பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
55. ஆள்
மனிதர்களைக் குறிகப் பல்வேறு சொற்கள் வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றன. மாந்தன், மனிதன், ஆள் என்ற சொற்கள் ஆண், பெண் ஆகிய இருவரையும் குறிப்பிடுவதற்கு மக்களால் பயன்படுத்தப்படுவது நோக்கத்தக்கது. ஆள் எனும் சொல் ஆண்,பெண் இருவருக்கும் பொதுவானதாக இருந்தாலும் ஆணைக் குறிக்கும்போது ஆம்பளை ஆள் என்றும், பெண்ணைக் குறிக்கும் போது பொம்பளை ஆள் என்றும் குறிப்பிட்டுக் கூறுவது இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆள் என்பதை வைத்து மக்களிடையே பல்வேறு பழமொழிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆளும்-இளக்காரமும் (தகுதியும்)
ஒவ்வொருவருக்கும் ஒரு மதிப்பு உண்டு. அந்த மதிப்பு பணம், குணம், ஒழுக்கம் சார்ந்து அந்நபருக்குக் கொடுக்கப்படுகிறது. அதிலும் பணபலமின்றி இருப்பவர் பொருள் வசதி குறைவாக உள்ளவர்கள் சமுதாயத்தில் உள்ளவர்களால் மிகவும் இழிவாக நடத்தப்படுவார். பொருள் வளம் குன்றியோர், பொருள் வளம் மிக்கவர்களுக்கு அடங்கி நடக்க வேண்யெ சூழல் இன்றும் உலகில் நடப்பில் உள்ளது. இதனை,
“ஆளோட இளக்காரத்தைப் பார்த்தா
ஆள்மேலேயும் பீபேளுவான்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
இங்கு இளக்காரம் என்பது தகுதி, தரம் என்பனவற்றைக் குறிக்கும். தன்னை விடப் பொருளாதாரத்திலோ, வலிமையிலோ வளங்குன்றி இருந்தால் அவர்களை இச்சமுதாயத்தில் இழிவாக நடத்துவர். மனிதனின் தகுதியைப் பார்த்து அவர் மேலேயே கழிவுகளைப் போக்கிக் கொள்வான். அதாவது அவரை இழிவிலும் இழிவாகக் கருதுவர். இவ்வாறு மனிதர்களை நடத்துவது தவறாகும். அதனைத் தவிர்த்து அனைவரையும் சமமாக நடத்துதல் வேண்டும் என்ற பண்பாட்டு நெறியை இப்ழமொழி நமக்கு வலியுறுத்துகிறது.
ஆளும் நிழலும்
மனிதர்களுள் சிலர் தனித்து எந்தவிதமான செயலைச் செய்ய மாட்டார்கள். அதுபோன்று ஒருவரைப் பற்றி எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கத் தயங்குவர். ஆனால் அவர்களே மற்றவர்கள் ஒருவரைப் பற்றிக் கருத்துக்களைக் கூறினால் அதனை அடியொற்றி ஆமாமா…என்று ஒத்து, அதே கருத்தை மீண்டும் கூறுவர். இவர்கள் தனித்தியங்கும் திறனற்றவர்களாக இருப்பர். இத்தகையவர்களின் பண்பினை,
“ஆளுப்போனா ஆளோட நிழல்ல போவானாம்”
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
நிழலே இல்லாத போது அதில் ஒருவர் நடந்து சென்றால் அவருடைய நிழலில் ஒருவர் நடந்து செல்வர். தாமாக எதுவும் கூறும், செய்யும் திறனற்றவர்களின் பண்பினை மேற்குறிப்பிட்ட பழமொழி எடுத்துரைக்கின்றது.
ஆளும் – கூலியும்
உண்மையாக உழைத்தாலும் சிலர் கூலி கொடுக்கும் போது குறைத்தே கொடுப்பர். ஆளுக்குத் தகுந்தாற்போன்று நடந்து கொள்வர். எதிர்த்துப் பேசுபவராக இருந்தால் அவருக்கு ஒரு மாதிரியாகவும் வாய் பேசாது சரிசரி என்று செல்பவர்களுக்கு வேறுமாதிரியாகவும் கூலியினைக் கொடுப்பர்.
