வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும்
முனைவர் சி. சேதுராமன்
7. நம்பிக்கைக்குச் செய்த துரோகம்
யாரையும் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இருப்பினும், எல்லாவற்றையும் முழுமையாக நம்பி விடக்கூடாது. எல்லாவற்றையும் முழுமையா நம்பி ஒருவரிடம் ஒப்படைத்த பின்பு, அவர் நமக்குத் துரோகம் செய்தால் என்ன செய்வது...? ஒன்றும் புரியவில்லையா...? ஒரு கதை சொல்கிறேன் அதைக் கேளுங்கள்...
ஒரு காட்டின் வழியாக ஒரு சின்னப் பையன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்போது, “என்னைக் காப்பாற்றுங்கள்... என்னைக் காப்பாற்றுங்கள்...” என்று அபயக் குரல் ஒன்று அவன் காதுக்குக் கேட்டது. அந்தக் குரலைக் கேட்ட அந்த சிறுவனின் மனதில் இரக்கம் ஏற்பட்டது... அவன் சரி போய்ப் பார்ப்போம், நம்மால் முடிந்தால் உதவி செய்வோம், இல்லையெனில் திரும்பி விடுவோம் என்று முடிவு செய்து அந்தக் குரல் வந்த திசையை நோக்கி நடந்தான்.
அங்கு வலையில் ஒரு முதலை அகப்பட்டு கொண்டிருந்தது. அந்த முதலைதான் தன்னைக் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டிருக்கிறது என்று அறிந்து கொண்டான். அந்த முதலையைப் பார்த்த சிறுவனுக்குப் பயம் வந்தது. அதனால அவன் வந்த வழியிலேயே திரும்பத் தொடங்கினான்.
இதைக் கண்ட முதலை அவனைப் பார்த்து, “தம்பி ஆபத்தில் சிக்கியிருக்கும் எனக்கு உன்னோட உதவி தேவை. என்னுடைய ஆபத்தான் சூழ்நிலை தெரிந்தும் நீ திரும்பிச் செல்வது நியாயமா? ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றுவதுதானே உண்மையான அறம். இது உனக்குத் தெரியாதா? என்னை இந்த வலையிலிருந்து காப்பாற்றி விட்டுவிட்டுப் போ. உனக்கு என்னைக் காப்பாற்றிய புண்ணியம் கிடைக்கட்டும்” என்றது.
அந்தச் சிறுவன் அந்த முதலையைப் பாத்து, “உன்னோட பேச்சை நான் நம்ப முடியாது... உன்னை வலையிலிருந்து காப்பாற்றியவுடன் நீ என் மீது பாய்ந்து என்னைக் கொன்று தின்று விடுவாய்... அதனால் உன்னைக் காப்பாற்ற இயலாது” என்று சொல்லித் திரும்பி நடக்க முற்பட்டான்.
உடனே அந்த முதலை அவனைப் பார்த்து, “சிறுவனே நான் சொல்வதை நம்பு... என் உயிரைக் காப்பாற்றிய உன்னை நான் கொல்வேனா...? அது மிகப் பெரும் பாவம்... என்று எனக்குத் தெரியாதா...? அந்தப் பாவத்தை நான் ஒரு நாளும் செய்ய மாட்டேன். நான் சொல்வதை முழுமையாக நம்பு, ஆபத்திலே இருக்கும் ஒருவரைக் காப்பாற்றாமல் போனால் அவர்களுக்கு நரகம் தான் கிடைக்கும் என்பதை நீ அறியவில்லையா...? அதனால் என்னைக் காப்பாற்றிப் புண்ணியத்தைத் தேடிக் கொள்” என்று சொல்லி அழ ஆரம்பித்து விட்டது.
அந்த முதலைச் சொன்னதைக் கேட்ட சிறுவனுக்கு இலேசான இரக்கம் ஏற்பட்டது. முதலையைக் காப்பாற்றும் எண்ணத்துடன் அதனருகில் சென்றான். இருப்பினும், அவனால் அந்த முதலையின் பேச்சை முழுமையாக நம்ப முடியவில்லை. அந்த முதலை நம்ப வைத்து நம் கழுத்தை அறுத்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்தான். அதனால் அப்படியே நின்றான்.
