பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
54. பால்
மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரையில் பாலானது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பல்வேறுவிதமான உணவுப் பொருள்கள் இருப்பினும் பாலுக்கு மட்டும் தனிச் சிறப்புகள் பல உண்டு. இப்பாலைப் பற்றிய பழமொழிகள் பல நமது முன்னோர்களால் வழங்கப் பெற்று அதன் வாயிலாகப் பண்பாட்டு நெறிகள் நமக்கு உணர்த்தப் பெற்றுள்ளன.
பாலும் பாதகமும்
ஒரு வீட்டில் நமக்கு உணவளித்தாலோ அல்லது பாலைக் கொடுத்தாலோ அதனை வாங்கி உண்டுவிட்டு அவர்களுக்கு நாம் தீங்கு நினைக்கக் கூடாது. அது மிகப் பெரிய நன்றி மறந்த செயலாகும். அஃது பெரும்பாவமாகப் பெரியோர்களால் கருதப்படுகிறது. அவர்கள் பாவச்செயலின் பலனாக அவர்களது இறப்பிற்குப் பின்பு நரகத்தினை அடைவர். இதனை,
“பால் குடித்த வீட்டுக்குப் பாதகம் நெனைக்கக் கூடாது”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
இப்பழமொழி பால் கொடுத்த வீட்டுக்குப் பாதகம் நினைக்கக் கூடாது என்றுதான் இருத்தல் வேண்டும். கொடுத்த என்பதே குடித்த என்று நாளடைவில் மாற்றம் பெற்றிருக்க வேண்டும். பாதகம் என்பது தீமையினைக் குறிக்கும். தக்க தருணத்தில் நமக்கு உதவி செய்தவர்களுக்கு ( பால் கொடுத்தோர்) நாம் தீமை செய்தல் கூடாது. அதுவே ஒருவருக்கு நன்மையைத் தரும். மாறாகத் தீங்கு செய்தால் அவர் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆட்படுவார் என்பதை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.
பாலும் கள்ளும்
நல்ல பண்புடையவர்கள் தீயவருடனோ தீயவர்கள் இருக்கும் இடங்களுக்கோச் செல்ல மாட்டார்கள். அவ்வாறு சென்றால் ஒழுக்கத்திலிருந்து தவறியவர்களாக உலகத்தாரால் கருதப்படுவர். அவர் தவறான இடங்களுக்குச் சென்றால் அவர் மீது பிறர் வீண்பழி சுமத்துவர். அதனால் தீய பழக்க வழக்கங்கள் உடையவர்கள் இருக்கும் இருப்பிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதை,
“பனைமரத்துக்குக் கீழே நின்னு
பாலைக் குடிச்சாலும் கள்ளைக் குடிச்சான்னுதான் சொல்லுவாங்க”
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. பனை மரத்திலிருந்து கள் இறக்கப்படுகிறது. அக் கள்ளைப் பனை மரத்திலிருந்து இறக்கியவுடன் குடிப்பர். அப்பனை மரத்தின் கீழ் நின்று கொண்டு பாலைக் குடித்தாலும் அதனை யாரும் நம்ப மாட்டார்கள்.
அதுபோன்று தீயவர்கள் இருக்கும் இடத்திற்கோ தீயவர்களுடனோ தீய இடங்களுக்கோ, நல்லவர் ஒருவர் அடிக்கடி சென்று தங்கி இருந்தால் அவர் ஒழுக்கத்திலிருந்து தவறியவராகவே உலகோர் எண்ணுவர். தவறு செய்யா விட்டாலும் அதனை நம்புவதில்லை. அதனால் தீயவருடனோ, தீய இடங்களுக்கோ நற்பண்புடையோர் செல்லக் கூடாது என்ற ஒழுக்க நெறியை இப்பழெமொழி உணர்த்துகிறது.
பாலும் சாவும்
பிறந்தாலும் பால்; இறந்தாலும் பால். இது நமது பண்பாட்டில் ஊறிப்போன வழக்கமாக உள்ளது. பிறந்த குழந்தைக்கும் அக்குழந்தை வளரும் போதும் அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகும் போதும் வாழ்க்கையைத் தொடங்கும் போதும், அவன் இறக்கும் தருவாயிலும் இறந்த பின்னரும் பால் ஊற்றுவார்கள். இந்தச் சூழலில் வாழ்க்கை நிலையானது என்று பலரும் நினைத்துக் கொண்டு பேராசையுடன் தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனைத் தவிர்த்தல் வேண்டும்.
நிலையில்லா வாழ்வில் நல்ல செயல்களையே செய்து வாழ வேண்டும். அதுவே உலகில் நம் புகழை நிலை நிறுத்தும். இதனை உணர்ந்து மக்கள் வாழ வேண்டும் என்ற அரிய பண்பாட்டுக் கருத்தினை,
“இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பாலு”
என்ற பழமொழி அறிவுறுத்துகிறது.
பாம்பும் பாலும்
மக்கள் பாம்புக்குப் பால் வைக்கும் பழக்கம் இந்து சமயம் சார்ந்த ஆன்மீகத்தில் இன்றும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பாம்பு பால் குடிக்கின்றதோ இல்லையோ, மக்கள் பாம்பின் மேல் அன்பு வைத்துப் பாம்பிற்குப் பால் வைத்து வழிபாடு செய்கின்றனர். இவ்வாறு பால் கொடுத்தும் வளர்க்கும் பாம்புகளே முடிவில் பால் கொடுத்தவர்களைத் தீண்டிக் கொன்று விடுகிறது.
பாம்பைப் போன்று குணமுடைய மனிதர்கள் இந்த உலகில் பலர் வாழ்கின்றனர். அவர்கள், பிறர் தமக்கு உதவி செய்தாலும் அதனை மறந்து உதவியவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்குவர். செய்நன்றி மறந்தவர்களே பாம்பு போன்று நடந்து கொள்வர். இத்தகைய குணமுடையவர்களை நாம் அடையாளம் கண்டு நடந்து கொள்ள வேண்டும் என்பதை,
“பாம்புக்குப் பால் வார்க்கலாமா?”
“பாம்புக்குப் பால் வார்க்காதே”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
பால் குறித்த பழமொழிகள் பண்பாட்டு நெறிகளை உணர்த்தும் பொக்கிசங்களாகத் திகழ்கின்றன. அவை என்றும் மனிதனின் சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் திகழ்கின்றன. வாழ்வை உணர்ந்து நலமாகவும் வளமாகவும் வாழ்ந்து, பிறரது வாழ்விலும் ஒளியேற்றி வாழ்வோம்! மகிழ்ச்சி அடைவோம்!! வாழ்வும் நம் வசப்படும்!!!.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.