வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும்
முனைவர் சி. சேதுராமன்
8. அடையாளமான துரோகம்
பேராசைதான் துரோகத்தின் ஆணிவேரா இருக்கிறது. எந்தத் தகுதியுமே இல்லாதவர்கள் பேராசைப்பட்டால், எதற்கும் கவலைப்பட மாட்டார்கள்... தன்னை நம்பியவர்களை நயமாகப் பேசிக் கழுத்தறுத்து விடுவார்கள். அதுமட்டுமில்லை, தனக்கு உதவி செய்தவர்களுக்கே நம்பிக்கைத் துரோகம் செய்து அவர்களை அழித்து விடுவார்கள். இவர்களின் மனதில் பொறாமை கொழுந்துவிட்டு எரியும், பொறாமையால் மனம் நிரம்பியவர்கள் அமைதியாகவே இருக்க மாட்டார்கள். இவர்கள் தங்களைப் பற்றி நினைப்பதை விட மற்றவர்களைப் பற்றியே அதிகமாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் எப்படிப் போனாலும் இவர்களுக்குக் கவலை இல்லை... தான் மட்டும் பலனடைய வேண்டும்... என்கிற எண்ணமே இவர்களிடம் மேலோங்கி நிற்கும்... கிராமங்களில் இவர்களைப் போன்றவர்களை நன்றியைச் சுட்டுத் தின்றவர்கள் என்று சொல்வார்கள்...
மகாபாரதத்திலே ஒரு கதை...
மத்தியப் பிரதேசத்துல கெளதம கோத்திரத்தில பிறந்த கெளதமன் என்ற ஒரு அந்தணன் வாழ்ந்து வந்தான். அவன் முன்னோர்கள் வேதத்துல கரை கண்டவர்கள், வேத விற்பன்னர்கள். ஆனால் இவன் அவர்களுக்கெல்லாம் நேர்மாறானவன். வேதம் என்றாலே என்னவென்று அவனுக்குத் தெரியாது. அவன் அதையெல்லாம் படிக்கவில்லை. இருப்பினும், அவம் மனதில் பெரிய ஆசை ஒன்று இருந்தது. எல்லோரும் பணக்காரர்களாக ஆகி விடுகிறார்கள், தனக்கும் நிறையப் பொன், பொருள் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான். அதற்கு என்ன செய்வது என்று யோசித்தான். அவனுக்கு வேதமோ வேறு தொழிலோ எதுவும் தெரியாது.
அப்பொழுது அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. பக்கத்துக் காட்டிலே இருக்கிற திருடர் தலைவனிடம் சென்று ஏதாவது பொருளுதவி கேட்கலாம் என்று நினைத்து, அந்தத் திருடர்கள் வசிக்கிற காட்டுக்குள் சென்றான்.
காட்டுக்குள் சென்ற அவனைத் திருடர்கள் சிலர், திருடர் தலைவனிடம் அழைத்துச் சென்றனர். அந்தத் தலைவன் கெளதமனின் ஏழ்மை நிலையைப் பாத்து, அவனுக்கு ஒரு வீடும் ஒரு வருடத்திற்குத் தேவையான உணவுப் பொருளையும் கொடுத்து ஒரு பெண்ணையும் திருமணம் செய்து வைத்தான். அந்தணனாகிய கெளதமன் நாளாக நாளாக திருடர்களைப் போலவே வாழத் தொடங்கினான்.
வேட்டைக்குப் போயி அன்னப் பறவைகளைக் கொன்று தூக்கிட்டு வந்து சமைத்துச் சாப்பிட்டான். திருடர்களுக்கு உதவி செய்வான். இப்படியே அவனோட வாழ்க்கை போய்க் கொண்டு இருந்தது. ஒரு நாள் அவன் காட்டுக்குள் சென்று வேட்டையாடிவிட்டுத் திரும்பி வரு மழியில் ஒரு முனிவரைப் பார்த்தான்.
சடைமுடியோட இருந்த அந்த முனிவர் அவனைப் பார்த்து, “நீ உயர்ந்த குலத்திலே பிறந்தவனாகத் தெரிகிறாய்... எப்படி இந்த மாதிரியான கொலைத் தொழிலைச் செய்து கொண்டு இருக்கிறாய். இதை விட்டுட்டு நீ வேறு ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாமே...” என்று சொன்னார்.
