இனம் என்பது உலகிலுள்ள அனைத்து உயிரினங்களையும் குறிக்கும் பொதுச் சொல்லாகும். விலங்கினம், பூச்சியினம், மீனினம், தாவர இனம், மாந்தரினம் என்று பல்வேறு வகைகளில் இவ்வினம் என்ற சொல்லானது பயின்று வருவது நோக்கத்தக்கது. மாந்தரைக் குறிக்கின்ற போது மாந்தரில் உள்ள சமூகப் (சாதிப்) பிரிவுகளைக் குறிப்பதாகத் தற்போது வழங்கப் பெற்று வருகிறது.
அனைத்து உயிரிகளையும் குறிப்பிடுவதற்கு வழங்கப்பட்டு வந்த சொல்லானது நாளடைவில் சாதிப் பிரிவுகளைக் குறிக்க வழங்கி வருவது காலத்தின் மாற்றமாகக் கொள்ளலாம். இவ்வினம் என்பது குறித்து நமது முன்னோர்கள் பழமொழிகளிலும் பதிவு செய்து வைத்துள்ளனர். பழமொழிகளில் பயின்று வரும் இவ்வினம் எனும் சொல்லானது சாதிப் பிரிவுகளைக் குறிக்க வழங்கிய பொதுச் சொல்லாக அமைந்துள்ளது.
ஒவ்வொருவரும் அவரவர் இனத்தோடு சேர்ந்தே வாழ்வர். இனம் விட்டு இனம் சேர்ந்து வாழ மாட்டார். ஏனெனில் பிற இனத்தார், மற்றொரு இனத்தாரைத் தம்முடன் சேர்த்துக் கொண்டு வாழ மாட்டார்கள். மாறி மாறிச் சேர்ந்து வாழ்ந்தால் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும் என்று கருதியதனாலேயே தனித்தனித்தனியாக வாழ்ந்தனர். இவ்வினங்கள் தனித்தனிக் குழுவாக வாழ்ந்தனர். இவை இனக்குழுக்கள் என வழங்கப்பட்டன.
பழந்தமிழகத்தில் இனக்குழு சமுதாய வாழ்க்கையே மேலோங்கி இருந்தது என்பது நோக்கத்தக்கது. ஒவ்வொரு இனக்குழுவிற்கும் அடையாளப்படுத்தக் கூடிய இனக்குழுப் பெயர்கள் இருந்தன. அந்தப் பெயர்களாலேயே அவ்வினமக்கள் அழைக்கப் பெற்றனர். இவ்வின மக்கள் தங்களுக்குள் பகைத்துக் கொண்டு போரிட்டனர். எனினும் பொதுப்பகை என்று வரும் போது ஒன்று சேர்ந்து பகை முடித்தனர்.
ஆனால் இன்று பொருள் வைத்திருப்போர் ஓரினமாகவும், பொருளற்றோர் ஓரினமாகவும் கருதப்பட்டுச் சமுதாயத்தில் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் அவரவர் இனங்களுடனேயே அவரவர்கள் சேர்ந்தனர். அந்தந்த சாதிக்குழு இனமக்களுடன் அந்தந்த இனக்குழு மக்கள் இணைந்து வாழ்ந்தனர். எக்காரணங்கள் கொண்டும் பிற இனக்குழுவோடு சேர மாட்டார்கள். இத்தகைய இனக்குழு மக்களின் பண்பு நிலையினை,
“பணம் பணத்தோடு சேரும்
இனம் இனத்தோடு சேரும்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
பணம் படைத்தோர் தமக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமானால் தம்மையொத்த பணம் படைத்தோருடன் சேர்ந்து கொள்வர். பிறர்க்கு உதவ வேண்டும் என்ற நிலை ஏற்படுகின்ற போதும் அல்லது சிறப்புச் செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்படும் போதும் பெரும்பாலும் அவர்கள் தன்னொத்த பணம் படைத்தோருக்கே அவ்வுதவிகளைச் செய்வர். தம்மை விடக் கீழ்நிலையில் உள்ளவர்களுக்குக் கைகொடுத்து உதவி அவர்களை மேல்நிலைக்குக் கொண்டு வரமாட்டார். இது உலக உண்மை. இதனையே பணம் பணத்தோடு சேரும் என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
பணவசதி வடைத்தோர் பணவசதி படைத்தோருடனேயே நட்புக் கொள்வர். அதுபோன்றே ஒரு இனக்குழுவினர் தங்கள் இனக்குழுவைச் சார்ந்தோரைப் பார்த்தே உதவி செய்வர். தம் இனக்குழுவைச் சார்ந்தோர் இல்லை எனில் மற்றவர்களுக்குச் செய்வர். இல்லை எனில் பேசாதிருந்து விடுவர். இதனையே இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.
