மானிப்பதாக விளங்குகின்றன. நிறங்கள் குறித்த தங்களின் அனுபவங்களை நமது முன்னோர்கள் பழமொழிகள் வாயிலாகப் பொதிந்து வைத்துள்ளனர். இந்நிறங்கள் குறித்த பழமொழிகள் மக்களின் குணநலன்களை விளக்குவனவாக உள்ளன.
கருப்பு சிவப்பு
நிறங்கள் ஏழு. அதில் கருப்பு, சிவப்பு முதன்மையான நிறங்களாகத் திகழ்கின்றன. மனிதர்கள் பெரும்பாலும் கருப்பு நிறத்தை விரும்புவதில்லை. சிவப்பு நிறத்தையே விரும்புவர். கருப்பு எனில் வெறுக்கும் நிறமாகவும் துக்கத்தைக் குறிக்கும் நிறமாகவும் மக்களால் கருதப்படுகிறது. சிவப்பு போராட்ட குணத்தையும், கோபத்தையும் குறிக்கும் நிறமாக உள்ளது. ஒருவர் கோபப்படும் போது அவரது கண்கள் சிவந்து காணப்படும். ஒருவர் துன்புறும் போது அவரது முகம் கருப்பாகவும் காணப்படும். இதனை வழக்கில் ‘கருக்குளிச்சுக் காணப்படுகிறது’ என்று கூறுவர்.
ஒருவர் திருமணத்திற்கு மணமகளைத் தேர்ந்தெடுக்கின்ற போது சிவப்பு நிறமுடைய பெண்ணையே விரும்புவர். பெண்ணும் சிவந்த நிறமுடைய மணமகனையே விரும்புவர். கருப்பு நிறமுள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அதனைக் குறையாகக் கருதி தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பர். அதிலும் ஆண்களை விடப் பெண்கள் தாங்கள் சிவந்த நிறத்துடன் இருக்க வேண்டும் என்று பெரிதும் விரும்புவர். அதற்காக என்னென்ன அழகு சாதனப் பொருள்கள் இருக்கின்றதோ அவற்றையெல்லாம் பயன்படுத்துவர். மேலும் திருமணத்தில் சிவந்த நிறமுடைய பெண்களுக்கே அதிகமான எதிர்பார்ப்புகள் சமூகத்தில் உள்ளது. இதனால் கருப்பு நிறமுடைய பெண்கள் விரக்தியான மனநிலையை அடையும் சூழல் ஏற்படுகின்றது. ஒரு வீட்டில் ஒரு பெண் சிவப்பாகவும் மற்றொரு பெண் கருப்பாகவும் இருப்பின் கருப்புநிறப் பெண் மனக் குறைபடக் கூடாது என்று பெரியோர்கள் கருதுவர். அவளுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதனை வீட்டிலுள்ள பெரியோர்கள் அவளை உயர்வாகக் கூறுவர். அவ்வாறு கூறும் போது,
“கருத்தப் பிள்ளைக்கு நகைபோட்டுக் கண்ணால அழகு பாரு
செவத்த புள்ளைக்கு நகைபோட்டு செருப்பால அடி”
என்று கூறுவர்.
கறுப்பு நிறமுடைய பெண்ணிற்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் அவளை உயர்த்திக் கூறுவர். கருப்பு நிறமுடைய பெண் நகை அணிகின்ற போது அழகாக இருக்கும். சிவந்த நிறமுடைய பெண்ணிற்கு எவ்வளவு நகை அணிவித்தாலும் அவளுக்கு அவ்வளவாக எடுப்பாக இருக்காது என்று கருப்பு நிறமுள்ள பெண் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகக் கூறப்பட்ட பழமொழியே இதுவாகும்.
இப்பழமொழி பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் அமைந்தது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மனமானது ஊனப்பட்டுவிடக் கூடாது என்று கருதிய நமது முன்னோரின் உயர்ந்த நோக்கம் இதில் புலப்படுவது நோக்கத்தக்கது. இப்பழமொழியில் முன்னோர்கள் எந்த அளவிற்கு உள நலப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது புலனாகிறது.
