பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
53. உப்பு
நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் மிகவும் இன்றியமையாததாக விளங்குவது உப்பாகும். உப்பு எல்லா உணவுப் பொருள்களிலும் சேர்க்கப்பட்டு பொருள்களுக்குச் சுவையூட்டப்படுகிறது. பலரிடம் வாழ்க்கையைப் பற்றிக் கேட்கும் போது அவர்களோ, “என்னமோங்க வாழ்க்கை உப்புச் சப்பில்லாம போயிக்கிட்டு இருக்குது. ஒண்ணும் சொல்லும்படியா இல்ல” என்று புலம்பிக் கூறுவர்.
உப்பு என்பது வாழ்க்கையின் தொடக்கத்தின் போதும், வாழ்வானது நிறைவடையும் (இறப்பின்) போதும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. திருமணத்தின் போது உப்பினைச் சிறிய பாத்திரத்தில் நிறைய எடுத்துப் பெண்ணிடம் கொடுத்து வீட்டிற்குள் வைக்குமாறு சில குடும்பங்களில் கூறுவர். அதற்குக் காரணம் உப்புப் போன்று செல்வம் பெருக வேண்டும் என்பதே காரணம் ஆகும்.
இன்னும் சில சமுதாயத்தினர் ஒருவர் இறந்து விட்டால் இறந்தவரைப் பூமியில் புதைக்கும் போது உப்பு, திருநீறு, செங்கல்பொடி ஆகியவற்றைப் இறந்தவர் உடலின் மீது கொட்டிப் புதைப்பர். எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் உப்பு என்பது இறந்தவர் உடலுடன் சேர்த்துப் புதைக்க வேண்டும் என்பது அச்சமுதாயத்தினரிடம் காணப்படும் வழக்கமாக உள்ளது. இந்த உப்பினை வைத்து நமது முன்னோர்கள் பழமொழிகள் பலவற்றைக் கூறி வாழ்விற்குப் பல்வேறு நீதிக் கருத்துக்களை வழங்கியுள்ளனர். அவை நமது வாழ்விற்கு வழிகாட்டும் விளக்குகளாக அமைந்திருக்கின்றன.
உப்பில்லாப் பண்டம்
உணவுப் பொருள் சுவையாக இருந்தால்தான் நாம் அனைவரும் உண்போம். இல்லையெனில் அதனை உண்ண மாட்டோம். அவ்வுணவுப் பொருள்களைத் தூக்கி எறிந்து விடுவோம். உப்பு அளவோடிருந்தால் சுவையாக இருக்கும். அதிகமாக உணவில் இருந்து விட்டால் அவ்வுணவுப் பொருளை உண்ண முடியாது. உப்புச் சேர்ந்த ஊறுகாய், உப்புக் கண்டம், கருவாடு, உப்பில் ஊற வைக்கப்பெற்ற மிளகாய் வற்றல் உள்ளிட்ட பல உணவுப் பொருள்கள் கெடாது நீண்டநாள்கள் வரை இருக்கும். இன்றும் உப்புச் சேர்க்கப் பெற்ற பொருள்கள் மதிப்புக் கூட்டப் பெற்ற பொருள்களாக பெரிய பெரிய வணிக நிறுவனங்களில் விற்கப்படுவது நோக்கத்தக்கது. இந்த உப்பின் முக்கியத்துவத்தினை,
“உப்பில்லாப் பண்டம் குப்பையிலே”
என்ற பழமொழி நமக்குத் தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளது.
உப்பு தான் சார்ந்த பொருளைக் கெடாது பாதுகாக்கும் தன்மை கொண்டது. இங்கு பண்டம் என்பது உணவுப் பொருளைக் குறிக்கும் சொல்லாகும். உப்பில்லாத எந்த உணவுப் பொருளும் சுவையாக இருக்காது. அதனால் அதனை யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால் அப்பண்டம் எத்தகையதாக இருந்தாலும் அதனைத் தூக்கி குப்பையில் எறிந்துவிடுவர் என உப்பின் முக்கியத்துவத்தை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.
உப்பும் உண்ணுதலும்
உணவில் அளவோடு உப்பைச் சேர்த்து உண்ண வேண்டும். இல்லையெனில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். அதுபோன்று நாம் உண்ணும் உணவில் அயோடின் கலந்த உப்பினையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அது சத்தானதாக இருக்கும். இந்த உப்புச் சத்துக் குறைந்து விட்டால் நமக்கு உடலில் தைராய்டு பிரச்சனை ஏற்பட்டு கழலை நோய் ஏற்படும். இதனை முன்கழுத்துக் கழலை, பின்கழுத்துக் கழலை என்று குறிப்பிடுவர். அயோடின் கலக்காத உப்பினைப் பயன்படுத்துவது கழலை நோய் ஏற்படுவதற்குக் காரணமாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் அறுசுவையாக உள்ள உணவுப் பொருள்களை நாம் நன்கு பயன்படுத்தி உண்ணுவோம். அவ்வாறு அறுசுவை உணவுப் பொருள்களும் இல்லையெனிலோ, அல்லது அவ்வுணவுப் பொருள்கள் சுவையற்றதாக இருக்கும் போதோ உணவினை உண்போர்,
“உப்பத் தொட்டுக்கிட்டு ஒரல முழுங்குன கதைதான்”
என்ற பழமொழியைக் கூறுவர். சாப்பிட முடியாமல் சாப்பிடுவதைக் குறிப்பிடுவதற்கு இப்பழமொழியை மக்கள் குறிப்பிடுவர். எதுவும் சுவையில்லை என்று வெளிப்படையாகக் கூறாது உரல் என்பது கல். அதனை உப்பைச் சுவைத்துக் கொண்டு எவ்வாறு உண்ண முடியும்? அது போன்றே சுவையில்லாத உணவை உண்ண நேர்ந்தது என்பதைக் குறிப்பிட்டுப் பேசுவர். உணவைச் சுவையாகச் சமைத்து உண்ண வேண்டும் என்பதை இப்பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகின்றது.
