வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும்
முனைவர் சி. சேதுராமன்
9. பதவிக்காகச் செய்த துரோகம்
மனிதர்கள் தாங்கள் சுகமாக வாழவேண்டும் என்பதற்காகவே பிறருக்குத் துரோகம் செய்கிறார்கள். ஒருத்தருக்கு உடல் சுகம்; இன்னொருத்தருக்கு மனசுகம்; அடுத்தவருக்குப் பதவி சுகம். இந்த மாதிரி மனிதருக்கு மனிதர் இந்த சுகம் தேடும் பழக்கம் மாறிக்கிட்டே இருக்கும். இந்தச் சுகத்தை அடைய வேண்டுமென்பதற்காக மனிதர்கள் எதை வேண்டுமானாலும் எப்படியாகிலும் துரோகம் செய்வார்கள். அதிலும் பதவி சுகம் கண்டவர்களுக்குப் பதவி இல்லாமல் இருக்க முடியாது. எப்படியாவது எந்தப் பதவியிலாவது அமர்ந்து விட வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பார்கள். பதவி கிடைக்காவிட்டால் கிடைக்கற வரைக்கும் மற்றவர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். பதவி என்பது போதைப் பொருள் போன்றது. அதுக்கு அடிமையாகி விட்டால் மீள முடியாது. அதனால்தான் மக்கள் இறந்து போனால் கூட சிவலோக பதவி அடைந்தார்; வைகுண்ட பதவி அடைந்தார்னு சொல்கிறார்கள். இருக்கும் போது தான் ஒருவருக்குப் பதவி கிடைக்கவில்லை, இறந்த பிறகாவது ஏதாவது பதவி கிடைக்கட்டுமேன்னுதான் இப்படிச் சொல்கிறார்களோ என்னவோ... இந்தப் பதவி சுகத்திலே தன்சுகம் மேலிட்டு இருக்கிறது. அதாவது பிறரைத் துன்புறுத்துவதின் மூலம் இன்பம் காண்பவர்களோட மனசுகத்தை இதற்கு ஒப்பிடலாம்.
ஒரு ஊரில் பெட்டிஷன் பெரியசாமி என்று ஒருவர் இருந்தார். அவர் எப்பொழுதும் யார்மேலாவது பெட்டிஷன் போட்டுக் கொண்டே இருப்பார். இதனால அவருக்குப் பெட்டிஷன் பெரியசாமி என்றே பெயர் வந்துவிட்டது. நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் இந்த ஆளு பெட்டிஷன் போட்டிடுவார். அப்படிப்பட்ட குணம் அவருக்கு. பிறரைத் துடிக்க வைத்துப் பார்ப்பதில் அவருக்குத் தனி சுகம். இதனால அந்த ஊரில் இருப்பவர்கள் அவரை ஒதுக்கியே வைத்திருந்தனர். அவர் வந்தால் யாரும் பேசமாட்டார்கள். பேசாமல் எழுந்து போய் விடுவார்கள். இப்படியே காலம் ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பெரியசாமிக்கும் வயதாகி விட்டது. அப்பொழுது அவர் மிகவும் வருத்தப்பட்டார்.
இந்த ஊரில் உள்ளவர்கள் நம்மை ஒதுக்கி வைத்திருப்பதற்கு வருத்தப்பட்டு இதற்குப் பரிகாரம் பண்ண வேண்டும் என்று நினைத்தார். அதனால், அவர் அந்த ஊரில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் போய், தான் செய்ததை மனதிலே வைத்துக் கொள்ள வேண்டாம், என்னை மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பு கோரி வந்தார்.
இதை அந்த ஊர்காரர்களால் நம்ப முடியவில்லை. இவன் ஏதாவது உள்நோக்கத்துடன் இருப்பான் என்று நினைத்தனர். இதைப் பார்த்த பெரியசாமி ஊர்ப் பெரியவர்கள் சிலரிடம் சென்று அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதுடன், அவர்களில் முதன்மையான ஒருவரிடம், ஒரு உயிலையும் கவரில் போட்டு ஒட்டிக் கொடுத்தார்.