அதற்குக் கெளதமன், “நீங்க சொல்வது எனக்குப் புரிகிறது. என்னுடன் இன்றிரவு மட்டும் தங்கி இருங்கள். நாளைக் காலையில் நானும் உங்களுடன் வருகிறேன்” என்றான்.
அந்த முனிவரும் அவனுடன் தங்கினார். ஆனால், அவன் கொடுத்த உணவைச் சாப்பிடாமல் இரவெல்லாம் பட்டினியாக இருந்தார். காலையில் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டுப் போய் விட்டார்.
கெளதமனும் அந்த முனிவரிடம் சொன்னது போல், காலையிலேயே அந்த இடத்தை விட்டுக் கிளம்பிச் சென்றான். நீண்ட தூரம் நடந்த கெளதமன் பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களடர்ந்த சோலையைப் பார்த்தான். எங்கே பார்த்தாலும் நறுமணம் நிறைந்திருந்த இடங்கள். அப்படியே பார்த்துக் கொண்டே போனவன் ஒரு பெரிய ஆலமரத்தடியில வந்து அதன் நிழலில் படுத்தான். நடந்த களைப்பில் அப்படியே தூங்கி விட்டான்.
அப்போது அந்த ஆலமரத்துல குடியிருக்கிற நாடீஜங்கன் என்ற பெயருடைய கொக்கு அங்கு வந்தது. தன்னோட வீட்டின் கீழாகப் படுத்திருக்கும் அந்தணனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தது. அவனை எழுப்பி வணக்கம் சொல்லி, அவனுக்கு நல்ல உணவைக் கொடுத்தது. இரவில் அவனுக்குப் பூக்களால் ஆன படுக்கையைக் கொடுத்துப் படுக்கச் சொன்னது.
இரவில் நன்றாகத் தூங்கி எழுந்த அந்த அந்தணனைப் பார்த்த கொக்கு, “உனக்கு என்ன வேண்டும்? எதுக்காக இவ்வளவு தூரம் வந்தாய்?” என்று கேட்டது.
அதற்கு கெளதமன் தனக்குப் பொன்னும் பொருளும் வேண்டும். அதைத் தேடியே தான் வந்ததாகக் கூறினான். அதனைக் கேட்ட கொக்கு நீ என்னோட நண்பன். உனக்கு உதவி செய்வது என்னோட கடமை. இப்பொழுது நீ சாப்பிட்டுவிட்டு என்னோட நண்பன் விரூபாக்ஷன் என்ற பெயருடைய அரக்கர்களின் மன்னன் ஒருவன் இருக்கிறான். அவன் நல்லவன். அவனிடம் நீ சென்று உன்னுடைய கொக்கு நண்பன் நாடீஜங்கன் என்னை அனுப்பினான் என்று சொல். அவன் உனக்குத் தேவையான பொன், பொருள் அனைத்தையும் கொடுப்பான்” என்று வழி கூறி அவனுக்கு உணவும் கொடுத்து அனுப்பியது.
கொக்கு கூறியதைக் கேட்ட கெளதமன் அரக்க மன்னன் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றான். அவன் அரக்கர்களின் வாழிடத்தை அடைந்தவுடன் அங்கிருந்த அரக்கர்கள் அவனைத் தூக்கிச் சென்று அரக்க மன்னனின் முன்பு நிறுத்தினர். கெளதமனைப் பார்த்த விரூபாக்ஷன், “உனக்கு வேதங்கள் தெரியுமா? நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” என்று கேள்விகள் கேட்டான்.
நடுங்கிய கெளதமன் தன்னைப் பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறி தன்னை கொக்கு அனுப்பி வைத்த விவரத்தையும் அவனிடம் கூறினான். அதனைக் கேட்ட அரக்க மன்னன், “அந்தணர்களுக்கு நாளை விருந்தும் தானமும் அளிக்கப் போகிறேன். என் நண்பன் கூறியனுப்பியதால் உனக்கும் தருகிறேன். வாங்கிச் செல்” என்று கூறி விடுத்தான்.
மறுநாள் அந்தணர்களுக்கு விருந்து நடந்தது. விருந்துண்ட அந்தணர்களைப் பார்த்து, “உங்களுக்கு வேண்டிய தங்கம், வெள்ளி வைரம் உள்ளிட்ட பொருள்கள் அதோ கிடக்கின்றன. உங்களுக்கு வேண்டியதை வேண்டுமளவு எடுத்துக் கொண்டு இன்றையப் பொழுதுக்குள் இங்கிருந்து ஓடிவிடுங்கள். இன்று மட்டும் உங்களுக்கு அரக்கர்கள் எந்தவிதமான தீங்கும் செய்ய மாட்டார்கள்” என்று கூறினான்.
