பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
56. மேடு - பள்ளம்
நிலத்தில் பள்ளம் மேடு என்பது இயற்கையாகவும் செயற்கையாகவும் அமைகின்றது. மழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், எரிகல் விழுதல் ஆகிய இயற்கைச் சீற்றங்களாலும், மாற்றங்களாலும் பூமியில் பள்ளங்களோ, மேடுகளோ ஏற்படுகின்றன. மனிதன் தனக்கு ஏதாவது தேவையெனில் நிலத்தைத் தோண்டி மேட்டைப் பள்ளமாகவும் பள்ளத்தை மேடாகவும் மாற்றுகின்றான். இது காலங்காலமாக உலகில் நடைபெற்று வரும் நிகழ்வுகளாகும். இம்மேடுகளையும், பள்ளங்களையும் நம் முன்னோர்கள் பல்வேறுவிதமான பண்பாட்டு நெறிகளை விளக்கிடப் பயன்படுத்தியுள்ளனர். இப்பழமொழிகள் நம் வாழ்க்கைக்குப் பல்வேறு வகையில் உதவும் கலங்கரை விளக்கங்களாகத் திகழ்கின்றன.
மேடு பள்ளம்
வாழ்வில் பல்வேறுவிதமான ஏற்றங்கள் உயர்வுகள், முன்னேற்றங்கள் வருவதை மேடு என்று குறிப்பாகக் கூறுவர். உயரத்தில் ஏறும் போது வாழ்வில் முன்னேறுகிறான் என்று குறிப்பிடுவர். வாழ்க்கையில் ஏதோ ஒருநிலையிலோ அல்லது ஊழின் காரணமாகவோ ஒருவர் கீழ்நிலையை அடையும் போது, அவனைப் பார்க்கும் உறவினர்களோ, மற்றவர்களோ, ‘‘அவனப் பாரு அதல பாதாளத்துக்குள்ள விழுந்து விட்டான்” என்று கூறுவர்.
நெருங்கிய உறவினர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ இருந்தால் வாழ்வில் நிலைகுலைந்து கீழ்நிலையை அடைந்தவனைப் பார்த்து,
‘‘பள்ளத்துக்குள்ள அவன் விழுந்து விட்டான். விழுந்துவிட்ட அவனை நாமதான காப்பாத்தணும். அத விட்டுட்டு நாமளே வேடிக்கை பார்க்கலாமா?” என்று கூறி அவனுக்கு உதவ முன்வருவர்.
சிலர் வாழ்வில் துன்பம் வந்த பொழுது மிகவும் வருந்திச் சோர்ந்து விடுவர். அவர்களைப் பார்க்கும் நண்பர்கள், ‘‘அட ஏம்பா இப்படிச் சோர்ந்து போயி கவலையோட ஒக்காந்துட்ட…கவலைப் படாதப்பா… பள்ளம் மேடுங்கறது வாழ்க்கையில இயல்புப்பா... அதப் புரிஞ்சுக்கோ” என்று ஆறுதல் கூறுவர்.
இன்னும் சிலர் கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பர். அவர்களைப் பார்த்து, ‘‘என்னப்பா ஏன் இப்படி கவலைப்பட்டுக்கிட்டு இருக்குறே…கவலைப் படாதப்பா…”என்று கூறினால் அதற்கு அவர்,
“ஒண்ணு மேட்டுக்கு இழுத்தா
இன்னொண்ணு பள்ளத்துக்கு இழுக்குது”
“மேடுன்னு இருந்தா பள்ளம்னு ஒண்ணும் இருக்கத்தான் செய்யும்”
என்று கூறுவார்.
இப்பழமொழி ஒரு வழியில உயர்ந்தால், இன்னொரு வழியில் தாழ்வு வந்து விடுகிறது. ஒருபக்கம் உயர்ந்தால் மற்றொரு பக்கம் வாழ்வில் தாழ்வு வருகின்றது என்று வாழ்வில் ஏற்படும் துன்பத்தை எடுத்துரைக்கின்றது.
வாழ்வில் இன்பம் துன்பம் ஏற்படுவது இயற்கை. அவற்றைப் பெரிதுபடுத்தாது, முன்னேற்றப் பாதையில் கவனத்தை வைத்து முன்னேற வேண்டும் என்ற வாழ்வியல் நெறியை நமக்கு அறிவுறுத்துகிறது. இன்பமும் துன்பமும் நாணயத்தின் ஒவ்வொரு பக்கத்தைப் போன்றது. இவ்வின்பமும் துன்பமும் நிரந்தரமானது கிடையாது. இவை தற்காலிகநிலைதான். அவை சிறிது காலம் தான். அதனால் மேடாகிய இன்பத்தையும், பள்ளமாகிய துன்பத்தையும் சமமாகக் கருதி வாழவேண்டும். அப்போதுதான் வாழ்வு சிறக்கும். இல்லையெனில் மனம் சலனப்பட்டு வாழ்க்கையில் துன்பங்கள் நேரிடும். இதனையே இப்பழமொழிகள் நமக்கு அறிவுறுத்துகின்றன.
எல்லோரது வாழ்விலும் இத்தகைய நிலையை நாம் பார்க்கலாம். சிலர் வெளிப்படையாகக் கூறுவர். சிலர் கூறமாட்டார்கள். இப்பழமொழியுடன்.
‘‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்”
என்ற கண்ணதாசனின் கவிதை வரிகளும் ஒப்புநோக்கத்தக்கதாக உள்ளது.