“இந்தக் கவரை நான் இறந்த அன்று பிரித்துப் பார்த்து, அதன்படி என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
ஊர்ப் பெரியவர் அந்தக் கவரைப் பத்திரமாக வைத்திருந்தார் . திடீர் என்று ஒரு நாள் அந்த ஆள் இறந்து போனார். அவர் இறந்த அன்று ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில், ஊரின் முதன்மையானவர் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார். அதில், “தன்னோட இறப்புக்குப் பிறகு தன்னை ஒரு கயிற்றில் கட்டித் தெருத்தெருவாக இழுத்துச் சென்று, ஒவ்வொரு தெருவின் முனையிலும் என் உடலை அடிக்கவும். அப்பொழுதுதான் நான் இந்த ஊருக்குச் செய்த பாவம் அனைத்தும் நீங்கும். இது எனது கடைசி ஆசை. இதை நிறைவேற்றி உதவ வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்த ஊர்ப் பெரியவர்களும் மற்றவர்களும், “அந்த ஆள் நம் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். அதனால், நாம் அவரை மன்னித்து, அவரோட கடைசி விருப்பத்தை நிறைவேற்றலாம்” என்று முடிவு செய்தனர்.
சிலர், இறந்த அவரது உடலில் கயிற்றைக் கட்டித் தெருத்தெருவாக இழுத்துக் கொண்டு சென்றனர். ஒவ்வொரு தெரு முனையிலும் அவரது உடலை தங்கள் கையில் வைத்திருந்த கம்பைக் கொண்டு அடித்தனர். அவர்களின் பின்னால், அந்த ஊர் மக்கள் அனைவரும் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று காவல்துறையினர் சிலர் வந்து அவர்களின் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்தினர்.
“இந்த ஊர்க்காரர்கள் அனைவராலும் தனக்கு ஆபத்து இருக்கிறது. தன்னை அடித்துக் கொன்று தெருத்தெருவாக இழுத்துக் கொண்டு போகப் போவதாக மிரட்டுகின்றனர். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று பெரியசாமி என்பவரிடமிருந்து புகார் கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அவர் கடிதத்தில் சொல்லியிருந்தது போல் ஊர்க்காரர்கள் அனைவரும் சேர்ந்து அவரை அடித்துக் கொன்றதுமில்லாமல், கயிற்றைக் கட்டி இழுத்துக் கொண்டு போகிறீர்களே... உங்களுக்கெல்லாம் ஈவு இரக்கமே கிடையாதா? உங்கள் அனைவரையும் கைது செய்கிறோம் என்று காவல்துறையினர் சொல்ல, ஊர்ப் பெரியவர்கள் அனைவரும், “இருந்தும் கெடுத்தான், இறந்தும் கெடுத்தாண்டா பெரியசாமி” என்று புலம்பியபடி காவலர்களின் பின்னால் சென்றனர்.
பிறர் எப்படிப் போனாலும் பரவாயில்லை, தான் மட்டும் சுகமாக இருந்தால் சரி என்று நினைப்பார்கள். பெரியசாமியைப் போல் ஊருக்கு ஒருத்தராவது இருக்கத்தான் செய்வார்கள். தஞ்சையிலும் இப்படி ஒருவன் இருந்தான். அவனால் தஞ்சையில் நாயக்க வம்சமே அழிந்து போனது. ராயசம் வெங்கண்ணா எனும் அவன் பதவி சுகம் கண்டவன். பதவி வெறி பிடித்தவன். அவன் செய்த துரோகத்தைப் பார்க்கலாமா...?
