வாழ்க்கையில் நிகழும்போது நிகழ்வுகளில் நாம் அனைவரும் பொதுநலத் தன்மையுடனும், பெருந்தன்மையுடனும் நடந்து கொள்ளவேண்டும். வேண்டியவர், வேண்டாதவர், நண்பர், பகைவர் என்று வேறுபாடு காட்டுதல் கூடாது. அங்ஙனம் வேறுபாடு காட்டுவதை வழக்கில் பாரபட்சம் காட்டுதல் என்று கூறுவர், பாரபட்சம் என்பதை ஏற்றத்தாழ்வு பாராட்டுதல் என்றும் கூறுவர், ஒருதலைச்சார்பாக நடந்து கொள்ளுதலையும் பாரபட்சம் பார்த்து நடத்தல் என்பர்.
உயர்ந்த பதவி வகிப்போர் அனைவருக்கும் பொதுவான நிலையிலிருந்து நீதி வழங்குவோர் ஆகிய யாராக இருந்தாலும் வேறுபாடு பாராது அனைவரையும் சமமாகக் கருதி நடத்துதல் வேண்டும். பாரபட்சம் காட்டாது நடந்து கொள்ளுதலை நடுநிலைமையுடன் நடத்தல் என்றும் கூறலாம். பாரபட்சம் இன்றி நடத்தல் கூடாது என்பது குறித்து நமது முன்னோர்கள் பழமொழி வாயிலாகப் பண்பட்ட நெறிகளை நமக்கு வழங்கியுள்ளனர். இப்பழமொழிகள் நம் வாழ்க்கையைச் செம்மைப்படு தூதும் வழிகாட்டு நெறிகளாக அமைந்திலங்குகின்றன.
இவ்வுலகில் அனைவரும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் சரிசமமாகப் பழகுவதில்லை, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக இடத்திற்குத் தகுந்தாற்போன்று நடந்து கொள்வர், பணம் வைத்திருப்போரிடம் ஒருவிதமாகவும், பணமில்லாதவர்களிடம் ஒருவிதமாகவும், பதவியில் உள்ளோரிடம், பதவி இல்லாதாரிடம் என ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாகவும் பழகுவர். அவ்வாறு பழகுவதும் மட்டுமல்லாது தாங்கள் இருக்கும் இடத்திற்கு அவர்கள் வரும்போது பலர் இருந்தாலும் அவர்களை மட்டும் தனி மரியாதை கொடுத்து நடத்துவர். இததகைய இழிந்த பாராபட்சமான செயலை,
“பசையுள்ள பக்கம்தான் கத்திபோகும்”
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. இப்பழமொழியை,
“சதையுள்ள பக்கம்தான் கத்தி ஆடும்”
என்று வேறுவிதமாகவும் கூறுவர்.
பசையுள்ள பக்கம் என்பது பணம், பட்டம், பதவி, அதிகாரம் உள்ளோர் என்பதைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகும், இவை இருப்போரைக் கண்டவர்கள் அவர்களிடம் காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக நடிப்பாகப் பழகுவர். உண்மையாகப் பழக மாட்டார்கள் தங்களின் காரியம் நடக்க வேண்டும் என்பதற்காகவே நடிப்பார்கள். அவர்களின் போலியான செயல்பாட்டைப் படம்பிடிப்பதாக இப்பழமொழி அமைந்துள்ளது.
மேலும் இவ்விழி பண்புடையோர் வசதிவாய்ப்பில்லாத சராசரி மனிதர்களிடம் கீழ்த்தரமாக நடந்து கொள்வர். அவர்களை மனிதர் என்ற நிலையில் கூட மதிக்க மாட்டார்கள். அவ்வாறு நடந்து கொள்வது மனிதமாண்மைப் குலைக்கும் செயலாகும். அறிஞர் பெர்னாட்ஷாவின் வாழ்வில் நடந்த சம்பவம் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.
ஒருமுறை பெர்னாட்ஷா அவர்கள் தனை விருந்திற்கழைத்த நண்பரின் வீட்றெகுச் சென்றார். அங்கு செல்வந்தர் பலர் இருந்தனர். ஷா அவர்கள் எப்போதும் போல எளிமையான கசங்கிய உடையிலேயே சென்றார்.
பெரிய செல்வந்தர்களை வரவேற்று அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த நண்பர் ஷா வருவதைக் கண்டும் அவரை வரவேற்கவில்லை. அவரைப் பார்க்காதது போன்றே நடந்து கொண்டார். ஷா அவர்கள் அருகில் சென்றாலும் அவரது நண்பர் அவரை ‘வா’ என்று வரவேற்கவில்லை. இதனைப் பார்த்த ஷாவிற்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
வருத்தமுற்ற ஷா தனது நண்பனுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார். உடனே அவ்விடத்தைவிட்டு வெளியேறினார். ஆடைகளை வாடகைக்கு விடும் கடைக்குச் சென்று அழகான ஆடைகளை வாடகைக்கு எடுத்து அணிந்து கொண்டு விருந்து நடக்கும் தனது நண்பரது வீட்டிற்குச் சென்றார்.
