பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
47. மரங்கள்
மரங்கள் மண்ணுக்கு அழகு. இயற்கையின் அழகை வெளிப்படுத்தும் அழகிகள் மரங்கள். மரம்தான் மனிதர்களுக்கும், மண்ணில் வாழும் உயிரினங்களுக்கும் வாழ்க்கையைத் தருகின்றன. மரங்களை வைத்தே மழைப் பொழிவு உருவாகின்றது. மரம் குறைந்தால் மழை குறையும். அனைத்து வளங்களும் அழிந்து போகும்; உயிரினங்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும். இதனை உணர்ந்த நம் முன்னோர்கள் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க இயற்கையைத் தெய்வமாகக் கருதி அவற்றை வழிபட்டனர்.
மரங்களில் தெய்வங்கள் வாழ்வதாகக் கருதி அவற்றைப் பாதுகாத்தனர். கோவில்கள் தோறும் மரங்களைத் தல விருட்சங்கள் என்று கூறி நட்டுவைத்துப் பராமரித்து வந்தனர். இதனால் இயற்கை பாதுகாக்கப்பட்டது, அவ்வாறு இயற்கையின் இளவரசிகளாகத் திகழும் மரங்களின் பலன்களைப் பழமொழிகள் வாயிலாகக் கூறி அவற்றை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தினர். மரங்கள் வாயிலாக மனித மாண்புகளை எடுத்துரைத்து மனிதர்கள் சிறப்பாக வாழ வழிவகுத்தனர்.
பலா - தென்னை
பலா முக்கனிகளுள் ஒன்று. இப்பலா மரம் காய்த்துப் பலன் தருவதற்கு சிறிது காலம் ஆகும். இம்மரத்தையும் தென்னை மரத்தையும் நடுவது குறித்த தவறான நம்பிக்கை இன்று மக்களிடையே வழங்கி வருவதைப் பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன.
“பலா வச்சவன் பாத்துப்புட்டுச் சாவான்
தென்னைய வச்சவன் தின்னுப்புட்டுச் சாவான்”
என்ற பழமொழி மக்களின் நம்பிக்கையை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
வீட்டில் பலா மரக்கன்றையும் தென்னையையும் யார் வைக்கின்றார்களோ அவர்கள் அம்மரங்கள் பலன் தரும் போது இறந்து விடுவர், அதனால வயதானவர்களே இம்மரக்கன்றுகளை நடுவர். இளவயதுடையவர்கள் இக்கன்றுகளை நடுவதற்கு முன்வரமாட்டார்கள்,
பலாக் கன்று விரைந்து பலனுக்கு வருவதில்லை. அது சிறிது சிறிதாகவே வளர்ந்து பின் பலன் கொடுக்கும். ஆனால் தென்னை குறுகிய காலத்திற்குள் வளர்ந்து பலன் கொடுக்கத் தொடங்கிவிடும் என்பதே இதன் உண்மை. இத்தகைய உண்மையை விளக்குகின்ற வகையிலேயே இப்பழமொழிகள் மக்களிடையே வழங்கப்பட்டு வருகின்றன. மாறாக மரம் வைத்தால் இறந்து விடுவர் என்பது மூடநம்பிக்கை ஆகும்.
தென்னை மரம் குறித்து,
“பெத்த பிள்ளை கஞ்சி ஊத்தாட்டியும்
வச்ச பிள்ளை கஞ்சி ஊத்தும்”
“பிள்ளையைப் பெத்தா கண்ணீரு
தென்னையை வச்சா இளநீரு”
என்று வழங்கப் பெறும் பழமொழிகள் தென்னையின் சிறப்பினை எடுத்துரைப்பனவாக உள்ளன.
தென்னை மரம் நீண்டநாள் பலன் தரக்கூடிய மரமாகும். அதனை வைத்து நன்கு பராமரித்தால் பெற்ற பிள்ளைகளைப் போன்று காய்ப்பிற்கு வரும் காலத்தில் வைத்தவருக்குப் பலன் கொடுக்கும். தோப்பாக உள்ள தென்னை மரத்தைக் குத்தகைக்கு விட்டு அதன் வாயிலாக வரும் வருமானத்தைப் பெற்று வாழ்க்கை நடத்தலாம். அல்லது தேங்காய்களைப் பறித்து விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தலாம்.