தஞ்சை நாயக்கர்
விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளாக இருந்து தஞ்சையையும் மதுரையையும் ஆண்டு வந்த காலகட்டம். இதில் மதுரை நாயக்கர்கள் விஜயநகரப் பேரரசின் ஆளுகைக்குக் கட்டுப்படாது தனித்துச் சுதந்திரமாக ஆட்சி செய்யத் தொடங்கினர். இந்தச் சூழலில் இரகுநாத நாயக்கரின் மகன் விஜயராகவ நாயக்கர் கி.பி.1633-ஆம் ஆண்டில் தஞ்சையின் அரசரானார்.
இரகுநாத நாயக்கருக்கு இரு மகன்களென்றும் அரச பதவிக்காகத் தன் தமையனைக் கொன்று விஜயராகவ நாயக்கர் பதவியைக் கவர்ந்தார் என்றும் கூறுகின்றனர். இதனைச் சிலர் பொய்யான தகவல் என்றும், திருக்காட்டுப்பள்ளி, பந்தநல்லூர் ஆகிய ஊர்களைத் தனது மூத்த சகோதரனான இராமபத்திரனுக்குக் கொடுத்ததாகவும், அவனும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டு சென்றான் என்றும் மற்றொரு செய்தி கூறுகின்றது. இந்த விஜயராகவ நாயக்கன் கோவிந்த தீட்சதரின் மகன் வேங்கடமகியின் உதவியைப் பெற்றார் என்றும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
தஞ்சையைத் தாக்கிய போர்கள்
இரகுநாத நாயக்கருக்கும் அவரின் பட்டத்தரசி கலாவதிக்கும் பிறந்தவர் தான் இந்த விஜயராகவ நாயக்கர். இவரே தஞ்சையில் நீண்ட காலம் அரியணையில் இருந்து அரசாட்சி செய்தார். எண்பது வயது நிறைவுற்ற பின்னரே இவர் இறந்தார் என்று அரசவைக் கவிஞராக இருந்த ரங்கஜயம்மா என்ற பெண் கவிஞர் குறிப்பிடுகின்றார். விஜயராகவ நாயக்க மன்னர் தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் அமைதியுடன் ஆட்சி நடத்த முடியவில்லை. அடிக்கடி நிகழ்ந்த போர்களும் போர்களில் ஏற்பட்ட தோல்வியும் நாட்டில் நிலவிய அமைதியின்மையும் இவரது மன அமைதியைக் குலைத்தன. இவருக்கு மதுரை திருமலை நாயக்க மன்னர் ஒருபுறமும், முகமதியர் மற்றொரு புறமுமாகத் தொல்லைகள் கொடுத்த வண்ணம் இருந்தனர். முகமதிய மன்னர்களுக்குப் பெருந்தொகையைக் கொடுத்து சமாதானத்தைப் பெறும் கட்டாயத்திற்கு இவர் தள்ளப்பட்டார்.
மதுரை மன்னரும், செஞ்சி மன்னரும் விஜயநகரப் பேரரசிற்கு எதிராகச் செய்த சதியை இவர் விஜயநகரப் பேரரசிற்குத் தெரியப்படுத்தியதால் அவ்விருவரும் சேர்ந்து கொண்டு இவருக்குத் தொல்லைகள் கொடுத்தனர். மதுரை, செஞ்சி நாயக்கர்கள் விஜயநகரத் தலைமையை ஏற்காத போது, தஞ்சை நாயக்க மன்னர் மட்டும் தலைமையுடன் நட்பு கொண்டிருந்தார். முகமதியப்படை செஞ்சியைக் கைப்பற்றித் தஞ்சையை முற்றுகையிட்டது. தஞ்சைப் படைகள் திறம் வாய்ந்தவையாக இருந்தும் சிறிய படையாக இருந்ததால் திறை கொடுத்து விஜயராகவ நாயக்கர் சமாதானம் செய்து கொண்டார். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் தஞ்சைக்கு நம்பகமான பாதுகாவலர் இல்லாது போயிற்று. தெற்கில் கி.பி. 1645 ஆம் ஆண்டுடன் விஜயராகவ நாயக்கருடைய செல்வாக்கு முடிவுற்றதாகக் கூறலாம். கி.பி.1653 ஆம் ஆண்டு முதல் 1659 ஆம் ஆண்டு வரை விஜயராகவ நாயக்கர் அமைதியாக ஆட்சி செய்தார். இக்காலக்கட்டத்தில் அவர் தனது கோட்டை கொத்தளங்களை பலப்படுத்தினார்.