கருங்காடும் செங்காடும்
கரிய நிறமுடைய மண்ணைக் கொண்ட காட்டுப்பகுதியைக் கரிசல்காடு என்றும் கருங்காடு என்றும் கூறுவர். இக்கரிசல்காட்டில் மண் கருநிறமாகக் காணப்படும். இதில் நாம் நடக்கும் போது நமது காலில் ஒட்டும். அந்த மண்ணைப் போன்றே செம்மண் நிலத்தைச் செங்காட்டு மண் என்பர். இதுவும் கருமண்ணைப் போன்றே காலிலோ, உடையிலோ ஒட்டினால் அப்படியே ஒட்டிக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. மண்ணைப் போன்றே உறவுகளும், உறவுகள் என்றும் உதவக் கூடியவை. எப்போதும் எதிலும் விட்டுக் கொடுத்துவிடாத தன்மை வாய்ந்தவை. அதனால்தான் திருமணம் செய்யும் போது உறவுகளுக்குள் பெண் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். குடும்பத்தில் ஏதேனும் சிக்கல்கள் தோன்றும் போது உறவுகள் ஒன்றுக்குள் ஒன்று விட்டுக் கொடுத்துச் செல்வர். உறவுகளில் பெண்ணெடுக்காது வெளியில் பெண்ணெடுக்கும்போது வாழ்க்கையில் உறவுகள் நிலைக்காது போய்விடும்.
இதனை மனதிற் கொண்டே நமது முன்னோர்கள்,
“காலில ஒட்டின கருங்காட்டு மண்ணா?
சேலையில ஒட்டின செங்காட்டு மண்ணா?
என்ற பழமொழியினைக் கூறினர். உறவுக்குள் மணமுடித்தல் வேண்டும் என்று இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.
சிவந்த மூக்கு
சிலர் எப்போதும் விளையாட்டாகவே பேசிக்கொண்டிருப்பர். அவர் எந்தச் சூழலிலும் தம்மை மாற்றிக் கொள்ளமாட்டார். இதனைக் காணும் பெரியவர்கள் அவரைப் பார்த்து,
“சிரிச்சாப்ல மூக்கு செவந்தாப்ல போயிரும்”
என்ற பழமொழியைக் கூறி அறிவுறுத்துவர்.
எப்போதும் மனிதர்கள் ஒன்றுபோல இருக்க மாட்டார்கள். அவர்களது மனநிலை மாறிக் கொண்டே இருக்கும். அப்போது விளையாட்டாகப் பேசினால் அது ஒருவருக்கொருவர் மோதலில் கொண்டு போய் விட்டுவிடும். சிரித்துக் கொண்டே இருப்பவர் திடீரென்று கோபமுற்று சண்டை சச்சரவில் இறங்கி விடுவார். அப்போது விளையாட்டாகப் பேசினேன் என்று கூறினாலும் மற்றவர் விட்டுவிடமாட்டார். அதனால் எப்போதும் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்வதை ஒருவர் தவிர்த்தல் வேண்டும் என்பதை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.
இப்பழமொழி, “விளையாட்டு வினையாப் போயிரும்” என்ற பழமொழியை ஒத்திருப்பது நோக்கத்தக்கது. கோபப்படும் போது முகம் சிவந்துவிடும். அச்சிவப்பு சினத்தின் அறிகுறியாகும். இப்பழமொழியானது சிவப்பு நிறம் கோபத்தின் அடையாளம் என்பதை நமக்குத் தெளிவுறுத்துகின்றது.
மஞ்சளும் கண்ணும்
மனிதர்களில் சிலர் எப்போதும் யாரையும் எதையும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பர். இவ்வாறு சந்தேக மனப்பான்மை கொண்டவர்களை யாராலும் மனநிறைவு கொள்ளச் செய்ய முடியாது. சந்தேகப்படுபவர்கள் இல்லையெனில் அவரை அவரே சந்தேகப்படுவார். இத்தகையவர்கள் எப்போதும் அந்த மனநிலையிலேயே வாழ்ந்து வருவார். இத்தகையோரின் மனப்பண்பை,
“காமாலைக் கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாத்தான் தெரியும்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
மஞசள் காமாலை என்பது ஒருவித நோயாகும். இந்நோய் வந்தவர்களுக்கு உடல் முழுவதும் மஞசளாக மாறும். அவரது கண்களுக்கு அனைத்தும் மஞ்சளாகவேத் தோன்றும். சந்தேகப்படுபவருக்கும் எப்போதும் பிறர் மேல் ஏதாவதொரு வகையில் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். அவர்களை மாற்றவே முடியாது. அவராக மாறினால் மட்டுமே அவரது இத்தகைய மனப்பண்பு மாறும். எந்தச் சூழலிலும் எப்போதும் சந்தேக மனப்பான்மையில் வாழ்தல் கூடாது என்ற வாழ்வியற் பண்பினை இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் இயம்பியுள்ளனர்.
கருப்பு, சிவப்பு ஆகிய இரு நிறங்கள் பழமொழிகளில் அதிகம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறங்கள் குறித்த பழமொழிகள் அனைத்தும் மனிதர்களின் மனப்பண்பைத் தெளிவுறுத்தும் வகையில் அமைந்திருப்பது நோக்கத்தக்கது. நல்மனநலம் பெற்று நலமோடு வாழ்வோம் வாழ்க்கை வசப்படும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.