பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
8.தாய், தந்தை மற்றும் குரு
தாய், தந்தை, ஆசிரியர், மனைவி ஆகிய நால்வரும் ஒருவனுடைய வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றனர். பழந்தமிழ் மக்கள் ஒருவனுடைய புண்ணியத்தால் மட்டுமே அவனுக்குப் அப்பிறவியில் இந்நால்வரும் வாய்க்கின்றனர் என்று கருதினர். இன்றும் இந்நம்பிக்கைத் தமிழர்களிடையே நிலவிவருவது நோக்கத்தக்கது. முற்பிறவியில் செய்த செயல்களுக்கேற்ப இவையனைத்தும் அமையும் என்று நமது முன்னோர்கள் கூறுவர். சமஸ்கிருதத்தில், ‘‘மாத்ரு தேவோ பவ பித்ரு தோவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ’’ என்று கூறுவார்கள்.
தமிழ்ப் பெரியார்கள் தாய், தந்தை, ஆசிரியர் ஆகியோரைக் கடவுளுக்கு இணையாகக் கூறுவர். அவர்களின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்தல் வேண்டும் என்று அவர்களைப் பற்றி பழமொழிகளில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறைவன்
தாய், தந்தை, ஆசிரியர் மூவரும் கடவுளுக்கு இணையானவர்கள். அவர்களை வணங்கினால் வாழ்வில் அனைத்து நன்மைகளையும் பெறலாம். அதனால்தான் ஒருவனின் முன்னேற்றம் என்பது தாய், தந்தை, ஆசிரியர் ஆகியோரை வைத்தே அமைகின்றது எனலாம். அதனால்தான் நமது முன்னோர்கள்,
"மாதா, பிதா, குரு தெய்வம்"
என்று பழமொழி வாயிலாக அவர்களின் சிறப்பை உணர்த்தினார்கள். பெற்றவர்கள், ஆசிரியர் ஆகிய இருவரும் கடவுளுக்கு இணையாக மதிக்கத்தக்கவர்கள். அவர்கள் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்பதை மேற்குறித்த பழமொழி தெளிவுறுத்துகின்றது. இத்தகைய கருத்து,
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
"எழுத்தறிவித்தவன் இறைவனாகும்"
என்ற ஔவையாரின் இலக்கிய வரிகளுடன் ஒப்பு நோக்கத்தக்கதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கோயில் – மந்திரம்
தாயே திருக்கோயிலாவாள். குழந்தை தாயினுடைய கருவறையாகிய திருக்கோவிலில் வளர்ந்து இவ்வுலகத்தை 12 திங்களுக்குப் பிறகு பார்க்கிறது. அது போன்று அக்குழந்தை தன்னிலும் மேம்பட்டவனாக வாழ வேண்டும் என்று விரும்பித் தனது குழந்தைகளைக் கண்ணுங் கருத்துமாகத் தந்தை வளர்க்கின்றான். அதனால் குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள தந்தை கூறும் கருத்துக்கள் மந்திரம் போன்றவை. ஆகையால் தாய் கோவிலைப் போன்றவள். தந்தை சொல்வது மந்திரச் சொற்களாகும். இத்தகைய தாய் தந்தை ஆகியோரின் பெருமையை விளக்கும் வகையில்,
"தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை"
என்ற பழமொழிகள் அமைந்துள்ளன. இக்கருத்தினை அனைத்து இலக்கியங்களும் வலியுறுத்துகின்றன.
தாயும் – சொல்லும்
தாய் கூறும் வார்த்தைகள் சத்தியமானவை. உயர்ந்தவை. அவை என்றும் முன்னேற்றத்திற்கு உதவக்கூடியவை ஆகும். சொற்களைக் கேட்டு ஒருவர் நடந்தால் அவர் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பர். அதனால் தாய் சொ்லைத் தட்டாது அதனைக் கடைபிடித்து வாழவேண்டும் என்பதனை,
"தாய் சொல்லு தலையிலே
மாதா சொல்லு மடியிலே"
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.
