வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும்
முனைவர் சி. சேதுராமன்
5. துரோகத்தில் வீழ்ந்த துரோகம்
“வளர்த்த கடா முட்ட வந்தா….
வச்ச செடி முள்ளானா…
யாரு செஞ்ச பாவமடி அம்மாளு…
அது போன ஜென்ம பாவமடி அம்மாளு…”
இப்படி திரைப்படப் பாடல் ஒன்றைக் கேட்டுருப்பீர்கள். அந்தப் பாடல் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிச்ச கல்தூண் என்ற படத்தில் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடலைப் போன்றே வரலாற்றில் நிறைய நிகழ்வுகள் நடந்திருக்கிறது. இன்று... இப்பொழுது நண்பன்; அடுத்த சில நொடிகளில் துரோகியாக மாறிவிடுபவர்கள் கூட உண்டு. இது வரலாறு கண்ட உண்மை.
அராபியக் கதை ஒன்று இது.
ஒரு பெரிய பாலைவனம். எங்கு பாத்தாலும் மணல்... கடுமையான வெப்பம். அப்படிப்பட்ட பாலைவனத்தில் சிறியதாக ஒரு சோலை இருந்தது. அந்தச் சோலைக்கு அருகில் ஒரு அராபியன் சின்னக் குடிசையைப் போட்டு வாழ்ந்து கொண்டு இருந்தான்.
அவன் மிகவும் இரக்கக் குணம் கொண்டவன். அனைத்து உயிர்கள் மீதும் கருணையோடு நடந்து கொள்வான். அவனோட வாழ்க்கை அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது.
ஒரு நாள் கடுமையான காற்று... மழை… புழுதிப் புயல் வேறு… மழை... பெய்யத் தொடங்கியது. அது நிற்கவே இல்லை… இரவு நேரமாகியது… அந்த அராபியன் தன்னோட குடிசை வீட்டைச் சாத்திக்கிட்டு உள்ளே போய் படுத்து விட்டான்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் யாரோ கதவைத் தட்டுகிற மாதிரி அவனுக்குச் சத்தம் கேட்டது. அவன் எழுந்திருந்து யாரென்று பார்க்கப் போனான்…அவன் கண்டது ஒரு ஒட்டகத்தை… அந்த ஒட்டகம் தொப்பலாக நனைந்து போயிருந்தது…
ஒட்டகத்தைப் பார்த்த அராபியன்… “ஒனக்கு என்ன வேணும்” என்று கேட்டான்.
அதுக்கு ஒட்டகம், “நான் நல்லா நனைஞ்சு போயிட்டேன்... எனக்குக் குளிராக இருக்கிறது. என்னால குளிரைத் தாங்க முடியவில்லை. அதனால தங்களோட குடிசையில எனக்கும் ஒதுங்கறதுக்கு கொஞ்சம் இடமளிக்க வேண்டும்” என்று கேட்டது.
அதுக்கு அராபியன், “இங்கே ஒருத்தர் மட்டும்தான் தங்கிக்கலாம். இன்னொருவருக்கு இடம் போதாது… நான் என்ன செய்வது…” என்று சொன்னான்.
அந்த ஒட்டகம், “நான் உள்ளே எல்லாம் வரவில்லை. என்னோட கண்களெல்லாம் எரியுது. அதனால என் தலையை மட்டும் உன்னோட குடிசைக்குள் வைத்துக் கொள்கிறேன்… தலை மட்டும் நனையாமல் இருந்தால் போதும்… அதுக்கு மட்டும் அனுமதி தாருங்கள்” என்று உருக்கமாக் கேட்டது.
அதைக் கேட்டு மனமிரங்கிய அந்த அராபியன், “சரி. உன்னோட தலையை மட்டும் நனையாமல் என்னோட குடிசைக்குள் வைத்துக் கொள்” என்று சொன்னான்.
ஒட்டகம் தலையைக் குடிசைக்குள் வைத்துக் கொண்டது… சிறிது நேரம் போனது… அராபியன் அசந்து தூங்கிக்கிட்டு இருந்தான். அந்த ஒட்டகம்… அவனை எழுப்பியது. தூக்கம் கலைந்து எழுந்த அந்த அராபியனைப் பார்த்த ஒட்டகம், “நீ நல்ல குணவான். உன்னோட கருணையே கருணை. எனக்குக் கழுத்தெல்லாம் வலி எடுத்துப் போச்சு. என்னோட முன்னங்கால் ரெண்டும் நடுங்குது... கோபம் கொள்ளாமல் என்னோட முன்னங்கால்களைக் குடிசைக்குள் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்…” என்று கேட்டது.
