வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும்
முனைவர் சி. சேதுராமன்
10. அமைச்சர் செய்த துரோகம்
மனிதனின் தன்னலம் துரோகத்தைத் துணைக்கழைக்கின்றது. தன்னலம் மேலோங்குகின்ற போது மனிதன் தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாது மனம் போன போக்கில் நடக்கத் தொடங்குகின்றான்.
தன்னலம் அதிகரிக்க அதிகரிக்க மனிதன் பெருந்துரோகியாகின்றான். அதிலும் சிலருக்கு ஏதாவது தனக்குக் கிடைக்கின்ற வரை நண்பனாக இருப்பர். எதுவும் கிடைக்கவில்லையெனில் உடனே துரோகியாக மாறிவிடுவான். அதனால்தான் நல்ல நண்பன் கிடைப்பதற்குப் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். நல்ல நண்பர்கள் நாம் செய்கிற புண்ணியத்தால்தான் அமையும் என்கின்றனர். நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப நமக்கு நல்ல நண்பர்கள் அமையும் என்று சொல்லலாம்.
நல்ல நண்பர்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் தீய நண்பர்கள் எதையாவது எதிர்பார்த்தே பழகுவார்கள். தங்களுக்கு ஏதாவது ஒன்று கிடைக்கிறது என்றால் போதும், துரோகியா மாறி நண்பனை ஒழித்துக் கட்டத் துணை போய் விடுகின்றனர்.
பஞ்சதந்திரக் கதையில் ஒரு கதை.
ஒரு பெரிய காடு. அந்தக் காட்டு வழியாக ஒருவன் நடந்து போய்க் கொண்டு இருந்தான். நடுக்காட்டுக்குள் அவன் போய்க் கொண்டிருந்த போது திடீர்னு ஒரு புலி உறுமிக் கொண்டு இவன் மேலே பாயத் தொடங்கியது. இவன் பயந்து போய் ஓட ஆரம்பித்தான்.
ஒரு கட்டத்தில் அவனால் ஓட முடியவில்லை. அப்பொழுது அங்கே பக்கத்துல பெரிய மரம் ஒன்று அவன் கண்ணில் பட்டது. அந்த மரத்தில் வேகமாக ஏறினான். புலியினால் அந்த மரத்தில் ஏற முடியவில்லை. அதனால் அந்தப் புலி அவன் மரத்துல இருந்து அவன் இறங்கி வரட்டும் என்று நினைத்தபடி கீழே படுத்துக் கொண்டது.
வேகவேகமா மரத்தில ஏறினவன் ஒரு கிளையில் வசதியாக உட்கார்ந்து கொண்டான். அப்போது அந்த மரத்தின் இன்னொரு கிளையில் ஒரு பெரிய கரடி ஒன்று தேனடையைத் தின்று கொண்டு இருந்தது. அந்தக் கரடியைப் பார்த்த உடனேயே அவன் பயந்து நடுங்க ஆரம்பித்தான். கரடி அவனைப் பார்த்து, “நீ பயப்படாதே, நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். நான் கீழே இறங்கினாலும் அந்தப் புலி என்னைக் கொன்று விடும். நீ கீழே இறங்கினாலும் அந்தப் புலி உன்னையும் அடிச்சிக் கொன்றுவிடும். அதனால நாம ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தால், இந்தப் புலியிடமிருந்து தப்பித்து விடலாம் என்றது.
அவன் அந்தக் கரடியை நம்பாமல் பார்த்தான்.
அதைப் பார்த்த கரடி நீ என்னை நம்பாதது போல் தெரிகிறது. அதனால், நாம் இரண்டு பேருமே ஒருவரை ஒருவர் காப்பாற்றுவதா சத்தியம் செய்து கொள்வோம். என்றது. அவனும் கரடியும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதாகச் சத்தியம் செய்து கொண்டனர்.
பொழுது போனது. அந்தக் கரடி தன்னிடமிருந்த தேனடையில் சிறிதைப் பிய்த்துக் கொடுத்து அவனைச் சாப்பிடச் சொன்னது. அவனும் அந்தத் தேனடையைத் தின்று பசியாறினான்.
இரவு நேரமாகி விட்டது. அந்தப் புலி அங்கேயே காத்துக் கிடந்தது.
இரவு நேரத்தில் ஒருவர் தூங்கும் போது இன்னொருவர் விழித்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டனர்.
கரடி, “நான் முதலில் விழித்திருக்கிறேன். நீ சிறிது தூங்கிக் கொள். எனக்குத் தூக்கம் வரும் போது உன்னை எழுப்பி விடுகிறேன். நீ விழித்திரு, நான் சற்று தூங்கிக் கொள்கிறேன்” என்றது.
அவனும் கண்ணை மூடித் தூங்கத் தொடங்கினான். அப்போது கீழே இருந்த புலி அந்தக் கரடியைப் பார்த்து, “கரடியே மனிதர்கள் நல்லவர்கள் இல்லை. அவர்கள் மோசமானவர்கள். அதிலும் இவன் அயோக்கியனைப் போலிருக்கிறான். அவனை அப்படியே கீழே தள்ளிவிடு. எனக்குப் பசியாக இருக்கிறது. நான் உடனே இவனைச் சாப்பிட வேண்டும்” என்று சொல்லியது.
இதைக் கேட்ட கரடி, “அவனுக்கு நான் ஏற்கனவே சத்தியம் பண்ணிக் கொடுத்து விட்டேன். அவனைக் காப்பாற்றுவது என் கடமை. அவனைக் கீழே தள்ளுவது மிகப் பெரிய பாவம். நான் அதைச் செய்ய மாட்டேன்” என்றது.