மதுரையில் திருமலை நாயக்கருக்குப் பின், அவருடைய மகன் முத்துவீரப்ப நாயக்கர் பதவி ஏற்றார். இதனால் அரசுச் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது. தென்னாட்டு நாயக்க மன்னர்களுக்கிடையே ஒற்றுமை குறைந்தது. இதனைக் கண்ட பீஜப்பூர் சுல்த்தான் தனது படைத்தலைவரான ஏகோஜி முல்லா ஆகியோரின் தலைமையில் படைகளை அனுப்பினான். இப்படைகள் திருச்சியை முற்றுகையிட்டது. திருச்சி கோட்டை பலமாக இருந்ததால் அதனைப் பிடிக்க முடியாத படைகள் தஞ்சையை நோக்கி நகர்ந்தது. விஜயராகவ நாயக்கர் தனது மருமகனிடம் தஞ்சையைப் பாதுகாக்குமாறு கூறிவிட்டு வல்லம் கோட்டைக்குள் ஓடி ஒளிந்து கொண்டார். மிகப்பெரிய படை வருவதைக் கண்ட அவரது மருமகன் அதனைத் தாக்குப்பிடிக்க முடியாது கோட்டையிலிருந்து தப்பி ஓடினான். பீஜப்பூர் சுல்த்தானின் படைகள் தஞ்சையை எந்தவிதமான எதிர்ப்புமின்றி கைப்பற்றிக் கொண்டனர். தஞ்சைக் கோட்டையில் இருந்த செல்வங்களைக் கொள்ளயிட்டுச் சென்றனர். அதோடுமட்டுமன்றி தஞ்சை, செஞ்சிப் பகுதிகளைத் தங்களின் ஆதிக்கத்திற்குள் வைத்துக் கொண்டனர்.
இதனிடையே நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. தஞ்சை மன்னர் விஜயராகவ நாயக்கர் மதுரை மன்னரிடம் உதவி கோரினார். இதனிடையே பஞ்சத்தைத் தாக்குப் பிடிக்க முடியாத பீஜப்பூரின் படைத்தளபதிகள் அவ்வழிவிலிருந்து தப்பிக்கத் திருச்சியை நோக்கிச் சென்றுவிட்டனர். இதனை அறிந்த விஜயராகவ நாயக்கர் மீண்டும் வந்து தஞ்சையைக் கைப்பற்றிக் கொண்டார். மதுரையில் முத்துவீரப்ப நாயக்கர் மரணமடையவே அவருடைய மகன் சொக்கநாத நாயக்கர் அரசரானான். பதினாறு வயதுச் சிறுவனாக இருந்த இவன் ராயசம், தளபதி ஆகியோரின் உதவியுடன் ஆட்சி நடத்தினான். ஆனால் அவர்களிருவரும் அவனை வீழ்த்திவிட்டு இவனது தம்பியை அரியணையில் அமர்த்த சதி செய்தனர். இதனை அறிந்த சொக்கநாத நாயக்கன் இருவரையும் சிறையில் அடைத்து அவர்களின் கண்களைப் பிடுங்கினான். அதோடு மட்டுமல்லாமல் தஞ்சையின் மீது கி.பி.1660 ஆம் ஆண்டு படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டான். இது விஜயராகவ நாயக்கர் மதுரை நாயக்க மன்னனிடம் பெற்ற முதல் தோல்வியாகும். விஜயராகவ நாயக்கர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு மதுரை மன்னனுடன் சமாதானம் செய்து கொண்டார். தான் ஒரு சிறுவனிடம் தோற்றுவிட்டோமே என்று அவமானம் அடைந்த விஜயராகவ நாயக்கர் இதற்குத் தக்க பாடம் கற்பிக்க நினைத்தார்.
