பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
5. ஆணவம்
ஆணவம் மக்களிடம் காணப்படும கீழான குணங்களுள் ஒன்றாகும். இதனை, அகங்காரம், அகந்தை என்றும் வழங்குவர். ஆணவத்தைச் சைவசித்தாந்த சாத்திரங்கள் ‘ஆணவ மலம்’ என்று (மலம் – குற்றம்) என்று குறிப்பிடுகின்றன. ஆணவம் இன்றி மனிதன் வாழ்ந்தால் அவன் தெய்வ நிலைக்கு உயர்வான். ஆர்வத்துடன் அலைபவனை உலகம் வெறுக்கும். தூற்றும். ஆணவமின்றி இருப்பவனை உலகம் வணங்கும். அனுபவத்தின் வாயிலாகவே இதனைப் பலரும் உணர்வர். நமது முன்னோர்கள் யாரும் ஆணவத்துடன் இருத்தல் கூடாது என்பதற்காகத் தமது அனுபவங்களைப் பழமொழிகள் வாயிலாகக் கூறிப் போந்துள்ளனர்.
ஆணவக்காரர்களின் இயல்பு
ஆணவமுடையோர் பிறரை மதித்து நடந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்றும், பிறர் தமக்கு எவ்வித அறிவுரையையும் கூறுதல் கூடாது என்றும் விரும்புவர். தாம் கூறியதுதான் சரி என்றும் வாதிடுவர். பிறர் கூறுவதை எள்ளளவும் ஏற்று நடக்க மாட்டார்கள். இத்தகையோரை, ‘‘தலை கொழுத்தவன், சரியான மண்டை, அகராதி புடிச்சவன், அகங்காரம் கொண்டவன்’’ என்று வழக்கத்தில் வழங்குவர். இவர்கள் பிறரைப் பற்றிக் கவலைப்படாது தங்களைப் பற்றி மட்டுமே எப்போதும் சிந்தித்துக் கொண்டு இருப்பர். பிறரோ, பிறர் கூறுவதோ அவர்களுக்குப் புலப்படாது. இவர்களின் இயல்பை,
‘‘கண்ணுக்குத் தலை தெரியுமா?’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இதே பழமொழியை,
‘‘கண்ணுக்குத் தலை தெரியாது’’
என்றும் வழக்கத்தில் மக்கள் வழங்குவர்.
ஒருவனது கண்களுக்கு அவனது தலை தெரியாது. பிறருடைய தலையே தெரியும். அதுபோன்று ஆணவம் கொண்டோர் எதனைப் பற்றியும் கவலை கொள்ளாது நடப்பதனை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது. இவ்வாறு ஆணவத்தோடு நடப்பதனை, ‘‘தலைகொழுத்து ஆடுதல், மண்டைக் கொண்டு(கிட்டு) ஆடுதல், தலையில் கொம்பு முளைத்த மாதிரி’’ என்று வழக்கில் மக்கள் வழங்குவர். இவ்வாறு ஆணவத்துடன் எவரொருவரும் நடத்தல் கூடாது என்ற கருத்தினையும் இப்பழமொழி அறிவுறுத்துவது குறிப்பிடத்தக்கது.
ஆணவம் கொண்டோரின் நிலை
ஆணவம் கொண்டோர் விரைவில் தாழ்நிலை அடைவர். நமது புராண இதிகாசங்கள் அனைத்தும் ஆணவம் கொண்டோர் எங்ஙனம் அழிந்தனர் என்பதை எடுத்துரைக்கின்றன. துரியோதனன், இராவணன் உள்ளிட்ட பலர் ஆணவத்தால் அழிந்தனர்.
பிறரை மதித்து ஆணவமின்றி, நேர்மையாக வாழ்ந்தால் ஒருவர் தாங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைவர். ஆணவத்துடன் நடந்தால் தமது இலக்கை யாரும் அடைய முடியாது என்பதை,
‘‘காலால நடந்தால் காத வழி போகலாம்
தலையால நடந்தால் போக முடியுமா?’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
"காலால் நடத்தல்" என்பது ஆணவமின்றி நடத்தலைக் குறிக்கும். காதம் (தூரம், தொலைவு) என்பது இலக்கு. வாழ்க்கை முன்னேற்றத்தைக் குறிக்கும். பிறரோடு இணங்கி நேர்மையுடனும் ஆணவமின்றியுமம் ஒருவர் வாழ்தல் வேண்டும் என்ற பண்பாட்டினை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.