எத்தனை வசதிகளிருப்பினும் எத்தனை ஆள்பலம் இருப்பினும் தம்மினத்தாருடனேயே சேர்ந்து வாழ வேண்டும். அதுவே ஒருவருக்குப் பெருமை தரும். அதனை விடுத்துத் தம்மினத்தை வெறுத்து ஒதுங்கி வாழ்ந்தால் அஃது வெறுமையான வாழ்க்கையே ஆகும். அவ்வாழ்க்கை பேராபத்திலேயே முடியும். இதனை,
“இனத்தோடு சேர்ந்து வாழாத வாழ்வு
கலத்தோடு சேராத பதறு மாதிரி”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
நம் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்ற வாழ்க்கை உயர்ந்தது; சிறந்தது; அவ்வாறு வாழாத வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது. கலம் (பெரிய அளவு) நெல் இருந்தாலும் அதனோடு பதறினைச் சேர்த்து அளக்க மாட்டார்கள். அதனைத் தேவையற்றது என்று ஒதுக்கி வைத்தோ அல்லது கீழேயோ கொட்டி விடுவார்கள். அதனை நெல்லோடு கலந்து அளக்க மாட்டார்கள். அதுபோன்றே இனத்தோடு சேர்ந்து வாழாத வாழ்க்கைப் பதறு போன்றதாகும். யாரும் பதறினை மதிக்க மாட்டார்கள்.
அது போன்றே இனத்தோடு சேர்ந்து வாழாதவர்களை, “இனம் காய்ந்த பயல்” என்று கூறி மரியாதை கொடுக்க மாட்டார்கள். அவர்கள் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்தாலும் அவர்களுக்குச் சமுதாயத்தில் மதிப்பு இராது. அதனால் அவர்கள் வாழ்க்கை அமைதியற்று இருக்கும். இதனைப் பின்வரும் பஞ்சதந்திரக் கதை தெளிவாகப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
காட்டிலிருந்து வழிதவறி வந்த ஒரு நரியானது ஊருக்குள் புகுந்தது. அப்போது ஊரிலிருந்த நாய்கள் ஒன்று சேர்ந்து நரியைத் துரத்தின. நாய்களிடமிருந்து தப்பி ஓடிய நரி சாயம் தயாரிப்பவனின் வீட்டிற்குள் புகுந்து ஓடியபோது தடுமாறி நீலநிறச் சாயத் தொட்டிக்குள் தவறி விழுந்தது. விழுந்தவுடன் அது நீல நிறமாக மாறியது. மீண்டும் நரி காட்டை நோக்கி ஓடியது. காட்டுக்குள் வந்த நரியைப் பார்த்த மற்ற விலங்குகள் ஏதோ புதுவகையான விலங்கு ஒன்று காட்டிற்குள் வந்திருக்கிறது என்று கருதி அஞ்சின. இதனைக் கண்ட நரி எல்லா விலங்குகளையும் அச்சுறுத்தியது.