இராமாணத்தில் வரும் இராமன் தனது தாயாகிய கைகேசியின்(சிற்றன்னை) வார்த்தைகளைக் கேட்டு,
"மன்னவன் பணியன்றாகில்
நும்பணி மறுப்பனோ யான்?"
என்று மொழிந்து தாயின் சொல்லைத் தலைமேல் ஏற்றுக் கானகம் சென்றான். கானகத்தில் 14 ஆண்டுகள் இருந்து இராவண வதம் செய்து பின்னர் அயோத்தி வந்து அரசாண்டான். தாயின் சொல்லை இராமன் கேட்டதால் அனைவரும் போற்றக் கூடிய உயர்ந்த நிலையை அடைந்தான்.
மாதா(தாய்) மடியில் என்பது தாய் எப்பொழுதும் தனது குழந்தைகள் பசியின்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று எண்ணுவாள். தனது குழந்தைகள் எங்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தாலும் அல்லது வேறிடத்திற்குத் தனது குழந்தைகள் சென்றாலும் அவர்கள் பசியின்றி வயிறார உண்ணுதல் வேண்டும் என்று கருதுவாள். அதனால் குழந்தைகளைப் பார்த்து நன்றாகச் சாப்பிடு என்று கூறுவாள். அதனால்தான் மாதா சொல் மடியில்(வயிறு) என்ற பழமொழி எழுந்தது எனலாம்.
தாயின் பெருமை
பொறுமையின் அடையாளம் தாய். அத்தாய் எத்தகைய தவறினைச் செய்தாலும் தனது குழந்தையை விட்டுக்கொடுக்கமாட்டாள். தனது குழந்தைகளுக்காக எத்தகைய துன்பத்தையும் பொறுத்துக் கொள்வாள். மற்றவர்கள் அவ்வாறு இருக்கமாட்டார்கள். ஒருவனுடன் பிறந்த சகோதரிகள் பொருள் கொடுத்தால் மட்டுமே அவனை மதிப்பர். அதே போல் அவனது மனைவி, கணவன் என்ன பொருள் கொண்டுவந்தான் என்று பார்ப்பாள். ஆனால் தாய் அவ்விதம் இருக்கமாட்டாள். தன் மகன் உண்டானா? என்றே பார்ப்பாள். சகோதரி, மனைவி ஆகியோரைவிட தாய் மிக உயர்ந்த குணத்தை உடையவள். இதனை,
"கொடுத்தால் சகோதரன்
கொண்டு வந்து கொடுத்தால் மனைவி
கொண்டுவந்தாலும் கொண்டு வராவிட்டாலும் தாய்"
"மனைவி மடியைப் பார்ப்பாள்
தாய் வயிற்றைப் பார்ப்பாள்"
என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன.
தந்தை, தாய், மனைவி
தந்தை, தாய், மனைவி இம்மூவரும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் எனலாம். குழந்தையைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அவனுக்கு மணம் முடித்து அவன் மகிழ்வுடன் வாழ்வதைப் பார்ப்பவர்கள் பெற்றோர். மனைவி கணவனின் இன்பதுன்பங்களில் பங்கு கொண்டு அவன் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து இறுதிவரை வருபவள். இம்மூவரின் முக்கியத்துவத்தையும்,
"தந்தையுடன் கல்வி போகும்
தாயுடன் அறுசுவை போகும்
மனைவியுடன் எல்லாம் போகும்"
"தாய்க்குப் பின் தாரம்"
என்ற பழமொழிகள் எழுத்துரைக்கின்றன.
