வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும்
முனைவர் சி. சேதுராமன்
11. எட்டப்பன் செய்த துரோகம்
எல்லோருக்கும் வரலாற்றில் இடம் பிடித்து விடவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. சிலர் இதற்கு என்ன செய்யலாம்? என்று சிந்திப்பார்கள். நேர்மையான வழியில் வரலாற்றில் இடம் பிடிக்கிறது என்பது கடினம்தான். காலமும் அதிகம் தேவைப்படும். ஆனால் குறுக்கு வழியில் சென்றால் விரைவில் வரலாற்றில் இடம் பிடித்து விடலாம் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காகப் போலியான நடிப்பு, பொய்யான வேடம் என்று தங்களை மாற்றிக் கொண்டு உலகை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பொய்யைச் சொல்லி ஏமாற்றித் தங்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில் துரோகிகள் கவனத்துடன் செயல்படுகிறார்கள்.
பொய்யைச் சொல்லிப் பிறரை ஏமாற்றிய துரோகிகள் வரலாற்றில் வாழ்ந்து விடுகிறார்களா? என்றால் அதுதான் இல்லை, அவர்களும் ஏமாற்றத்தையேச் சந்திக்கின்றனர். நாம் எதை விதைக்கிறோமோ... அதையே நாம் திரும்பப் பெறுகிறோம். ஏமாற்றும் வித்தையுடன் துரோகமும் சேர்ந்து கை கோர்த்துக் கொள்கிறது. அதுமட்டுமல்ல; இவற்றுடன் பொய்மையும் சேர்ந்து கொண்டு எல்லோரையும் பழி வாங்கத் தொடங்குகிறது. இதற்கெல்லாம் வஞ்சமான மனம்தான் காரணம்.
துரோகிகள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வர். அவர்கள் யாரிடமும் உண்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள். எப்படி வேண்டுமானாலும் பொய் பேசி வஞ்சக எண்ணத்துடன் நடந்து கொண்டு தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். அது மட்டுமின்றி, தன்னை நம்பியவர்களுக்கும் துரோகம் செய்வார்கள். இதற்கு ஒரு பஞ்சதந்திரக் கதை இருக்கிறது.
ஒரு துறவியின் ஆசிரமத்தில் பல சீடர்கள் படித்து வந்தனர். துறவியான குருவும் அவர்களுக்கு நன்கு போதித்து வந்தார். ஒரு நாள் பேராசையும் துரோக எண்ணமும் கொண்ட மாணவன் ஒருவன் அவரிடம் சீடனாகச் சேர்ந்தான். குருவினிடம் அமிர்தம் கொண்ட குடம் ஒன்று இருந்ததைத் தெரிந்து கொண்டு அதனை வஞ்சகத்தால் அபகரிக்கும் எண்ணத்துடனே அவன் அவரிடம் சீடனாக வந்து சேர்ந்திருந்தான்.
அவன் குருவிடம் நல்ல சீடன் என்ற பெயர் எடுத்த பின், மெதுவாக அந்த அமிர்தக் குடத்தைக் கைப்பற்ற எண்ணினான். அதனால் குருவுக்கு விழுந்து விழுந்து பணிவிடைகள் செய்தான். நயவஞ்சகமாக நடந்து, நடித்து அவரிடம் நற்பெயரைச் சம்பாதித்துக் கொண்டான். குருவுக்கு அச்சீடன் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. அவர் அவனைச் சந்தேகிக்கவில்லை.
அவனது நடத்தை குருவுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. குருவும் ஒரு நாள் மனம் மகிழ்ந்து, சீடனைப் பார்த்து, “மகனே நீ எனக்குச் செய்யும் தொண்டில் மனம் மகிழ்ந்து போனேன். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன்!” என்றார்.