இதனைக் கேட்ட கெளதமனும் அந்தணர்களும் வேண்டிய பொருள்களை அள்ளிக் கொண்டு அங்கிருந்து ஓடினார்கள். கெளதமன் வேகவேகமாக அந்த இடத்தை விட்டு ஓடினான். அவனிடம் பொன்னும் பொருளும் நிறைந்த பெரிய மூட்டை இருந்தது. அவனுக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. அவ்வாறு ஓடியவன் தான் முன்பு தங்கி இருந்த ஆலமரத்தை வந்தடைந்தான்.
மாலை நேரமாகி விட்டதால் உணவில்லாத களைப்பில் மூட்டைகளை வைத்துவிட்டு அப்படியே அயர்ந்து உட்கார்ந்தான். சற்று நேரத்தில் அங்கு வந்த கொக்கு அவனது களைப்பைப் போக்கும் வண்ணம் தனது சிறகுகளால் விசிறியது. பின்னர் அவனுக்கு நல்ல உணவைக் கொடுத்தது. அதனை உண்ட கெளதமன் மூட்டைகளை வைத்துவிட்டு அங்கேயே தூங்கினான். பக்கத்தில் கொக்குப் படுத்துறங்கியது.
இந்த நிலையில் கெளதமனின் உள்ளத்தில் துரோக எண்ணம் தலைதூக்கியது. நாம் இப்படியே போனால் நாம் உண்ணுவதற்கு உணவு கிடைக்காதே? வழியில் பசித்தால் நாம் என்ன செய்வது? என்று யோசித்தான். அவனுக்கு ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. அருகில் படுத்திருந்த கொக்கைக் கொன்று அதன் மாமிசத்தை எடுத்துப் பக்குவப்படுத்திக் கொண்டால் உணவுக்குக் கவலையில்லை என்று நினைத்துத் தனக்கு உணவிட்டு உதவிய கொக்கினைக் கொன்று தீமூட்டி அதில் கொக்கை வாட்டிப் பக்குவப்படுத்திக் கொண்டு கிளம்பினான்.
காலையில் தனது நண்பன் கொக்கு வராததைக் கண்ட அரக்க மன்னன் தனது கொக்கு நண்பனுக்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்று கருதி தனது மகனை விடுத்துத் தேடச் சொன்னான். கொக்கைத் தேடிப் புறப்பட்ட அரக்கன் மகன் ஆலமரத்தடியில் கொக்கின் சிறகுகள் கிடந்ததைக் கண்டு அதை கெளதமன் தான் கொன்றிருக்க வேண்டும் என்று அறிந்து அவனைத் தேடிக் கண்டுபிடித்து அவனிடமிருந்த கொக்கின் இறைச்சியையும், அவனையும் இழுத்து வந்து தன் தந்தையிடம் ஒப்படைத்தான்.
தன் நண்பனைக் கொன்ற அந்தத் துரோகியை அரக்கர்களிடம் ஒப்படைத்து வெட்டிக் கொல்லச் செய்தான். தனக்கு உணவிட்டுத் தன்னைப் பாதுகாத்த கொக்கையே நன்றி மறந்து அதற்குத் துரோகம் செய்த கயவன் கெளதமன் அரக்கர்களின் வேலையாட்களால் வெட்டிக் கொல்லப்பட்டு இறந்தான்.
பேராசை பிடித்தவனின் உள்ளம் எப்படியெல்லாம் செயல்படும் என்பதை இந்தக் கதை நமக்குச் சொல்கிறது. இந்தக் கெளதமன் மாதிரி ஆட்கள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். இந்த நன்றி கெட்ட கெளதமன் போன்றே மீர் ஜாஃபர் என்பவன் இருந்தான். அவன் செய்த துரோகமும் கூட இது போன்றதுதான்.
வங்காள நவாப்
அலிவர்திகான் என்பவர் வங்காள நவாப்பாக இருந்தார். அவர் நல்லவர். அவர் காலத்தில் இந்தியாவில் காலூன்ற நினைத்த கிழக்கிந்தியக் கம்பெனியிடம் அவர் கவனமாக நடந்து கொண்டார். அவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்கவில்லை. அவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டார். இதனால் கிழக்கிந்திய கம்பெனி வங்காளத்தில் காலூன்ற முடியாமல் தவித்தனர். எப்படியாவது வங்காளத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று கிழக்கிந்தியக் கம்பெனியார் சூழ்ச்சி செய்தனர்.