அவனோட தயக்கத்தைத் தெரிந்து கொண்ட அந்த முதலை, “தம்பி, இங்கே பார், நான் உனக்கு ஆண்டவன் மேலே சத்தியம் செய்து தருகிறேன், நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன்...” என்று சொல்லிக் கெஞ்சியது.
அதனோட கெஞ்சல் அவனோட மனதில் இரக்கத்தை ஏற்படுத்தியது. அவன் முதலையிடம், சரி சத்தியம் பண்ணிக் கொடு என்று கேட்டு சத்தியம் வாங்கிக் கொண்டு அந்த முதலையை வலையிலிருந்து விடுவித்துக் காப்பாற்றி விட்டான்.
வலையிலிருந்து விடுபட்ட அந்த முதலை வெளியிலே வந்து, அந்த இடத்தை விட்டுப் போகப் பார்த்த அந்தச் சிறுவனை அப்படியே தன் வாயில் கவ்விக் கொண்டது. அந்தச் சிறுவன் கதறினான். அந்த முதலை அவனைப் பார்த்து, நான் முழு மனதுடனோ, உண்மையாகவோ உனக்குச் சத்தியம் செய்து கொடுக்கவில்லை... உன்னை ஏமாற்றிச் சாப்பிடுவதற்காகத்தான் பொய்ச் சத்தியம் பண்ணினேன்” என்றது.
அந்தச் சிறுவன் தன்னோட தலைவிதியை நினைத்து நொந்து போய் அழுதான். அவனோட மனதில் தீயவர்களை ஒரு போதும் நம்பக் கூடாது என்று நினைத்தான். நினைத்து என்ன செய்வது? அந்தச் சிறுவன், அந்தக் கொடிய முதலைக்கு இரையானான்.
அந்தச் சிறுவன் எப்படி முதலையை நம்பி ஏமாந்து, தன்னோட உயிரை இழந்தானோ அதே மாதிரிதான் ஒருவரை நம்பி தன்னோட அரசை ஒப்படைத்துக் கடைசியில் அவனாலேயே சிறைப்படுத்தப்பட்டு. அவமானப்படுத்தப்பட்ட வரலாறும் இருக்கிறது. ஆமாம், நாயக்க வம்சத்திலே வந்த இராணி மீனாட்சி தன்னோட உயிரை மாய்த்துக் கொண்டாள். அவளோட பரிதாபக் கதையைப் பார்ப்போம் வாங்க...!
மதிகெட்ட இராணி மீனாட்சி
மதுரை நாயக்க மன்னன் விசயரங்க சொக்கநாதன் 1732 ஆம் ஆண்டில் காலமானான். அவனுக்கு ஆண்மகவு பிறக்கவில்லை. நாட்டில் அரச பொறுப்பைக் கைப்பற்ற பல பேர் போட்டி போட்டாங்க. அவர்களில் பங்காரு திருமலை என்பவன் முக்கியமானவன். பெண் புத்தி பின்புத்தின்னு சொல்வாங்க, அது ராணி மீனாட்சிக்குச் சரியாகப் பொருந்தும். யார் அரசப் பொறுப்பைக் கைப்பற்ற நினைக்கிறானோ, அவனோட மகன் விசயகுமாரனைச் சுவீகாரம் எடுத்து அவனுக்கு 1732 ஆம் ஆண்டில் அரசுரிமைப் பட்டங்கட்டி அவனது சார்பில் தானே நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொண்டாள்.
ஆனால், தன் மகன் அரசுரிமை பெற்றுப் பட்டங் கட்டிக் கொள்ளுவது பங்காரு திருமலை நாயக்கனுக்கு விருப்பமில்லை. தானே அரசனாக வரவேண்டும் என்று நினைத்துச் சூழ்ச்சி செய்யத் தொடங்கினான் அவன். இதற்காகப் பங்காரு திருமலை நாயக்கனும் தளவாய் வேங்கடாசாரியனும் மீனாட்சியை அரியணையினின்றும் இறக்குவதற்குப் பல சூழ்ச்சிகள் மேற்கொண்டனர்.