தனது மகன் நன்கு கல்வி கற்க வேண்டும் என்று விரும்புவன் தந்தை. மகன் விரும்பும் உணவைப் பார்த்துப் பார்த்துச் சமைத்து அவனுக்கு உணவளித்து அன்புடன் நடத்துபவள் தாய். அது போன்று தாய்க்குப் பின்னர் அவனை ஒட்டு மொத்தமாகப் பார்த்துக் கொள்பவள் மனைவி. அதனால்தான் மனைவியுடன் எல்லாம் போகும் என்று மொழிந்து வைத்தனர் எனலாம். இம்மூவரும் சரியாக அமையின் ஒருவன் வாழ்வு மிகுந்த மகிழ்ச்சியுடையதாக இருக்கும் என்பதை மேற்குறித்த பழமொழி எடுத்துரைக்கின்றது.
மேலும் ஒருவனுக்கு வாய்க்கும் நல்ல மனைவியானவள் அவனுக்குத் தாயகவும், தாதியாகவும்(பணிபெண்), அறிவுரை கூறும் அமைச்சனாகவும், ஆறுதல் கூறும்போதும், அவனது தவறுகளை எடுத்துக் கூறும்போது தோழனாகவும், ஆசிரியனாகவும் விளங்குகின்றாள். அதனால் தான் தாய்க்குப்பின் தாரமே அவளின் இடத்தை வகிக்கின்றாள் என்பதை மேற்குறித்த பழமொழி நமக்குத் தெளிவுற எடுத்துரைக்கின்றது எனலாம்.
தாய் – பிள்ளை
தாய் தன் பிள்ளைகளைக் கண்ணுங் கருத்துமாக வளர்த்து ஆளாக்குகின்றாள். அவ்வாறு ஆளாக்கினாலும் தாய், பிள்ளை இருவரும் வேறு வேறாவர். அவரவர்களுக்குத் தேவையானவற்றை அவரவர்களே தேடிக் கொள்ள வேண்டும். உணவிலிருந்து அனைத்தும் தனித்தனியானவைகளே ஆகும். அவரவர் தேவைகளை அவரவர்களே நிறைவு செய்து கொள்ள வேண்டும். அதுபோன்று நண்பர் ஒருவர் மற்றொரு நண்பருக்கு ஏதாவது வேலை செய்து கொடுக்கின்ற போது அவ்வேலைக்குரிய பணத்தையோ, பொருளையோ அவருக்குகக் கொடுக்க முற்படுகின்ற போது அவர் வாங்க மறுப்பர். அதற்கு அவர் பணத்தை வாங்க மறுத்த நண்பரைப் பார்த்து,
"தாயும் பிள்ளையுமா இருந்தாலும்
வாயும் வயிறும் வேறே"
என்று கூறிப் பணத்தைக் கொடுப்பார்.
இங்கு எல்லோரும் ஒன்றாக இருந்தாலும் உணர்வுகள், தேவைகள் என்பது வேறு வேறாக இருக்கும். இதனை உணர்த்துவதற்காகத் தாய், பிள்ளையை உதாரணமாக வைத்து நமது முன்னோர்கள் கூறினர் என்பது நோக்கத்தக்கது.
நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களின் உணர்வுகளை மதித்து நடத்தல் வேண்டும். அவர்களுக்குரியனவற்றை உடன் நாம் செய்தல் வேண்டும். ஒருவர் பொருளை வாங்க மறுக்கிறார் என்பதற்காக கொடுக்காமல் இருத்தலாகாது. அவர் நிலையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று இப்பழமொழி நமக்கு உணர்த்துகின்றது.
பெற்ற மனம் - பிள்ளை மனம்
தாயுள்ளம் மிகவும் பெரியது. உலகததை விட மிகவும் சிறப்பான பெருமைக்குரியவள் தாயே ஆவாள். அவளின் மனம் எப்போதும் தனது பிள்ளைகளின் முன்னேற்றத்தையே நாடி நிற்கும். வேறெதையும் அவள் மனம் நாடாது. மேலும் தனது பிள்ளை தவறு எதுவும் செய்தாலும் தனக்குத் துன்பம் விளைவித்தாலும் அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு பிள்ளையின் நலனையே தாயின் மனம் நாடும். இதுவே இயற்கை.