இந்தச் சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த அந்த நயவஞ்சகச் சீடன், “குருவே உங்களுக்குத் தொண்டு செய்வதே எனக்கு மிக முக்கியமான பணியாகும். ஆனாலும், நீங்கள் கேட்டதால் நான் விரும்பியதைக் கேட்கிறேன். எனக்குத் தங்களிடமுள்ள அமிர்தக் குடம் வேண்டும். அதனைத் தருவீர்களா...?” என்று கேட்டான்.
அப்போதுதான் அந்தத் துறவி உண்மை நிலையை அறிந்து கொண்டார். அவனது துரோக எண்ணத்தையும் புரிந்து கொண்டார். அவர் தனது மனதிற்குள், “குருத் துரோகி நல்லவன் போல் நடித்தது இதற்குத்தானா?” என எண்ணினார். ஆனாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக அவர் அந்தத் துரோகியான சீடனுக்கு அமிர்தம் நிறைந்த குடத்தைத் தருவதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை விதித்தார். “சீடனே, நீ இந்தக் குடத்தைத் தரையில் வைக்கக் கூடாது; அப்படி வைத்தால் அதன் சக்தி போய்விடும்” என்றார்.
அதற்கு அந்தச் சீடன், “அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். வாக்குத் தவறாமல் முதலில் எனக்கு அமிர்தக் குடத்தைக் கொடுங்கள். “ என்று ஆணவத்துடன் கேட்டான்.
துரோகியான அந்தச் சீடனின் கையில் குடம் வந்தது. நினைத்த காரியத்தைச் சாதித்த பெருமை, அதுவும் குருவுக்குத் துரோகம் செய்து ஏமாற்றி விட்டோம் என்ற அகந்தை இரண்டும் சேர்ந்து கொள்ளவே, குருவுக்கு நன்றி கூடக் கூறாமல், அவரை அவமதித்துத் திமிருடன் நடந்தான்.
தன் பெருமையை ஊர் முழுவதும் கூறி அமிர்தத்தை ஒருவருக்கும் தராமல் முழுவதையும் தானே குடித்துப் பேரானந்தம் அடைய வேண்டும் என்ற பேராசை அவனுக்குள் ஏற்பட்டது. அவன் விரைவாக வீடு நோக்கி நடக்கும் போது நடுவில் ஒரு சிற்றாறு வந்தது. அங்கு ஒரு தோணி இருந்தது; ஆனால் படகோட்டி இல்லை. சரி தானே அதை ஓட்டிக் கொண்டு செல்லலாம் என்று பார்த்துத் தன் குடத்தை, தான் தோணியை நகர்த்தும் வரையில் யாராவது ஒருவரிடம் கொடுத்துப் பின் வாங்கிக் கொள்ளலாம் என நினைத்தான். அங்கு மரத்தடியில் ஒருவன் வருத்தமாக அமர்ந்து கொண்டிருந்தான்.
சீடன் அவன் அருகில் சென்று, “ஐயா, இந்தத் தோணியை ஆற்றில் இறக்கி விடவேண்டும். என் கையில் ஒரு குடம் உள்ளது. அதைக் கொஞ்ச நேரம் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இக்குடத்தை எக்காரணம் கொண்டும் தரையில் வைத்து விடாதீர்கள்! தவிர அதற்குள் இருப்பதைக் குடித்து விடாதீர்கள்!” என்று கூறினான்.
அதற்கு அவன் “ஏன்? அதற்குள் என்ன இருக்கிறது?” என்று கேட்டான்.
“அது…ஒரு விஷம். ஒரு மருந்து செய்யக் கஷ்டப்பட்டுக் கொண்டு வந்திருக்கிறேன்.” என்று கூறவே மரத்தடியில் இருந்த மனிதனும் அதை வாங்கிக் கொண்டான். அவனுக்குப் பல வருடங்களாக வயிற்றுவலி மிகுந்த தொல்லை கொடுத்து கொண்டிருந்தது. அவனுக்கு இதனால் உயிர் வாழவே விருப்பமில்லை. நல்ல வேளையாக கையில் தற்போது விஷம் இருந்தமையால் அதைச் சீடன் வருவதற்குள் மடமடவெனக் குடித்து விட்டான். ஆனால் அவன் சாகவில்லை. அவன் குடித்தது அமிர்தம் அல்லவா? சீடன் மளமளவென ஆற்றில் இறங்கினான்.