உடனே அந்தப் புலி, “இங்கே பாரு நீ விலங்கு. அவன் மனிதன். நமக்குப் பாவம் புண்ணியம் கிடையாது. அவனை நீ நம்பாதே. அவனைக் கீழேத் தள்ளு” என்றது.
கரடி, “நான் அவனிடம் சொன்னபடி நடந்து கொள்ள வேண்டும். நீ இங்கிருந்து போய்விடு. நான் அவனுக்குத் துரோகம் பண்ண மாட்டேன்” என்றது.
கரடியிடம் தான் சொன்னது எதுவும் நடக்கவில்லை என்றாலும் அந்தப் புலி அந்த இடத்தை விட்டுட்டுப் போகாமல், அங்கேயே படுத்துக் கொண்டது.
அவன் நிம்மதியாக தூங்கி எழுந்த உடனே கரடி தூங்க ஆரம்பித்தது. கரடி அசந்து தூங்கிக் கொண்டிருந்தது.
இப்போது அந்தப் புலி மனிதனிடம், “மனிதனே, இந்தக் கரடியை நீ நம்பாதே. அதைக் கீழே தள்ளிவிடு. நான் அதைச் சாப்பிட்டுப் பசியாறிக் கொள்கிறேன். உன்னை விட்டு விடுகிறேன்” என்று சொன்னது.
அவன், “அதெல்லாம் முடியாது. கரடியும் நானும் ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கொண்டிருக்கோம். அதை மீற முடியாது” என்றான்.
அந்தப் புலி, “இங்கே பார். இந்தக் கரடி பொல்லாதது. உன்னைக் காப்பாற்றுவது போல் காப்பாற்றி, பின்னால் உன்னை அடித்துத் தின்று விடும். நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டுவிடு, உன்னைக் காப்பாற்றிக் கொள்” என்றது.
புலி சொன்னதைக் கேட்டதும் அவனுடைய மனதில் சிறிது அச்சம் தோன்றியது. இந்தப் புலிகிட்டே இருந்து தப்பினால் போதும். இந்தக் கரடி ஒரு விலங்குதான். இதுக்கு நல்லது கெட்டது எங்கே தெரியப் போகிறது. நாம் இந்தக் கரடியைக் கீழேத் தள்ளிவிட்டுத் தப்பித்துக் கொள்வோம் என்று நினைத்தபடி தூங்கிக்கொண்டிருந்த அந்தக் கரடியைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டான். ஆனால் அந்தக் கரடி கீழே விழவில்லை. கீழிருந்த கிளையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.
மரத்துக் கிளையில நன்றாக உட்கார்ந்து கொண்ட கரடி அவனைப் பார்த்து, “அப்போதே அந்தப் புலி சொன்னது நான் நம்பவில்லை. இப்படி எனக்குத் துரோகம் செய்துவிட்டாயே. உன்னிடம் சத்தியம் பண்ணியதால், நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். நீ துரோகி. நான் உன்னைக் காப்பாற்றினேன். ஆனால், நீ என்னைக் காப்பாற்றாமல் எனக்குத் துரோகம் செய்து விட்டாய்” என்றபடி அந்த மரத்திலிருந்து அருகிலுள்ள மரத்துக் கிளைக்குத் தாவிச் சென்றது.
கரடியின் பேச்சைக் கேட்ட அவனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. அவனுக்குப் பயமும் அதிகமாகி விட்டது. அவனால் புலியிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மரத்திலிருந்து அவனோட பிடி நழுவி கீழே விழுந்தான். கீழே காத்திருந்த புலி அவனை அடித்துக் கொன்று தின்றது. இதுபோல் கூட இருந்து கொண்டே கான்சாகிப் என்ற மருத நாயகத்திற்கு அவனோட அமைச்சர் ஒருவன் துரோகம் செய்தான். கான்சாகிப் என்ற வீரனை வீரத்தால் ஆங்கிலேயர்கள் வெல்லவில்லை. துரோகத்தால்தான் வென்றார்கள். வீரத்தை வீழ்த்திய அந்த வீணனின் செயலைப் பார்ப்போமா...?
கான்சாகிப்
நெல்லூர்ச் சுபேதார், ஈசப் யூசப், யூசப் கான், மகம்மது யூசப், கான் சாகிப், கும்மந்தான் என்று அழைக்கப்பட்டவர் கான்சாகிப் மருதநாயகம் ஆவார். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பனையூரில் வசித்த இல்லத்துப் பிள்ளைமார் சமூகத்தினர் ஒரு சூழலில் இசுலாம் சமயத்திற்கு மாற்றமாகினர். இப்படி இசுலாமிய சமுதாயத்திற்கு மாற்றமான குடும்பங்களில் மருதநாயகம் குடும்பமும் ஒன்று. மருதநாயகம் முகம்மது யூசப் என்று பெயர் மாற்றமும் அடைந்தார். இவர் இளைஞராக இருந்த போதே பெற்றோருக்கு அடங்காத பிள்ளையாக இருந்தார். வீட்டை விட்டு ஓடி புதுச்சேரிக்குச் சென்றார். அங்கு ஐரோப்பியர் ஒருவரிடம் பணியாளனாகச் சேர்ந்தார். கான்சாகிப் பிரான்டன் என்ற ஐரோப்பியரின் உதவியால் கல்வியறிவு பெற்றார். ஆங்கிலம், பிரெஞ்ச், போர்ச்சுக்கீஸ், தென்னிந்திய மொழிகள் உள்ளிட்டவற்றையும் அறிந்திருந்தார். இருப்பினும் அவரது உள்ளம் பக்குவமான நிலையில் இல்லாததால் முதலில் ஆற்காட்டு நவாப்பின் படையில் இருந்து பின்னர் நாட்டிற்கு அழிவைத் தரும் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்திருந்தார்.