ஆனால் தாயானவள் குழந்தைகளால் பாதுகாக்கப்படாமல் தெருவில் விடும் சூழல் இன்றைய சமுதாயத்தில் எழுந்துள்ளது. பணம் வைத்திருந்தாலும் இல்லை என்றாலும் தாயினைக் கவனிக்கும் உணர்வு என்பது தற்போது குறைந்து வருகின்றது. அதிலும் பணம் வைத்திருந்தால் மட்டுமே தாயைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலை இன்றைய சமுதாயச் சூழலில் எழுந்துள்ளது. வயது முதிர்ந்த காலத்தில் தாயனவள் பிள்ளைகளால் கைவிடப்படும் நிலை உள்ளது.
அதிலும் ஒரு பிள்ளை மட்டுமே தாய் ஒருத்திக்கு இருந்தால் அக்குழந்தை அவளை அன்புடன் பார்த்துக் கொள்ளும் நிலை இருந்தால், அவள் முற்பிறவியில் செய்த புண்ணியம் என்று கருதப்படுகிறது. மேலும் அதே பிள்ளை தனது தாயைப் பாதுகாவாது முதியோர் இல்லத்தில் விட்டுப் பார்த்துக் கொள்ளச் சொல்லும் சூழலும் அதிகரித்து வருகின்றது. ஒரு தாய்க்கு நான்கு பிள்ளைகள் இருப்பின் அத்தாய் பிள்ளைகளால் பாதுகாக்கப்படாது தெருவில் விடப்படுகின்றாள் ஏனெனில் பிள்ளைகளுக்குள் தாயைப் யார் பார்ப்பது என்ற பாகப் பிரிவினை ஏற்பட்டு, அவள் ஒவ்வொரு நாளும் பரிதவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இத்தகைய சூழலை,
"ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உரியில சோறு
நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவில்தான் சோறு"
என்ற பழமொழி விளக்கி உரைக்கின்றது. br>
பல்வேறு சூழல்களில் தனது குழந்தைகளைப் பாதுகாத்து வளர்த்த தாய் பிள்ளைகளாலேயே சிறுமைப்படுத்தப்படுகின்றாள். அவர்களால் கைவிடப்பட்ட நிலையில் அவள் தெருவிற்கு வந்து பிச்சை எடுக்க வேண்டிய துயரமான சூழ்நிலை ஏற்படுகின்றது. இறுதிவரை அவள் பிச்சை எடுத்துக் கொண்டு தெருவில் இறந்து கிடக்கும் நிலை ஏற்பட்டு விடுகின்றது. இத்தகைய நிலை சமுதாயத்தில் நிலவக் கூடாது. ஆலமரத்தை விழுதுகள் தாங்குவதைப் போன்று வயதான காலத்தில் பெற்றோரைக் குழந்தைகள் அன்புடன் பாதுகாத்தல் வேண்டும் என சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடிய அறிவுரையையும் உள்ளடக்கிக் கூறுவதாக இப்பழமொழி அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
மேலும் தாயானவள் தனது மகளிம் அல்லது மகனிடம் எவ்வளவுதான் பாசமாக இருந்தாலும் அவர்கள் தாய், அல்லது தந்தையிடம் அவர்கள் அளவிற்குப் பாசமுடன் இருப்பதில்லை. அதனால் தான் அவர்கள் திருமணம் முடிந்தவுடன் வயதான பெற்றோரைக் கவனிக்காது முதியோர் இல்லத்திலோ, அல்லது தனியாகவோ விட்டுவிடுகின்றனர். அவர்கள் எவ்வளவு கெஞ்சிக் கேட்டாலும் அவர்களது பேச்சு குழந்தைகளின் காதுகளில் விழாமல் போய்விடுகின்றன. அதனால் தான்,
"பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு"
என்ற பழமொழி வழக்கில் மக்களிடையே வழங்கப்பட்டு வருகின்றது. பெற்றவர்கள் மனம் அறிந்து குழந்தைகள் செயல்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் வயதான காலத்தில் மகிழ்வுடன் இருப்பர். அதுபோன்றே பெற்றோர்களும் சூழலை அறிந்து நடந்து கொள்ள வேண்டும் ஆனால் எக்காரணம் கொண்டும் பெற்றோரை மதியாது அவர்களை துயரச் சூழலில் ஆழ்த்திவிடக் கூடாது என்ற கருத்தையும் மேற்கூறிய பழமொழி எடுத்துரைக்கின்றது எனலாம்.