தோணியை இறக்கிய சீடன் வேகமாகத் தன் குடத்தைப் பெற்றுக் கொள்ள கரைக்கு வந்தான். அங்கு அந்த மரத்தடி மனிதனில்லை. குடம் மட்டும் கீழே கிடந்தது. அமிருதம் எல்லாம் காலி. கோபத்துடன் சீடன் வழிபோக்கனைத் தேட அவன் அமிர்தத்தைக் குடித்து விட்டு ஆனந்த நடனம் ஆடிக் கொண்டிருந்தான். பின் அவன் சீடனைப் பார்த்து, “எனக்கு வாழ்வு கொடுத்த ஐயா! என் வயிற்றுவலி பொறுக்காமல் என் உயிரைப் போக்கிக் கொள்ளும் எண்ணத்துடன்தான் நான் இங்கு வந்தேன். உங்கள் குடத்தில் விஷம் இருக்கு என்று தெரிந்தவுடன் நான் அதைக் குடித்து விட்டேன். ஆனால் உங்கள் விஷம் என் வயிற்றுவலியைப் போக்கி விட்டது. இப்போது ஆனந்தமாக நடனம் ஆடுகின்றேன். மிக்க நன்றி ஐயா!“ என்று கூறினான்.
குருவுக்குத் துரோகம் செய்து அவரை ஏமாற்றி அமிர்தக் குடம் வாங்கியதற்குத் தனக்குக் கை மேல் பலன் கிட்டிவிட்டது. தான் கூறிய சிறிய பொய்யால் தன் வாழ்க்கையே நாசமாகி விட்டதை எண்ணி மனம் வருந்தினான்.
இதற்குத்தான் யாரையும் பொய் சொல்லி ஏமாற்றி, அவருக்குத் துரோகம் செய்யக் கூடாது. பிறருக்குத் துரோகம் செய்து சேர்த்த பொருள் அழியாத இழிவையும் ஆறாத் துன்பத்தையும் தான் தரும். அத்தகையோரை மக்கள் என்றென்றும் பழி தூற்றிக் கொண்டேதான் இருப்பர். அவர்களது பெயர் என்றென்றும் வரலாற்றில் படிந்த கறையாகவே நீடித்து இருக்கும்.
சிலர் செய்த தியாகத்தாலும், வீரத்தாலும் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்… சிலர் தாங்கள் செய்த துரோகத்தால் இடம் பிடிக்கிறார்கள்… காந்தியடிகளை நினைவு கூறும் போது கூடவே கோட்சேவும் நம் நினைவுக்கு வருகிறார்… இந்தக் கோட்சேவுக்கும் முன்னோடியாக ஒருவன் இருந்தான். அவனை வரலாறு மன்னிக்காது… அவன் வீரத்தாலோ, தியாகத்தாலோ வரலாற்றில் இடம் பெறவில்லை. அவன் செய்த துரோகத்தால் வரலாற்றில் இடம் பிடித்தான். அவன்தான் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த துரோகி எட்டப்பன்.
எட்டப்பனுடைய துரோகம் என்னவென்று அறிந்து கொள்வோமா…?
கிழக்கிந்தியக் கம்பெனியின் சூழ்ச்சி
1791-ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30-ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறினார். இதே காலத்தில்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையில் ஏற்பட்டது. வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கம்பெனியின் நிர்வாகிகள் பாளையக்காரர்களை வரி வசூலிப்பதற்குத் தடைக் கற்களாகப் பார்த்தனர். அதனால் அவர்களை ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
அதற்கேற்ப, தங்களுடன் சேர்ந்து கொண்ட பாளையக்காரர்களையும், எதிர்க்கும் பாளையக்காரர்களையும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். தங்களுடன் சேர்ந்து செயல்பட்டவர்களுக்குச் சலுகைகள் என்ற எலும்புத் துண்டுகளையும், எதிர்ப்பாளர்களுக்குத் தண்டனையையும் அதிக வரியையும் விதித்தனர்.