இந்தச் சூழலில்தான் 1756-ஆம் ஆண்டு அலிவர்திகான் இறந்தார். வங்காள நவாப்பாக பத்தொன்பது வயதான அலிவர்திகானின் பேரன் சிராஜ் உத்தெளவ்லா பதவியேற்றார். இவர் தாத்தவைப் போல நிதானமாக இல்லாது அவசரப்படும் குணமுள்ளவராக இருந்தார். ஆங்கிலப் படைகளின் விரிவாக்கத்தை இவர் தடுத்தார். இதனால் கோபமுற்ற ஆங்கிலேயர் படைகொண்டு வங்காளத்தைத் தாக்க முயன்றனர். இதனையறிந்த சிராஜ் உத்தெளலா சிறுபடையொன்றை அனுப்பி அவர்களின் முயற்சியை முறியடித்தார். அதோடு மட்டுமல்லாமல் பல ஆங்கில அதிகாரிகளையும் சிறைக்கைதிகளாக்கிக் கொண்டுவந்தார். ஆங்கிலேயர் வசமிருந்த கொல்கத்தா நகரையும் கைப்பற்றிக் கொண்டார். சிறைப்பட்ட ஆங்கில அதிகாரிகளை வில்லியம் கோட்டையில் இருந்த கறுப்புத்துளை என்ற டஞ்சனில் அடைத்து வைத்தார். மேலும் கொல்கத்தா நகரையும் ஆங்கிலேயருடைய தொழிற்சாலைகளையும் உத்தெளவ்லாவின் படை சூறையாடியது. இதனால் கோபமுற்ற ஆங்கிலேயர் பெரும்படை திரட்டி சிராஜ் உத்தெளலா மீது ஏவினர். ஆங்கிலப் படைக்குக் கிளைவ் தலைமையேற்றிருந்தான். கப்பற் படைக்கு வாட்சன் என்பவன் தலைமை தாங்கி வந்தான்.
வங்காளப் போர்
ஆங்கிலேயர்கள் படையெடுத்து வந்ததை அறிந்த சிராஜ் உத்தெளலா ஆற்றல் வாய்ந்த படையொன்றைத் திரட்டினார். அதனை அறிந்த இராபர்ட் கிளைவ் அப்படைகளைச் சமாளிக்க முடியாது என்று கருதினான். ஏனெனில் கிழக்கிந்திய கம்பெனியிடம் அப்போது 3000 படை வீரர்கள் மட்டுமே இருந்தனர். நாவாப்பின் படைக்கு மீர்ஜாஃபர் தளபதியாக இருந்தான். வங்காளப் போர் மும்முரமாக நடைபெற்றது. இந்தப் போரை வரலாற்று அறிஞர்கள் பிளாசிப் போர் என்று குறிப்பிடுகின்றனர். இப்போரில் ஆங்கிலேயர்கள் சிராஜ் உத்தெளலாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். சிராஜ் உத்தெளலாவை எப்படியாவது ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு குறுக்கு வழியை நாடினர். அதற்கான வழிகளில் இராபர்ட் கிளைவ் மும்முரமாக ஈடுபட்டான்.
துரோகி மீர்ஜாஃபார்
கிளைவ் நவாப்பின் படைத்தளபதிக்கு ஆசை வலை விரித்தான். தளபதி மீர்ஜாஃபர் கிளைவ் விரித்த வலையில் வீழ்ந்தான். மீர்ஜாஃபர் பேராசை பிடித்தவன். தான் எவ்வாறேனும் பதவியை அனுபவிக்க வேண்டும் என்று அவன் துடித்தான். அதற்கேற்றாற் போன்று கிளைவ் அவனுக்கு நிறையப் பணத்தைக் கொடுத்தான். கிளைவின் வலையில் வீழ்ந்த மீர்ஜாஃபர் தன்னோடு யார்லுதுஃப் கான், ஓமிச்சந்த் ஆகிய துணைத் தளபதிகளையும் உடன் அழைத்து வந்தான். கிளைவ் இவர்களுடன் இரகசியமாக ஒப்பந்தம் செய்து கொண்டான்.