அந்த அராபியன் மேலும் இரக்கப்பட்டு, சரி என்றான்.
ஒட்டகம் தன்னோட முன்னங் கால்களைக் குடிசைக்குள் வைத்துக் கொண்டது. சிறிது நேரம் போனது. மீண்டும் அந்த ஒட்டகம் அந்த அராபியனிடம் கெஞ்சிக் கெஞ்சி ஒடம்பு பின்னங்கால், வால் என்று குடிசைக்குள் நுழைந்து விட்டது.
இப்பொழுது அடைக்கலம் கொடுத்த அந்த அராபியனுக்குக் குடிசைக்குள் இடமில்லை. அவன் அந்த ஒட்டகத்தைப் பார்த்தான். ஒட்டகம் அவனை ஒரே உதையில் வெளியில தள்ளி விட்டது. அடைக்கலம் கொடுத்த அராபியன் தான் துரோகத்தால வஞ்சிக்கப்பட்டோம் என்று உணர்ந்தான். அவனால ஒன்றும் செய்ய முடியவில்லை.
குடிசைக்கு வெளியிலிருந்த ஒரு மரத்தடியில வந்து நின்று கொண்டு, இந்த ஒட்டகம் இப்படிப் பண்ணி விட்டதே... இறைவனே நான் இரக்கப்பட்டது தவறா…? என்று மனதுக்குள் இறைவனை நினைத்தபடி வருந்தினான். அப்பொழுது வானத்தில் திடீரென்று ஒரு மின்னல் மின்னியது. பெரிதாக இடி இடித்துச் சத்தம் கேட்டது. அந்த மின்னலில் ஏற்பட்ட இடி அவன் குடிசையில் விழுந்து அந்த ஒட்டகம் அராபியன் கண் முன்னாலேயே கருகி இறந்து போனது.
தனக்கு அடைக்கலம் கொடுத்தவனுக்கேத் துரோகம் செய்த ஒட்டகம் பேரழிவிலிருந்து மீள முடியாமல் இறந்து போனது.
இதே மாதிரிதான் அலாவூதீன் கில்ஜி அப்படிங்கற மாபாதகனுக்கும் நடந்தது.
கிராமப்புறங்களில் “குடிச்ச பாலு குமட்டுல இருக்க மார்பகத்தையே அறுத்து விடுவான்” என்று சொல்வார்கள்… அது மாதிரிதான் இந்த அலாவூதீன் கில்ஜியும்… அவரோட இயற்பெயர் சுனா கான் கில்சி (Juna Khan Khilji).
அலாவூதீன் கில்ஜி மிகச்சிறிய வயதிலேயே தனது தந்தையை இழந்து அனாதையாக ஆகி விட்டார். தந்தையில்லாத அவரைக் கில்ஜி சாம்ராஜ்யத்தின் இரக்க குணமுள்ள மன்னர் ஜலாலுதீன் அன்போடு வளர்த்தார். அலாவூதீன் ஜலாலுதீன் கில்ஜியோட தம்பி மகன். அதனால அலாவூதீனை தந்தை இல்லாத குறை தெரியாதபடி மிகுந்த அக்கறையோடு வளர்த்து உருவாக்கினார். அதோடு மட்டுமின்றி அலாவூதீனுக்குத் தன்னோட மகளைத் திருமணமும் செஞ்சு கொடுத்து அவரை வைஸ்ராயாகவும் ஆக்கினார்.
ஆனால் அலாவூதீனுக்கோ ஆசை. தான் டில்லி சுல்த்தானாக ஆகி விடவேண்டும் என்ற பேராசை உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. அலாவூதீன் தனது கண்களை அவ்வப்போது மூடி சுல்த்தானின் ஆசனத்தில் தான் அமர்ந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் மிதந்தான். அப்போது மனதில் தோன்றும் அக்காட்சியைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தான்.