இவ்வாறே ஆங்கிலேயரை எதிர்த்த எதிர்ப்பாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள் எட்டப்பனுக்குத் தரப்பட்டது. அதே போன்று வானம் பார்த்த பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தது.
கிழக்கிந்தியக் கம்பெனி கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை தாங்கள் எடுத்ததாகக் கூறியது. இதனால் சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்தார்.
ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரி வசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்தனர். தங்களுக்கு எதிரான கட்டபொம்மனின் நடவடிக்கையை "கொள்ளை' என்று கூறி இழிவாகக் குற்றம் சுமத்தினர்.
ஜாக்சன் - கட்டபொம்மன்
இந்தக் காலகட்டத்தில்தான் கம்பெனியால் இராமநாதபுரம், திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்பட்டான். இந்த ஜாக்சன், “அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் தன்னை சந்திக்க வேண்டும்” என்று கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினான். நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை அலைக்கழிக்க வேண்டுமென்று திட்டமிட்டு ஊர் ஊராகச் சென்று அலைக்கழித்தான். அதன் பின்னர் 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் கட்டபொம்மனைச் சந்தித்தான். ஜாக்சன் கட்டபொம்மனை அவமானப்படுத்திச் சிறைப்படுத்த முயலவே அவனது சூழ்ச்சியிலிருந்து கட்டபொம்மன் தீரத்துடன் தப்புகிறார். தன்னை அவமானப்படுத்திய ஜாக்சன் குறித்து சென்னை சென்று விளக்கம் அளிக்கிறார் கட்டபொம்மன். அதனால் ஜாக்சனை ஆங்கிலேயர் மாற்றினர்.
கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவியது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்றான். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைந்தது. இந்தச் சூழலில் தென்னகத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே மாதம் 1799-இல் வீரமரணம் எய்தவே, ஆங்கிலேயரின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்பின.
தன்னை உடனே வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு லூஷிங்டன் கட்டளையிட்டார். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுத்தார். போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்தோடு ஆங்கிலேயருடன் கட்டபொம்மன் நிதானமான போக்கைக் கடைப்பிடித்தார். ஆனால் ஆங்கிலேயர்களோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிட்டு அவர்மீது படையெடுத்தனர்.
எட்டப்பன் - ஆங்கிலேயர்கள்
ஆங்கிலேயர்கள் அடிவருடியான எட்டப்பனைக் கொண்டு கட்டபொம்மனை வீழ்த்த வியூகம் ஒன்றை அமைத்தனர். ஆங்கிலேயர்களின் துணை கொண்டு கட்டபொம்மனுக்குச் சொந்தமான பகுதிகளில் வரிவசூல் செய்ய முற்பட்டான் எட்டப்பன். ஆனால் கட்டபொம்மனின் எதிர்ப்பால் திரும்பினான் எட்டப்பன். எந்த வழியில் கட்டபொம்மனது செயல்களை யாரை வைத்து அடக்கலாம் என்று யோசித்த லூஷிங்டனுக்கு எட்டப்பன் மீண்டும் நினைவுக்கு வரவே அவனிடம் லூஷிங்டன், “கட்டபொம்மன் ஒரு மர்ம மனிதனாக இருக்கிறான், அவன் மனத்தில் உள்ளதனைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் நீங்கள் எங்களுக்காக மாறுவேடத்தில் போய் அவன் மனதினை அறிந்து வர வேண்டும்” என்று சொன்னான்.
அதன்படி எட்டப்பன் மாறுவேடம் பூண்டு பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குப் போனான், வாயிலிலிருந்த காவலர்களிடம் கட்டபொம்மனைக் காணவேண்டும் என்று அனுமதி கேட்டுக் கோட்டைக்குள் நுழைந்தான். தன்னிடம் வந்தவனைக் கட்டபொம்மன் வரவேற்று வந்த விஷயத்தைக் கூறுமாறு கேட்டார்.
