பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
52. கூத்தாடி
மனிதர்கள் அவரவர் செய்கின்ற தொழிலின் அடிப்படையிலேயே அவரவர்க்குப் பெயர்கள் வழங்கப்பட்டன. கிராமப்புறங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பட்டப் பெயர் வழங்கப்பட்டு வருவதும் நோக்கத்தக்கது. செக்கு வைத்து எண்ணெய் ஆட்டிக் கொடுக்கின்றவர் வீட்டை செக்குக்கார வீடு என்றும் அரிசிக்கடை வைத்திருப்பவர் வீட்டை அரிசிக் கடைக்கரார் வீடு என்றும் சுண்ணாம்பு விற்பவர் வீட்டை சுண்ணாம்புக்கார வீடு என்றும் கூறுவது இன்றும் வழக்கமாக இருந்து வருகின்றது.
அதுபோன்றே கலைஞர்களுக்கும் பெயர்கள் வழங்கப்பட்டன. பண்டைக்காலத்தில் கலைஞர்களுக்கு விறலி, பாணன், பாடினி, பொருநன், கூத்தர், சிறுபாணன், பெரும்பாணன் என்ற பெயர்கள் வழங்கப் பெற்றன.
இப்பெயர்கள் ஒவ்வொன்றும் காரணப் பெயர்களாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது. ஏதேனும் ஒரு காரணம் பற்றியே ஒவ்வொருவருக்கும் பெயர்கள் வழங்கப் பெற்றது. பழங்காலத்தில் நாடகங்களைக் கூத்து என்று பெயரிட்டு வழங்கினர். நாடகத்தில் நடிக்கும் நடிகர்களை கூத்தர் என்று அழைத்தனர். இன்றும் நாடகத்தைக் கூத்து என்று வழங்கும் வழக்கம் கிராமப்புறங்களில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் கூத்தர்கள் உயர்வாகக் கருதப்பட்டனர். மக்களால் மதிக்கப்பட்டனர். ஆனால் காலப்போக்கில் அவர்களது வாழ்க்கை சிதிலமடைந்ததன் காரணமாக அவர்களும் அக்கலையும் இழிவாகக் கருதப்பட்டன. சமுதாயத்தில் மக்கள் அவர்களுக்கு உரிய மதிப்பை அளிக்கவில்லை. கூத்தில் நடித்த கூத்தர்களைக் கூத்தாடி என்றும் கூத்தாடிப் பயல் என்றும் கூறி அவர்களை இழிவுபடுத்தினர். காலப்போக்கில் அவர்களது வாழ்க்கை மாறியதையும் அவர்களது மதிப்பு சமுதாயத்தில் குறைந்ததையும் நமது முன்னோர்கள் பழமொழிகளில் பதிவு செய்துள்ளனர். அவை கலைஞர்களின் வாழ்க்கையையும் அவர்களது தொழில் நிலையையும் புலப்படுத்துவனவாக உள்ளன.
கூத்தாடுதல்
சமுதாயத்தில் நாடக நடிகர்கள் இன்றும் மதிப்புக் குறைவாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் இழிந்தவர்களிலும் இழிந்தவர்களாகக் கருதப்பட்டனர். ஊரில் உள்ளவர்கள் எல்லோருக்கும் அவர்கள் எடுபிடி வேலை செய்தாக வேண்டிய நிலை இன்றும் உள்ளது. அவர்களைக் கலைஞன் என்று பாராது தங்களின் கீழ் வேலை செய்யும் அடிமை என்றே மக்கள் கருதுகின்றனர். அவர்கள் என்னென்ன செய்யுமாறு கூறுகிறார்களோ அவ்வாறெல்லாம் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு மீண்டும் அடுத்த வாய்ப்புக் கிடைக்கும். அவ்வாறு இல்லையெனில் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ஓரங்கட்டப்படுவர்.