ஆனால் அவன் தன்னை வளர்த்தெடுத்த தன் மாமனாரிடம் இதனை வெளிக்காட்டாது மறைத்து, செய்நன்றியின் மொத்த உருவமாகத் தன்னைக் காட்டிக் கொண்டு கபட நாடகம் ஆடினான். இதனை அறியாத ஜலாலுதீன் அவனது வீரத்தைப் பாராட்டி அதிகமான அதிகாரத்தை அவனுக்கு வழங்கினார். அவனும் தீரத்துடன் போராடிப் பல இடங்களைச் சூறையாடி செல்வத்தை மலைபோல மாமனாரின் காலடியில் கொண்டு வந்து குவித்தான். சிறிது சிறிதாகத் தன்னுடைய செல்வாக்கை நாடு முழுவதும் அலாவூதீன் வளர்த்துக் கொண்டான்.
இந்நிலையில் எட்டாயிரம் குதிரைகளோடு திடீரென தேவகிரியின் மீது அலாவூதின் கில்ஜி படையெடுத்துச் சென்றான். பகைவர்கள் என்ன நடக்கிறது என்று சுதாரித்துக் கொள்வதற்குள் அவர்களை அலாவூதீனின் படைகள் நிர்மூலமாக்கிவிட்டன. அந்த நாட்டின் பொக்கிஷங்களைக் கைப்பற்றி அதனை தனது யானைகள் மீது ஏற்றிக் கொண்டு டில்லியை நோக்கிப் புறப்பட்டான்.
வஞ்சகன்
அலாவூதீனின் வெற்றிச் செய்தியைக் கேட்டதும் சுல்த்தான் ஜலாலுதீனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. தனது மருமகனை அதிவிமரிசையாக வரவேற்க வேண்டுமென்று முடிவு செய்து மிகப்பெரிய வரவேற்புக்கு ஏற்பாடு செய்தான்.
இதனைக் கண்ட ஜலாலுதீனின் மனைவி முல்லிக் ஜஹானுக்கு அவரின் செயல் மகிழ்ச்சி தரவில்லை. மாறாக அவளுக்கு அலாவூதீன் ஆபத்தானவன் என்று உள்ளுணர்வு கூறியது. என்னமோ நடக்கப் போகிறது என்பதை ஊகித்துணர்ந்து கொண்ட முல்லிக் தன் கணவனிடம், “மன்னா உங்கள் மருமகன் மிகவும் ஆபத்தானவன். அவனை வரவேற்க நீங்கள் செல்ல வேண்டாம்” என்று கூறித்தடுத்துப் பார்த்தாள்.
ஆனால் அதனை ஜலாலுதீன் கேட்கவில்லை.
ஜலாலுதீனின் அமைச்சர்கள் சிலரும் மன்னருக்கு அலாவூதீனைப் பற்றி எச்சரித்தனர். அதனையும் மன்னர் ஏற்கவில்லை. மேலும் அமைச்சர்கள் மன்னரிடம் “அலாவூதீன் தங்களிடம் அனுமதி பெறாமல் தெற்கு நோக்கிப் படையெடுத்துச் சென்றுவிட்டார். இது முறையான செயல் அல்ல. இதில் ஏதோ சூது இருக்கிறது. அதனால் அவரை வரவேற்கச் செல்ல வேண்டாம்” என்று எடுத்துக் கூறினர்.
ஆனால் ஜலாலுதீனின் கண்ணை வளர்த்த பாசம் மறைத்தது. அலாவூதீனின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றவர்களின் கூற்றிற்குத் திரையிட்டது. அவர்களைப் பார்த்து, “அலாவூதீனை என் மார்மேலும் தோள் மேலும் போட்டு வளர்த்தேன். அவன் ஒரு போதும் எனக்குத் துரோகம் செய்ய மாட்டான். நீங்கள் எல்லோரும் அவனைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. வெற்றியுடன் வரும் படையை வரவேற்க நானே நேரில் செல்வேன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
யானை மீது அமர்ந்து வந்த அலாவூதீன் தன்னை வரவேற்க மன்னர் வந்ததை அறிந்து, யானையிலிருந்து குதித்து அவரை வணங்கச் சென்றான். அலாவூதீனைத் தழுவிக் கொள்ள அகன்ற கைகளோடு ஜலாலுதீன் அவனை நெருங்கினார். அலாவூதீன் அவரது பாதங்களைத் தொடுவதைப் போன்று பாவனை செய்து தனது தளபதிகளுக்குக் கண்ணால் ஜாடை காட்டி மன்னனைக் கொல்லுமாறு கட்டளையிட்டான்.