மாறுவேடத்தில் வந்த எட்டப்பன், “உங்கள் நன்மைக்காகத்தான் நான் வந்தேன். ஆங்கிலேயர்களை எதிர்க்கும் போக்கைக் கைவிடுங்கள். அவர்கள் ஒரே நாளில் உங்கள் கோட்டையைத் தரைமட்டமாக்கி விடுவார்கள். அந்த அளவிற்கு அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. நானே அவைகளை நேரில் பார்த்தேன்” என்று வெள்ளையர்களின் பெருமைகளைப் பற்றி எடுத்துரைத்தான்.
இவற்றையெல்லாம் கேட்ட கட்டபொம்மன், தூதுவனாக வந்தவன் எட்டப்பன் என்பதைத் தெரிந்து கொண்டு, “ஏ எட்டப்பா! இனத் துரோகியே… மாறு வேடத்தில் வந்து என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய்…” என்று கர்ஜித்தார். இதனை அறிந்த ஊமைத்துரை வாளை உருவினார். ஆனால் கட்டபொம்மன் அதனைத் தடுத்து எட்டப்பனை மன்னித்து அனுப்பினார். எட்டப்பன் தப்பி வெளியில் ஓடிவந்து திருநெல்வேலிக்கு ஓடோடிச் சென்று நடந்தவைகளைச் சொல்லி அழுதான்.
ஆங்கிலேயர்கள் எட்டப்பனின் துணையுடன் கட்டபொம்மனைப் பற்றி பல அவதூறுகளைப் பரப்பினர். எதற்கும் கட்டபொம்மன் அசைந்து கொடுக்கவில்லை. இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையினை முற்றுகையிட்டுப் போர்புரிந்து கட்டபொம்மனைக் கைது செய்ய வேண்டும் என்று ஆலன்துரை தலைமையில் 1797-ஆம் ஆண்டு பெரும் படையொன்றை அனுப்பி வைத்தனர்.
ஆலன்துரைக்கு எட்டப்பன் பாஞ்சாலங்குறிச்சியைப் பற்றிய தகவல்கள் பலவற்றைக் கூறினான். ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் மீது குண்டுமழை பொழிந்தான். ஆனால் கோட்டைக்குள் இருந்து எறியீட்டிகள் பறந்து வந்து ஆங்கிலேயப் படையினைத் தாக்கின. பல வீரர்கள் வீழ்ந்து இறந்தனர். ஆங்கிலேயர் இதில் தோல்வி கண்டனர். படுதோல்வி அடைந்த ஆலன்துரை ஆங்கிலேய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கட்டபொம்மனைப் பணிய வைப்பது, அவரிடமிருந்து வரிப்பணத்தை வசூலிப்பது எட்டப்ப நாயக்கருக்குப் பாதுகாப்புக் கொடுப்பது என்ற மூன்று வகையின் அடிப்படையிலும் அதிகாரிகளின் ஆலோசனை இருந்தது. வரிகட்ட வேண்டும் என்று கட்டபொம்மனுக்குக் கடிதங்கள் அனுப்பினர். ஆங்கிலேயர்களின் கடிதங்களை கட்டபொம்மன் கண்டு கொள்ளவே இல்லை.
கட்டபொம்மனின் நண்பனாக இருந்து அவருக்கு உதவியவர் டேவிசன் என்ற ஆங்கிலேயர் ஆவார். டேவிசன் பாஞ்சாலங்குறிச்சிக்கு விரைந்து வந்து அனைத்து விபரங்களையும் அறிந்தார். கட்டபொம்மனின் பக்கம் நியாயங்கள் இருப்பதைக் கண்ட டேவிசன் அவருக்காக ஆங்கிலேயர்களிடம் போராடுவதைத் தன் கடமையாகக் கருதினார். இதுதாங்க உலகம்; எங்கிருந்தோ வந்த ஒருவர் நம்மவருக்காகப் போராடுகிறார். ஆனால் நம் நாட்டில் நம் கூடவே இருக்கிறவர் துரோகம் செய்கிறார். இது அநியாயம் அல்லவா?
