பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
10. துளசி வாசம்
வாழ்வில் நாம் அனைத்தையும் நினைவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் சிலவற்றை இறக்கின்ற வரையிலும் நினைவு வைத்திருப்போம். நம் மனத்தில் அனைத்தையும் மறக்காது வைத்திருக்க வேண்டும் என்றும் பெரியோர் கூறுவர். இவ்வாறு வைத்திருப்பின் மனம் குப்பைத் தொட்டியாகிவிடுமே என்று நாம் நினைக்கலாம். நமது பெரியோர்கள் கூறியது நல்லனவற்றை மட்டுமே என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாம் உலகில் எதனை வேண்டுமானாலும் மறக்கலாம். ஆனால் ஒருவர் செய்த உதவியை, செய்த நன்மையை ஒருபோதும் மறத்தல் கூடாது. நன்மை செய்தவருக்கு, உதவி செய்தவருக்கு தீமை செய்தல் கூடாது. அவர்களது உதவியை மறவாது நன்றியுடன் அவர்களிடம் நடந்து கொள்ளவேண்டும். மாறாக நடப்பின் வாழ்வில் இடர் ஏற்படும். இத்தகைய உயர்ந்த பண்பாடான நன்றி மறவாத் தன்மையை நமது முன்னோர்கள் இலக்கியங்கள் வழியும், பழமொழிகள் வழியும் கூறியுள்ளனர்.
நன்றி மறந்தவரின் செயல்
நமது முன்னோர்கள் தங்களது வாழ்க்கையில் கண்ட அனுபவக் கருத்துக்களை எல்லாம் பழமொழிகளாகக் கூறினர். அத்தகைய அனுபவ மொழிகளாகிய பழமொழிகள் நமக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டும் நெறிகளாக விளங்குகின்றன எனலாம்.
ஒருவன் வாழ்வாங்கு வாழ வேண்டும் எனில் பெரியோர் சொல்வதைக் கேட்டு நடத்தல் வேண்டும். அவ்வாறு நடந்தால் அவனது வாழ்வு சிறக்கும். இளம் வயதில் ஒருவன் இருப்பதைப் பார்த்து அவன் வாழ்வில் எவ்வாறு வருவான் என்பதைக் கூறிவிடலாம். இளமையில் ஒருவன் செய்யும் செயல்பாடுகள் அவன் எதிர்காலத்தில் எப்படி உருவாவான் என்பதைக் காட்டிவிடும். இதனையே,
‘‘துளசிக்கு வாசம் முளைக்கும்போதே தெரியும்’’
எனற பழமொழி எடுத்துரைக்கின்றது.
துளசி வாசமும் - இளமையும்
துளசி மருத்துவ குணம் நிறைந்த செடியாகும். அது இருக்கும் இடத்தில் பூச்சிகளோ பிற கொடிய விஷமுள்ள உயிரினங்களோ வராது என்பர். அத்துளசியானது வாசம் நிறைந்தது. அது முளைக்கின்றபோதே அதன் வாசம் எங்கும் பரவும். துளசி முளைத்து வரும்போது அதனைக் கிள்ளி முகர்ந்து பார்த்தால் அதன் வாசம் மூக்கைத் துளைக்கும் தன்மை கொண்டது. அதுபோன்று ஒருவன் இளமையில் ஈடுபடுகின்ற செயல்கள், அவனது திறன் ஆகியவற்றைக் கொண்டே அவன் பிற்காலத்தில் உயர்ந்த நிலையை அடைவான் என்று அறிஞர் தெரிந்து கொள்வர். இதே கருத்தை வலியுறுத்துவதாக,
‘‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’’
என்ற பழமொழி அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
துளசி வாசம் - ஆன்றோர்
காந்தியடிகள் இளம் வயதில் அரிச்சந்திரன் நாடகத்தைக் கண்டு தானும் அரிச்சந்திரனைப் போன்று உண்மையே பேசுவேன், எந்த நிலையிலும் பொய்மையைப் பேசமாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்டார். அதன்படியே வாழ்ந்தார். அது அவர் பின்னாளில் மகாத்மாவாக உருவெடுப்பதற்கு முன்னோட்டமாக அமைந்த நிகழ்ச்சியாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதில் அவ்வாறு உறுதியுடன் வாழ்ந்ததால் தான் பின்னாளில் உலகம் போற்றும் உத்தமராக அனைவராலும் அவர் போற்றப்பட்டார்.
பள்ளியில் சரஸ்வதி பூசை கொண்டாடுவதற்காக மாணவர்கள் ஆசிரியரிடம் பத்துப் பைசா கொண்டு வந்து கொடுத்தனர். அதில் காமாட்சி என்ற மாணவனும் ஆசிரியரிடம் தனது அம்மாவிடம் இருந்து காசினை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். சரஸ்வதி வணக்கம் முடிந்த பின்னர் அனைவருக்கும் ஆசிரியர் சுண்டல் வழங்கினார்.
மாணவர்கள் அனைவரும் தங்களுக்குள் போட்டிபோட்டக் கொண்டு சுண்டலை வாங்கினர். ஆனால் காமாட்சி என்ற சிறுவன் மட்டும் எதுவும் செய்யாது அமைதியாக அமர்ந்திருந்தான். மாணவர்கள் அனைவரும் சுண்டல் வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றனர். காட்சிக்கு சுண்டல் கிடைக்காததால் வெறும் கையுடன் வீட்டிற்குச் சென்றான்.
