தமிழர்களின் வாழ்க்கையில் பானையும் சங்கும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நமது முன்னோர்கள் மட்பாண்டங்களிலேயே உணவுப் பொருள்களைச் சமைத்து உண்டனர். ஒவ்வொரு வீட்டிலும் மண் பாத்திரங்களே அதிகம் பயன்படுத்தப்பட்டன. வாழ்க்கை தொடங்கும் நிலையிலும் வாழ்க்கை முடியும் நிலையிலும் பானையும் சங்கும் பயன்படுத்தப்பட்டன. திருமணம், கோவில் விழாக்கள், இறப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் பானையும் சங்கும் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன.
திருமண நிகழ்ச்சிகளின் போது ஏழு பானைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கடுக்காக மணமேடைகளின் முன்னர் இரண்டு பக்கமும் வைப்பதைப் புனிதமாகக் கருதுவர். அதுபோன்று சங்கினை ஊதிக் கொண்டும் வருவர். மங்கல நிகழ்சிகளில் சங்கு ஊதி நிகழ்ச்சிகளை நடத்துவர். இறப்பு நிகழ்ச்சிகளிலும் இவ்விரு பொருள்கள் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. இவற்றை வைத்துப் பல்வேறு பழமொழிகள் வழக்கில் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது. இப்பழமொழிகள் மக்களின் பண்பாட்டு நெறியை விளக்குவதாக அமைகின்றன.
பானை முழுமையாக இருக்கும் வரையில் அதற்கு மதிப்பாகும். அது உடைந்து விட்டால் அதனைத் தூக்கி வெளியில் எறிந்துவிடுவர். உடைந்த பானைக்கு மதிப்பு என்பது மனிதர்களிடையே கிடையாது. அதனை வீட்டிற்குள் வைத்திருக்க மாட்டார்கள். அவ்வாறு வைத்திருப்பது வறுமைக்கு வித்திடும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுவது இதற்கு முக்கியமான காரணமாகும். இத்தகைய மக்களின் நம்பிக்கையை,
“ஓட்டைப் பானை வீட்டைக் கெடுக்கும்”
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.
ஓட்டைப் பானையில் நீர் ஊற்றி வைக்க முடியாது. அவ்வாறு வைத்தால் அது ஒழுகி வீட்டை ஈரமாக்கி விடும். மேலும் அந்தப் பானையால் வீட்டிற்குரிய அழகு குலைந்து விடும். ஓட்டைப் பானை வீட்டில் இருப்பதைப் பார்த்தோர் அவ்வீட்டாரை மரியாதைக் குறைவாகக் காண்பர். அதனால் பானையானது ஓட்டையாகி விட்டாலோ, விரிசல் கண்டாலோ அதனைத் தூக்கி எறிந்துவிடுவர்.
உறவுகளில் விரிசல் கண்டால் அதனை உடனே சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அவ்வுறவானது வாழ்நாளிறுதிவரை ஒட்டாமலேயே போய்விடும். உறவுகளை எப்போதும் பிளவுறாது பேணிக் காத்தல் வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும். இத்தகைய வாழ்க்கை நெறியை,
“ஒடஞ்ச பானையை ஒட்ட வைக்க முடியுமா?”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. பிரிந்து போன உறவுகளை ஒருபோதும் ஒட்ட வைக்க இயலாது. அதனால் சுற்றத்தாரை மனப்பிரிவு ஏற்படாது பேணுதல் வேண்டும் என்பதை இப்பழமொழி வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
சங்கு முழுமையாக உள்ளபோதுதான் அதனை ஊதி ஒலி எழுப்ப முடியும் இல்லையேல் அதிலிருந்து ஓசை வெளிவராது போய்விடும். மனதளவில் உறவுகள் உடைந்து போய்விட்டால் அது நிலைக்காது அறுந்து போய்விடும். இதனை,
“ஒடஞ்ச சங்கு ஊத்துப் பறியுமா?”
என்ற பழமொழி மொழிகிறது. இங்கு ஊத்து என்பது ஊதுவதனையும் பறிதல் என்பது வெளிப்படுவது என்பதையும் குறிக்கும்.