பானர்மெனின் படையெடுப்பு
எட்டப்பன் கூறியதைக் கேட்ட லூஷிங்டன் பொறுமையிழந்து, சென்னை கவர்னராக இருந்த லார்டு எட்வர்டு கிளைவிடம் படைஎடுத்து வருமாறு கோரிக்கை விடுத்தான். கிளைவ் ஆலோசனை செய்து, இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப் படையொன்றைப் பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுவதற்கு அனுப்பினான்.
பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்த்துக் கட்டபொம்மனைப் பிடித்திட ஒரு மணிநேரம் போதும் என்று பானர்மென் நினைத்தான். ஆனால் பலமணி நேரம் போராடியும் கட்டபொம்மனை வெற்றி கொள்ள முடியவில்லை.
பானர்மெனின் கலக்கம்
இந்நிலையில் பீரங்கிகளைப் பயன்படுத்த குண்டுகளும் இல்லை. படையினரின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வந்தது. பானர்மெனின் தளபதி காலின்ஸ், கட்டபொம்மனின் படைத்தளபதி வெள்ளையத்தேவனால் கொல்லப்பட்டான். அதனை அறிந்த பானர்மென் கதிகலங்கிப் போனான். பயந்து போயிருந்த பானர்மென் வெள்ளையத் தேவனைப் பிடித்துத் தருவோருக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். போர் நடந்து கொண்டிருந்தபோது வெள்ளையத்தேவன் அவனது மாமனின் வஞ்சகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டு ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டான். கட்டபொம்மனை அடக்குவதற்குப் பானர்மென் அதிகமான படைகளை வரவழைத்தான்.
ஆங்கிலேயர்களின் பெரும் படையுடன் மோதி வெல்வது அரிது என்றுணர்ந்த கட்டபொம்மன் தனது அமைச்சர் தனாதிபதிப் பிள்ளையுடன் ஆலோசனை செய்த பின்னர் பாஞ்சாலங்குறிச்சியைவிட்டு வெளியேறினார். படை திரட்டிக் கொண்டு வந்து மீண்டும் வெள்ளையரை எதிர்க்கலாம் என்று அவரது தம்பியர்களும், தளபதிகளும் அமைச்சரும் கட்டபொம்மனைப் பின் தொடர்ந்தனர்.
கட்டபொம்மன் கோட்டையிலிருந்து தப்பி விட்டதையறிந்த பானர்மென், வடதிசையில் உள்ள மன்னர்கள் அனைவருக்கும் கட்டபொம்மனைப் பிடித்துத் தருமாறு கடிதம் எழுதி அனுப்பினான்.
எட்டப்பனின் காட்டிக் கொடுக்கும் படலம்
பானர்மெனின் கடிதத்தைப் பார்த்த எட்டப்பன் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுப்பதற்கும், பிடித்துக் கொடுப்பதற்கும் தனது படைகளை ஏவினான். கட்டபொம்மன் கோலார்பட்டியின் பாளையக்காரர் இராஜகோபால நாயக்கர் இல்லத்தில் இருப்பதாக அறிந்த எட்டப்பன், தளபதி டல்லாஸ் படையுடன் கோலார்பட்டிக்குப் புறப்பட்டான். அங்கு எட்டப்பன் படைக்கும் கட்டபொம்மனுக்கும் போர் நடைபெற்றது. போரில் பலர் மாண்டனர். இறுதியில் கட்டபொம்மனின் அமைச்சர் தானாதிபதிப் பிள்ளை மட்டும் சிக்கிக் கொண்டார். கட்டபொம்மனையும் அவரது தம்பிகளையும் எட்டப்பனால் பிடிக்க முடியவில்லை. தானாதிபதிப் பிள்ளையைப் பிடிக்க உதவியதற்காக எட்டப்பனுக்கு ஆங்கிலேயர்கள் பல பரிசுகளைக் கொடுத்தனர்.