அலாவூதீனின் வஞ்சகமான கட்டளைக்கு ஏற்ப சலீம் என்பவன் சுல்த்தானின் முதுகில் வாளைச் சொருகினான். அத்தனை தளபதிகளும் வாள்களை வீசி வரிசையாகச் சுல்தானின் நெஞ்சில் சொருகினர். சுல்த்தானின் தலை அவரது உடலிலிருந்து தலையை வெட்டித் துண்டித்தனர். வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது. தந்தையை இழந்த தனக்கு ஆதரவு நல்கி தன்னை நம்பி வந்த தன் மாமனாரையே கொலை செய்துவிட்டு கி.பி.1296-ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தான் துரோகி அலாவூதீன்.
மாலிக் கபூர்
விதி யாரையும் விடாது என்பர். துரோகிகளையும் விடவில்லை. அந்த இயற்கை என்ற விதி துரோகத்திற்குத் துணைபோன சலீமையும் விட்டு வைக்கவில்லை. ஜலாலுதீன் முதுகில் வாளைச் சொருகிய தளபதி சலீம் அடுத்த ஆண்டே உயிரிழந்தான். தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டு உடலெல்லாம் அழுகித் துடிதுடித்துச் செத்தான். தலையைத் துண்டித்த மற்றொரு தளபதியோ சித்த பிரமை ஏற்பட்டுப் புத்தி பேதலித்து மடிந்தான்.
அலாவூதின் சுல்தானானாலும் அவனது வாழ்க்கை முழுதும் போர்களிலேயே பெரும்பாலும் கழிந்தது. குஜராத்தில் உள்ள காம்பத் நகரை அலாவுதீன் கில்ஜியின் படை வெற்றி கொண்டபோது, மன்னருக்குப் பரிசளிக்க ராணி கமலாதேவியைத் தூக்கிச் சென்றனர். அப்படி ராணியோடு அனுப்பப்பட்ட அடிமைகளில் ஒருவன்தான் மாலிக் கபூர். காம்பத் நகரில் உள்ள ஒரு வணிகரின் வீட்டில் அவன் அடிமையாக இருந்தான். ஆயிரம் நாணயம் தந்து அவன் வாங்கப்பட்டதால் அவனை ஹசார் தினார் என்று அனைவரும் அழைத்தனர் எனவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
பெண்கள் மீது கில்ஜி அதீத மோகம் கொண்டவன். அதனால், கமலா தேவியை மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டதோடு அவளோடு கொண்டு வரப்பட்ட அடிமை மாலிக் கபூரை தனது படுக்கையறைத் தோழனாக வைத்துக் கொண்டான். கில்ஜியின் ஆட்சி காலம் முழுவதும் படையெடுப்புகளால் நிரம்பின.
அடிமையாக வந்து சேர்ந்த மாலிக் கபூர், கில்ஜியின் காதலியைப் போல நெருக்கமாக இருந்தான். அதை, வெளிப்படையாகவே கில்ஜியின் மனைவி கண்டித்தாள். ஆனால், கில்ஜி அதனைக் கண்டுகொள்ளவில்லை. தனக்கு விருப்பமான மாலிக்கபூரைப் படைப் பிரிவின் உதவி அதிகாரியாக நியமித்தார். சில ஆண்டுகளுக்குள் மாலிக் கபூர், கில்ஜியின் தளபதிகளில் ஒருவரானான்.
மாலிக் கபூர் தனது படையுடன் வந்து மதுரையில் வீரபாண்டியனை வெற்றி கொண்டதோடு, சுந்தரபாண்டியனையும் அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாலிக் கபூர், மதுரையைத் தாக்கியபோது மதுரை கோயிலில் யானை மட்டுமே மிஞ்சி இருந்தது. அதைக் கைப்பற்றியதோடு, கோயிலுக்குத் தீ வைத்துவிட்டு அதுவரை கைப்பற்றிய பெரும் செல்வத்துடன் டெல்லி புறப்பட்டான். 312 யானைகள், 20 ஆயிரம் குதிரைகள், கோகினூர் வைரம், தங்க நாணயங்கள், முத்து, மரகதம், மாணிக்கம் என்று கொள்ளையடித்த பொருட்களுடன் டெல்லி வந்த மாலிக் கபூருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பரிசாகக் கொண்டு வந்த பொருட்களை அனைவரும் காணும்படியாக பொது தர்பார் நடத்தினான் சுல்தான் அலாவுதீன். இதற்குப் பிறகு, அலாவூதீன் கில்ஜி அவனுக்கு 'மாலிக் நைப்’ என்ற புதிய பட்டத்தை வழங்கிக் கௌரவித்தான். மேலும் கில்ஜியின் பிரிக்க முடியாத துணையாகவும் மாலிக்கபூர் மாறினான்.