கிளைவ் நவாப் முகாமிட்டிருந்த இடத்தை யாரும் எதிர்பாராத நிலையில் தாக்குதல் நடத்திட வேண்டும் என்று திட்டமிட்டான். அவனது திட்டம் நிறைவேறும் வகையில் பனிமூட்டம் ஏற்பட்டது. அதனால் தன்னை எதிர்த்து வந்த ஆங்கிலேயப் படையை நவாப் படையால் எதிர்த்துத் தாக்க முடியவில்லை. அதனால் சிராஜின் படை பின்வாங்கியது.
ஆங்கிலேயப் படை நாற்புறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டன. இப்போரில் ஆங்கிலேயப் படையைச் சேர்ந்தவர்கள் அதிகமாகக் கொல்லப்படவில்லை. கிளைவ் பனிமூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு கடுமையான தாக்குதலில் ஈடுபட்டான். இதனால் நாவப்பின் படைக்கு அதிக சேதம் ஏற்பட்டது. சேதத்தைத் தடுப்பதற்காக நவாப் ஆங்கிலேயருடன் அலிநகர் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார். இதனால் ஒப்பந்தத்தின்படி நவாப்பின் படை மூர்சிதாபாத்திற்குத் திரும்பியது.
சதிவேலையில் ஈடுபட்ட சதிகாரன்
இந்நிலையில் சிராஜின் அரண்மனையில் ஆங்கிலேயக் கம்பெனியாருடன் வணிகம் செய்து வந்தவர்கள் ஆங்கிலேயருடன் தாங்கள் வணிகத் தொடர்பு வைத்திருப்பதால் சிராஜ் நம்மைக் கொன்றுவிடுவானோ என்று அஞ்சினார்கள். அதோடு மட்டுமல்லாமல் மீர்ஜாஃபர் படைவீரர்களுக்கு சம்பளம் கொடுக்காது காலந் தாழ்த்தினான். இதனால் படைவீரர்கள் கொதிப்படைந்திருந்தனர். இவ்விரண்டு தகவல்களையும் இராபர்ட் கிளைவிடம் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சார்ந்த வில்லியம் வார்ட்ஸ் என்பவன் கூறினான்.
இதனைச் சாதகமாக்கி சிராஜ் உத்தெளலாவை வீழ்த்த நினைத்தான் கிளைவ். வங்காள நவாப் நீதான் என்று மீர்ஜாஃபாரிடம் ஆசை காட்டினான் கிளைவ். இதனால் மகிழ்ச்சியடைந்த மீர்ஜாஃபர் கிளைவின் சதிவேலைக்கு உடன்பட்டான். கிளைவ் கூறியது போன்றே அவன் தனது படையில் பாதியை கொல்க்கத்தாவிற்கும், மீதிப் பாதிப்படையை சந்திர நகருக்கும் அனுப்பினான். தனக்கும் கிளைவ்விற்கும் ஏற்பட்ட இரகசிய ஒப்பந்தத்தை தனது கூட்டாளியான ஓமிச்சந்திடம் மீர்ஜாஃபர் கூறாது மறைத்தான். இதனை அறிந்து கொண்ட ஓமிச்சந்த் மீர்ஜாஃபரிடம் தனக்கு முப்பது லட்சம் பவுண்ட் தந்தால்தான் அவனுடைய சதிக்கு உடன்படுவதாகக் கூறி மிரட்டினான். இவ்வாறு ஓமிச்சந்த் கூறியதை மீர்ஜாஃபர் கிளைவ்விடம் கூறினான்.
பெருந்துரோகி கிளைவ்
ஓமிச்சந்தின் எண்ணத்தை அறிந்த கிளைவ் துரோகிகளுக்கே துரோகம் செய்யும் பெருந்துரோகச் செயலில் ஈடுபட்டான். தான் திட்டமிட்டபடி இரண்டு ஒப்பந்தங்களைத் தயாரித்தான். ஒரு ஒப்பந்தம் வெள்ளைத் தாளிலும் மற்றொன்று சிவப்புத் தாளிலும் இருந்தது. வெள்ளைத் தாளில் இருந்ததை ஓமிச்சந்த் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமலேயே தயாரிக்கப்பட்டது. சிவப்புத்தாளில் உள்ளதில் மட்டுமே ஓமிச்சந்தின் பங்கு குறித்து குறிப்பிடப்பட்டது.
