பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
49. நட்பு
தமிழர்களின் வாழ்க்கையில் பானையும் சங்கும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நமது முன்னோர்கள் மட்பாண்டங்களிலேயே உணவுப் பொருள்களைச் சமைத்து உண்டனர். ஒவ்வொரு வீட்டிலும் மண் பாத்திரங்களே அதிகம் பயன்படுத்தப்பட்டன. வாழ்க்கை தொடங்கும் நிலையிலும் வாழ்க்கை முடியும் நிலையிலும் பானையும் சங்கும் பயன்படுத்தப்பட்டன. திருமணம், கோவில் விழாக்கள், இறப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் பானையும் சங்கும் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன.
திருமண நிகழ்ச்சிகளின் போது ஏழு பானைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கடுக்காக மணமேடைகளின் முன்னர் இரண்டு பக்கமும் வைப்பதைப் புனிதமாகக் கருதுவர். அதுபோன்று சங்கினை ஊதிக் கொண்டும் வருவர். மங்கல நிகழ்சிகளில் சங்கு ஊதி நிகழ்ச்சிகளை நடத்துவர். இறப்பு நிகழ்ச்சிகளிலும் இவ்விரு பொருள்கள் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. இவற்றை வைத்துப் பல்வேறு பழமொழிகள் வழக்கில் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது. இப்பழமொழிகள் மக்களின் பண்பாட்டு நெறியை விளக்குவதாக அமைகின்றன.
உடைந்த பானையும் உடைந்த சங்கும்
உலகில் உன்னதமானது நட்பு. நட்பு இல்லாத வாழ்க்கை பாலைவனம் போன்றது. நட்பு இல்லாத ஊரில் வாழாமல் இருப்பது இனியது என்று நமது இலக்கியங்கள் மொழிகின்றன. வாழ்க்கையில் உண்மையான நட்பு கிடைப்பது என்பது இறைவனின் செயல். இத்தகைய நட்பில் விரிசல் வராது நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒற்றுமையுடன் இருந்து செயல்படும்போதுதான் நம்முடைய வலிமை கூடும். அதுமட்டுமல்லாது நட்பிற்கு இடையில் சிறிதளவு இடைவெளி இருப்பதும் நல்லது. அங்ஙனம் இடைவெளி என்பது இல்லையேல் அது துன்பத்தைத் தரக்கூடிய நட்பாக மாறிவிடும்.
நம் முன்னோர்கள் நட்புக் கொள்வதைப் பற்றியும் அந்த நட்பினை எவ்வாறு தொடர வேண்டும் என்பது குறித்தும் பழமொழிகள் வாயிலாக எடுத்துரைத்துள்ளனர். அதோடு மட்டுமல்லாது நட்பு கொண்டவர்களுடன் எவ்வாறு ஒற்றுமையுடன் வாழ்வது என்பது குறித்தும் பழமொழிகள் வழி வாழ்வியல் நெறிகளை மொழிந்துள்ளனர். இப்பழமொழிகள் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுவனவாக அமைந்துள்ளது நோக்கத்தக்கது.
நெருக்கமான நட்பு
நட்பில் நெருங்கிய நட்பு, உயிர் நட்பு, பகட்டுக்காக நட்பு, கூடா நட்பு என்று பல்வேறு வகைகள் உண்டு. இதில் நெருங்கிய நட்பு என்பது பல நாள் பழகிய நட்பாகும். நட்புக் கொள்ளும் போது ஒருவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்று நன்கு ஆராய்ந்த பின்னர் நட்புக் கொள்ள வேண்டும். நட்பே சில நேரங்களில் பகையாக மாறவும் கூடும். தீக்காய்வார் எவ்வாறு நெருப்பருகில் அமர்ந்து குளிர் காய்கிறாரோ அதுபோன்று ஒருவரிடம் நட்புப் பாராட்ட வேண்டும்.
அவ்வாறின்றி நாம் எல்லாவற்றையும் வெளிப்படையாக அவரிடம் சொல்லிவிட்டால் அவர் சூழலின் காரணமாக பகைவராக மாறும்போது நம்மைப் பகைவரிடம் காட்டிக் கொடுத்துவிடுவார். அதனால் விழிப்போடு நட்புக் கொள்பவரிடம் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை,
“கடுஞ்சினேகம் கண்ணைக் கெடுக்கும்”
“கிட்ட இருந்தால் முட்டப் பகை”
என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன.
இங்கு சினேகம் என்பது நட்பினைக் குறிக்கும். கிட்ட என்பது அருகில், நெருக்கம் என்ற பொருள்படும். நாம் யாரோடும் மிக மிக நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அவர் நம்முடைய இரகசியங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு, நம்முடன் கருத்து முரண்பாடு ஏற்படும்போது உடன் நம்மைப் பற்றி நம் பகைவர்களுடன் சேர்ந்து கொண்டு நமக்கு எதிராகச் செயல்படுவர். அதனால் நாம் எவரையும் சிறிது இடைவெளி விட்டே நண்பராக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வாழ்வியல் நடைமுறையை இப்பழமொழிகள் எடுத்துரைக்கின்றன.