ஆனால் பிள்ளைகள் சொத்திற்காகப் பெற்றோர்களைக் கவனிக்காது தெருவில் விட்டு விடுவார்கள். கண்ணீர் விட வைப்பார்கள். ஆனால் தென்னைக்குத் தண்ணீர் விட்டால் பசி, தாகம் அவற்றைப் போக்குவதற்கு இளநீர் தரும். பெற்ற பிள்ளைகளைவிட வைத்த தென்னம்பிள்ளையானது தன்னை நட்டு வளர்த்தவரின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் பலன் கொடுக்கும் தன்மை கொண்டது. இப்பழமொழி மனிதர்களின் இயல்பினைப் புலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தென்னங்கன்றை நடவு செய்யும் போது அதிகமான இடைவெளிவிட்டு நடவு செய்தல் வேண்டும். அவ்வாறு நடவு செய்தால் தான் அதிகமான பலனைத் தென்னைமரம் கொடுக்கும். நெருக்கமாக நடும் போது அதன் விளைச்சல் குறைந்துவிடும். இத்தகைய வேளாண் சார்ந்த தொழில் நுட்பத்தை,
“தென்னைக்குத் திருவாரூர்த் தேரோட”
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. தேரில் பெரிய தேர் திருவாரூர்த் தேராகும். அந்தத் தேர் போகுமளவிற்கு ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடைவெளி இருக்க வேண்டும் என்று இப்பழமொழி நமக்கு அறிவுறுத்துகின்றது.
கொன்றை – வேம்பு
கொன்றை மரம் காட்டில் வளரும். அது சிவபெருமானுக்கு உகந்த பூவாக அமைந்துள்ளது. இம்மரம் வைரமாக இருந்தால் கருங்கல் போன்று உறுதியாக இருக்கும். மண்ணிற்குள்ளேயே கிடந்தாலும் அதனைக் கரையான் அரிக்காது. அதனால் அம்மரத்தைக் காட்டில் ஏர், கலப்பை, மண்வெட்டியின் பிடி ஆகியவை செய்வதற்குப் பயன்படுத்துவர். அது உளுக்காது இருக்கும்.
வேம்பினை நாட்டுத் தேக்கு என்பர். இதனைத் தேக்கு மரத்திற்குப் பதிலாக வீடு கட்டுவதற்குப் பயன்படுத்துவர். வேம்பானது மருத்துவ குணம் நிறைந்ததால் அதனைக் கொண்டு வீடு கட்டினால் நோய்த் தொற்றுக்கள் வராது என்பதும் மக்களிடையே வழங்கி வரும் நம்பிக்கையாகும். இந்தக் கொன்றை, வேம்பு இரண்டையும் அடிப்படையாக வைத்து,
“மண்ணுக்குக் கொன்னை(றை)
மனைக்கு வேம்பு”
என்ற பழமொழி வழங்கப்படுகின்றது.
இதே போன்று கோடை காலங்களில் வேம்பு நன்கு நிழல் தரும். அதனால் கோடைகால நோய்கள் நம்மைத் தாக்காது. முருங்கை மரம் வீட்டில் வளர்ப்பது நல்லது. முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் கண் பார்வை நன்கு தெரியும் இதனை உண்டு வர மாலைக்கண் நோய் தீரும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றர். அதுமட்டுமல்லாது முருங்கைக் காய் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் அருமருந்தாகவும் திகழ்கின்றது. இதனை,
“வீட்டுக்கு முருங்க மரம்
வெய்யிலுக்கு வேப்ப மரம்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
முருங்கை
முருங்கை மரத்தை பஞ்சந்தாங்கி என்று மக்கள் குறிப்பிடுவர். எத்தகைய வறட்சியையும் தாங்கிக் கொண்டு இம்மரம் வளரும். உணவு கிடைக்காதபோது இதன் தழைகளை ஆய்ந்து உப்புப் போட்டு வேகவைத்து மக்கள் உண்டு பசியாறுவர். அதனால்தான் இதனைப் பஞ்சந்தாங்கி என்று அழைக்கின்றனர். இம்மரத்தை வீடுகளில் கிணற்றடிகளின் ஓரத்தில் வளர்ப்பர்.