மேட்டு நிலமும் மேனா மினுக்கியும்
மேட்டு நிலத்தில் தண்ணீர் தேங்காது. அதில் எவ்வளவுதான் தண்ணீர் இறைத்து வைத்தாலும் அதில் தண்ணீர் நிற்காது கீழே உள்ள பள்ளத்திற்கு வந்துவிடும். அதனால் மேட்டு நிலத்தினை உழும் உழவனுக்கு நட்டமே ஏற்படும். அதுபோன்று தன்னை எப்பொழுதும் அழகுபடுத்திக் கொண்டு பகட்டாக தளுக்கிக் கொண்டு வாழ்க்கை நடத்தும் பெண்ணை மணந்து கொண்டவனது வாழ்க்கை சிறக்காது. அவனது வாழ்க்கை எப்பொழுதும் மேட்டு நிலத்தில் தண்ணீர் கட்டுவதைப் போன்று இருக்கும். வரவு வருவதைப் போன்று இருந்தாலும் செலவு அதிகமாக ஆகிக் கொண்டே இருக்கும். குடும்பத்திற்கு வரும் வருவாய் அவளது ஆடம்பரமான செலவுகளுக்கே சரியாக இருக்கும். குடும்பத்தின் வளர்ச்சிக்கப் பயன்படாது வீணாகிவிடும். இவ்வாறு வரவு வீணாவதால் குடும்பம் வறுமை நிலையை அடையும். இதனை,
‘‘மேட்டுச் செய்யிய உழுதவனும் கெட்டான்
மேனா மினுக்கிய கட்டுனவனும் கெட்டான்”
என்ற பழமொழி விளக்குகின்றது.
மேட்டுநிலத்தில் புன்செய்ப் பயிர்களையே பயிரிட வேண்டும். அதுபோன்று வீணாக ஆடம்பரச் செலவு செய்யும் பெண்களை மணந்து கொண்டு அவதிப்படுவதையும் தவிர்க்க வேண்டும். அவனவனுடைய வாழ்க்கைக்கு ஏற்ப தனக்கேற்ற பெண்ணை மணந்து வாழ்தல் வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இன்பமாகவும் அமைதியாகவும் இருக்கும். இதனை உணர்த்துவதாக இப்பழமொழி அமைந்துள்ளது. தனது நிலை அறிந்து வாழ்க்கையை நடத்துகின்றவனுடைய வாழ்க்கையே மிகவும் சிறக்கும் என்பதை இப்பழமொழி பண்பாட்டு நெறியாக நமக்கு எடுத்துரைக்கின்றது.
திட்டை
மேடு என்பதற்குத் திட்டை என்றும் வேறொரு பொருள் உண்டு. எறும்புகள் மழைக்குரிய அறிகுறி ஏற்பட்டால் தங்களது முட்டையை எடுத்துக் கொண்டு மேடான பகுதிக்குச் சென்றுவிடும். அதனை வைத்தே நாம் மழை பொழியப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம். இன்றும் கிராமப் புறங்களில் பெரியவர்கள் சில இயற்கை நிகழ்வுகளை வைத்து இயற்கையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கூறுவதும் கண்கூடு. இதனை.
‘‘எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை வரும்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
இங்கு திட்டை என்பது திண்டு என்று வழக்கில் வழங்கப்பட்டுப் பின்னர் திட்டை என்று வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எங்ஙனம் சிலம்பு அதிகாரம் என்பது சிலப்பதிகாரம் என்று மாறியதோ அதுபோன்றே இச்சொல்லும் மாற்றம் பெற்றது என்பது நோக்கத்தக்கது.
மண்குதிர்
ஆற்றின் நடுநடுவே மணல் மேடு இருக்கும். அதனை மணல் திட்டு என்றும் மண் குதிர் என்றும் வழக்கில் மக்கள் வழங்குவர். இம்மணல் மேடுகள் பெரும்பாலும் சதுப்பு நிலங்களைப் போன்று புதை மணலாக இருக்கும். ஆற்றில் நீந்துவோர் இம்மண் குதிரை (மேடு) நம்பி அதில் கால் வைக்கக் கூடாது. அவ்வாறு கால் வைத்தால் அம்மணல்மேடு உள்ளிறங்கி ஆளை விழுங்கிவிடும். அதுபோன்று கயமைத் தன்மை உடையவரை நம்பி நாம் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் மணல்மேட்டை நம்பியவர்கள் படும் துன்பத்தை அடைய நேரிடும். யாரையும் நம்பி நாம் ஏமாந்து விடக் கூடாது என்பதை,
‘‘மண்குதிரையை நம்பி ஆற்றுல இறங்குன கதைதான்”
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.
மண்குதிர் (மணல்மேடு). யாரையும் முழுமையாக நம்பி ஏமாறாது அவர் சரியானவரா என்று அறிந்த பின்னரே ஒருவரை நம்பி ஒரு செயலைச் செய்தல் வேண்டும் என்பதை இப்பழமொழி வாழ்வியல் நெறியை நமக்கு எடுத்துரைக்கின்றது.
வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளாகிய மேடு பள்ளங்களைப் பார்த்து மனம் மயங்கிக் கலங்காது அனைத்தையும் நாம் சமமாகக் கருதி முன்னேற வேண்டும். அப்போதுதான் வாழ்வில் நாம் உயர முடியும். மேலும் யாரையும் நம்பி எதையும் செய்தல் கூடாது என்பதையும் இப்பழமொழிகள் வாயிலாக நம்முன்னோர்கள் தெளிவுபடுத்தி உள்ளமை நோக்கத்தக்கது. முன்னோர் வழி நடந்து எல்லாவற்றையும் சமமாகக் கருதி நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வழிவகுப்போம். வாழ்க்கை வசந்தமாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.