கி.பி.1663 ஆம் ஆண்டு வானமியான் என்ற பீஜப்பூர் தளபதி தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்த போது, மதுரைக்கு எதிராகத் திருச்சியில் முற்றுகையிட விஜயராகவ நாயக்கர் உதவி புரிந்தார். மதுரை மன்னன் சொக்கநாத நாயக்கன் பீஜப்பூர் தளபதியிடம் பணம் கொடுத்து சமாதானம் செய்து கொண்டான். பீஜப்பூர் தளபதிக்கு உதவி செய்ததை அறிந்து கோபமுற்ற மதுரை நாயக்கர் மீண்டும் தஞ்சை நோக்கிப் படையெடுத்தான். மதுரை மன்னனின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக வல்லம் கோட்டையை மதுரை நாயக்க மன்னனுக்கு விட்டுக் கொடுத்து சமாதானம் செய்து கொண்டான். இருப்பினும் கி.பி.1664-ஆம் ஆண்டு மீண்டும் வல்லத்தின் மீது போர்தொடுத்து விஜயராகவ நாயக்கர் அக்கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டார்.
கி.பி.1674-ஆம் ஆண்டில் தஞ்சையில் மீண்டும் போர்ப்புயல் வீசத் தொடங்கியது. விஜயராகவ நாயக்கர் சொக்கநாத நாயக்கருக்குத் துரோகம் செய்த சகாஜி, இலிங்கம நாயக்கருடன் சேர்ந்ததால் சொக்கநாத நாயக்கர் தஞ்சையின் மீது படையெடுத்து வந்தார். தன்னால் விரட்டப்பட்ட தனது சிறிய தந்தை இலிங்கம நாயக்கருக்கு விஜயராகவ நாயக்கர் அடைக்கலம் தந்து, சோழ நாட்டின் ஒரு பகுதியில் ஆளும் உரிமையும் கொடுத்தது சொக்கநாத நாயக்கருக்குப் பிடிக்கவில்லை. விஜயராகவ நாயக்கரை சொக்கநாத நாயக்கர் நிரந்தரப் பகைவராகவே கருதினார். இதனால் 1674-ஆம் ஆண்டின் இறுதியில் மீண்டும் போர் தொடங்கியது.
சொக்கநாத நாயக்கர் தனது தளபதி கிருஷ்ண நாயக்கர், பேஷ்கர் சின்னத்தம்பி முதலியார் ஆகியோர் தலைமையில் பெரும்படையொன்றை அனுப்பினார். விஜயராகவ நாயக்கரும் மதுரைப்படையை வழியிலேயே சந்தித்தார். இருப்பினும் போரில் தோல்வியுற்று வல்லம் கோட்டையை இழந்தார். வல்லம் கோட்டையை இழந்தாலும் விஜயராகவ நாயக்கர் தனது தளபதி வேங்கடாத்திரி தலைமையில் மீண்டும் ஒரு படையை அனுப்பிப் போரிட்டார். ஆனாலும் மதுரைப்படையை வெற்றி பெறமுடியவில்லை.
வெங்கண்ணாவின் துரோகம்
தொடர்ந்து ஏற்பட்ட தோல்வியால் மனமுடைந்த விஜயராகவ நாயக்கர் அரண்மனைப் பெண்கள் அந்நியர் கைவசம் சிக்கிவிடக்கூடாது எனக் கருதி பெண்கள் வசிக்கும் பகுதியில் வெடிமருந்து நிரப்பித் தீ வைத்துவிட்டுத் தன் மகன் மன்னாரு தேவனுடன் மதுரைப்படையை தஞ்சை இராஜகோபால சுவாமி கோயிலுக்கு எதிரில் எதிர்த்து நின்றார். எண்பது வயதை எட்டிவிட்ட வயது முதிர்ந்த விஜயராகவ நாயக்கரும், அவரது மகனும் போரில் வீரசுவர்க்கம் அடைந்தனர். வெற்றிப் பெருமிதத்துடன் அரண்மனையில் நுழைந்த வேங்கிடகிருஷ்ண நாயக்கர் அங்கு தீக்கு இரையாகி இறந்து கிடக்கும் பெண்களையே கண்டான். சொக்கநாத நாயக்கர் தனது ஒன்றுவிட்ட சகோதரன் அழகிரியைத் தஞ்சைக்குத் தனது ராஜப் பிரதிநிதியாக நியமித்தார்.