பிடிபட்ட தானாதிபதிப் பிள்ளையின் தலையை வெட்டி அத்தலையை வீதிகள் தோறும் கொண்டு வந்து காட்டுமாறு பானர்மென் கட்டளையிட்டான். கட்டபொம்மனுக்கு முதலில் உதவிய ஆங்கிலேய டேவிசனும் கட்டபொம்மனுக்கு உதவ முன்வரவில்லை. தன்னிடம் அடைக்கலம் புகுந்த கட்டபொம்மனின் குடும்பத்தினரைக் காட்டிக் கொடுத்து தான் ஆங்கிலேயன் என்பதை டேவிசன் நிரூபித்தான். இங்கு இருந்தவனே துரோகியான பின்னால எங்கிருந்தோ வந்தவன் மட்டும் எப்படி விசுவாசமாக இருப்பான்? அதை எதிர்பார்ப்பது தவறல்லவா?
எட்டப்பன் விடுவானா? கட்டபொம்மனைத் தொடர்ந்து பிடித்துக் கொடுப்பதற்காகத் தனது படைவீரர்களை அனுப்பினான் எட்டப்பன். அவர்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் தங்கி கட்டபொம்மன் படை திரட்டுவதாக பானர்மெனுக்குத் தகவல் கொடுத்தனர். இதனை அறிந்த பானர்மென் உடனே புதுக்கோட்டை மன்னனுக்குக் கடிதம் எழுதினார். அதில் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தால் தக்க சன்மானம் கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டான்.
முதலில் கேரளக் காட்டுப் பகுதிக்குச் செல்வது என்றுதான் கட்டபொம்மன் முடிவு செய்திருந்தார். ஆங்கிலப் படையும் எட்டப்பனுடைய படையும் குறுக்கிட்டதால் கட்டபொம்மன் வடக்கு நோக்கித் திரும்பித் திருச்சியை நோக்கிப் புறப்பட்டார். திருச்சியிலிருந்து கோயமுத்தூர் அல்லது மலபார் கடற்கரைப் பகுதிக்குச் செல்வதென்று தனது திட்டத்தை மாற்றியமைத்துக் கொண்டார்.
திருச்சியை எட்டுவதற்கு முன்னால் புதுக்கோட்டை, சமஸ்தானத்தைச் சேர்ந்த திருமயத்தை அடுத்துள்ள திருக்களம்பூர் என்னுமிடத்தில் உள்ள காட்டுப் பகுதியில் தங்கியிருந்த போது இச்செய்தி புதுக்கோட்டை மன்னர் வாயிலாக ஆங்கிலேயர்களுக்கு எட்டியது. பானர்மென் தலைமையிலான படை கட்டபொம்மன் தஙகியிருந்த பகுதியை முற்றுகையிட்ட பின்னர்தான் கட்டபொம்மனுக்குத் தான் எதிரிகளால் சூழப்பட்டுவிட்ட செய்தி தெரிந்தது. பானர்மென் 1799-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் நாள் கட்டபொம்மனைக் கைது செய்தான். இதுதான் நடந்த உண்மை.
ஆனால் பலரும் புதுக்கோட்டை மன்னர் கட்டபொம்மனை அழைத்துத் தனது அரண்மனையில் தங்க வைத்து விருந்து கொடுத்து நாடகமாடி வஞ்சித்துப் பிடித்துக் கொடுத்ததாகத் தவறாக எழுதுகின்றனர். புதுக்கோட்டை மன்னர் காட்டிக் கொடுத்தாரா என்பது குறித்த விளக்கத்தை இதன் இறுதியில் சொல்றேன்.