மீனாட்சியைப் பதவி நீக்க விரும்பிய பங்காரு நாயக்கர் கி.பி. 1733 ஆம் ஆண்டில் திருச்சியைத் தாக்கினார். ஆனால், இராணி மீனாட்சியின் படைகள் திருச்சியைப் பகைவர் தாக்குதலிலிருந்து காத்தன. தோல்வியடைந்த பங்காரு நாயக்கன் சும்மா இருக்கவில்லை எப்படியாவது மீனாட்சியைப் பதவி நீக்கம் செய்து தான் அரசனாகிவிட வேண்டும் என்று எண்ணினான்.
அதே சமயம் ஆற்காட்டு நவாபானவன் மதுரையையும் தஞ்சாவூரையும் தாக்கி அழிக்குமாறும், அந்தச் சீமைகளிலிருந்து திறை கவர்ந்து வருமாறும் தன் மகன் சப்தர் அலியையும், மருமகன் சந்தா சாகிபுவையும் மிகப் பெரிய படைக்குத் தலைவர்களாக ஆக்கி ஏவினான்.
அவர்களும் திருச்சிராப்பள்ளிச் சீமையை நெருங்கி அதனைக் கடுமையாகத் தாக்கினர். இராணி மீனாட்சி கதிகலங்கிப் போனாள். ராணி மீனாட்சிக்குத் துரோகம் செய்த அவளுடைய உறவினர்களான துரோகிகள் இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்து வஞ்சக வலை பின்னினர். பங்காரு நாயக்கன் தனக்கு ஆட்சியை வாங்கித்தரும்படி தன் எதிரியான ஆற்காடு நவாபிடம் கோரினான். ஆற்காடு நவாபின் மருமகனும் திவானுமாகிய சந்தா சாகிப்புக்கு பெரும் தொகை லஞ்சமாகவும் கொடுத்தான். அதனைப் பெற்றுக் கொண்ட சந்தா சாகிபு திருச்சிக் கோட்டையைத் தாக்க ஏற்பாடுகள் செய்தான்.
நயவஞ்சகன் சந்தா சாகிபு
இவனது இயற் பெயர் உசெயின் தோசுத் கான். இவன் கர்நாடக நவாப்தோசுத் அலிகானின் மருமகன். தோசுத் அலிகானின் கீழ் அவ்வரசில் திவானாக இருந்தான் சந்தா சாகிப். முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் காலத்தில் கர்நாடகப் பகுதியை நவாப் சுல்பிகார் அலி கானின் கீழ் ஆண்ட முசுலிம் நாயிற் சமூகத்தைச் சேர்ந்தவன்தான் இந்த சந்தா சாகிபு. மிகுந்த கொடூர எண்ணமும் பதவி ஆசையும் பிடித்தவனாக சந்தாசாகிபு திகழ்ந்தான்.
இவன் பிரஞ்சு நாட்டாருடன் நட்புக் கொண்டிருந்தான். எதற்காகவும் எதையும் எப்பொழுதும் அடிக்கடி மாற்றிக் கொள்ளும் இயல்புள்ளவனாக சந்தாசாகிபு விளங்கினான். சந்தாசாகிபிடமிருந்து தப்ப முடியாது என்று உணர்ந்த இராணி மீனாட்சி அவனுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளத் துணிந்தாள். இந்த நேரத்தில் திருச்சியை முற்றுகையிட்டிருந்த சந்தா சாகிபு இராணி மீனாட்சிக்கு ஒரு தூது விடுத்தான். தான் இராணி மீனாட்சிக்கு இடையூறு செய்யும் உறவினர்களை அடித்துத் துரத்தி அவளது சகோதரனைப் போன்று அவளுக்கு உதவி செய்து நடந்து கொள்வதாகவும் தூதுச் செய்தி விடுத்தான்.