அது போன்று சிலர் ஒவ்வொருவரிடமும் ஆளுக்கு ஏற்றாற் போன்று ஒவ்வொருவிதமாக நடந்து கொள்வர். அத்தகையவர்களின் நடத்தை ஒழுங்கினை,
“ஆளப் பாத்தான் கூலியக் கொடுத்தான்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
பணமும் பலமும் இருப்பவர்களை ஒரு மாதிரியாகவும் வசதி வலிமை குறைந்தோரை வேறு மாதிரியாகவும் நடத்துதல் கூடாது. அவ்வாறு நடத்துவது மனிதர்களை இழிவுபடுத்தும் தன்மையாகும். மனிதரை மனிதர் இழிவுபடுத்தும் நிலை உருவாகக் கூடாது என்பதை இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் எடுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் – ஓவாச்சியும்
உலகம் செயல்படும் போது நாமும் செயல்பட வேண்டும். அதற்கு மாறாக நாம் நடந்தால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். பிறர் செயல்படும் போது நாம் மட்டும் வாளாவிருந்தால் அது கேலிக்குரியதாக ஆகிவிடும். எல்லோருடனும் ஒத்திருந்து நாம் ஒரு செயலைச் செய்கின்ற போதுதான் நமக்கும் அச்செயலுக்கும் மரியாதை ஏற்படும். இதனை,
“ஆளோட ஆளா அழுதாளாம் ஓவாச்சி”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
இறந்தவர்களைச் சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுவர். பல்லில்லாது ஓவாயாக உள்ளவள் ஒப்புச் சொல்லி அழுதாலும் என்ன சொல்கிறாள் என்று புரியாது. அதனால் பிறர் அழும் போது அவர்களுடன் சேர்ந்து அழும் போது அவள் என்ன பிழை செய்கிறாள் என்பதை யாரும் கவனிக்க முடியாது. பிறர் வேலை செய்யும் போது நாமும் அவ்வாறே வேலை செய்ய வேண்டும் அதுவே நம்மை முன்னேற்றும். இத்தகைய கருத்தினை மேற்குறித்த பழமொழி எடுத்துரைக்கிறது.
கஞ்சியும் கச்சையும்
வாழும் போது சிலர் தம் உறவுகளை ஒதுக்கி வைத்து வாழ்வர். அவர் வழியச் சென்று உறவாடினாலும் அதனை அவர்கள் வரவேற்று உறவு கொண்டாட மாட்டார்கள். துன்பப்படும் போதும் உதவுவதற்கு வர மாட்டார்கள். ஆனால் இன்பத்திலிருக்கும் போது நான், நீ என்று வருவர். இது உலக இயல்பாகும், இத்தகைய உலக இயல்பினை,
“கஞ்சி ஊத்த ஆளில்லாட்டியும்
கச்சைகட்டுவதற்கு ஆளுருக்குல்ல”
என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.
கஞ்சி ஊத்த ஆள் என்பது உதவுவதற்கு ஆள் இல்லை என்றாலும், சண்டையிடுவதற்கு அல்லது சொத்தில் உரிமை கொண்டாடுவதற்கு ஆள் இருக்கும் (கச்சை என்பது சண்டையிடலைக் குறிக்கும்) என்று உலக இயல்பை எடுத்துரைக்கின்றது.
ஒருவருக்கு நாலு பிள்ளைகளிருந்தாலும் அவருக்கு உணவிட்டுப் பராமரிக்க ஆள் இருக்க மாட்டார்கள். அவர் இறந்து போனவுடன் அவரது சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடுவதற்கு வருவர். இருக்கும் போது உதவுவதற்கு வராதவர்கள் இறந்தவுடன் மாலையுடன் சொத்துக்களைப் பிரிப்பதற்கு வருவர். இத்தகைய கயமைத் தன்மை ஒழிதல் வேண்டும்.
உயிருடன் இருக்கும் போது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து துன்பத்தில் பங்கு கொண்டு வாழ்வதே உண்மையான மனித நேய வாழ்க்கையாகும். அத்தகைய மனித நேயப் பண்புடன் வாழ வேண்டும் என்பதை மேற்குறித்த பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகிறது.
ஆள் குறித்த பழமொழிகள் மனித இயல்பினையும், மனித உள்ளங்களையும் புலப்படுத்தி நிற்பதுடன் எவ்வாறு பிறர் மேல் அன்புகாட்டி வாழ வேண்டும் என்பன போன்ற பண்பாட்டு நெறிகளையும் நமக்கு எடுததுரைப்பனவாக உள்ளன. முன்னோர் வழி நடப்போம் முழுமையான அன்பு வாழ்க்கை வாழவோம். வாழ்வு வளமானதாக அமையும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.