தஞ்சையில் மதுரை நாயக்கரின் அரசப் பிரதிநிதியாக இருந்து ஆட்சியைக் கவனித்து வந்த அழகிரி நாயக்கர், சில நாட்களில் ராயசம் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சையைத் தனது உரிமையாக்கிக் கொள்ள விரும்பி, வரிப்பணத்தை மதுரை மன்னருக்கு அனுப்பாது இருந்தான். இதனால் கோபமுற்ற மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கர் இவனுக்குத் தண்டனை வழங்க தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்தார். விஜயராகவ நாயக்கரிடம் பணிபுரிந்த ராயசம் வெங்கண்ணா ஆதிக்க வெறி கொண்டவன். அழகிரி நாயக்கர் தனக்கு உயர்ந்த பதவி அளிப்பான் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததால் அழகிரியை வஞ்சம் தீர்த்து ஒழிக்க முற்பட்டான்.
விஜயராகவ நாயக்கரின் மகன் மன்னாரு தேவனுடைய மகன் செங்கமலதாசன் என்ற சிறுவன், தஞ்சை வாரிசுக்கு உரியவன். அவன் நாகபட்டினத்தில் ஒரு வணிகர் இல்லத்தில் வளர்ந்து வருவதை வெங்கண்ணா அறிந்தான். அரண்மனைப் பெண்டிர் மதுரை மன்னன் அரண்மனையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அரண்மனையில் பெண்கள் பகுதியில் வெடி மருந்திட்டுத் தீ வைத்துவிட்டுப் போருக்கு விஜயராகவன் புறப்பட்ட போது, தீக்கிடையில் ஒரு பணிப்பெண் அரசு வாரிசுக்கு உரிய சிறு குழந்தையைக் காப்பாற்றி நாகபட்டினத்தில் யாரும் அறியாமல் ஒரு செட்டியின் வீட்டில் வளர்த்து வந்ததை ராயசம் வெங்கண்ணா அறிந்து கொண்டதும் சதித்திட்டம் தீட்டினான்.
செங்கமலதாசனுக்குப் பன்னிரெண்டு வயது வந்ததும் அவனை அழைத்துக் கொண்டு வெங்கண்ணா பீஜப்பூர் சென்று சுல்த்தான் அடில்ஷாவைக் கண்டான். தஞ்சை மன்னன் விஜயராகவ நாயக்கரின் பேரனான செங்கமலதாசன் தஞ்சை அரசுக்குரியவன் என்றும் அவனைத் தஞ்சை அரசுக் கட்டிலில் அமர்த்த வேண்டும் எனவும் சுல்த்தானிடம் கேட்டுக் கொண்டான். பீஜப்பூர் சுல்த்தான் வாயிலாகத் தனக்கு ஆபத்து வருவதை அறிந்த அழகிரி நாயக்கர், மதுரை மன்னன் சொக்கநாத நாயக்கரிடம் உதவி கோரினான். நன்றி கெட்ட அழகிரி நாயக்கனுக்கு மதுரை மன்னன் உதவ மறுத்துவிட்டான். செஞ்சியிலிருந்த ஏகோஜி 1676 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தஞ்சையின் மீது படையெடுத்தான். அய்யம்பேட்டைக்கு அருகில் போர் நடைபெற்றது. போரில் தோல்வியுற்று உயிருக்கு அஞ்சிய அழகிரி இரவோடு இரவாக அரியலூர் வழியாக மைசூருக்குத் தப்பி ஓடிவிட்டான். ஏகோஜி தனது சுல்த்தான் கட்டளைப்படி செங்கமலதாசனை மன்னனாக ஆக்கினான்.
