பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
57. சொல்வதும் செய்வதும்
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணமுடையவர்களாக இருக்கின்றனர், உருவத் தோற்றத்திற்கும் அவர்களுடைய பண்பிற்கும் செயல்பாடுகளுக்கும் பொருந்தா வகையில் மனிதர்களின் செய்கைகளும் பேச்சுக்களும் அமைந்திருக்கும். யார் எத்தன்மை உடையவர் என்பதை நாம் சரியாகக் கணிக்க முடியாது.
ஒவ்வொருவரும் பண்பு நிலைகளில் வேறுபட்டவர்களாக உலகில் வலம் வருகின்றனர். செயலுக்கும் சொல்லுக்கும் பொருந்தா நிலையில் மனிதர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது, சிலர்தான் சொல்வதற்கும் செய்வதற்கும் பொருந்த நடக்கின்றார்கள். அவர்களைப் பண்பாளர் என்றும் நாணயமானவர்கள் என்றும் நல்லோர், பெரியோர் என்றும் பலவகையாக மக்கள் அழைக்கின்றனர். பெரும்பாலான மனிதர்கள் சொல்வதைப் போன்று நடவாத நாணமற்ற நேர்மையற்றவர்களாகவே உலகில் உலா வருகின்றனர், இவர்களின் பண்பு நிலையை நமது முன்னோர்கள் பழமொழிகள் வாயிலாக விளக்கியுள்ளனர்,
சொல்வதும் செய்வதும்
மனிதர்கள் சொல்வதைச் செய்கின்ற போது பிறரால் பாராட்டப் பெறுகிறான். நாணயமானவன் நேர்மையானவன் என்றும் புகழப்படுகிறான். சொன்ன வண்ணம் நடந்து கொள்வது யாராலும் முடியாது என்று கூறுவது வெறும் கூக்குரலாகும். சொல்வதை நாம் செய்து முடிப்பது தான் ஒவ்வொருவரது கடமையும் திறனுமாகும்.
செய்ய முடியாதவன் எதையும் சொல்லுதல் கூடாது. செய்ய முடிந்தால்தான் சொல்லுதல் வேண்டும், வள்ளுவரும்,
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”
என்று கூறுகிறார். சொல்வது யாருக்கும் எளிது. ஆனால் சொல்வதைச் செய்வது அரிது. இதனை,
“சொல்றது ஒண்ணு செய்யறது ஒண்ணு”
“படிக்கறதெல்லாம் பாகவதம், இடிக்கறது பெருமாள் கோயில்”
என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன.
நல்லவற்றையே சிலர் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பர். ஆனால் அவர் பேசியதற்குப் புறம்பாக அல்லவற்றையே செய்வர். படிப்பதெல்லாம் திருமாலின் சிறப்பினைக் கூறும் பாகவதம். ஆனால் இடிப்பது என்னவோ திருமாலின் கோவில்கள். இராமயணத்தில் வரும் இராவணன் சாம வேதத்தில் வல்லவன். ஆனால் அவன் அவ்வேதத்தினைப் படித்தாலும் அதன்படி நடவாது பிறன்மனை நயந்து நின்றான்.
அவன் சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடிருந்தது. அதனால்தான் அவன் அழிந்தான். சொல்வதுபடி எவன் நடக்கவில்லையோ அவன் நாளடைவில் அனைவராலும் இகழப்பட்டு இழிநிலை அடைந்து அழிவான். அவனை யாரும் நம்ப மாட்டார்கள் என்ற பண்பாட்டு நெறியையே இப்பழமொழிகள் நமக்குத் தெளிவுறுத்துகின்றன.
சொல்வதும் சுரைக்காயும்
மனிதர்களுள் சிலர் எப்போதும் பிறர் மீது குறைகளைக் கூறிக் கொண்டே இருப்பர். இன்னும் சிலரோ எல்லாவிதமான குற்றச்சாட்டுக்களை எல்லாம் கூறிவிட்டுப் பின்னர் ஒன்றுமே தெரியாததுபோலப் போசுவர்.
“என்னப்பா சொல்லாததையாச் சொல்லிப்புட்டேன். பேசாமா விடப்பா. பெரிசா எடுத்துக்காத” என்று ஆறுதல் கூறுவர். அதனைக் கேட்ட நபர், ஆமாமா “சொல்லறது எல்லாம் சொல்லிப்புட்டு சொரைக்காய்க்கு உப்பு இல்லேங்கற கதை மாதிரி இருக்கு” என்ற பழமொழியைக் கூறுவர்.
