பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
46. விதி எனும் ஊழ்
விதி நம்பிக்கை நம் வாழ்வோடு வாழ்வாக ஊறிப் போய்விட்ட ஒன்றாகும், பிறந்தது முதல் இறப்பு வரை அனைவரையும் விதியே ஆட்டிப் படைக்கிறது. விதியே அனைத்தையும் நிர்ணயிக்கிறது. நம் முன்னோர்கள் விதி குறித்து நமக்குக் கூறிச் சென்றவையாகும். சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களும் இவ்விதிக் கோட்பாட்டை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விதிதான் அனைத்தையும் நடத்துகிறது. ஒன்றாகக் கொண்டு சேர்க்கிறது. விதியை நம்பாதவர்களை விட நம்புகின்றவர்களே இவ்வுலகில் அதிகம். இவ்விதியை ஊழ் என்றும் கூறுவர். இவ்விதி குறித்த கருத்தமைந்த பழமொழிகளை நம் முன்னோர்கள் கூறி நம் வாழ்வுக்கு வழி காட்டியுள்ளனர்.
ஒட்டுவது
சிலர் கடுமையாக உழைப்பர். ஆனால் அவருக்கு உழைப்புக்கேற்ற பலன் கிட்டாது. சிலர் உழைக்க மாட்டார்கள். அவர்கள் எதிர்பாராத பலன் அவர்களுக்குக் கிட்டும். இதைப் பார்க்கும் நமக்கு வியப்பு ஏற்படுகிறது. எப்படி உழைக்கின்றவருக்குக் கிட்டாது, உழைக்கின்றவருக்குக் கிட்டுகிறதோ அதுதான் விதி என்று நமது முன்னோர்கள் குறிப்பிடுகின்றனர். நாம் என்னதான் முயன்று உழைத்தாலும் நமக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும். இதனை உணர்ந்து மனம் தளராது நாம் மேலும் மேலும் முன்னேறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். இத்தகைய சிந்தனையை,
“எண்ணெயத் தடவிக்கிட்டு தரையில
உருண்டாலும் ஒடம்புல ஒட்டுறதுதான் ஒட்டும்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. நமக்கு என்ன கிடைக்க வேண்டும் என்று இறைவன் நினைத்திருக்கின்றானோ அதுதான் கிட்டும். இதனை உணர்ந்து மனிதர்கள் நடந்து கொண்டால் வாழ்வில் துன்பத்திற்கு இடமில்லை என்பதை இப்பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகிறது.
பட்ட காலும் கெட்ட குடியும்
நாம் நடந்து போகும் போது நம்மையறியாமலேயே கல்லில் நமது கால் இடறக் கால் விரலில் காயம் ஏற்படும். காயம் ஏற்படுவதால் நடப்பதில் துன்பம் ஏற்படும். நாம் கவனமாக நடந்து செல்லாவிடில் மீண்டும் காயம் ஏற்பட்ட காலிலேயே இடறிக் காயமேற்படும். அது போன்று செல்வமிழந்து செல்வாக்கிழந்து தவிக்கும் குடும்பமே மேலும் மேலும் சீர்கெடும். இது விதி என்பர். இவ்விதியின் விளையாட்டை,
“பட்ட காலிலேயே படும்
கெட்ட குடியே கெடும்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இது விதியின் கொடுமையை உள்ளடக்கிய பழமொழியாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் துன்பம் ஏற்படத்தான் செய்யும். அதற்காக நாம் மனம் நொந்து ஒடுங்கி இருந்து விடக் கூடாது. கவனமாக நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டிய நெறியினை இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
மரம் வைத்தவன்
விதி என்பது என்ன? பார்? விதி எனில் அதனை உருவாக்குவது யார்? விதி கடவுளை விடப் பெரியதா? அவ்வாறெனில் அவ்விதி எங்கு இருக்கிறது? எனப் பல வினாக்கள் நம் உள்ளத்துள் எழுகின்றன. இவற்றுக்கெல்லாம் விடையிறுப்பதாக,
“மரத்தை வைத்தவன் தண்ணி ஊத்துவான்”
“மரத்தை வச்சவன் தண்ணீர் ஊத்தமாலா போயிடுவான்?”
என்ற பழமொழிகள் அமைந்துள்ளன.