இவருடைய மனைவியின் பெயர் மாசா என்பதாகும். இவள் போர்ச்சுக்கீசிய பெண் ஆவாள். கான்சாகிப் காவேரிப்பாக்கத்தில் நடைபெற்ற போருக்குப் பின்னர் நெல்லூரில் சிறுபடையை உருவாக்கி அதனுடன் ஆங்கிலேயரிடத்தில் பணியமர்ந்தார். இதற்கு முன்னால் நாம் இந்தியாவில அதுவும் குறிப்பாகத் தமிழகத்திலே இருந்த அரசியல் சூழலைத் தெரிந்திருக்க வேண்டும். ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாயப் பேரரசு தென்னிந்தியாவில் பலகீனமடைந்தது. யாரும், யாருக்கும் கட்டுப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களை நவாப்புகள், நிஜாம்கள் என்று சிற்றரசர்களாக அறிவித்துக் கொண்டனர். தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காட்டைத் தலைநகராகக் கொண்டு இயங்கிய ஆற்காடு நவாப்பின் அரசுதான் முதன்மையானதாகவும், பலமானதாகவும் இருந்தது. இவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயே வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.
இந்தியாவில் ஆங்கிலக் கம்பெனிக்கும், பிரெஞ்சுக் கம்பெனிக்கும் இடையே கடும் அதிகாரப் போட்டி நிலவியது. அதிலும் கர்நாடகத்தில் யார் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது என்ற காரணத்தால் இருவருக்குமிடையில் அடிக்கடி போர் ஏற்பட்டது. ஆற்காட்டில் நடைபெற்ற இந்தப் போர்தான் இராபர்ட் கிளைவ் இந்தியாவில் ஆங்கிலேய அரசை நிறுவுவதற்குக் காரணமாக அமைந்தது. ஆற்காட்டுப் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
ஆற்காட்டு நாவாப் ஆங்கிலேயரின் கைப்பாவையாக மாறினார். ஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும், ஆதிக்கமும் குறையத் தொடங்கியது. பிரெஞ்சுக்காரர்களை முறியடிப்பதற்கு முக்கிய காரணமாக கான்சாகிப் விளங்கினார்.
கான்சாகிப்பின் வீரம்
கான்சாகிப் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரைச் சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் வீரர்கள். மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி! அந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாது. விதியை என்னவென்பது? திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் கான்சாகிப் ஹைதர் அலியைத் தோற்கடித்தார். ஆங்கிலேயர்கள் பூரித்தனர். தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காகப் போராடுகிறார் என்பதையும் அறியாத காலத்தில் கான்சாகிப் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகம்தான் பின்னணியாக இருந்தது.
மைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்ததால், புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு என்ற மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும், கான்சாகிப்பிற்கும் 06-11-1759ல் போர் நடந்தது. கான்சாகிப் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரே ஆண்டில் அதாவது 12-12-1760-இல் நெற்கட்டான் செவ்வல் அருகே போரிட்டுப் பூலித்தேவனை வென்றார். 1752-ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே வியப்பிற்குள்ளாக்கியது.
ஒருமுறை 09-11-1757-இல் கான்சாகிப் மிகக் குறைந்தளவில் இருந்த படை வீரர்கள் சிலருடன் மட்டுமே இருந்தபோது, நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். அதிலிருந்து அவர் வீரதீரத்துடன் போராடி வெற்றியுடன் வெளியில் வந்தார். அதே போன்று அவர் பெற்ற பல வெற்றிகளும் அவருக்குத் தளபதி என்ற பதவியின் தகுதிக்கு மேலேயே சென்று அவருக்குக் கவர்னர் பொறுப்பையும் பெற்றுத் தந்தது. இன்றைய மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சியின் தெற்குப் பகுதிகள் உள்ளிட்டவற்றைப் போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759-ஆம் ஆண்டில் கான்சாகிப்பைத் தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர். மதுரையிலிருந்து கான்சாகிப் அனைத்துப் பகுதிகளையும் நிர்வகித்து வந்தார். இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. கான் சாஹிப்புக்கும், ஆற்காட்டு நவாபுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. “ஊரு ரெண்டு பட்டாக் கூத்தாடிக்குக் கொண்டாட்டமுன்னு சொல்வாங்கல்ல” அதற்கேற்றாற் போன்று இதில் ஆங்கிலேயர் குளிர் காய்ந்தனர்.
ஆங்கிலேயரை எதிர்த்த கான்சாகிப்
திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒன்றாகக் கருதும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளைக் கான்சாகிப் மெல்ல உணரத் தொடங்கினார். தனக்கு ஆதரவாக இல்லாமல் ஒன்றுக்கும் உதவாத கடன்காரனாகத் திகழ்ந்த ஆற்காட்டு நவாப்பிற்குத் துணையாக இருந்து ஆங்கிலேயர்கள் அவரது பேச்சைக் கேட்டது கான்சாகிப்பின் மனதைப் பலவாறாக வருத்தின. இதுவரை ஆற்றல் மிகு தளபதியாகவும் நிர்வாகியாகவும் இருந்த கான்சாகிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்? இவர்கள் அன்னியர்கள்தானே? இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை, சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும்? என்று பல வினாக்கள் அவரது உள்ளத்தில் எழவே தான் நிர்வகித்து வந்த பகுதிகளைத் தாமே சுதந்திரமாக ஆளத் தொடங்கினார்.