வெங்கண்ணாவின் முடிவு
தனக்குப் பிரதானி பதவியைச் செங்கமலதாசன் அளிப்பான் என்று வெங்கண்ணா எதிர்பார்த்தான். செங்கமலதாசன் தன்னை வளர்த்து ஆளாக்கிய வணிகக் குடும்பத்தினருக்கு அரச பதவிகளை வழங்கினான். ஏமாற்றம் அடைந்த வெங்கண்ணா செங்கமலதாசனை ஒழிக்கச் சதித்திட்டத்தில் இறங்கினான். கும்பகோணத்தில் தங்கி இருந்த ஏகோஜியின் மனதைக் கெடுத்து, அவனையே தஞ்சை மன்னனாக அமருமாறு கோரினான் வெங்கண்ணா. தனது சுல்த்தானுக்காக அஞ்சிய ஏகோஜி முதலில் மறுத்தாலும், தனது சுல்த்தான் அடில்ஷா இறந்துவிட்டான் என்பதை அறிந்ததும், தானே தஞ்சையின் அரசனாக வேண்டும் என்று கருதி தஞ்சையின் மீது படையெடுத்தான்.
வெங்கண்ணாவும் செங்கமலதாசனிடம் ஏகோஜி தஞ்சையைக் கைப்பற்ற இருப்பதாகக் கூறி அச்சத்தை உண்டாக்கினான். ஏகோஜி படையுடன் தஞ்சையை நோக்கி வரவே அச்சமுற்றிருந்த செங்கமலதாசன் உயிருக்குப் பயந்து அரியலூருக்கு ஓடிவிட்டான். ஏகோஜி எதிர்ப்பின்றி தஞ்சையைக் கைப்பற்றினான். துரோகச் செயல்களில் ஈடுபட்ட வண்ணமிருந்த ராயசம் வெங்கண்ணாவை ஏகோஜி நம்பாது அவனைச் சிறைப்படுத்த முயன்றான். ஆனால் தனது ஆட்களால் வெங்கண்ணா இதனை உணர்ந்து கொண்டு நாட்டை விட்டு ஓடி மறைந்து இறந்தான்.
செங்கமலதாசனுக்கு மதுரை மன்னன் சொக்கநாத நயக்கர் ஆதரவு அளித்து மதுரை மண்டலத்தில் ஒரு ஜாகீர்தாரராகப் பணிபுரியுமாறு விடுத்தான் எனச் சொல்லப்படுகிறது. செங்கமலதாசனுக்கு விஜயரங்கன் என்ற மகனும், விஜயமன்னாரப்பா என்ற பேரனும் இருந்ததாகவும் செங்கமலதாசன் ஈழம் சென்று கண்டி மன்னனை மணந்திருந்த தன் மகளுடன் தங்கி இருந்தான் எனவும் மைசூர் தளபதி குமாரையா என்பவன் மூலம் நாயக்க வம்சத்தை மீண்டும் ஏற்படுத்த முயன்று, அது முடியாது போயிற்று என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்செங்கமலதாசனே தஞ்சை நாயக்க வம்சத்தின் கடைசி மன்னன் என்றும் கூறப்படுகிறது.
ஒருவன் பதவியின் மீது கொண்ட வெறியினால் துரோகம் செய்து ஒரு வம்சத்தையே அழித்துவிட்டதைப் பார்த்தீர்களா...? துரோகம் செய்தவன் துரோகத்தாலேயே வீழ்வான் என்பதும் இந்த நிகழ்ச்சி நமக்குத் தெளிவுறுத்துகிறது.