மரம் என்பது உயிர் – உயிரை உருவாக்கியவன் யார்? அவன்தான் விதியையும் உருவாக்கி இருக்க வேண்டும். அவனே அனைத்திற்கும் காரணமாகத் திகழ்கிறான். இதுவே உலக உண்மை. மரம் வைத்தவன் – இறைவன். இறைவனே அனைத்தையும் உருவாக்குகிறான்; நிர்ணயிக்கிறான். விதியை நிர்ணயித்தவனே அவ்விதிக்குக் கட்டுப்படுகிறான். இவை அனைத்தையும் மனிதர்களுக்கு உணர்த்துவதற்காகவே பல்வேறு நாடகங்களை இறைவன் நடத்துகிறான். இறைவன் நடத்தும் நாடகத்தினையே விதி என்று சான்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.
உயிரை உருவாக்கியவன் அவ்வுயிரைக் காப்பதற்குரிய வழியையும் ஏற்படுத்தி விடுகிறான். அது பிறப்பிலேயே நிர்ணயிக்கப் பெற்று இறைவனால் செயல்படுத்தப்படுகிறது, இத்தகைய ஊழ் குறித்த தத்துவத்தையே மேற்குறித்த பழமொழிகள் நமக்கு விளக்குகின்றன.
கொடுமையும் கோவிலும்
விதி கொடுக்கும் துன்பத்தைக் குறைக்கக் கோவிலுக்குச் செல்வர், ஆனாலும் அவர்களது விதிப்பயன் அக்கோவிலுக்கும் அவர்கள் நிம்மதியாகச் சென்று வர இயலாத நிலைமையை ஏற்படுத்தும், இதுவும் விதியின் விளையாட்டு எனலாம், இத்தகைய நிலை ஏற்படும்போது மனம் நிலை குலையாது, எது நடக்கின்றதோ அது இறைவன் விதித்தது என்று உள அமைதியுடன் ஏற்றுக் கொண்டு அதன்படி நடத்தல் வேண்டும். இத்தகைய மனப்பக்குவத்தை நமக்கு,
“கொடுமை கொடுமைன்னு
கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை
சிங்கு சிங்குன்னு ஆடுச்சாம்”.
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
துன்பங்கள் அடுக்கி வந்தாலும் அவற்றைக் கண்டு துவண்டு விடக்கூடாது. அதனை எதிர் கொண்டு வாழ்க்கையை நடத்துகின்ற மனப்பக்குவம் வேண்டும் என்பதை உள்ளீடாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விதி பெரிது
எல்லாவற்றையும்விட ஊழே வலியது, அதனையும் மீறி ஏதொன்றும் நடவாது. இதனை,
“ஊழிற் பெருவலி யாவுள மற்றைவை
சூழினும் தான் முந்துறும்”.
என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். விதியின் செயல் பெரியது. அதனை யாராலும் வெல்ல முடியாது. இத்தகைய கருத்தையே,
“விதி வலியது”
“விதிக்குப் பெரியவன் யாருமில்லை”
“விதிக்கு மிஞ்சினவன் யாருமில்லை”
என்ற பழமொழிகள் எடுத்துரைக்கின்றன.
இப்பழமொழியுடன்,
“எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்
அழுதாலும் தொழுதாலும்
அதிலோர் எழுத்து அழிந்திடுமோ?”
என்ற உமர்கய்யாம் பாடல் ஒப்பிட்டு நோக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. விதியின் வலியையும் தன்மையையும் தெளிவுறுத்துவதாக இப்பழமொழிகள் அமைந்துள்ளன.
விதியும் மதியும்
எல்லாம் விதி எனில் விதியை வெல்ல முடியாதா? அத்தனை ஆற்றல் படைத்ததா? என்ற வினா நம் உள்ளத்தில் எழுகிறது. விதியை வெல்லலாம். அதை வெலலக்கூடிய கருவி ஒன்றே ஒன்றுதான். அதுதான் அறிவு. மதி. மதிகொண்டு விதியை வெல்லலாம். இதனை,
“விதியை மதியால் வெல்லலாம்”
“விதி பெரிசா? மதிபெரிசா?”
என்ற பழமொழிகள் விளக்குகின்றன.
வள்ளுவர் விதியை வெல்பவர் யார்? என்பதற்கு,
“ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றித்
தாளாது உஞற்று பவர்”
என்று விடை பகர்கின்றார்.
எவர் ஒருவர் அறிவு கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து தன் வாழ்வில் உழைக்கின்றாரோ அவர் ஊழை வெல்வர். அவரலால்தான் ஊழை வெல்ல முடியும். இக்குறட்பா பழமொழியின் விளக்கமாக அமைகின்றது. இதற்கு விநாயகர் புராணத்தில் இடம் பெறும் ஒரு கதை சான்றாக அமைகின்றது.