சில சமயங்களில் கலைஞர்கள் ஆடும் போது இப்படி ஆடு அப்படி ஆடு என்று அவர்களைச் சுதந்திரமாகச் செயல்படவிடாது இடையூறு செய்து கொண்டே இருப்பர். உடலாலும் உள்ளத்தாலும் அவர்கள் காயப்படுத்தப்படுவர். அத்தகைய நிலையில் அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. அவர்களைப் போன்றே ஊரில் பொருளாதார நிலையில் வளங்குன்றியிருப்போர் ஊரார் சொல்லுகின்ற வண்ணம் வேலைகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் அவர்கள் ஊராரால் துன்புறுத்தப்படுவர். இதனை,
“ஊருக்கொரு கூத்தாடி யாருக்குத்தான் ஆடுவான்?”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
பொருளாதாரத்திலோ, சமுதாயத்தின் கீழ் மட்டத்திலோ ஒருவன் இருந்தால் அவரை ஊரில் உள்ளவர்கள் தங்கள் மனம் போனபோக்கில் நடத்துவர். அவர்கள் சொல்லுகின்றபடியெல்லாம் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும். மனிதர்களை இழிவாக நடத்துகின்ற இழி நிலையையே இப்பழமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது.
கூத்தாடியும் கொண்டாட்டமும்
ஊர் ஒற்றுமையாக இருக்கும் வரையில் ஊர்மக்களுக்குப் பெருமை. அதைவிடுத்து ஊரார் தங்களுக்குள் பகைத்துக் கொண்டு இருபிரிவாக இருந்து விட்டால் அவர்கள் துன்பத்திற்கு ஆளாவார்கள். பகைவர்கள் இடையில் புகுந்து தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வர். அதனால் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். ஊரில் என்று இல்லாது எல்லா நிலையிலும் மக்கள் வேற்றுமை நீங்க ஒற்றுமையுடன் வாழ்ந்தால் நலம்பெறுவர். இதனை,
“ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
ஊரார் தங்களுக்குள் இருபிரிவாகப் பிரிந்துவிட்டால் கூத்தாடுபவர்களுக்கு நல்ல வருமானம் கிட்டும். இருபிரிவினரும் தங்களின் பொருளாதார வளமையைக் காட்டுவதற்காக அதிகப் பணம் கொடுத்துக் கலைஞர்களை அழைத்து வந்து நாடகங்களை நடத்துவர். இதனால் பயன் பெறுவது கலைஞர்களே தவிர தம்முள் பிரிந்த ஊரார் பொருளிழப்பை அடைவர். இதனை உணர்ந்து ஒற்றுமையுடன் அனைவரும் வாழ வேண்டும் என்று இப்பழமொழி அறிவுறுத்துகிறது.
கூத்தாடியும் கூலிக்காரனும்
ஒவ்வொருவரும் அவரவர் தொழிலுக்கேற்ப நடந்து கொள்வர். பேசும் போதும் மற்றவர்களுடன் உரையாடும் போதும் எந்தச் சூழலிலும் அவரவர் வேலையைப் பற்றியே பேசுவர். இது மனித இயல்பு. அதேபோன்று அவர்களின் செயல்பாடுகளும் இருக்கும். கூத்தாடுபவரைக் (கூத்துக் கட்டுபவர்) கூத்தாடி என்பதைப் போன்று கூலி வேலை செய்பவரைக் கூலிக்காரர் என்பர். ஒருவர் இரவிலும், மற்றொருவர் பகலிலும் தங்களது வேலைகளைச் செய்வர். அவர்களது இயல்பினை,
“கூத்தாடி கிழக்கே பார்ப்பான் கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்”
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
எந்த வேலை செய்தாலும் அதில் தவறில்லை. அனைவரும் இச்சமுதாயத்தின் உயர்வுக்கே பாடுபடுகின்றனர். ஒவ்வொருவரையும் அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் மதித்தல் வேண்டும். எவரையும் இழிவாக நடத்துதல் கூடாது. அது தவறாகும். அவரவர் வேலை அவரவர்க்குப் பெருமை சேர்க்கும். இதனை உணர்ந்து மக்கள் ஒற்றுமையுடன் எவரையும் இழிவாகக் கருதாது மதித்து மாண்புற வாழவேண்டும் என்று இப்பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர்கள் தெளிவுறுத்தியுள்ளனர். முன்னோர் வழி நடப்போம் நலமாக வாழ்வோம். வாழ்வு மகிழ்ச்சியுறும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.