தஞ்சை நாயக்கர் விஜயராகவ மன்னனின் மரணம் பற்றி மேலும் ஒரு குறிப்பு உள்ளது. விஜயராகவ நாயக்கரின் உதவிக்கா பீஜப்பூர் சுல்த்தானால் ஏகோஜி, அப்துல் ஹலீம் தலைமையில் அனுப்பப்பட்ட படை திருச்சியில் சொக்கநாத நாயக்கருடன் போரிட்டு அவனைத் தோல்வியுறச் செய்ததால் விஜயராகவ நாயக்கரின் துன்பங்கள் மறைந்தன. மதுரைப்படையை விரட்டிய ஏகோஜி தஞ்சை மன்னர் கொடுக்க வேண்டிய திறையும் கூலிப்படையின் ஊதியத்தையும் பெறக் காத்திருந்தார்.
விஜயராகவ நாயக்கர் திறைப்பணம் கொடுக்காமல் இருந்துவிடுவார் என்று எண்ணிய ஏகோஜி நாடு திரும்பாமல் வடக்கு வாசல் வழியாகப் படையுடன் நுழைந்தான். இதனை அறிந்த விஜயராகவ நாயக்கர் படைகளுடன் வடக்கு வீதியிலுள்ள இராஜகோபாலசுவாமி கோயில் அருகே வந்தபோது எதிர்த்துக் கடும்போர் புரிந்து வீரசுவர்க்கம் அடைந்ததாகவும், அவனுடன் அவன் மகன் மன்னாரு தேவனும் இறந்ததாகவும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதையே தஞ்சை மராட்டிய வரலாறு கூறும் ஏடுகளும் தெளிவுறுத்துகின்றன. வெங்கண்ணாவின் துரோகத்தாலேயே தஞ்சை நாயக்க வம்சம் அழிந்தது என்பதையும் இவ்வாவணங்கள் குறிப்பிடுகின்றன.
எது எப்படியோ கி.பி.1535 ஆம் ஆண்டிலிருந்து 1675 ஆம் ஆண்டுவரை சுமார் 140 ஆண்டுகள் தொடர்ந்து வந்த தஞ்சை நாயக்க மன்னர்களின் ஆட்சி வெங்கண்ணாவின் துரோகச் செயலால் செங்கமலதாசனுடன் முடிவுற்றது. உண்மையில் விஜயராகவ நாயக்கர் இறந்தவுடனேயே தஞ்சை நாயக்கர் அரச மரபும் முடிவுற்றது என்றே அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். பதவியும் பணமும் வசதியும் கிடைத்தால் போதும் என்று கருதும் கீழ்த்தரமான மக்களுக்கு மனிதர்கள் குறித்த சிந்தனையே வராது. உண்ட வீட்டிற்கே உலைவைத்து விட்டோமே?என்று சிறிதுகூட குற்ற உணர்வின்றி துரோகிகள் இருப்பர். வெட்கமின்றி உலகில் உலா வருவர். இதெல்லாம் இன்று நேற்று நடப்பதல்ல. தொடர்ந்து நடந்து கொண்டே வரும் செயல்களிவை.
துரோகிகள் தனித்துச் செயல்பட மாட்டார்கள். மற்றவர்களையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டு கூட்டுச் சதியில் ஈடுபடுவார்கள். அது போல் நான்கு பேர் கூட்டாச் சேர்ந்து ஒரு மாவீரனைக் காட்டிக் கொடுத்துக் கொன்றார்கள்… அதுவும் தமிழகத்தில்தான் நடந்தது. அந்த வீரனின் உடனிருந்தவர்கள்தான் அந்தத் துரோகத்தைச் செய்தார்கள்... அந்த வீரன் இறந்தாலும் அவனது வீரம் நினைவுக் கூறப்பட்டுக் கொண்டே இருக்கிறான். ஆமா அந்த வீரன் யாரு….? அவனுக்குத் துரோகம் செய்தவர்கள் யார் யார்? என்று அறிய அடுத்த பகுதி வரை காத்திருக்கலாம்...

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.