தனது மனைவியின் பேச்சினைக் கேட்டுத் தாயை அடித்து விரடிட்டிடும் பிள்ளைகளும் இச்சமுதாயத்தில் வாழ்கின்றனர். தாயை உணவிற்காகப் பிச்சை எடுக்க விட்டுவிட்டுப் பிள்ளை பலருக்கு உதவி செய்வான். இது முற்றிலும் தவறான ஒன்றாகும். தாயைப் பிச்சைக்காரியாகப் பிச்சை எடுக்க விட்டுவிட்டுப் பிள்ளை பிறருக்கு உதவி செய்வதால் எந்தப் பயனும் விளையாது. பிள்ளையின் செயல் வெறுக்கத்தக்கதாகும் என்பதனை,
"தாய் கிண்ணிச் சோத்துக்குப் பிச்சை எடுக்கிறாளாம்
மகன் கங்கையில கோதானம் பண்றானாம்"
(கிண்ணி-கிண்ணம், சிறிய பாத்திரம்)
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. தாயைத் தவிக்கவிட்டு, தர்மவானாக விளங்குவதால் எந்தவிதமான புண்ணியமும் கிடைத்து விடாது. தாயைப் பாதுகாப்பதே புண்ணியத்திலும் புண்ணியமாகும் என இப்பழமொழி வலியுறுத்துவது சிந்தனைக்குரியதாகும்.
தாய் – பிள்ளை – பண்பு
தாய் எந்தக் குணத்துடன் இருக்கின்றாளோ அதுபோன்றே அவளின் பிள்ளையும் இருக்கும். தாய்க்குள்ள பண்பே பிள்ளைகளுக்கும் இருக்கும். தாய் கொடியவளாக இருப்பின் அவளின் பிள்ளையும் கொடியவனாகவே இருப்பான். மகாபாரதத்தில் இடம்பெறும் திருதராட்டிரனின் மனைவி காந்தாரி பொறாமைக் குணம் உடையவளாக இருக்கிறாள். அவளின் குணம் பிள்ளைகளான துரியோதனன், துச்சாதனன் ஆகியோரிடம் காணப்படுவதை மகாபாரதம் எடுத்துரைக்கின்றது. காந்தாரி பொறாமை குணம் உடையவளாகவும் அவரசப்பட்டு முடிவு எடுப்பவளாகவும் இருந்ததால்தான் அவள் பெற்ற பிள்ளைகளும் அக்குணமுடையவர்களாக இருந்தனர். தாய் எவ்வாறு இருப்பாளோ அவ்வாறே அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளும் இருப்பர். என்பதனை,
"தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை"
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
தாய் குழந்தையின் முதல் ஆசிரியர் ஆவாள். அவளிடம் இருந்தே அனைத்துப் பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் பிள்ளைகள் கற்றுக் கொள்கின்றனர். அதனால் தாய் பண்புள்ளவளாக இருந்து, குழந்தைகளையும் பண்புடையவர்களாக உருவாக்க வேண்டும் என்ற குழந்தை வளர்ப்பு நெறியையும் இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.