சுரைக்காய் தண்ணீர்ச் சத்து நிறைந்திருக்கும் காய். அதில் சரியான அளவில் உப்பிட்டுச் சமைத்தால் சுவையாகவும் சத்துக்கள் கெடாமலும் இருக்கும். உப்பில்லை என்றால் சுவை குன்றிப் போய்விடும். சுவை குறைந்தால் உண்பது கடினம். அதுபோல் சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு அதனைப் பெரிதுபடுத்தாதே எளிமையாக எடுத்துக்கொள் என்று கூறுவது மனதிற்கு வேதனையைக் கொடுக்கும். அதனால் எதனையும் சிந்திக்காது பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அதை விடுத்துப் பேசிவிட்டு, “என்ன உள்ளதைத்தானே சொன்னேன்” என்று கூறுவது பிறர் மனதை வருத்தும் செயலாகும். அதனால் பிறர் மனம் வாடும் வண்ணம் எந்தச் சொல்லையும் கூறுதல் கூடாது என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழி எடுத்துரைக்கிறது.
சொல்லாததைச் செய்வது
சிலரிடம் ஒன்றைச் சொன்னால் அவர் அதனை வேறுமாதிரியாகக் கூறுவர். “சாப்பிட்டாயா என்றால் கூப்பிட்டாயா?” என்று கூறுவர். இவர்கள் செவித்திறன் குறைந்தவர்களாக இருப்பர். வேண்டுமென்றே சிலர் பேசுவதும் உண்டு. அதுபோலவே சிலரிடம் நாம் ஒன்றைச் செய்யுமாறு கூறினால் அவர், அதனைச் செய்யாது வேறொன்றைச் செய்வர், இத்தகைய குணமுடையவர்களின் பண்பினை,
“காது காதுன்னா லேதுலேதுங்கறான்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. பெரியவர்கள் கூறியதை மீறாது அப்படியே செய்ய வேண்டும் என்ற வாழ்வியலை விளக்குவதாக இப்பழமொழி அமைந்துள்ளது.
தோசையும் ஓட்டையும்
மனிதருள் சிலர் சொல்லுகின்ற கருத்துக்களை விட்டுவிட்டு எதைச் செய்யக் கூடாதோ அவற்றைச் செய்வர். எதைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய மாட்டார். இவர்கள் என்ன செய்வார்கள் என்பதும் பிறரால் கணிக்க முடியாது. இத்தகையவர்களின் பண்பினை,
“தோசையைத் தின்னுடான்னா ஓட்டைய எண்ணிக்கிட்டுருக்கறான்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
பசி எடுத்தவனுக்கத் தோசை பறிமாறப்பட்டது. ஆனால் அவன் அதனை உண்ணாது தோசையில் இருக்கின்ற ஓட்டைகளை எண்ணிக் கொண்டு இருப்பான். அவன் பசியோடு இருக்கிறானா இல்லை வேண்டுமென்றே இருக்கிறானா? என்று பரிமாறுபவர் கணிக்க முடியாது தடுமாறுகிறார். சாப்பிடுங்கள் என்று கூறினால் அவர் சாப்பிடாது, தேவையில்லாத ஒன்றைச் செய்து கொண்டிருக்கின்றாரே! என்று வியக்கின்றார். சாப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு அதைச் செய்யாது வேறொன்றைச் செய்கின்ற மனிதர்கள் இவ்வுலகில் இருக்கின்றார்கள் என்பதனை இப்பழமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது.
மனிதன் சொன்னதைச் செய்ய வேண்டும். செய்வதைத்தான் சொல்ல வேண்டும். மேலும் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருந்தால் அவர் நேர்மையற்றவராகக் கருதப்படுவார். அதனால் சொல்வதற்கு மாறாகச் செய்யாது சொன்னவண்ணம் செய்தல் வேண்டும் என்ற நேர்மைப் பண்பை இப்பழமொழிகள் வாயிலாக நம் முன்னோர்கள் நமக்குக் கூறியுள்ளது நோக்கத்தக்கது. அதனால் சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம்..நேர்மையாளராய் இருந்து நேர்வழி நடப்போம். வையம் வசப்படும். வாழ்க்கையும் வசப்படும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.