இந்நிலையில் ஆற்காட்டு நவாவின் மகன் சப்தர் அலிக்கு இலஞ்சத்தை பங்காரு நாயக்கன் வாரிக் கொடுத்து அவனைத் தன் கட்சியில் சேர்த்துக் கொண்டான். மீனாட்சியின் கடுங்காவலில் இருந்து வந்த திருச்சிராப்பள்ளிக் கோட்டையைத் தாக்கித் தகர்த்தல் எளிதன்று என்பதைச் சப்தர் அலி அறிவான். ஆகவே, பங்காரு நாயக்கனுக்கும் மீனாட்சிக்கும் இடையே நடந்து கொண்டிருந்த அரசுரிமைப் பூசல்களில் தான் தலையிட்டு விசாரித்துத் தீர்ப்புக் கூறுவதாக அவன் இராணி மீனாட்சிக்கு வாக்களித்தான்.
ஆனால், மீனாட்சி அவனுடைய சொற்களை நம்பி ஏமாறவில்லை. எனவே, சப்தர் அலி பங்காரு திருமலையின் கட்சியில் சேர்ந்துகொண்டு சந்தா சாகிபினிடம் இவ்வழக்கை ஒப்படைத்தான். மீனுக்குத் தலையும், பாம்புக்கு வாலும் காட்டும் விலாங்கு மீன் மாதிரி இந்த சப்தர் அலியும் சந்தா சாகிபும் நடந்து கொண்டார்கள். இதனை அறிந்த இராணி மீனாட்சி தனக்குத் தூதுவிடுத்த சந்தா சாகிபிற்கு தனது நிபந்தனைக்கு உட்பட்டால், தான் சந்தாசாகிபின் கூற்றினை ஏற்பதாகக் கூறினாள். திருக்குர்ரான் மீது சத்தியம் செய்து கொடுத்து தன்னுடன் ஒப்பந்தம் செய்து செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாள்.
அவளது வேண்டுகோளை ஏற்பதாகவும் அதற்குப் பதிலாகத் தனக்குப் பெருந்தொகை தர வேண்டும் என்றும் சந்தாசாகிபு ராணி மீனாட்சியைக் கேட்டுக் கொண்டான். இராணி மீனாட்சி இதற்கு உடன்பட்டாள். ஆனால் ராணி நம்பமுடியாத பெரும் தொகையான ஒரு கோடி பகோடா லஞ்சமாக கொடுத்துத் தன்னை ஆதரிக்குமாறு கோரினான் சந்தாசாகிபு.
நம்ப வைத்துக் கழுத்தறுத்த சந்தாசாகிபு
இக்கட்டான சூழலில் இராணி மீனாட்சி இதற்கு ஒப்புக் கொண்டு, திருக்குர்ரான் மீது சத்தியம் செய்து கொடுத்தான். அங்குதான் சந்தாசாகிபின் கழுத்தறுத்த கொடுமை அரங்கேறியது. சந்தாசாகிபு தங்கத் தாம்பாளத்தில் இரண்டு செங்கல்லைப் பட்டுத்துணி கொண்டு சுற்றி அதன் மீது வெல்வெட்டைப் போர்த்திக் குர்ரான் நூல் போன்று பாவித்து அதன் மீது கையை வைத்து அடித்துச் சத்தியம் செய்து கொடுத்துப் பணத்தையும் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டான் துரோகி சந்தாசாகிப்.
அபலையான இராணி மீனாட்சி அதனை உண்மையென நம்பினாள். சந்தாசாகிபு இராணி மீனாட்சியுடன் கலந்து இச்சகம் பேசி, அவளுடைய பகையைத் தான் வென்று அவளுக்குத் தனியரசு நல்குவதாக வாக்குறுதி செய்துகொடுத்து, அவளைத் தன் நய வஞ்சக வலையில் வீழ்த்தினான். அப் பேதையும் அவனுடைய சொற்களில் மயங்கித் தன் ஆட்சி உரிமை முழுவதையும் சந்தா சாகிபுவினிடமே ஒப்படைத்து விட்டாள். திருடனிடமே சாவியை ஒப்படைத்தது போன்று இந்த நிகழ்ச்சி இல்லையா? சந்தாசாகிபு திருச்சிராப்பள்ளிச் சீமையின் ஆட்சியை ஏற்றுக் கொண்டவுடனே 80,000 குதிரைகள் அடங்கிய குதிரைப் படையொன்றையும் காலாட்படை ஒன்றையும், இராணி மீனாட்சிக்கு உடன்பட்டவர்களான கோவிந்தையன், இராமனையன் ஆகிய இருவரின் தலைமையில் திண்டுக்கல்லை நோக்கி ஏவினான்.