தாய் எத்தகைய வலிமையுள்ளவளாக இருப்பாளோ, அது போன்று பன்மடங்கு ஆற்றலுள்ளவளாக அவளது பிள்ளைகள் இருப்பர். மனவலிமை, உடல் வலிமை ஆகியவை உடைய தாயர் பெறும் பிள்ளைகளும் அவர்களைப் போன்று வலிமையுடையவர்களாக இருப்பர் என்பதை,
"தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்”
என்ற பழமொழி விளக்குகிறது. தாயிடம் உள்ள பண்புகளைப் போன்று அவளுடைய செயல்பாடுகளும் குழந்தைகளிடம் கூடுதலாக இருக்கும் என்ற அறிவியல் ரீதியான கருத்தினையும் இப்பழமொழி உள்ளடக்கியதாக அமைந்திருப்பது சிந்தனைக்குரியதாகும்.
தந்தை – பிள்ளை
தந்தையை அப்பா, அப்பன், ஐயன், ஐயா, தந்தை, தாதை(இலக்கிய வழக்கு) என்று பலவிதமாக வழங்குவர். தந்தையே பிள்ளைகளுக்கு முன் மாதிரி (Role Model) ஆவார். அதனால் தந்தை நற்பண்புடையவராகவும், நற்பழக்க வழக்கங்களை உடையவராகவும் இருத்தல் வேண்டும். ஏனெனில் பிள்ளைகள் (குழந்தைகள்) தந்தையையே பின்பற்றி நடப்பர். தந்தை தீய பண்பும், பழக்க வழக்கங்களும் உடையவராகவும் இருந்தால் அப்பழக்கங்களைக் குழந்தைகளும் எளிதில் கற்றுக் கொள்வர். தவறாகத் தீய வழியில் நடப்பவரின் மகனைப் பார்த்து,
"அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு"
என்ற பழமொழியினைக் கூறுவர். ஒரு குழந்தைக்குத் தாயின் குணம் 50 சதவிகிதம், தந்தையின் குணம் 50 சதவிகிதம் என விளக்கி உரைக்கின்றது.
குரு (ஆசிரியர்)
உலக அளவில் ஆசிரியர்கள் மக்கள் அனைவராலும் மதிக்கப்படும் உன்னதமானவராகக் கருதப்படுகின்றார். அன்றும் என்றும் சமுதாயத்தில் பெரும் மதிப்புக்குரியவராக ஆசிரியர் விளங்குகின்றார். வழக்கில் மக்கள்,
"அறிவோம் நன்றாக குருவாழ்க குருவே துணை"
என்று கூறிக் குருவை மனத்தினால் வணங்கிய பின்னரே எந்தச் செயலையும் செய்வர். அந்த அளவிற்குக் குருவாகிய ஆசிரியர் சமுதாயத்தில் செல்வாக்கு மிகுந்தவராக விளங்குகின்றார்.
எந்தக் கலையாக இருப்பினும் ஆசிரியரின்றி கற்பது என்பது இயலாது. அவ்வாறே கற்றுக் கொண்டாலும் அது தெளிவுற இராது என்பர். எக்கலையாக இருப்பினும் ஆசிரியரை மனதில் இருத்தி கற்கக் கூடிய கலையே விருத்தி அடையும் எனபதை,
"குருவில்லா வித்தை
கருவில்லா முட்டை"
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
கருவில்லா முட்டையில் இருந்து மற்றொரு உயிர் தோன்ற முடியாது. குரு இல்லாது கற்கும் வித்தையும் அது போன்றதாகவே அமையும். குருவின் சிறப்பினையும், இன்றியமையாமையையும் இப்பழமொழி தெளிவுறுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.
தாய், தந்தை உயிர் கொடுத்து பிள்ளையை வளர்க்கின்றனர். வளரும் அப்பிள்ளைக்கு அறிவுக் கண்களைத் திறக்கும் ஞானத் தந்தையாக குரு விளங்குகிறார். வாழ்க்கையில் மேலும் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு ஒருவனுக்கு வாய்க்கும் மனைவியாகிய துணைவி விளங்குகிறார். இவையெல்லாம் நன்றாக அமைந்தால் ஒருவனது வாழ்க்கை சோலைவனமாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|