கூடா நட்பு
நல்ல நட்பு நல் ஆக்கத்தைத் தரும். ஆனால் தீய நட்பு புற்று நோய் போன்று நம் உடலிலேயே இருந்து கொண்டு நமக்குப் பெரும் வேதனையைத் தரும். நண்பரைத் தேர்ந்தெடுக்கும்போது பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை வசந்தமாக இருக்கும். வள்ளுவரும் இதனை,
“குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”.
என்று குறிப்பிடுகின்றார். நல்ல நட்பு வளர்பிறை போன்றது. தீய நட்பு தேய்பிறை போன்றது. நாம் சேரத் தகுதி இல்லாதவரோடு சேர்ந்து பழகி நட்புக் கொண்டால் அது நமக்குப் பல வகையிலும் இடையூறை ஏற்படுத்தும். இத்தகைய அரிய வாழ்வியல் கருத்தினை,
“கூடா நட்புக் கேடாய் முடியும்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
மகாபாரதத்தில் வரும் துரியோதனன் சகுனியின் கூடா நட்பினால் உற்றார், உறவினர், தன்னுடைய வாழ்க்கை உள்ளிட்ட எல்லாவற்றையும் இழந்தான். அவனது கூடாத, பொருந்தாத நட்பினால் அவனும் அவனைச் சார்ந்தோரும் அழிந்தனர், இதனைக் கருத்தில் கொண்டே நம்முன்னோர்கள் தீய நட்பினைக் கைவிடுமாறு கூறினர். இதனையே இப்பழமொழியும் நமக்குத் தெளிவுறுத்துகின்றது.
பொறுமையும் நட்பும்
நண்பர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் பகைகொள்ளாது ஒற்றுமையுடன் வாழ வேண்டும். எக்காரணம் கொண்டும் தங்களுக்குள் பகைத்துக் கொள்ளுதல் கூடாது. அவ்வாறு பகைத்துக் கொண்டால் பகைவருக்கு இடங்கொடுத்ததைப் போல் ஆகிவிடும். மேலும் பகைவர் கை மேலோங்க நண்பர்கள் இருவரும் அழிவெய்துவர். அதனால் நண்பர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். ஒருவர் தவறு செய்துவிட்டால், அதனைப் பெரிதுபடுத்தாது மற்றவர் பொறுமையாகச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால்தான் நண்பர்களுக்குள் நட்பு நீடிக்கும். இதனைப் புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்பதை,
“ஒருவர் பொறை இருவர் நட்பு”
என்ற பழமொழி நமக்கு அறிவுறுத்துகிறது.
மகாபாரதத்தில் வரும் கர்ணனும், துரியோதனனும் இவ்வகையில் நட்பாகப் பழகி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இறுதிவரை நண்பர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டின் போது கர்ணன் தன் மனைவியின் மேகலையைப் பிடித்து இழுக்க அது அறுந்து முத்துக்கள் எங்கும் சிதறின. அப்போது அங்கு வந்த துரியோதனன் தன் நண்பன் மீது தான் சந்தேகப் படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், “நண்பா முத்துக்களை எடுக்கவோ... கோர்க்கவோ...” என்று கர்ணனைப் பார்த்துக் கேட்டான்.
துரியோதனன் சினந்து தன்னுடன் சண்டைக்கு வருவான் என்று எண்ணியிருந்த கர்ணன் துரியோதனனின் செயலைக் கண்டு மனம் நெகிழ்ந்தான். தன் நண்பனின் செயலைக் கண்டு பொறுமையுடன் இருந்ததால்தான் துரியோதனன், கர்ணன் இருவருடைய நட்பும் இறுதிவரைத் தொடர்ந்தது.
நட்பும் பிரிவும்
நண்பர்கள் எப்போதும் இணைபிரியாது இருத்தல் வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு பிரிந்துவிட்டால் பகைவர் மகிழ்ச்சியடைவர். இதனை உணர்ந்து நட்புச் செய்தவர்களுடன் இணக்கமாக நடந்து கொண்டு நட்புக்கு வலுச் சேர்க்க வேண்டும். இத்தகைய பண்பாட்டு நெறியை,
“ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இங்குக் கூத்தாடி என்பது குறிப்பாகப் பகைவரைக் குறித்து வந்த சொல்லாகும். நண்பர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதை இப்பழமொழி வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.
நட்பும் ஒற்றுமையும்
நண்பர்கள் ஒற்றுமையாக இணைந்து வாழ்வது வாழ்வை வளப்படுத்தும். தங்களுக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அதனைப் பெரிதுபடுத்தாது இருத்தல் வேண்டும். நண்பர்கள் ஒன்றுபட்டு இருக்கும் போது அவர்களது பகைவர் வலிமை குன்றுவர். பகைவரின் சூழ்ச்சி எடுபடாது போய்விடும். இதனை,
“ஒத்து இருந்தா கெத்தா வாழலாம்”
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. இப்பழமொழி அனைவருக்கும் பொருந்தும் வண்ணம் அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
நல்ல நட்பினைப் பெற்று வாழ்வதுடன், பிரிவினை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடாது, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, சிறுசிறு கருத்து வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாது இறுதி வரை நண்பர்கள் இணைந்து வாழ வேண்டும் என்ற பண்பாட்டு நெறியை மேற்குறித்த பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர்கள் மொழிந்துள்ளனர். முன்னோர் வழி நடந்து நல்ல நண்பர்களுடன் இனிதே வாழ்வோம் வாழ்க்கை வளமுறும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.