திண்டுக்கல் கோட்டை பங்காரு திருமலை நாயக்கன் வசம் இருந்தது. பங்காரு திருமலை தன்னால் இயன்றவரை அப்படைகளை எதிர்த்துப் போரிட்டான். அம்மையநாயக்கனூரில் நடைபெற்ற பெரிய போரில் அவனுடைய ஆற்றல் சரிந்தது. திண்டுக்கல் கோட்டையும் வீழ்ந்தது. பங்காரு திருமலை கோட்டையைக் கைவிட்டுச் சிவகங்கைக்கு ஓடி ஒளிந்தான். சந்தா சாகிபு தன்முன் எதிர்ப்பற்று விரிந்து கிடந்த நாயக்கரின் மதுரை நாடு முழுவதையுமே தனக்கு உரிமையாக்கிக் கொண்டான்.
இராணி மீனாட்சிக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை மீறினான். தன்னைச் சகோதரனாகக் கருதிய அரசி மீனாட்சியை அவளுடைய மதுரை நகர அரண்மனையிலேயே சிறையிட்டு வைத்தான். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இராணி மீனாட்சி மனங்கொதித்தாள். காமுகனான சந்தாசாகிபு இராணி மீனாட்சியை இழிவாக நடத்த எத்தனித்ததை உணர்ந்து கொண்ட இராணி மீனாட்சி தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தனது அரண்மனையிலேயே 1736 ஆம் ஆண்டு நஞ்சுண்டு மாண்டாள்.
பங்காரு திருமலையின் பொறாமைக்கும் அவன் தனது தாய்நாட்டுக்கு இழைத்த துரோகத்துக்கும் பலன் கைமேல் கிடைத்தது. அவன் நவாபு
அன்வாருதீன் கைகளால் கொலையுண்டு மாண்டான். அவன் மகனான விசயகுமாரன் மதுரையை ஆளும் வாய்ப்பை இழந்து, விதி தன்னை
விரட்டி வர, சிவகங்கைச் சீமையில் அடைக்கலம் புகுந்து அங்கு இறந்தான். அதனுடன் மதுரை நாயக்கர் பரம்பரையும் மறைந்துபோயிற்று.
நம்பிக்கைத் துரோகியின் முடிவு
ஆற்காட்டு நவாபின் பதவிக்கு, அன்வாருதீனின் மகன் முகமதலிக்கும் சந்தா சாகிப்புக்கும் போட்டி ஏற்பட்டது. சந்தா சாகிப் பிரெஞ்சு ஆளுநர் டியூப்ளே, ஹைதராபாத் நிஜாம் ஆகியோரின் உதவியைப் பெற்றார். 1749 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆம்பூர் போரில் நவாப் அன்வாருதீன் கொல்லப்பட்டார். ஆற்காட்டு நவாப் அன்வாருதீன் இறந்தபின் அவரது மகன் முகமதலி தமது பாதுகாப்பிற்காகத் திருச்சிக் கோட்டைக்குள் புகுந்தார். இதனால் சந்தா சாகிப்பின் படைகள் திருச்சிக் கோட்டையை 1751ஆம் ஆண்டு முற்றுகையிட்டன. முகம்மதலி ஆங்கிலேயரின் உதவியையும் மைசூர் மன்னரின் உதவியையும் பெற்றார். பகைவர்களால் எளிதில் தாக்கமுடியாதபடி திருச்சிக் கோட்டை பலம் மிக்கதாக விளங்கியது. இங்கு நடந்த போரின் இறுதியில், சந்தாசாகிப் தோல்வியுற்றார். பிரெஞ்சுக்காரர்களுடன் கூட்டு வைத்திருந்த சந்தாசாகிப், மதுரை நாயக்கர்களின் அரசை இணைத்துக் கொண்டதுடன், தஞ்சாவூரின் நவாப் ஆகவும் தன்னை அறிவித்துக் கொண்டான்.