அதிலும் கடற்படைத் தளபதி வெள்ளைத் தாளில் மட்டுமே கையொப்பமிட்டான். சிவப்புத் தாளில் அவனது கையொப்பம் ஏமாற்றி இடப்பட்டது. இவ்வாறு தான் பிறரை ஏமாற்றி ஒப்பந்தம் தயாரித்ததை இங்கிலாந்தில் விசாரணை நடந்தபோது மக்கள் சபையின் முன்பு கிளைவ் ஒப்புக் கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அனைத்து ஏமாற்று வேலைகளையும் செய்து முடித்த களிப்பில் 1757-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதியன்று போருக்கான அறிவிப்பை சிராஜ் உத்தெளலாவிடம் கிளைவ் தெரிவித்தான். சிராஜ் உத்தெளலா மீர்ஜாஃபர் தனக்குத் துரோகம் செய்துவிடுவான் என்பதை ஊகித்து அவனிடம் ஆங்கிலேயருடன் எந்தநிலையிலும் சேரக்கூடாது என்று கூறி சத்தியம் வாங்கினார். அதன் பின்னர் போரிடுவதற்காக அனைத்துப் படைகளையும் பிளாசி என்ற இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டார். ஆனால் நவாப்பின் உத்தரவைப் படை வீரர்கள் கேட்கவில்லை. படைவீரர்களின் சம்பளத்தில் மீர்ஜாஃபர் செய்த சதி வேலையால் மொத்தப் பணத்தையும் தந்தால் மட்டுமே பிளாசிக்குச் செல்வோம் என்று கூறி போருக்குச் செல்ல மறுத்தனர். நவாப்பிற்கு ஒத்துழைக்கவும் அவர்கள் மறுத்தனர். அதனால் ஜூன் 21-ஆம் நாள்தான் பிளாசிக்கு நவாப்பின் படை சென்று சேர்ந்தது.
இதனிடையே மீர்ஜாஃபர் தனது ஒப்பந்தத்தின்படி நடப்பதாக கிளைவ்விற்கு இரகசியமாகச் செய்தியை அனுப்பினான். அச்செய்தியைப் பெற்றுக் கொண்ட கிளைவ் மற்றவர்களுடன் கலந்தாலோசித்து ஆங்கிலேயப் படையை பிளாசியை நோக்கி நடத்தினான்.
சதிகாரனுடன் இணைந்த இயற்கை
போர் தொடங்கியது. போர்க்களத்தில் மீர்ஜாஃபர் ஆங்கிலேயரை எதிர்த்து எந்தவிதமான எதிர்ப்பும் காட்டாது வாளாவிருந்தான். மூன்று மணிநேரம் சண்டை நடந்தும் ஒருவித முன்னேற்றமும் காணப்படவில்லை. இந்நேரத்தில் திடீரென்று கடுமையான புயல்மழை பொழிய ஆரம்பித்தது. ஆங்கிலேயர்கள் தார்ப்பாய்களைப் பயன்படுத்தி தங்களின் வெடிமருந்து மழையில் நனைந்து போகாமல் பாதுகாத்தனர். ஆனால் நாவாப்பிடம் அதுபோன்ற தார்ப்பாய்கள் இல்லாததால் வெடிமருந்து அனைத்தும் மழையில் நனைந்து பயன்படாமல் போயிற்று. மழையைப் பயன்படுத்தி கிளைவின் பீரங்கிப் படை தொடர்ந்து நவாப்பின் படைகளை நோக்கிக் குண்டுமழை பொழிந்தது. இதனால் நவாபின் படைகள் அழியத் தொடங்கின. கிளைவின் பீரங்கிக் குண்டு பாய்ந்து நவாப்பிற்கு உறுதுணையாக இருந்த மீர்மதன்கான் என்ற வீரமிக்க தளபதி படுகாயமடைந்து வீழ்ந்தான்.
இந்தச் செய்தி சிராஜ் உத்தெளலாவை நிலைகுலைய வைத்தது. சிராஜ் உத்தெளலா தனது தலைப்பாகையைக் கீழே போட்டுவிட்டு அதனைக் காப்பற்றிக் கொடுக்குமாறு மீர்ஜாஃபரை வேண்டினார். அவனோ நவாப்பின் கட்டளைக்கு ஒத்துழைப்பதைப் போன்று நடித்தானே தவிர, அதைச் செய்யவில்லை. அப்போது கூடவே இருந்த மற்றொரு சதிகாரன் நவாப்பை மூர்சிதாபாத்திற்குத் திரும்பிப் போனால் நல்லது என்று கூறினான். அச்சதிகாரர்களின் கூற்றினடிப்படையில் சிராஜ் உத்தெளலா ஒட்டகம் ஒன்றின் மீது ஏறிக் கொண்டு மூர்சிதாபாத்திற்குத் திரும்பிச் சென்றார்.