துரோகியின் முடிவு
1316-ஆம் ஆண்டில் அலாவுதீன் கில்ஜியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. அதனால் கில்ஜி படுக்கையில் வீழ்ந்தான். அதன் தொடர்ச்சியாக, அவனது நினைவாற்றல் குறையத் தொடங்கியது. அவன், அரசாட்சியில் இருந்து ஒதுங்கத் தொடங்கவே, நாட்டில் நிர்வாகக் குழப்பங்கள் ஏற்பட்டன. மாலிக்கபூர் வஞ்சகமாக அலாவூதீனின் குடும்பமே சுல்த்தானைக் கொல்வதற்குச் சூழ்ச்சி செய்வதாகக் கதையைக் கட்டிவிட்டு ஒட்டுமொத்தமாக கில்ஜியின் குடும்பத்தையே சிறையில் தள்ளும் ஆணையில் கில்ஜியிடம் கையொப்பம் வாங்கினான்.
இந்த நிலையில், கில்ஜி படுக்கையில் ஒரு நாளிரவு புலம்பினான். அப்போது மாலிக்கபூர் விஷம் நிறைந்த குப்பியுடன் சென்று அதைக் குடிக்குமாறு கில்ஜியை வற்புறுத்தினான். மருந்து வேண்டாம் என்று முரண்டு பிடித்துப் புரண்ட கில்ஜியை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டு அவனது வாயில் விஷத்தை ஊற்றிக் குடிக்க வைத்துக் கொன்றான். துரோகத்தால் ஆட்சியைப் பிடித்த துரோகியும் துரோகத்தால் வீழ்ந்தான்.
கில்ஜியைக் கொன்ற மாலிக் கபூர், ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டான். கில்ஜி வாரிசுகளின் கண்களைக் குருடாக்கிவிட்டு மீதம் இருந்த முபாரக் என்ற கில்ஜியின் கடைசி மகனைக் கைப்பொம்மை போல அரியணையில் அமர்த்திவிட்டுத் தானே டெல்லியை ஆளத் தொடங்கினான் மாலிக்கபூர்.
அடிமையாக, ஒரு வேளை உணவுக்குக் கூட அடுத்தவரை நம்பி இருந்த மாலிக் கபூருக்கு, அதிகார போதை மட்டுமே ஆறுதல் தருவதாக இருந்தது. எதிர்ப்பவர்களை எல்லாம் கொடூரமாகக் கொன்று குவித்த மாலிக் கபூர், டெல்லியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டான். ஆனால், கில்ஜியின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து, மாலிக் கபூர் உயிரோடு இருக்கும் வரை தங்களால் நிம்மதியாக வாழ முடியாது என்று, அவனது பாதுகாவலர்களைக் கொண்டே அவனை மடக்கினர்.
டெல்லியில் தனி அரண்மனையில் படுக்கையில் இருந்த மாலிக் கபூரை, நள்ளிரவில் சுற்றி வளைத்த கில்ஜியின் விசுவாசிகள், அவனைக் கை வேறு கால் வேறாக வெட்டித் தலையைத் தனியே எடுத்தனர். டெல்லியில் உள்ள கோட்டையின் ஒவ்வொரு வாசலிலும் ஒவ்வொரு உடல் உறுப்புகளையும் தனித்தனியே தொங்கவிட்டுப் பழி தீர்த்துக் கொண்டனர்.