ஆணவத்தின் தன்மை
ஆணவம் நம்மை இறைவனிடம் இருந்து பிரித்துவிடும். ஆணவம் கொண்டால் இறைவன் நம்மைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும். இவ்வாணவத்தை, ‘‘Ego’’ என்பர். அதாவது, ‘‘Edging God Out’’ என்பதன் சுருக்கமாகக் Ego என்பதைக் கொள்ளலாம். கடவுள் நம்மை விட்டு வெளியேறும் இறுதி நிலையே ஆணவம் ஆகும். இத்தகைய ஆணவம் அழிவையே தரும். ஒருவனுடைய அறிவு செயல்படாத வண்ணம் செய்துவிடும் தன்மை கொண்டது ஆணவம். அறிவு செயல்படாததால் ஆணவம் கொண்டோர் தவறான முடிவுகளை எடுத்துத் தமக்குத் தாமே அழிவைத் தேடிக் கொள்வர். இதனை,
‘‘ஆணவம் அழிவைக் கொடுக்கும்’’
என்ற பழமொழி வலியுறுத்துகிறது. இதனை,
‘‘ஆணவம் அறிவைக் கெடுக்கும்’’
என்றும் வேறு வகையில் குறிப்பிடுவர். அழிவைத் தரும் ஆணவததை ஒருவன் கைவிட்டு வாழ்தல் வேண்டும் என்பதையும் இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.
ஆணவத்துடன் செயல்படுபவர் எந்தச் செயலையும் சரியாகச் செய்யமாட்டார். தங்களுக்குப் பலம் வாய்ந்தவர்களின் துணை வாய்த்திருந்தாலும் அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாது அழிவையே தேடிக் கொள்வர். துரியோதனனக்கு அறிவிலும், ஆற்றலிலும் அதிகத் திறன் வாய்ந்தோர் வாய்த்திருந்த போதிலும் அவன் அவர்களை எல்லாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாது ஆணவத்தால் அழிவைத் தேடிக் கொண்டதை மகாபாரதம் விளக்குகிறது. இதனை,
‘‘துள்ளுற(ஆணவம் கொண்டவர்கள்) மாடு பொதி சுமக்குமா?’’
(பொதி – செயல்களைச் செய்தல்)
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. ஆணவத்தால் பிறரைப் புரிந்து கொள்ளாது எடுத்தெரிந்து பேசுபவரையே இப்பழமொழி குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
ஆணவம் கொண்டோரின் நிலை
அனைவருக்கும் ஆணவம் உண்டு. ஆனால் சிலரே அதற்கு முழுமையாக ஆட்பட்டு அடிமையாவர். அங்ஙனம் ஆணவத்திற்கு அடிமையாவோர் தலைகால் புரியாமல் நடந்து கொள்வர். தாம் செய்வது சரியா? தவறா? என்று உணர்ந்து கொள்ளாமலேயே செயல்பட்டுத் தோல்வி அடைவர். மகாபாரதத்தில் வரும் கர்ணன் கொடையாளியாக இருந்தாலும் இத்தகைய தன்மை உடையவனாக விளங்குகிறான். இறுதிக்கட்டப் போரில் அர்ச்சுனனுடன் போரிடும்போது நாகாஸ்த்திரத்தைப் பயன்படுத்த நினைக்கிறான் கர்ணன். அப்போது தேரோட்டியாக விளங்கிய சல்லியன் அவ்வஸ்திரத்தை அர்ச்சுனனின் மார்பை நோக்கிக் குறி வைக்குமாறு கர்ணனிடம் கூறுகிறான். ஆனால் கர்ணன் மமதையுடன் அவனைத் தேரோட்டி என்று இகழ்ந்துரைத்து அர்ச்சுனனின் தலைக்குக் குறி வைக்கிறான். கண்ணன் அருச்சுனனின் தேரினைப் பூமியில் அழுத்த நாகாஸ்திரம் அச்சுனனின் தலையில்உள்ள கிரீடத்தை மட்டும் தள்ளிவிட்டுச் சென்று விடுகிறது. அர்ச்சுனன் மட்டும் பிழைக்கின்றான். கர்ணனின் மமதை அவனது அழிவுக்கு வித்திட்டது எனலாம்.
ஆணவத்துடன் எவரும் இருத்தல் கூடாது என்பதனை,
‘‘யானை தன் தலையில் தானே
மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்ட மாதிரி’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
நீர்நிலையில் நீராடிவிட்டு வரும் யானையானது அதன் தலையில் ஊறும் ஒருவித மதநீரின் ஊறலைத் தடுக்கத் தனது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும். இதனால் சுத்தமாக இருந்த யானையின் தலை மண்நிறைந்து காணப்படும். யானையின் செயல் அதன் உடல் நிலைக்கு ஏற்ப இருந்தாலும் அதன் செயலைக் கொண்டு சிலர் தங்களது ஆணவத்தால் தங்களுக்குத் தாங்களே அழிவைத் தேடிக் கொள்வர் என்பதனை இப்பழமொழி விளக்குவது குறிப்பிடத்தக்கது. ஆணவம் அகன்று, அறிவுடன் செயல்பட்டு, உலகில் உயர இத்தகைய பழமொழிகள் நமக்கு வழிகாட்டுகின்றன எனலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.