இம்மரத்தின் வேர்களானது பூமிக்கடியில் சென்று நீரில் உள்ள அசுத்தங்களை அகற்றி அதனைத் தூய்மையாக்கும். அதனாலேயே முருங்கையை கிணற்றோரத்தில் நம் முன்னோர்கள் வைப்பர். தண்ணீரைச் சுத்தப்படுத்துவதில் முருங்கை முன்னிற்பது நோக்கத்தக்கது. இம்முருங்கை மரத்தை ஒடித்தே வளர்க்க வேண்டும். அப்போதுதான் அது புதிய தளிர்களைவிட்டு காய்களும் அதிகம் காய்க்கும். இத்தகைய மரம் வளர்க்கும் முறையை,
“பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்
முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும்”
“அடிச்சு வளர்க்காத பிள்ளையும்
ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் வீண்”
என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன.
தன்னுடைய பிள்ளை சிறு தவறு செய்கின்ற போது அவனைக் கண்டிக்காது விட்டுவிட்டால் அந்தப் பிள்ளையானது தீயவனாகி சமுதாய விரோதியாகி விடுவான். அதனால் அவனை தண்டிக்கின்ற போது தண்டித்தும் அணைக்கின்ற போது அணைத்தும் வளர்க்க வேண்டும். அது போன்றே முருங்கையும் ஆகும். ஒடித்து வளர்க்கின்ற போதுதான் முருங்கை நன்கு பலன் தரும் என மரத்தை வைத்து குழந்தைகளை வளர்க்கும் முறையினை எடுத்துரைப்பதாக இப்பழமொழி அமைந்திருக்கின்றது.
அரச மரம்
இதனைப் போதி மரம் என்றும் குறிப்பிடுவர். மரங்களுக்கு எல்லாம் அரசனாக விளங்குவதால் இதனை அரச மரம் என்று வழக்கில் குறிப்பிடுகின்றர். இவ்வரச மரம் அதிகமான உயிர்வளியை (ஆக்ஸிஜன்) வெளியில் விடும் தன்மை கொண்டது. அதனால் இதன் கீழ் அமர்ந்தாலோ அதனைச் சுற்றி வந்தாலோ பெண்களுக்கு கற்பப்பை தொடர்பான நோய்கள் நீங்கிவிடும். குழந்தைப் பாக்கியம் கிட்டும். இத்தகைய அரசமரத்தின் மருத்துவக் குணத்தை,
“அரச(னை) நம்பி புருஷனைக் கைவிட்ட கதைதான்”
“அரச மரத்தைச் சுற்றி வந்து அடிவயித்தத் தொட்டுப் பாத்தாளாம்”
என்ற பழமொழிகள் குறிப்பிடுகின்றன.
அரசமரம் கருப்பை தொடர்பான நோய்களைக் குணமாக்கும். அதே நேரத்தில் பெண் தனது கணவனுடன் நெருக்கமாக இருந்தால் மட்டுமே அவளுக்குக் குழந்தைப் பேறு வாய்க்கும். இதனை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து மூடநம்பிக்கையுடன் இருத்தல் கூடாது என்ற இல்லறம் நடத்தும் பாங்கினை எடுத்துரைப்பதாகவும் இப்பழமொழிகள் அமைந்திருக்கின்றன. இங்கு அரசனை என்பது அரச மரத்தினை என்று வழக்கில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது நாளடையவில் அரசனை என்று மருவி வழக்கில் வழங்கப்பட்டு வருவது நோக்கத் தக்கது.
மரங்களை வளர்த்தால் மனிதர்கள் வாழலாம் என்ற உயரிய சிந்தனையை மரங்கள் குறித்த பழமொழிகள் நமக்கு நல்குகின்றன. இம்மரங்கள் மனித வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளன. மரங்களை வளர்த்து மண்ணைக் காத்து மழையைப் பெற்று பூமியில் இன்பமாக வாழ்வோம். வாழ்க்கை இனிக்கும்
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.