மாராட்டியர்கள் சந்தா சாகிபின் மேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திய வண்ணம் இருந்தனர். இவ்வாறு தொடர்ச்சியாக இடம் பெற்ற மராட்டியத் தாக்குதல்களால் சந்தாசாகிப் வலுவிழக்க நேர்ந்தது. இதனால், நசிர் யுங்குடன் கூட்டுச் சேர்ந்திருந்த முகமத் அலிகான் வாலஜாவினால் தோற்கடிக்கப்பட்டான். மேலும், பிரிட்டன் தளபதி ராபர்ட் கிளைவினாலும், மராட்டியப் பேரரசினாலும் தோல்வியுற்ற பின்னர் மீண்டும் தனது இழப்பைச் சரிசெய்ய முயன்றான். ஆனால் அவன் செய்த நம்பிக்கைத் துரோகம் அவனுக்கு எதிராகவே அவனது படையில் முளைத்து வேலை செய்தது.
சந்தா சாகிப்பின் தஞ்சாவூர்ப் படையைச் சேர்ந்த இந்து வீரர்கள் அவனுக்கு எதிராகக் கலகம் விளைவித்தனர். இக்கலகம் பெரிதாகி வெடித்தது. இக்கலகத்தை அடக்க நினைத்த சந்தா சாகிப்பின் தலை வீரர்களால் துண்டிக்கப்பட்டது. தன்னை நம்பிய அபலைப் பெண் இராணி மீனாட்சியை நம்ப வைத்து எவ்வாறு அவள் சாவிற்குக் காரணமாக சந்தா சாகிப் இருந்தானோ அவனது மரணம் துர்மரணமாக இருந்தது. பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்வார்கள். அந்தப் பாவம் இராணி மீனாட்சியை ஏமாற்றிக் கழுத்தறுத்த சந்தா சாகிப்பிற்கும் நேரிட்டது.
துரோகம் என்ற தீமை தீயைப் போன்றது. அது எரிய எரியப் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதனால்தான் திருவள்ளுவரும்,
“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்”
என்று சொல்லி இருக்கிறார்.
யாருக்கும் மனதாலோ, உடலாலோ, செயலாலோ எந்தவிதமான துரோகமும் செய்யக் கூடாது. பேரன் பாட்டிக்குச் செய்த துரோகம் அவனோட மனைவி இராணி மீனாட்சியை எப்படி விரட்டி விரட்டிக் கொன்று ஒரு வம்சத்தையே அழித்திருக்கிறது. இராணி மீனாட்சிக்குச் செய்த துரோகத்தால் அவளோட உறவினன் பங்காரு நாயக்கனும் அவன் மகனும், செங்கலில் குர்ரான்னு சொல்லி ஏமாத்தி சத்தியம் செய்த சந்தா சாகிபும் வீழ்ந்தார்கள்.
துரோகம் செய்தவரையும், அவரோட வம்சத்தையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து விடும். இது வரலாறு நமக்குக் கற்பிக்கின்ற பாடம். ஆனாலும் இதையெல்லாம் தெரிந்து கொண்டாலும், மனிதர்கள் துரோகத்தின் பின்னாலும், துரோகிகள் பின்னாலும் போய்க் கொண்டுதான் இருக்கின்றனர். இதெல்லாம், நல்லவர்களை நாம் கொண்டாடுகிற போதுதான் மாறும்.
இதைத்தான் பட்டுக்கோட்டையார்,
“பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்”
என்று பாடியிருக்கிறார்.
யாரையும் கண்ணை மூடிக் கொண்டு நம்பி விடக் கூடாது. ஆராய்ந்து பார்த்துச் சரியாக முடிவெடுக்க வேண்டும்.
துரோகத்தின் அடையாளம் என்றால் வங்காளத்திலே ஒருவரைச் சொல்வார்கள். அவனோட பெயரைக் கூட குழந்தைகள் யாருக்கும் வைக்க மாட்டார்கள், அந்தப் பேரைக் கேட்டாலே இன்றும் வங்க தேச மக்கள் கொதித்துப் போவார்கள். யார் அவரென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அடுத்த பகுதி வரை காத்திருங்கள்...

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.