இதனை அறிந்து வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள் கப்பம் கட்டும்படி வற்புறுத்தினர். ஆனால் கான்சாகிப் ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல… உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்குச் சவால் விட்டார். இதனால் ஆங்கிலேயர்கள் மதுரையை நோக்கிப் படை நடத்தினர். போர்ப் புயல் உருவானது. மதுரையைப் போர் மேகங்கள் சூழ்ந்தன. 1763-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் நாள் அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை கான்சாகிப் வெளிப்படுத்தினார். ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது. போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னைச் சிறந்த ராஜதந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றியதோடு, பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் சேர்த்து தன் கோட்டையில் பறக்கவிட்டார். எதிரிக்கு எதிரி நண்பன், இதன் மூலம் பிரஞ்சுக்காரர்களுடனான பழைய நட்பைப் புதுப்பித்துக் கொண்டார். ஆங்கிலேயரை எதிர்க்கப் பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினார்.
தனக்கு எதிராக நடந்த திருவாங்கூர் மன்னன் மீது படையெடுத்தார். அவருக்கு உதவியாகப் பிரெஞ்சுப் படைத்தளபதி மார்ச்சந்த் படையுடன் வந்தான். இதனைக் கண்ட திருவாங்கூர் மன்னன் பணிந்தான். ஆங்கிலேயர்களுக்கு யார் யார் உதவியாக இருந்தார்களோ அவர்களையெல்லாம் அடக்கினார் கான்சாகிப். தக்காணத்தை ஆட்சி செய்த தக்காண நிஜாம் அலி, தனது கவர்னராக கான்சாகிப்பை அங்கீகரித்தார். இது ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும் திகைப்பில் ஆழ்த்தியது. ஆற்காடு நவாப்பின் வேண்டுகோளை ஏற்று ஆங்கிலேயப்படை திருபுவனம் வந்தது. கான்சாகிப்பின் அதிரடி யுத்தத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத அவர்கள் ஓடி ஒளிந்தனர். அடுத்தடுத்து இரண்டு போர்களிலும் கான்சாகிப் வென்று ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். ஆங்கிலேயத் தளபதிகள் செய்வதறியாது விழித்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தனர்.
ஆங்கிலேயப் படைக்குத் தலைமையேற்ற பிரஸ்ட்டன் திணறினார். அவரும், கான்சாகிப்பும் முன்னாள் நண்பர்கள், அதனால் அவரது பயம் அதிகரித்தது. காரணம் கான்சாகிப்பின் குணமும், சினமும் தெரியும். அவர் பயந்தபடியே நடந்தது. மூலக்கரை கொத்தளம் அருகே நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வாள் முனையில் நூற்றுக்கணக்கானோரை கான்சாகிப் வெட்டிக் கொன்றார். ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன் சுடப்பட்டு படுகாயமடைந்து, பின்னர் உயிர் துறந்தார். பிரஸ்ட்டனைப் பெரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நிலை குலைந்தார். கான்சாகிப் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிடும் செய்தியும், அதன் வெற்றிகளும் மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு எட்டியது. அவர் பழைய பகையை மறந்தார். மண்ணுரிமைப் போரில், தனது நிலைப்பாட்டுக்கு கான்சாகிப் வந்ததை வரவேற்று வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
ஆங்கிலேயர்கள் ஒரு தந்திரம் செய்தனர். அதன்படி கான்சாகிப்பைச் சென்னைக்கு அழைத்துச் சமாதானம் செய்வதைப் போல் நடித்து கைது செய்வது என்று இரகசியமாக முடிவு செய்தனர். கான்சாகிப்புடன் சாமாதானம் செய்து கொள்வதற்கும் நடந்தவற்றிற்கு விளக்கம் அளிப்பதற்கும் சென்னைக்கு ஆங்கிலேயர்கள் கான்சாகிப்பை அழைத்தனர். ஆங்கிலேயர்களின் எண்ணத்தை ஊகத்தினால் அறிந்த கான்சாகிப் அதனை மறுத்தார்.
இதனால் ஆங்கிலேயர்கள் கான்சாகிப்பை அழித்தொழிப்பதற்கு முயன்றனர். கான்சாகிப்பைக் கொலை செய்வதைத் தங்களின் தலையாய பணியாகக் கருதிச் செயல்பட்டனர். ஆங்கில அரசிற்கு வெள்ளையர்களின் தளபதி லாரன்ஸ் 1763ஆம் ஆண்டு மார்ச்சு 24ஆம் நாள் கடிதம் ஒன்று எழுதினான். அதில், கான்சாகிப் ஆங்கிலேயர்களுடன் விசுவாசமின்றி நடப்பதாகவும், தன்னைச் சுதந்திரமான அரசனாக அறிவித்துக் கொண்டதாகவும், அவனை அழித்தொழிக்க வேண்டும் என்றும் அதனால் 900 ஐரோப்பியர்களையும் 5000 கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகளையும், 2000 குதிரைப் படைவீரர்களையும், பல பளையக்காரர்களின் உதவியையும் உடனடியாகப் பெற்று அனுப்பவும் என்று குறிப்பிட்டு எழுதினான்.