அவனிடம் அவனது அன்னையார் ஏப்பா நீ மட்டும் ஏன் சுண்டல் வாங்கி வரவில்லை? என்று கேட்டார்.
அதற்குச் அச்சிறுவனோ அம்மா எனக்குச் சுண்டல் கிடைக்கவில்லை. எல்லோரும் முட்டிமோதிக் கொண்டு வாங்கினார்கள் நான் அவ்வாறு செய்யவில்லை. அதனால் எனக்குக் கிடைக்கவில்லை என்றான். அதற்கு அவனது அன்னையார் ஏன் நீ மற்றவர்களைப் போன்று சென்று கேட்டால் என்ன குறைந்தா போய்விடுவாய்? என்று கேட்டதற்கு,
அச்சிறுவன், ‘‘ஆம் குறைந்துதான் போவேன். நான் கேட்காதது எனது தவறல்லவே. ஆசிரியரின் தவறல்லவா? அனைவரையும் அமர வைத்து ஆசிரியர் சுண்டலைக் கொடுத்திருந்தால் சுண்டல் அனைவருக்கும் கிடைத்திருக்கும் அல்லவா? மாணவர்கள் முட்டிமோதிக் கொண்டு வாங்கியதால் யாருக்கும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆசிரியர் தனது கடமையைச் சரியாகச் செய்யாததால்தான் எனக்குச் சுண்டல் கிடைக்கவில்லை. நான் வெறுங்கையுடன் வர நேர்ந்தது என்று கூறினான்.
அச்சிறுவனது பதிலைக் கேட்ட அவனது அன்னையார் அவனைப் பெருமிதத்துடன் பார்த்தார். அவர்தான் நாடு போற்றிய நல்லவராகிய கர்மவீரர் காமராஜர் ஆவார். துளசிக்கு வாசம் முளைக்கும்போதே தெரியும் என்பதற்கேற்ப இளமையில் கடமை தவறாதவராக விளங்கியதால் காமராஜரை கருப்புக்காந்தி என்று இந்திய மக்கள் அனைவரும் அழைத்துப் போற்றினர்.
விளையும் பயிர்
பயிர் நன்கு விளைச்சலைத் தரும் என்பது அது முளைத்து வருவதை வைத்துக் கணித்துவிடலாம். அதுபோன்றே மனிதன் வளரும்போதே அவன் பிற்காலத்தில் எந்நிலையை அடைவான் என்பதை அவனது செயல்பாடுகள் உணர்த்திவிடும். ஒரு நல்ல விவசாயி வயலில் விதைத்த விதைகள் முளைத்து வளர்வதைப் பார்த்து அது நல்ல விளைவைத் தரும் என்று முடிவு செய்து விடுவார். அதுபோன்றே அறிவுசான்றோர் இளம் வயதில் குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டு அவர்கள் எப்படி எதிர்காலத்தில் வருவர் என்று கூறிவிடுவர்.
பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை பொருளாதாரம் பயின்ற மாணவர் ஒருவரின் பிடைத்தாளைத் திருத்திக் கொண்டிருந்த பேராசிரியர் ஒருவர் அம்மாணவன் எழுதியிருந்த விடைகளைக் கண்டு வியப்புற்று, நமக்கே புரிந்து கொள்ள இயலாத செய்திகளைக் கூடத் தெளிவாக விளக்கமாக எழுதியிருக்கிறானே என்று மகிழ்ச்சியடைந்து அம்மாணவனை அழைத்து நீ எதிர்காலத்தில் பெரிய அறிஞனாக வருவாய் என்று பாராட்டினார். அவர் தான் பேரறிஞர் அண்ணா ஆவார். அவர் பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோதுதான் இந்நிகழ்ச்சி நடந்தது. இளம் வயதிலேயே அவரது ஆற்றலைக் கண்ட அவரது ஆசிரியர்கள் அவரை வியந்து பாராட்டினர்.
குழந்தைகள் நல்லவர்களாக வல்லவர்களாக வளர்வதைக் கண்டு அவர்களின் திறன்களைப் பாராட்டி அவர்களை ஊக்குவித்தால் எதிர்காலத்தில் அவர்கள் நாடு போற்றும் நல்லவர்களாக வருவர் என்ற உயரிய சிந்தனையை இப்பழமொழி நமக்கு வழங்குகின்றது. துளசி யின் அனைத்து பாகமும் பயன்மிக்க மருந்தாகும். அது முளைக்கின்றபோது அதன் வாசனையை வைத்து அது துளசிச் செடி என்று அனைவரும் அறிந்து கொள்ளலாம். அதுபோன்றே இளம் வயதினரும் ஆவர். அவர்களால்தான் வலிமையான நாடாக நமது நாடு மாறும். இதனை அறிந்து குழந்தைகளிடம் உள்ள ஆற்றலைக் கண்டுணர்ந்து அதனைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தி மிகச் சிறந்தவர்களாக அவர்களை உருவாக்குவோம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.