சிலர் எப்போது பார்த்தாலும் எதையாவது தொடர்பில்லாது பேசிக் கொண்டே இருப்பர். அவர்களால் பேசாமல் இருக்க முடியாது. இத்தகையவர்களை உளறுவாயர்கள், ஓட்டை வாயர்கள் என்று வழக்கில் குறிப்பிடுவர். இவர்களது இயல்பினை,
“ஓட்டைப் பானைக்குள்ள நண்ட விட்ட மாதிரி”
என்ற பழமொழி எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. ஓட்டைப் பானைக்குள் விடப்பட்டுள்ள நண்டானது எவ்வாறு ஊறிக்கொண்டு ஓசையை எழுப்புமோ அதைப் போன்று எப்போதும் தேவையின்றிப் பேசுதல் கூடாது என்பதை இப்பழமொழி மொழிகிறது. இஃது வழக்குத் தொடர் போன்று காணப்படினும் இஃது அதனின்று வேறுபட்டதாகும்.
சிலர் தேவையில்லாதவற்றை எல்லாம் இழுத்துப் போட்டுக்கொண்டு அதிலிருந்து தமக்குத் துன்பம் வருகின்றதே என்று கூறிப் புலம்பிக் கொண்டே இருப்பர். தேவையற்ற செயல்களைச் செய்து துன்பத்தை வரவழைத்துக் கொள்வர். இவர்களது பண்பினை,
“சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
இப்பழமொழியானது மகாபாரதக் கதையை விளக்குவதாக அமைந்துள்ளது. பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் போர் மூண்டது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நண்பர்களை எல்லாம் சந்தித்துக் கொண்டு படைகளைத் திரட்டினர். கிருஷ்ணன் இருதரப்பிற்கும் உறவினன் என்பதால் துரியோதனனும், அருச்சுனனும் படைஉதவி கேட்டு கிருஷ்ணனைச் சந்திக்கச் சென்றனர்.
அவர்கள் இருவரையும் பார்த்த கிருஷ்ணன் எனது படைகள் ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமும் நிற்போம். மேலும் நான் எந்த ஆயுதத்தையும் எடுத்துப் போர் செய்ய மாட்டேன். இதற்குச் சம்மதம் என்றால் எது வேண்டுமோ நீங்களே கேட்டு அதனைத் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். அருச்சுனன் கிருஷ்ணா ஆயுதம் எடுக்காத நீ மட்டும் எங்கள் பக்கம் வந்துவிட்டால் போதும் என்றான். அருச்சுனன் நன்கு ஏமாந்தான் என்று கருதிய துரியோதனன் தனக்கு கிருஷ்ணனுடைய படைகள் மட்டும் போதும் என்று மகிழ்ந்து கூறி அவற்றைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.
மகாபாரதப் போர் ஏற்பட்டது. பாண்டவர்களைக் கண்ணன் கண்ணும் கருத்துமாகக் காத்தான். ஒரு கட்டத்தில் அருச்சுனன் கெளரவர்களுடன் போர்புரியும் போது கடுமையாக அடிபட்டு தேர்த்தட்டில் சாய்ந்தான். அப்போது உடனிருந்த கண்ணன் தன்னுடைய சங்கினை எடுத்து ஊதி எதிரிப் படைகளைப் பாதிப்பிற்கு உள்ளாக்கினான். இறுதியில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். வெறுமனே சங்கைத்தானே ஊதுகிறான் என்றிருந்த கெளரவர்கள் மயங்கி இறந்தனர். சங்கே கெளரவர்களுக்குப் பெரிய பாதிப்பை உண்டாக்கியது.
வெறுமனே கிடந்த சங்கினை ஊதி பாதிப்படையச் செய்தான் கிருஷ்ணன் என்ற மகாபாரதக் கதையை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது. ஆயுதங்களை எடுக்க மாட்டேன் என்று கூறிய கண்ணனையே ஆண்டி என்ற சொல்லானது குறிப்பிடுகின்றது.
இங்ஙனம் பானை, சங்கு குறித்த பழமொழிகள் மக்களின் வாழ்வியலைப் புலப்படுத்துவதுடன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைப்பனவாக உள்ளன. உறவுகளைப் பேணி உன்னதமாய் வாழ்வோம். வாழ்வினிலே உயர்வோம். வாழ்க்கைத் தரம் உயரும்.