‘கோட்சூட்டுடன் விருந்திற்கு வந்த ஷாவைப் பார்த்த அவரது நண்பர் ஓடோடி வந்து அவரை வரவேற்றார், ஷாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. ஷாவை வரவேற்று அழைத்துச் சென்ற அவரது நண்பர் அவரைத் தன்னுடைய பிற நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினார்.
உணவு உண்ணும் இடத்திற்கு அழைத்துச் சென்று உண்ண வைத்தார். அப்போது’ஷா’ உணவை உண்ணாது தனது கோட், தொப்பி ஆகியவற்றின் மீது அள்ளி அள்ளி வைத்தார். விருந்திற்கு வந்திருந்த விருந்தினரகள் முகம் சுளித்தனர். ஷாவின் நண்பர் தவறிப் போய், “மிஸ்டர் ஷா நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இவ்வாறு நடந்து கொள்வது உங்களுக்கே அசிங்கமாகத் தெரியவில்லையா?” என்று மிகுந்த வருத்தத்துடன் கேட்டார்.
அதற்குப் பெர்னாட்ஷா சிரித்துக் கொண்டே, ‘நண்பரே! இதிலொன்றும் தவறே இல்லை. யோசித்துப் பாருங்கள் நீங்கள் எனக்கா மதிப்பளித்தீர்கள்? இந்த ஆடம்பரமான ஆடைகளுக்குத்தானே மதிப்பளித்தீர்கள். முதன் முதலில் எளிய ஆடையுடன் தங்கள் வீட்டிற்கு வந்தபோது என்னை வாவென்று வரவேற்கவில்லை. நீங்கள் வரவேற்பீர்கள் என்று ஆவலுடன் நான் காத்துக் கொண்டே இருந்தேன். ஆனால் நான் வசதி வாய்ப்பற்றவன் எளியவன் என்று கருதி என்னைப் பார்த்தும் பார்க்காததுபோல் சென்று விட்டீர்கள். நான் ஆடம்பரமாக ஆடை அணிந்து வந்ததால்தான் என்னைத் தங்கள் நண்பர் என்று பலரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டீர்கள். அதனால்தான் எனக்கு மதிப்பளித்த ஆடைக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறேன். என்னைவிட என் ஆடம்பரத்திற்கே மரியாதை கொடுத்தீர்கள். அதனால் அதற்குக் காரணமான ஆடைகள் உண்பதே மிகவும் பொருத்தமாகும்” என்று கூறினார். இதனைக் கேட்ட நண்பர் வெட்கத்தால் கூனிக்குறுகினார், தன்னுடைய பாரபட்சமான நடத்தையால் ஏற்பட்ட இழிநிலை குறித்து வருந்தினார். ஏற்றத்தாழ்வு பாராட்டாது அனைவரையும் சமமாகக் கருதிப் பழகுதல் வேண்டும் என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகிறது.
எப்போதும் ஒரேநிலையில் மனிதன் வாழ வேண்டும். சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற தமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளக் கூடாது. மேலும் எப்போதும் போல் அனைவரிடமும் பழகுதல் வேண்டும். அதைவிடுத்து ஏற்றத்தாழ்வு பாராட்டி மாறுபாட்டுடன் நடந்து கொள்ளக் கூடாது. ஆனால், சில மனிதர்கள் தங்களுக்கு எங்கு பயன் கிடைக்கின்றதோ அந்தப்பக்கம் சென்றுவிடுவர். இத்தகைய குணம் கொண்டோர் எப்போதும் பாரபட்சமாகவே நடந்து கொள்வர். அவர்களைப் பார்த்து,
“ஆலு பழுத்தா அங்கிட்டு அரசு பழுத்தா இங்கிட்டா”
என்று கேட்பர்.
ஆலமரம் பழுத்திருக்கும் போது அந்த மரத்திற்கும் ஆலமரம் பழுத்து ஓய்ந்தவுடன் அரசமரம் பழுத்தவுடன் அந்த மரத்தை நாடியும் பறவைகள் செல்லும். அதுபோன்று மனிதர்களுள் சிலர் எங்கு தங்களுக்கு லாபம் கிடைக்கின்றதோ அங்கு நோக்கிச் செல்வர். எது குறித்தும் அவர்கள் கவலையுற மாட்டார்கள். இப்பழமொழி,
“அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவை போல்”
என்ற பழம்பாடலின் வரிகளை நினைவுறுத்துவதாக அமைந்துள்ளது. மனிதர்கள் பாராபட்சம் பாராது எப்போதும் ஒரே நிலையில் நிற்றல் வேண்டும் என்பதை இப்பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகிறது.
நேரிய வடியே வாழ்வின் ஒளி; பிறர் மனதைப் புண்படுத்தாது புரிதலுடன் நடக்கும் பண்பே உயரிய மனிதப் பண்புடன் நடந்து கொள் வேண்டும் என்று இப்பழமொழிகள் வாயிலாக, நமது முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாண்புடன் நடந்து மனிதர்களாக வீழ்வோம்! வாழ்வும் மிகழ்வாக அமையும்.