உப்பிட்டவர்
நாம் வாழ்வில் துன்புறும்போது அப்போது கைகொடுத்து நமக்கு யார் வாழ்வைக் கொடுக்கின்றார்களோ அவர்களை நாம் உயிர் உள்ளவரை மறத்தல் கூடாது. அவ்வாறு மறப்போரை, “செய்நன்றி மறந்தோர், நன்றி மறந்தோர்” என்று கூறுவர். வாழ்வில் கைகொடுத்து உதவி செய்தவர்களை நாம் எந்த நிலையிலும் மறந்து வாழ்தல் கூடாது. அவர்களையும் அவர்கள் செய்த உதவியையும் மனதில் நினைத்து உயிர் உள்ளவரை வாழ்ந்து வருதல் வேண்டும். அது வாழ்வில் உயர்வை என்றென்றும் ஒருவருக்குத் தரும் என்பதை,
“உப்பிட்டவரை உள்ளளவும் நினை”
என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் உணர்த்துகின்றனர்.
உப்பிட்டவர் என்பது வாழ்வில் நமக்கு உதவியவர்கள் என்றும் நமக்கு வாழ்வு கொடுத்தவர்கள், வாழவைத்தவர்கள் என்றும் பொருள்படும். அங்ஙனம் நமக்கு உதவியாக இருந்தவர்களை நாம் எந்தச் சூழலிலும் மறத்தல் கூடாது; மண்ணில் உயிர் வாழும் வரை நாம் அவ்வுதவியையும் அவரையும் நினைத்து வாழ்தல் வேண்டும் என்பதையே நமக்கு இப்பழமொழி பண்பாட்டு நெறியாக உணர்த்துகிறது. இப்பழமொழியின் கருத்தானது,
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு”
என்ற திருக்குறளுடன் ஒப்புமை உடையதாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
உப்பும் பத்தியக்காரனும்
உப்பினைப் பண்டமாற்றுப் பொருளாகப் பண்டைக் காலத்தில் மக்கள் பயன்படுத்தினர் என்பதை,
“உப்பொடு வந்து நெல்லொடு பெயரும்
வல்வாய்ப் பஃறி”
என்ற பட்டினப்பாலை வரிகள் தெளிவுறுத்துகிறது. உப்புடன் வரும் உப்பு வணிகர்கள் உப்பினைக் கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக நெல்லைப் பெற்றுக் கொண்டு செல்வர். அந்த அளவிற்கு உப்பானது மதிப்பு மிகுந்த பொருளாக தொன்றுதொட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாலை வேளையில் உப்புக் கேட்டு யாராவது வந்தால் உப்பினைக் கொடுக்க மாட்டார்கள். அவ்வாறு கொடுத்தால் செல்வம் தங்களது வீட்டைவிட்டு அகன்றுவிடும் என்று இந்து சமயம் சார்ந்த மக்கள் நம்புகின்றனர். மேலும் உப்பினை அதிகம் உண்டால் உப்பு நீர் நோய் ஏற்பட்டு உடல் வீங்கத் தொடங்கிவிடும். அத்தகையோரை மருத்துவர்கள் நீங்கள் உப்பின்றி உண்ண வேண்டும் என்று அறிவுறுத்துவார். அவர்களை உப்பே உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர் கூறுவதை நாம் அன்றாட வாழ்வில் பார்க்கின்றோம்.
சித்த மருத்துவ சிகிச்சையினை எடுத்துக் கொண்டால் சில உணவுப் பொருள்களைத் தவிர்க்குமாறு சித்த மருத்துவர்கள் கூறுவர். அதிலும் குறிப்பாக உப்புச் சேர்க்காது சிலகாலம் உண்ண வேண்டும் என்றும் கூறுவர். அவ்வாறு உப்பினை நீக்கி உண்ணும் நோயாளிகள் உப்பினைப் பயன்படுத்தினால் இறக்க நேரிடும்.
இந்நிலையைப் போன்றே நாம் வாழ்வில் நமக்குப் பிடித்த சிலவற்றைச் செய்ய முடியாத நிலை ஏற்படும்போது,
“உப்பில்லாத பத்தியக் காரன் ஊறுகாயப் பாத்த கதைமாதிரிதான்”
என்னோட நிலை அப்ப இருந்தது என்று வழக்கில் மக்கள் குறிப்பிடுவர். குறிப்பாகச் சிலருக்குத் தக்க நேரத்தில் உதவி செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் போது நம்மால் உதவி செய்யக் கூடிய வாய்ப்பிருந்தும் அவ்வுதவியைச் செய்ய இயலாது பார்த்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும் அதற்காக நாம் மனம் வருந்தக் கூடாது என்பதையே இப்பழமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது.
எதுவும் அளவோடு இருத்தல் வேண்டும். அளவுக்கு மீறிப் போனால் உப்பில்லாத பண்டம் போன்று ஆகிவிடும். இஃது வாழ்வின் எல்லாச் சூழலுக்கும் பொருந்தும். உப்பை உணவில் பயன்படுத்துவதைப் போன்று நாம் எதனையும் பயன்படுத்துதல் வேண்டும்; நல்லோர் செய்த உதவிகளை என்றும் நாம் மறத்தல் கூடாது என்பன போன்ற பல்வேறு வாழ்வியல் நெறிகளை உப்பு குறித்த பழமொழிகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. முன்னோர் வழி நடந்து முத்தாய்ப்பான வாழ்க்கை வாழ்வோம். வாழ்க்கை வசப்படும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.