ஆங்கிலேயரின் படையெடுப்பு
தளபதியின் கடிதத்தைக் கண்ட ஆங்கிலக் கம்பெனியார்கள் பெரும்படையொன்றை கான்சாகிப்பின் மீது ஏவிவிட்டனர். இப்படைக்கு லாரன்ஸ், பிரஸ்டன் ஆகிய ஆங்கிலத் தளபதிகள் தலைமை தாங்கினர். கான்சாகிப்பை உயிருடன் பிடித்து நாம் காணுகின்ற முதல் மரத்தில் அவனது படைகள் காணும் வண்ணம் அவனைத் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று தளபதிகளுக்குக் கம்பெனி கட்டளையிட்டது. படை திரண்டு கான்சாகிப்பை எதிர்க்க ஆற்று வெள்ளமென வந்தது. கான்சாகிப் இதனைக் கண்டு அஞ்சவில்லை. மாறாக ஆங்கிலேயர்களை முறியடிக்க அவரும் படை திரட்டினார்.
மதுரை முற்றுகை
கான்சாகிப்புடன் நடந்த பல போர்களில் ஆங்கிலேயர்கள் தோல்வி கண்டனர். கான்சாகிப்பை அழித்தொழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்படை கொண்டு மதுரையையும் கான்சாகிப்பின் கோட்டையையும் முற்றுகையிட்டனர். இம்முற்றுகை ஓராண்டும் மூன்று மாதங்களும் நீடித்தன. கான்சாகிப்பை முயன்று பிடித்துவிட வேண்டும் என்று ஆங்கிலேயக் கம்பெனி அரசு முயற்சித்தது. அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
மதுரையை அழிக்க ஆங்கிலேயர்கள் முயன்றனர். அதனால் எண்ணற்ற உயிர்கள் பலியாயின. ஆங்கிலேயப் படைகளால் கோட்டையைக் கூட நெருங்க இயலவில்லை. கான்சாகிப்பின் படைகளுக்குத் தலைமை தாங்கிய பிரெஞ்ச் தளபதி மார்ச்சந்த் மிகுந்த திறமையோடு போராடினான். கான்சாகிப்பும் அவனது வீரர்களும் உயிரைத் துச்சமாகக் கருதி போர்புரிந்தனர். இதனால் ஆங்கிலேயர்கள் தோல்வியடைந்தனர்.
ஆற்காடு நவாப்புக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. பயம் வாட்டியது. சிவகங்கை சீமையின் விஷமியான தாண்டவராயன் “நீங்கள் பயப்படாதீர்கள்”என்று ஆற்காடு நவாபுக்கு தைரியமூட்டினான். இனி, கான்சாகிப்பைப் போரினால் வெல்ல முடியாது, இனி தந்திரம்தான் தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டான் தாண்டவராயன். துரோகிகளை விலை பேசினான். இறுதியாக மதுரையில் கான்சாகிப்பின் கோட்டை முற்றுகையிடப்பட்டது. தீவிரமான முன்னேற்பாடுகளுடன், நிறைய ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவாசியத் தேவைகளுடன் ஆங்கிலேயப் படைகள் திரண்டன. 1763-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கான்சாகிப் ஆங்கிலேயர்களின் கொடியைத் தனது பீரங்கி வாயிலில் வைத்து வெடித்துச் சிதறச் செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.
மதுரைப் போர் தொடங்கியது. இந்தப் போர் நாட்கள் பல கடந்து, வாரங்களாக நீடித்தது. கான்சாகிப்பின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது, உணவு, ஆயுதங்கள், மருந்துகள் என காக்கை, குருவி கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. கான்சாகிப் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஆங்கிலேயர்கள் தூது அனுப்பினர். மண்டியிட மாட்டேன் என்றார் மாவீரன் கான்சாகிப். நாலாயிரம் வீரர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிரடிப்படை, இரண்டாயிரம் குதிரைகள் என கான்சாகிப்பிற்கு எதிராக முற்றுகை வலுத்தது. கான்சாகிப்பின் படையினர் பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர்கள் அணியில் இருந்த இந்தியப் படையினர் போரில் ஈடுபடுவது குறித்து குழம்பிக் கொட்டிருந்தனர். அச்சமயத்தில், இந்திய வீரர்களின் குழப்பத்தைப் பயன்படுத்தி கான்சாகிப் நடத்திய தாக்குதலில் படுதோல்வியடைந்தது ஆங்கிலேயப்படை. போர் தற்காலிகமாக நின்றது.
கோட்டையில் கான்சாகிப்பிற்கு ஆதரவாகப் பிரெஞ்சுப் படைகளும் தளபதிகளும் உறுதியோடு நின்றார்கள். பிரெஞ்ச் தளபதி மார்ச்சந்திற்கும் கான்சாகிப்பிற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. எனினும் அவரே சிறந்த தளபதி என்பதை உணர்ந்த கான்சாகிப் அவருக்கு முன்னுரிமை கொடுத்தார். ஒரு வாரம் கழித்து ஆங்கிலேயர் 15-09-1763ல் மீண்டும் போரைத் தொடங்கினர். அப்போதும் தோல்வி. ஆங்கிலேயர்களின் தோல்வியில் கிடைத்த அமைதியில், தற்காலிக இடைவெளியைச் சரியாகப் பயன்படுத்தினார் கான்சாகிப். கோட்டைக்குள் உணவு, ஆயுதங்கள், மருந்துகள் கொண்டு வரப்பட்டு அடுத்த போருக்கு தயாரானார்கள்.
