பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
9. நன்றி மறத்தலும் மறவாமையும்
வாழ்வில் நாம் அனைத்தையும் நினைவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் சிலவற்றை இறக்கின்ற வரையிலும் நினைவு வைத்திருப்போம். நம் மனத்தில் அனைத்தையும் மறக்காது வைத்திருக்க வேண்டும் என்றும் பெரியோர் கூறுவர். இவ்வாறு வைத்திருப்பின் மனம் குப்பைத் தொட்டியாகிவிடுமே என்று நாம் நினைக்கலாம். நமது பெரியோர்கள் கூறியது நல்லனவற்றை மட்டுமே என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாம் உலகில் எதனை வேண்டுமானாலும் மறக்கலாம். ஆனால் ஒருவர் செய்த உதவியை, செய்த நன்மையை ஒருபோதும் மறத்தல் கூடாது. நன்மை செய்தவருக்கு, உதவி செய்தவருக்கு தீமை செய்தல் கூடாது. அவர்களது உதவியை மறவாது நன்றியுடன் அவர்களிடம் நடந்து கொள்ளவேண்டும். மாறாக நடப்பின் வாழ்வில் இடர் ஏற்படும். இத்தகைய உயர்ந்த பண்பாடான நன்றி மறவாத் தன்மையை நமது முன்னோர்கள் இலக்கியங்கள் வழியும், பழமொழிகள் வழியும் கூறியுள்ளனர்.
நன்றி மறந்தவரின் செயல்
ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவி சிறியதாக இருப்பினும் அதனை மறக்கக் கூடாது. இதனால் தான் வள்ளுவப் பெருந்தகையும்,
‘‘காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது’’.
‘‘பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது’’
‘‘தினைத்துணை நன்றி செய்யினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்’’
என்று நன்றி மறவாமை பற்றியும், நன்றியின் உயர்வைப் பற்றியும் தெளிவுறுத்துகின்றார்.
சிலர் பிறர் செய்த உதவியை உடன் மறந்துவிடுவர். அவர் காலத்தில் நமக்கு உதவினாரே நாம் அதனை மறக்கலாமா? என்றெல்லாம் நினைக்க மாட்டார். மாறாக இத்தகையோர் நன்றியை மறந்து, என்ன பெரிய உதவி செய்து விட்டாய்? நீ செய்த உதவி யாருக்கு வேண்டும்? உலகத்தில யாரும் செய்யாத உதவியை நீ மட்டும் செய்துவிட்டாய். பேச வந்துவிட்டான். போய்யா எனக் கீழ்த்தரமாகப் பேசி நன்றி செய்தவரை இழிவுபடுத்துவர். இத்தகையோரின் இயல்பினை,
‘‘நன்றி செஞ்சவன் பொண்டாட்டிய
நாய்க்குப் புடுச்சுக் கட்டின்னானாம்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
நன்றி(உதவி) செய்தவன் மனைவியை நாயைப் போன்று கருதி அதனுடன் இருக்க வை என்று கூறுவதைப் போல் உதவியை மறந்தவர் நடப்பர். நாய், மனிதன் இருவரும் ஒன்றா? இல்லையே. இருவரையும் ஒன்றாக நடத்துதல் கூடாது. உதவியை மறந்தவர்கள் இங்ஙனம் உதவியவரை நாய்க்குச் சமமாக நடத்துவர். அதனையே இப்பழமொழி உணர்த்துகின்றது. இவ்வாறு உதவியவரை நடத்தி அவர்களது மனதைப் புண்படுத்துதல் கூடாது என்றும் இப்பழமொழி தெளிவுறுத்துவது நோக்கத்தக்கது.
நன்றி மறவாமை
மனிதர்கள் பிறரிடம் தங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொண்டு மகிழ்வர். பின்னர் அதனை உடன் மறந்து விடுவர். அங்ஙனம் இருப்பது வெட்கக் கேடானது. எந்த நிலையிலும் பிறர் செய்த நன்றியை நாம் மறத்தல் கூடாது. அவ்வாறு நினைத்தால் நமக்கு நற்கதி கிடைக்காது. அப்பாவத்தில் இருந்து உய்வு என்பது கிடையாது. இதனை,
‘‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு’’
என்ற குறள்வழி நமது வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இக்குறட்பாவின் விளக்கமாக,
‘‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே’’
‘‘பால் குடிச்ச வீட்டுக்குப் பாதகம் நினைக்காதே’’
என்ற பழமொழிகள் அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
இங்கு உண்ட வீடு, பால்குடித்தவர் வீடு என்ற சொற்கள் உதவி செய்தவரையும், ரெண்டகம், பாதகம் என்ற சொற்கள் அவருக்குச் செய்யப் போகும் தீமையையும் குறிக்கும். உதவி செய்தவருக்குத் தீங்கு செய்யாதே என்பதையும் வலியுறுத்துகின்றன. இப்பழமொழிகள் நன்றி மறவாமை என்ற உயரிய பண்பாட்டு நெறியை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது நோக்கத்தக்கது.