தானே காட்டுக்கு ராஜா என்று அறிவித்தது. சிங்கமும் புலியும் கரடியும் நரிக்குச் சேவை செய்தன. நரியோ தன் இனத்தாரை மட்டும்அருகில் வரவிடவே இல்லை. நரிக் கூட்டத்திற்கு மட்டும் இது புரியாத புதிராக இருந்தது. இருந்தாலும் இதனைக் கண்டுபிடிக்க வேண்டும என்று முயன்று அதனையும் கண்டுபிடித்து விட்டன. தம் இனத்தையே வெறுக்கும் நரியின் தந்திரத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என்று காத்திருந்தன. ராஜாவாகி நிறமாறிய நரி சுகபோகத்தில் மூழ்கியது. ஆனால் தன்னினத்தாரை மட்டும் நெருங்கவிடாது செய்து கொள்வதில் கவனமாக இருந்தது.
நரிகள் எதிர்பார்த்த நாளும் வந்தது. பயங்கர மழை பெய்தது. நரி உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது இடிச்சத்தம் கேட்டது நரிகள் ஒன்று சேர்ந்து நரி தங்கி இருக்கும் குகையின் அருகில் வந்து ஊளையிட்டன. நன்கு தூக்கத்திலிருந்த நரி குகையைவிட்டு வெளியில் வந்து தன்மை மறந்து ஊளையிட்டது. மேலும் மழையில் நனைந்ததால் அதன் நிறம் வெளுத்துப் போய்விட்டது.
இதனைக் கண்ட சிங்கம், புலி ஆகிய விலங்குகள் அட நரி நம்மை ஏமாற்றி விட்டதே என்று கோபத்துடன் அதனைக் கொல்ல விரட்டியது. வெளுத்துப் போன நரி தன்னினத்தாரிடம் சென்று என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியது. அதற்கு அந்த நரிகள், “ஒன்றை நினைவில் வைத்துக் கொள். இனத்தோடு சேர்ந்து வாழாத வாழ்க்கைக் கலத்தோடு சேராத பதறு மாதிரி, அதனால் நீ எங்களுடன் சேர்ந்து வாழவில்லை. தற்போது ஆபத்து என்று வந்தவுடன் உனக்கு இனத்தின் நினைவு வந்துவிட்டது. இத்தகைய சுயநலத்துடன் இருக்காதே எங்கள் முன் நிற்காதே! உன் தயவு எங்களுக்குத் தேவையில்லை. இங்கு நின்றால் உன்னை நாங்களே கொன்றுவிடுவோம் என்று கூறி அடித்து விரட்டி விட்டன. அவமானப்பட்டுத் திரும்பிய நரி தனது மதியீனத்தை நினைத்து வருந்தியது. தன்னை விரட்டி வந்த சிங்கத்திடம் அகப்பட்டு உயிரிழந்தது.
இக்கதை இனத்தோடு சேராத வாழ்க்கை அழிந்துவிடும் என்பதை நன்கு புலப்படுத்தி நிற்கிறது. பதரினை யாரும் பயன்படுத்தாததால் அது அழிந்து வீணாகிவிடும். அது போன்றே இனத்தாரோடு சேர்ந்து வாழாதவருடைய வாழ்வும் ஆகும் என்ற சேர்ந்து வாழும் வாழ்க்கை நெறியை இப்பழமொழி நவில்கிறது.
இப்பழமொழியை, “இனத்தோடு சேர்ந்து வாழாத வாழ்க்கை களத்தோடு சேராத பதரு மாதிரி” என்று வழங்குவர். களம் என்பது நெல்கதிரடிக்கும் இடத்தைக் குறிக்கும் களத்தை விட்டு வெளியே பதரினைத் தூற்றிக் கூட்டித் தள்ளிவிடுவர். அப்பதறானது யாருக்கும் பயன்படாது அங்கேயே கிடந்து மக்கி அழிந்து போகும். (கலம் – அளவு, களம் – இடம், அறுவடை செய்து தானியங்களைப் பதர் நீக்கி ஒன்று சேர்க்கும் இடம்). இனத்துடன் சேர்ந்து இன்னல் நீக்கித் தோழமையுடன் நம் முன்னோர்கள் கூறிய நெறிப்படி இணைந்து வாழ்வோம். வாழ்வு இனிமையுறும்.