போரின் கொடுமையும் ஹைதரலியின் உதவியும்
ஆங்கிலேயர்கள் தங்கள் படையை பலப்படுத்தி மீண்டும் மதுரைக்கு வந்தனர். 31-01-1764ல் பம்பாயிலிருந்து சிறப்பு ஆங்கிலேய அதிரடிப் படையும் மதுரைக்கு வரவழைக்கப்பட்டது. இவர்கள் தொண்டி துறைமுகத்தில் இறங்கினர். மதுரையை சுற்றியிருந்த சிறிய சிறிய பாளையக்காரர்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் வளைத்தனர். இதனை அறிந்த கான்சாகிப் ஆங்கிலேயர்களையும், ஆற்காட் நவாப்பையும் ஆதரிப்பவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதற்குச் சமம் என்றும், தனக்குப் பாளையக்காரர்கள் அதாவது சிற்றரசர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர்களுக்குக் கடிதம் எழுதினார்.
கான்சாகிப், ஹைதர் அலியிடம் ராணுவ உதவியைக் கோரினார். “நானும், நீயும் வேறல்ல. நமது படையும், நாடும் வேறல்ல” என்று சகோதர உணர்வோடு ஹைதர் அலி கடிதம் எழுதி தனது ஆதரவை வழங்கினார் என்று ஹயவதனாராவ் தனது மைசூர் வரலாறு என்ற நூலில் குறிப்பிடுகிறார். பிப்ரவரி 1764ஆம் ஆண்டில் ஹைதர் அலி, சுலைமான் என்ற தளபதியின் கீழ் ஒரு பெரும்படையை கான்சாகிப்பிற்காக அனுப்பி வைத்தார். போதாக்குறைக்கு19-02-1764ல் பிரெஞ்சுப் படைகளும் வந்து சேர்ந்தன.
உற்சாகத்தில் சிலிர்த்து எழுந்தார் கான்சாகிப். அவரது நிலப்பரப்பின் முக்கிய எல்லைகளில் படைகள் முன்னிறுத்தப்பட்டது. வடக்கே நத்தம், தெற்கே பாளையங்கோட்டை பகுதிகளில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், அகழிகள், மணல் மேடுகள் என தற்காப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. மீண்டும், மீண்டும் ஆங்கிலேயர்கள் சளைக்காமல் மதுரையைக் குறிவைத்துப் போரிட்டனர். நவீன ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தனர். 1764 ஜூன் மாதம் தொடர்ந்து நடைபெற்ற போரில் ஆங்கிலப்படை தோல்வியை சந்தித்தது. ஆங்கிலேயர்கள் புறமுதுகிட்டு ஓடியதோடு, சமாதானக் கொடியையும் ஏற்றினர். செய்தி கேட்டு அலறினார் ஆற்காட்டு நவாப். அதே நேரம் மதுரை மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டதாலும், போரினால் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவினாலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. கோட்டையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அது கான்சாகிப்பிற்குப் பெரும் இக்கட்டான சூழலை ஏற்படுத்தியது. கான்சாகிப், சரணடைய விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்ததுடன் கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை தாய் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கர்ஜித்தார்.
அவமானம் தாளாத ஆங்கிலேயர்கள் சிறிது காலம் தாழ்த்தி மதுரையை முற்றுகையிட்டுப் போரிட்டனர். அதிலும் அவர்கள் தோல்வியையே தழுவினர். இதனால் போரிட்டு கான்சாகிப்பை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து, கான்சாகிப்பிற்கும் அவனது படைகளுக்கும் உணவுகூடக் கிடைக்காமல் செய்து விட்டால் அவர்கள் பசிபட்டினியால் வலியச் சரணடைவதைத் தவிர வேறு வழி இராது என்று கருதி ஆங்கிலேயர்கள் மதுரையைச் சுற்றி இரும்புத் திரை முற்றுகையிட்டனர்.
கோட்டைக்குள் நேர்ந்த அவலம்
மதுரைக் கோட்டைக்குள் உணவுப் பற்றாக்குறை நிலவியது. உணவில்லாமல் பிரெஞ்சுத் தளபதிகள் குதிரைகளையும் கழுதைகளையும் பூனைகளையும் கொன்று தின்றனர். பெண்கள் குழந்தைகள் ஆகியோர் உண்பதற்கு ஒன்றுமில்லாமல் கான்சாகிப்பின் முன்னாலேயே இறந்து வீழ்ந்தனர். அவ்வாறு வீழ்ந்த பிணங்களை ஒதுக்கித் தள்ளுவதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. உண்ண உணவில்லா விட்டாலும் வெற்றிலை புகையிலையை மென்று கொண்டே கான்சாகிப்பின் படைவீரர்கள் பட்டினியாகக் கிடப்பார்கள் என்றறிந்த ஆங்கிலேயர்கள் அதனையும் கோட்டைக்குள் போகவிடாமல் துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு தடை செய்தனர். மதுரைக்கு வெளியில் இருந்த வெற்றிலைக் கொடிக்கால்களை ஆங்கிலேயர்கள் தீவைத்து அழித்தார்கள்.
துரோகியாக மாறிய அமைச்சர்
போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும், வஞ்சகங்களையும் கையாண்டனர். கான்சாஹிப்பின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர். இதற்குப் பின்னணியில் சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் இருந்தான். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.
பசியின் கொடுமை தாளாது வாடி வதங்கிய வீரர்கள் பலர் எதிரிகளின் கூட்டத்தில் போய்ச் சேர்ந்தார்கள். இதற்குப் பிரெஞ்சுத் தளபதிகளே உதவினார்கள். இதனை அறிந்த கான்சாகிப் கடுமையாகச் சினமுற்றார். உதவி செய்ய வந்த பிரெஞ்சுப் படைத்தளபதிகளே இவ்வாறு செய்வதை அறிந்து மனம் குமுறினார். தனது நண்பனான பிரெஞ்சுத் தளபதி மார்ச்சந்தை அழைத்துக் கடிந்து கொண்டதோடு தனது கையில் வைத்திருந்த தடியால் அவனது மண்டையில் அடித்து அவமானப்படுத்தினார். இச்செயல் மார்ச்சந்த்தை கான்சாகிப்பிற்கு எதிராகத் துரோகமிழைக்கச் செய்தது.