உயிர் உள்ளளவும் நினைத்தல்
உதவி செய்தவரை இறக்கும் வரையிலும் அதாவது உயிர் வாழ்கின்றவரை நினைத்துக் கொண்டிருத்தல் வேண்டும். அவ்வாறு நினைப்பவர் உயர்ந்த பண்பாளர் ஆவார். அவர்களை உலகம் என்றும் நினைவில் வைத்துப் போற்றும். அவரே உலகில் அனைவரிலும் உயர்ந்தவர் ஆவார். இதனை,
‘‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இங்கு உப்பிட்டவரை என்பது உதவி(நன்றி) செய்தவரைக் குறிக்கும். உள்ளளவும் என்பது உயிர் உள்ளவரை, இறக்கும் வரை நினைத்தல் வேண்டும் என்பதைக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
மகாபாரதத்தில் இடம்பெறும் கர்ணனும், இராமாயணத்தில் இடம்பெறும் கும்பகர்ணனும் இப்பழமொழிக்கு உதாரணமாகத் திகழ்கின்றனர். தனக்கு இறப்பு வரும் என்று அறிந்தும் கர்ணன் துரியோதனனுக்காகப் போர்க்களத்தில் போர்புரிந்து உயிர் துறக்கின்றான். தனது நன்றிக்கடனைத் தீர்க்கின்றான்.
அதுபோன்று, கும்பகர்ணன் தனது அண்ணன் தீயவன் என்றறிந்தும் அவனுக்குப் பல அறிவுரைகள் கூறுகின்றான். அவன் திருந்தவில்லை. அதனைக் கண்டு அவன் தன் அண்ணனைக் கைவிட்டுவிட்டு வரவில்லை. அவனுக்காகப் போர்க்களம் செல்கின்றான். போர்க்களத்தில் விபீடணன் வந்து இராமன் பக்கம் வந்து சேர்ந்துவிடுமாறு அழைத்தபோது,
‘‘நீர்க்கோல வாழ்வை நச்சி
நெடிது நாள் வளர்த்துப் பின்னை
போர்க்கோலம் செய்து விட்டார்க்கன்றி
உயிர்கொடாது அங்கு போகேன்
தார்க்கோல மேனி மைந்தா
என் துயர் தவிர்த்தியாயின்
கார்க்கோல மேனியானைக்
கூடுதி கடிதின் என்றான்’’
என்று மறுத்துரைத்துப் போர்புரிந்து உயிர்துறக்கின்றான். நன்றி மறவாமைக்கு உதாரணமாக இருவருடைய வாழ்வும் அமைந்து, மேற்குறித்த பழமொழியின் பொருள் விளக்கமாகவும் அமைந்திருப்பது நோக்கத்தக்கது ஆகும்.
நன்றி செய்தவரைக் குறைகூறல்
மனிதர்கள் யாரைப் பற்றியாவது குறைகூறிக் கொண்டே இருப்பார்கள். சிலர் குறைகூறுவதையே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருப்பர். தங்களுக்கு யாரேனும் ஓர் உதவி செய்தாலும் கூட அதனைப் பற்றியும் அவர்கள் குறைகூறுவர். என்ன செய்துவிட்டான். அவனை உதவி செய்யுமாறு கேட்டது யார்? எப்பவோ உதவி செய்தான் அதையெல்லாம் ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்க முடியுமா? என்று கூறி நன்றி செய்தவரை இழிவுபடுத்துவர். அவர்களின் இழிந்த பண்பை,
‘‘புண்ணியத்திற்குக் கொடுத்த மாட்டை
பல்லைப் புடுச்சுப் பதம் பார்த்த கதைதான்’’
‘‘உழுத மாட்டை நெகத்தால அடிச்ச கதைதான்’’
என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன. புண்ணியத்திற்குக் கொடுத்தமாடு என்பது பிறருக்கு உதவிய பொருளினைக் குறிக்கும். உழுத மாடு என்பது உதவி செய்தவரைக் குறிக்கும். உதவியவர்களை இங்ஙனம் இழிவாகவோ குறையோ கூறுதல் கூடாது. அதனைத் தவிர்த்தல் வேண்டும் என்று இப்பழமொழிகள் நமக்கு நல்லுரை வழங்குகின்றன.
நாம் எந்தக் கடனையும் அடைத்துவிடலாம். ஆனால் நன்றிக் கடனை மட்டும் அடைக்க இயலாது. அந்நன்றிக்கு எதுவும் ஈடாகாது. இவற்றை உணர்ந்து நன்றியுணர்வுள்ளவர்களாக வாழ்க்கையில் நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இப்பழமொழிகள் வலியுறுத்துவதுடன், நன்றி மறவா பண்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற வாழ்வியல் நெறிமுறையையும் நமக்கு உணர்த்துவது நோக்கத்தக்கது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.