சனி பகவான் (விதி) வலிமையானவர். ஒருவரை அவர் பிடித்து விட்டால் உயர்த்தினாலும் உயர்த்துவார். தாழ்நிலைக்குக் கொண்டு வந்தாலும் வருவார். இவர் ஈஸ்வரனையும் (சிவன்) பிடித்ததால் அவருக்குச் சனீஸ்வரன் என்ற பெயர் ஏற்பட்டது. சனிபகவான் அனைவரையும் பிடித்தார். விநாயகரைப் பிடித்து விடுங்கள் நீங்கள் வலிமையானவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம் என்று தேவர்கள் கூறினர். சனீஸ்வரனும் விநாயகரைப் பிடிப்பதற்காகச் சென்றார்.
சனிபகவான் வரப் போகிறார் என்பதை உணர்ந்த விநாகர் தன் முதுகில்,”இன்று போய் நாளை வா” என்று எழுதி வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார். விநாயகரிடம் வந்த சனி பகவான் உங்களை நான் பிடிக்கப் போகிறேன் என்று கூற விநாகர் பேசாது தனது பின்புறம் போய்ப் பார்க்குமாறு கூறினார்.
பின்புறம் சென்று பார்த்த சனிபகவான் இன்றுபோய் நாளைவா என்று எழுதப்பட்டிருப்பதாகக் கூறினார். விநாயகரும் ஆம் அதன்படி செய்யுங்கள் என்றார். சனி பகவானும் சரி என்று கூறிவிட்டுச் சென்றார். மீண்டும் மறுநாளும் வந்தார். விநாயகர் முன் கூறியதைக் கூற அவரும் பின்புறம் சென்று பார்த்து விட்டுத் திரும்பினார். மீண்டும் மீண்டும் இது போன்று விநாயகரைப் பிடிக்க முடியாது திரும்பினார்.
சனி பகவான் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டார். விநாயகரும் சனி பகவானைப் பார்த்து இனிமேல் நீங்கள் என்னை வணங்கும் அடியவர்களையும் பிடிக்கக் கூடாது என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி விட்டார். அன்றிலிருந்து சனி பகவான் விநாயகரை வழிபடுவோரையும் அவரது அடியவர்களையும் பிடிப்பதில்லை. மதியால் விநாயகர் விதியை வென்றார். மதி இருப்பின் விதியை வெல்லலாம். விதி வந்துவிட்டதே என்று வருந்தாது அதிலிருந்து விடுபடுவதற்கு மனிதர்கள் முயல வேண்டும் என்பதை எடுத்துக் கூறி இப்பழமொழி நமக்கு நம்பிக்கை ஊட்டுகின்றது.
விதியும் பாம்பும்
ஒருவருடைய வாழ்நாள் முடிவுறும் போது கூற்றுவன் ஏதாவது ஒரு வடிவில் வந்து அவரது உயிரைக் கவருவான். அக்கூற்றுவன் எவ்வடிவில் வேண்டுமானாலும் வரலாம். அதிலும் குறிப்பாக பாம்பு வடிவில் வரும் போது வாழ்நாள் முடிபவருக்கு இறப்பு உறுதியாகிவிடும் என்று கூறுவர். எல்லாப் பாம்பின் வழியும் கூற்றுவன் மனிதனின் வாழ்நாளை முடிக்கக் கருதமாட்டான். விரியன் பாம்பு வாயிலாக மட்டுமே ஒருவனது விதியை முடிக்கக் கருதுவான் என்று மக்கள் நம்புகின்றனர். இத்தகைய மக்களின் நம்பிக்கையை விளக்குவதாக,
“விதி முடிஞ்சாத்தான் விரியன் கடிக்கும்”
என்ற பழமொழி அமைந்துள்ளது. மற்ற பாம்புகள் கடிக்கின்ற போது கடிபட்ட மனிதன் பிழைப்பதற்கு வழிவகை உள்ளது. ஆனால் கொடிய விசமுள்ள பாம்பான விரியன் கடித்தால் கடிபட்டவர் உடன் இறந்து விடுவார். விரியன் பாம்பின் அதி விசத் தன்மையை எடுத்துரைப்பதாக இப்பழமொழி அமைந்துள்ளது.
விதி வலிது என்றாலும விதியை எண்ணி வீழ்ந்து கிடத்தல் கூடாது. உழைத்தால் உயரலாம் என்று எண்ணி உழைத்து முன்னேற வேண்டும். விதியாகிய இறைவன் முயன்று உழைப்பவர்களை அதிகம் வருத்துவதில்லை. அதனால் விதியை மதியால் வென்று மனிதர்கள் மாண்புற வாழ வேண்டும் என்பதை இப்பழமொழிகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. மதி கொண்டு விதி வென்று புது விதி செய்து வாழ்வோம்.
நம் வாழ்க்கை வசந்தமாகும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.