மீர்ஜாஃபர் போரில் ஒத்துழைக்காததால் நவாப்பின் படை தோல்வியுற்றது. இந்நிலையில் ஜூன் மாதம் 23-ஆம் நாள் கிளைவைச் சந்திப்பதாகக் கூறி ஒரு கடிதத்தை மீர்ஜாஃபர் அனுப்பினான். அதற்கு அடுத்த நாள் இரு துரோகிகளும் சந்தித்துக் கொண்டார்கள். வங்காள நவாப் அவர்களே வருக வருக என்று சதிகாரன் மீர்ஜாஃபரை வணங்கி வரவேற்றான் பெருந்துரோகி கிளைவ். துரோகிகள் ஒன்றிணைந்தார்கள். அங்கு தர்மம் தரையில் போடப்பட்டு தேய்த்தழிக்கப்பட்டது.
சிராஜ் உத்தெளலாவின் முடிவு
பெருந்துரோகியுடன் கூட்டுச் சேர்ந்த மீர்ஜாஃபர் மூர்சிதாபாத்திற்குத் தப்பிச் சென்ற சிராஜ் உத்தெளலாவைத் தடுத்து நிறுத்தி அவரது கஜானாவைக் கொள்ளையடிக்க கிளைவிற்கு ஆலோசனை கூறினான். மீர்ஜாஃபரின் துரோகத்தால் தோல்வியடைந்து திரும்பிய சிராஜ் உத்தெளலா எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக மாறுவேடத்தில் சென்றார். அவ்வாறு மாறுவேடத்தில் சென்ற நவாப் ராஜ்மஹல் என்ற இடத்தில் அடைக்கலம் புகுந்தார்.
ஆனால் விதி யாரை விட்டது? வீரரான நவாப்பை மீர்ஜாஃபரின் உடன் பிறந்த சகோதரன் காட்டிக் கொடுத்தான். எதிரிகளின் வஞ்சகத்தாலும் துரோகிகளின் துரோகத்தாலும் சிக்கிக் கொண்ட நவாப் சிராஜ் உத்தெளலாவை மீர்ஜாஃபரின் மகன் மீரான் சாகடித்தான். துரோகிகளின் சதித்திட்டம் வென்றது. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி வேர்விட மீர்ஜாஃபர் என்ற துரோகத்தின் அடையாளம் வழிகோலியது.
இத்தகைய இழிவான வெற்றியைப் பெற்ற ஆங்கிலேயர்கள் தாங்கள் பிளாசிப்போரில் வீரத்தைக் காட்டி வென்றதாக பொய்யாக எழுதினர். துரோகிகளால் இந்தியா அடிமைத் தளையில் கட்டுண்டது. நயவஞ்சகர்கள் நமது இந்தியாவை நாசஞ் செய்தனர். தனக்கு விசுவாசமாக இருந்த மீர்ஜாஃபரை கிளைவ் பொம்மை நவாப்பாக்கினான்.
துரோகத்தின் அடையாளம்
பொம்மை நவாப்பாக இருந்த துரோகி மீர்ஜாஃபரின் வெற்றி அதிக நாள் நீடிக்கவில்லை. அவன் அதிகமான லஞ்சப் பணத்தை இராபர்ட் கிளைவிற்கும் வாட்ஸ்க்கும் கொட்டிக் கொடுத்தான். அவ்வாறு கொட்டிக் கொடுத்தும் கிளைவின் எதிர்பார்ப்பை மீர்ஜாஃபரால் நிறைவேற்ற முடியவில்லை. ஆங்கிலேயர் தங்களுக்கு உடந்தையாக இருந்த மீர்ஜாஃபரை ஒழித்துக் கட்டும் வேலையில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த மீர்ஜாஃபர் தன்னையும் தனக்குக் கிடைத்த நவாப் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக டச்சுக்காரர்களின் உதவியை நாடினான். அவர்களும் அவனுக்கு உதவி செய்வதற்காகப் படைகளை அனுப்பினர். அவ்வாறு அனுப்பப்பட்ட படைகளின் உதவியுடன் மீர்ஜாபர் போரிட்டுத் தோற்றான்.