கான்சாகிப்பின் கைததடியால் அடிபட்ட மார்ச்சந்த் அமைச்சர் சீனிவாசராவைக் கைக்குள் போட்டுக் கொண்டான். இருவரும் சேர்ந்து மற்றவர்களையும் தங்களின் வஞ்சக வலைக்குள் இணைத்துக் கொண்டு ஆங்கிலேயர்களின் கைக்கூலியானார்கள். “நம்மையெல்லாம் ஆங்கிலேயர்களிடம் நாசமாகும்படி விட்டுவிட்டு கான்சாகிப் குடும்பத்துடன் தப்பியோடப் பார்க்கிறான், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான்” என்ற தவறான வதந்திகளைக் கோட்டை முழுதும் இவர்கள் திட்டமிட்டுப் பரப்பினார்கள்.
இதனைக் கேள்வியுற்ற, ஏற்கனவே பசியாலும் பட்டினியாலும் துடித்துத் துன்புற்றுக் கொண்டிருந்த படைவீரர்கள் கான்சாகிப்பின் மீது கடுங்கோபங் கொண்டனர். அவர்கள் கான்சாகிப்பின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப்பைப் பிடித்துக் கொடுத்தால், பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரம் நடந்தது. திட்டம் தயாரானது. ஆங்கிலேயர்கள் இத்தகவலினை வெளியில் இரகசியமாகப் பரப்பினர்.
கான்சாகிப்பை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில், இதை அறியாதவராக கான்சாகிப் இருந்தார். நொந்துபோன மனநிலையில் 13-10-1764 அன்று மாலை ஐந்து மணியளவில் கான்சாகிப் தனியறையில் மண்டியிட்டு இறைவனைத் தொழுது கொண்டிருந்தார். அப்போது திடகாத்திரமான நான்கு வீரர்களுடன் துரோகிகள் அனைவரும் அறைக்குள் நுழைந்தனர். மண்டியிட்டு கான்சாகிப் இறைவனைத் தொழுது கொண்டிருந்ததால் இதனை அறியவில்லை.
அறைக்குள் நுழைந்த துரோகிகள் அனைவரும் கான்சாப்பின் மீது பாய்ந்து அமுக்கி பிடித்துக் கைகால்களைக் கட்டினர். இத்தாக்குதலை கான்சாகிப் சற்றும் எதிர்பார்க்கவில்லை. துரோகிகள் கான்சாகிப்பை சிறைபிடித்தனர்.
தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களைப் பார்த்து “காசுக்கும் வாழ்விற்கும் ஆசைப்படும் நீங்கள் என்னை இங்கேயே உங்கள் கை வாள்களாலேயே கண்ட துண்டமாக வெட்டி எறிந்து விடுங்கள். ஆற்காட்டு நவாப்பிடமோ, ஆங்கிலேயர்களிடமோ ஒப்படைத்து விடாதீர்கள்” என்று கான்சாகிப் கைகூப்பி வேண்டினான். அதனை ஏற்க மறுத்த மார்ச்சந்த், கான்சாகிப்பைத் தனியறையில் கொண்டு போய் அடைத்தான்.
துரோகிகளின் செயல் காட்டுத் தீபோல் கோட்டையெங்கும் பரவியது. கான்சாகிப்பின் மனைவியான வெள்ளைக்காரப் பெண்மணி மாசா தனது கணவனை விட்டுவிடுமாறு மார்ச்சந்திடம் மன்றாடினாள். அவளின் கண்ணீர் மார்ச்சந்தின் மனதை இளக்கவில்லை. அவளைப் பார்த்து மார்ச்சந்த் கைகொட்டிச் சிரித்தான்.
பிரெஞ்சுத் தளபதியின் சதிச்செயலையும் அமைச்சர் சீனிவாசராவின் துரோகத்தையும் கேள்வியுற்ற ஒருவன் தாயை இழந்த சேய் போன்று புலம்பிக் கொண்டே கோட்டையெல்லாம் சுற்றிச் சுற்றி வந்து மார்ச்சந்தின் துரோகச் செயல்களை அனைவரும் அறியச் சத்தம்போட்டுக் கூறினான். இதனைக் கேட்ட படைவீரர்கள் எங்கே எங்கள் தலைவன் கான்சாகிப்? அந்தத் துரோகி மார்ச்சந்த் அமைச்சர் சீனிவாசராவ் எங்கே? என்று வாள்களை உருவிய வண்ணம் கேட்டனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த மார்ச்சந்த் சதிச் செயலை அம்பலப்படுத்திக் கூவித் திரிந்தவனைச் சுட்டு வீழ்த்தினான். அவன் இறந்து வீழவும் மற்றவர்கள் சிதறி ஓடினர். மார்ச்சந்த் வெற்றிக் களிப்பெய்தினான்.
அக்டோபர் மாதம் 13ஆம் நாள் நள்ளிரவில் ஆற்காட்டு நாவாபிடமும் ஆங்கிலேயர்களிடமும் தனது கையாட்களைக் கொண்டு தூதனுப்பி துரோகிகள் பேரம் பேசினர். பேரம் படியவே கான்சாகிபைக் கைகால்களைப் பந்துபோல் கட்டி அவர்களிடம் ஒப்படைத்தனர்.