எதிர்ப்பே இல்லாமல் பெரும் படை நடத்திச் சென்று, இந்தியாவை நடுங்கச் செய்த மாலிக் கபூர், அடையாளமே இல்லாமல் அழித்து ஒழிக்கப்பட்டான். அலாவூதீன் இறந்த முப்பத்தைந்தாவது நாளில் மாலிக்கபூரும் கொல்லப்பட்டான். ஓர் அடிமையாகத் தொடங்கி ஆட்சி அதிகாரம் வரை உயர்ந்த இரண்டு பேரின் பெரும் எழுச்சியும் வீழ்ச்சியும் சரித்திரம் எனும் பேராறு கண்டது. இவை, காலத்தின் வெறும் சுழிப்புகள்தான் என்பதுபோல அந்த ஆறு நிசப்தமாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அதிகாரத்துக்கான பேராசை தற்காலிகமாக ஒருவனை உயர்த்தி விடக்கூடும். ஆனால், அவனது வீழ்ச்சி எப்போதுமே படுமோசமானதாக இருக்கும் என்பதுதான் வரலாறு கற்றுத்தரும் பாடம்.
துரோகத்தால் வெற்றி பெற்றவர்கள் துரோகத்தாலேயே வீழ்வார்கள். துரோகங்கள் செய்து ஆட்சிக்கு வந்தவர்கள் ஆட்சியில் நேர்மையாளர்கள் அவலத்தையே சந்தித்துள்ளனர். அவர்களின் துயரங்களுக்கு தீர்வு உடனடியாகக் கிடைப்பதில்லை. நல்லவர்களாக மட்டுமல்லாது வல்லவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் இந்த போராட்ட உலகில் தாக்குப் பிடிக்க முடியும்.
நல்லவர்களாகத் தோற்றமளிப்பவர்கள், உண்மையில் நல்லவர்களாக ஒருபோதும் இருப்பதில்லை. அவர்கள் நயவஞ்சம் நிறைந்த குள்ளநரிகள். இதை நாம் கில்ஜியின் வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
மணம் கமகம வென்று ஆற்றங்கரையின் பகுதியே கமழ்கிறது. அதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால் அங்கு ஒரு தாழம்பூ மரத்தில் பூத்திருக்கிறது. அந்தப் பூவின் மடல் அவிழ்ந்ததால் எங்கும் நறுமணம். ஆனால், அதனை யாருமே வந்து பறித்துத் தலையிலோ அல்லது இறைவனுக்கோ வைப்பதில்லை. அந்தத் தாழம்பூ மரத்திற்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. நாம் மணமிக்க மலரைத் தந்தாலும் யாரும் விரும்பி வந்து அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களே... என்று வருந்தியது.
அப்போது அந்தப் பக்கம் ஒரு துறவி வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து தாழம்பூ மரம் தனது வருத்தத்தைக் கூறியது.
அதனைக் கேட்ட துறவி தாழம்பூவினைப் பார்த்து, ”உன்மீது எந்தத் தவறும் இல்லை… ஆனால் உன்னுள் பூநாகம் என்ற கொடிய நஞ்சுள்ள சிறுபூச்சி ஒன்று உள்ளது. அதனை நுகர்ந்தாலே காற்றின் வழியாக மூக்கினுள் சென்று நுகர்பவரைக் கொன்றுவிடும். அதனால்தான் உனது பூவைத் தேடி வந்து யாரும் பறிப்பதில்லை இறைவனுக்கும் பயன்படுத்துவதில்லை…” என்று விளக்கம் கூறிவிட்டுச் சென்றார்.
ஆமாம், பார்ப்பதற்குப் பசு மாதிரி இருந்தாலும் சிலர் மிகவும் கொடூர நெஞ்சு படைத்தவர்களாக இருப்பர். பகட்டும் ஆடம்பரமும் நிறைந்திருக்கும் இடங்களில் கண்ணுக்குத் தெரியாத பல கொடுமைகளும் மறைந்திருக்கும். இதனை உணர்ந்து கொண்டு நடந்தால் துரோகிகளிடமிருந்தும் துரோகங்களிடமிருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம்.
இதே போன்று நம் தமிழக வரலாற்றிலும் ஒரு கொடுமை நடந்தது… தாயில்லை… தந்தையில்லை… அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தார்கள். அந்தக் குழந்தையோட பாட்டி… அரசியாகத் திகழ்ந்த அந்தப் பாட்டியை வளர்ந்த பிறகு மிகக் கொடூரமாக வஞ்சித்துத் துரோகமிழைத்தான் ஒருவன். ஒளரங்கசீப்பை விடக் கொடியவனாக நடந்து கொண்டான். குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்புன்னு சொல்வார்கள். அதுமாதிரி அவன்… அவன் யாரென்று தெரிந்து கொள்ள அடுத்த பகுதி வரை காத்திருங்கள்..

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.