குள்ளநரித் தந்திரத்தில் கைதேர்ந்தவர்களான ஆங்கிலேயர்கள் தங்களுக்கு உதவிய துரோகியின் கதையை முடிக்க மீர்ஜாஃபரின் மருமகன் மீர்காசினைப் பேருக்கு நவாப்பாக்கினர். ஆனால் அவனோ பொம்மை நவாப்பாக இருக்கச் சம்மதிக்கவில்லை. இதனை அறிந்த மீர்ஜாஃபர் ஆங்கிலேயரின் கால்களில் விழுந்து அவர்களின் கால்களைக் கழுவிக் குடித்து மீண்டும் நவாப்பானான். இவ்வாறு பதவி வெறிபிடித்த மீர்ஜாஃபர் ஆங்கிலேயரின் அடிவருடியாக இருந்து இறுதியில் 1765-ஆம் ஆண்டில் மடிந்து போனான்.
கருங்காலியாக இருந்த ஜாஃபரை இன்றும் வரலாறு தூற்றிக் கொண்டே இருக்கிறது. வீரர்கள் வீழ்த்தப்படலாம். ஆனால் அவர்கள் வீழ்வதில்லை. மாறாக விதைக்கப்படுகிறார்கள். துரோகிகள் எப்போதும் செத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தூற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இன்றும் வங்காளத்தில் மீர்ஜாஃபரை துரோகத்தின் அடையாளமாகவே மக்கள் கருதுகிறார்கள்.
அனைத்துப் பாவங்களுக்கும் கழுவாய் உண்டு; ஆனால் நன்றிகெட்ட துரோகத்திற்குக் கழுவாயே இல்லை. நண்பர்களுக்குத் துரோகம் செய்பவனும், நன்றி மறந்து தன்னை நம்பியவர்களுக்குத் துரோகம் செய்பவனும் மீளா நரகத்தை அடைவார்கள். அத்தகைய நரகத்தைத்தான் மீர்ஜாஃபர் அடைந்தான். மீர்ஜாஃபர் என்ற பெயரை வங்காளத்தில் வாழும் மக்கள் யாரும் தங்கள் குழந்தைகளுக்கு ஒருபோதும் வைப்பதில்லை. சிராஜ் உத்தெளலாவின் வீரம் இன்றும் மக்களால் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவர் வரலாற்றின் ஏடுகளிலும் மக்களின் எண்ணங்களிலும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்.
இப்பொழுது தெரிகிறதா? தனக்கு வாழ்வளித்த நவாப்பை நன்றி மறந்து கொல்வதற்குத் துணிந்த மீர்ஜாஃபர் மாதிரி எத்தனையோ துரோகிகள் இன்றும் இருக்கிறார்கள். இவர்களை நாம் அடையாளம் கண்டு அவர்களின் துரோகத்திலிருந்து தப்பி வாழ வேண்டும். பேராசைப் படுவதைத் தவிர்க்க வேண்டும். பேராசை அனைத்தையும் அழித்துவிடும். துரோகத்திற்கும் துணைபோகும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இது போன்ற துரோகம் இந்தியாவின் வடக்கேதான் நடந்தது என்று நினைக்காதீர்கள், நம் தங்கத் தமிழகத்திலும் இது போன்று நடந்துள்ளது. அது இதை விடக் கொடூரம் நிறைந்தது. இடம் மாறினாலும், மனிதர்களும் மனித மனங்களும், எண்ணங்களும் மாறாது என்பதுதான் உண்மை...
நாயக்கர் ஆட்சி தமிழகத்தில் நடந்த காலம்... தஞ்சையை ஆண்ட ஒருவரிடம் பணி செய்த ஒருவன் தனக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை என்பதற்காக அந்த வம்சமே அழிவதற்கு துரோகியாக மாறினான். எப்படி, மதுரை நாயக்கராட்சி துரோகத்தால் முடிவுக்கு வந்ததோ அதே போன்று தஞ்சை நாயக்கராட்சியும் வெங்கண்ணா என்பவன் செய்த துரோகத்தினால் முடிவுக்கு வந்தது… யார் அந்த வெங்கண்ணா? அவன் செய்த துரோகம் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள அடுத்த பகுதி வரை காத்திருங்கள்...

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.