கான்சாகிப்பினது மகனும், மனைவியும் திருச்சிச் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த நாள் மதுரை கோட்டையில் ஆற்காடு நவாப்பின் கொடி ஏற்றப்பட்டது.
மாவீரனின் மறைவு
சிறைபிடிக்கப்பட்ட கான்சாகிப்பை சித்ரவதைக்கு உள்ளாக்கினார்கள். ஆற்காடு நவாப்பை பார்த்துத் தலை வணங்குமாறு கூறினார்கள். கான்சாகிப் முடியாது என மறுத்தார். உணவுத் தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி. ஆனாலும் மானமும், வீரமும் அவருக்கு உரமேற்றின.
கான்சாகிப்பிற்கு என்ன தண்டனை? என விவாதிக்கப்பட்ட போது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், ஆற்காடு நவாப் கோபமடைந்தார். அவரைத் தூக்கிலிடுங்கள் அல்லது என்னைக் கொல்லுங்கள் என அடிமைக் குரல் கொடுத்தார். 1764ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் நாள் மாலை 5 மணிக்குப் படைமுகாம் வழியாக கான்சாகிப் அழைத்துச் செல்லப்பட்டார். அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட கான்சாகிப்பைத் திண்டுக்கல் செல்லும் சாலையின் ஓரத்தில் இருந்த மாமரத்தில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். தூக்கிலிடப்பட்டதும் கான்சாகிப் இறக்கவில்லை. மாறாகத் தூக்குக் கயிறு அறுந்து விழுந்தது. புதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டார். அப்போதும் அவரது உயிர் பிரியவில்லை. எதிரிகள் குலை நடுங்கினர். இறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் மாவீரனின் உயிர் பிரிந்தது. இவரைப் பற்றிய இத்தகவல்கள் கான்சாகிப் சண்டை என்ற நாட்ப்புறக் கதைப் பாடலில் காணக் கிடைக்கின்றன.
அதன் பின்னர் கான்சாகிப்பின் தலை சந்தா சாகிப்பின் தலையைப் போன்று வெட்டித் திருச்சிக்கு அனுப்பப்பட்டது. அவனது உறுப்புகள் கூறுகூறாகக் கொஞ்சகாலம் மதுரை மாநகரின் தலைவாயிலில் வைத்திருந்த பின், தஞ்சை, பாளையங்கோட்டை, திருவாங்கூர் முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டன என்று அதன் பின் நடந்த கொடுமையை கான்சாகிபைப் பற்றிய ஆராய்ச்சி நூலை எழுதிய ஹில்லே என்ற வருணித்திருப்பது அனைவரது உள்ளத்தையும் பதைபதைக்க வைக்கும் கொடுமையாகும்.
சிறிது காலம் மட்டுமே துரோகிகள் வாழ்கின்றனர். ஆனால் வீரர்கள் காலங்கள் பல கடந்தாலும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வீரம் மக்களின் மனதிலும் உலக வரலாற்று ஏடுகளிலும் நின்று நிலைத்து வாழ்ந்து கொண்டே இருக்கின்றது. தங்களுக்குள் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டை மனதில் வைத்துக் கொண்டு எவ்வாறு ஒருவன் துரோகியானான் என்று பார்த்தீர்கள். அதனால எதையும் அப்படியே நம்பிவிடாதீர்கள். இந்த உலகத்துல உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நெனக்கிறவர்கள் பலர் உள்ளனர். அதனால்,
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”
என்று வள்ளுவர் சொன்னது போன்று, நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் துரோகிகளிடமிருந்தும் அவர்களின் துரோகச் செயல்களிலிருந்தும் தப்பிக்க முடியும். உலகத்திலே உடனே ஒருவர் மனதில் தோன்றுவது எது தெரியுமா? அது துரோகம்தான். நாம் உதவி செய்கிற வரைக்கும் நம்முடன் இருப்பவர்கள், நாம் உதவி செய்ய இயலாத போது, உடனே நமக்கு எதிராகத் திரும்பி விடுவார்கள். அதுதான் இந்த உலகத்தின் இயற்கை மனநிலை.
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்று சொல்வார்கள். அட ஆமாங்க. தப்பு செய்தவன் ஒருத்தன். ஆனால், பழியும் தண்டனையும் அடைபவன் இன்னொருவன். ஒரு பழமொழி இருக்கிறது, “தேங்காய் திங்கறவன் ஒருத்தன்; தெண்டம் கட்டுறவன் ஒருத்தன்”. அது,உண்மைதான். ஒருவன் உடனிருந்தே காட்டிக் கொடுத்தான். அது மட்டுமில்லை, அவர் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் சென்று ஒரு தியாகச் சுடர், ஆங்கிலேயருக்கு எதிராக் குரல் கொடுத்த ஒருவரைக் காட்டிக் கொடுத்துத் தாய்நாட்டுக்குத் துரோகம் செய்தார்.
ஆனால், அவனை இந்த வரலாற்று உலகம் துரோகி என்று சொல்லவில்லை… காட்டிக் கொடுத்தவன் அப்படீன்னு சொல்லவில்லை. ஆனால், சந்தர்ப்பவசத்தால காட்டிக் கொடுத்தவன் என்று அபாண்டமான ஒரு பழியைச் சுமந்தவர் இன்னொருத்தர். அவரு யாரு? யாரைக் காட்டிக் கொடுத்தார்? இன்று வரை அந்தப் பழியைச் சுமந்துக்கிட்டு இருக்கறவங்க யாரு? இந்த வினாக்களுக்கெல்லாம் விடை தெரிய அடுத்த பகுதி வரை காத்திருங்கள்…!

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.