எத்தர்களின் நாடகம்
கட்டபொம்மனைக் கைது செய்த பானர்மென் அதனை இராபர்ட் கிளைவிற்குத் தெரிவித்தான். கிளைவ் கட்டபொம்மனைத் தூக்கிலிடுமாறு கூறினான். அவ்வாறு தூக்கிலிடும் போது பாளையக்காரர்கள் அனைவரும் அருகில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டான்.
1799-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் நாள் மதுரையிலிருந்து கைதியாகக் கொண்டு வரப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனைக் கயத்தாற்றில் இருந்த கட்டிடமொன்றில் அக்டோபர் 16-ஆம் நாள்வரை பானர்மென் சிறையில் வைத்தான். பின்னர் விசாரணை என்ற நாடகத்தை பானர்மென் நடத்தினான். அவனுக்கு எட்டப்பன் உறுதுணையாக இருந்தான். இறுதியாக கட்டபொம்மனை மன்னிப்புக் கோரும்படி கேட்டான் பானர்மென். கட்டபொம்மன் மறுக்கவே அக்டோபர் 19-ஆம் நாள் கயத்தாற்றில் உள்ள கட்டைப் புளியமரத்தில் தூக்கிலிட்டான். இதனை அனைத்துப் பாளையக்காரர்களும் பார்த்தனர். மக்கள் கண்ணீர் வடித்தனர். இரண்டு மணிநேரம் வீரபாண்டிய கட்டபொம்மனின் உடல் தூக்குக் கயிற்றில் தொங்கியது. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது.
திருநெல்வேலிச் சீமையில் இருந்த 42 கோட்டைகளை ஆங்கிலேயர்கள் இடித்தனர். கட்டபொம்மன் இறந்தாலும் அவரது வீரம் இன்னும் மக்களின் மனதில் இருந்து கொண்டே இருக்கின்றது. கட்டபொம்மன்1760-இல் பிறந்து 1799-இல் மறைந்தார். கட்டபொம்மன் மறைந்தபோது அவருக்கு வயது 39 ஆண்டுகளாகும். பாரதநாட்டின் வீரத்தைப் பறைசாற்றும் விதமாக கட்டபொம்மனின் பெயர் வரலாற்றில் வாழ்ந்து கொண்டுள்ளது. அவரைக் காட்டிக் கொடுத்ததால் எட்டப்பனின் பெயரும் வரலாற்றில் இடம் பெற்றது. கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 - இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 - இல் அதனைக் கைப்பற்றியது.
அவர்களிடமிருந்து தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக்குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். வெள்ளையர்கள் பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை தியாகசீலர்கள் வரலாற்றின் ஏடுகளில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் காலங் காலமாகத் துரோகிகள் மக்கள் அனைவராலும் இழிவாகவே கருதப்பட்டு வருகின்றனர்.
வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள்
உங்கள் மனதில் ஒரு கேள்வி எழும். தொடக்கத்தில் இருந்தே கட்டபொம்மனைத் தொடர்ந்து வந்து வேவு பாத்துக் காட்டிக் கொடுத்த எட்டப்பன் தான் துரோகி. அப்படி இருக்க புதுக்கோட்டை மன்னரைக் காட்டிக் கொடுத்தவன் என்று இழிவாகப் பேசுவது தவறல்லவா? இது பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் ஆகாதா? உண்மையான வரலாற்றுக் கண்ணோட்டம் உள்ளவர்கள் மனதில் ஏற்படும் நியாயமான கேள்விகள். கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பிப் புதுக்கோட்டைக்கு வந்து தங்கி இருந்ததாகவும், அவரை ராஜா விஜயரகுநாதத் தொண்டைமான் நயவஞ்சகமாக ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
புதுக்கோட்டையைக் "காட்டிக் கொடுத்த ஊர்" என்று பாமர மக்கள் பேசுவதைக் கேட்கிறோம். நாடகங்களிலும் கதைகளிலும் பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் "காட்டிக் கொடுத்தான் தொண்டைமான்" என்று பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவதைக் காண்கிறோம். வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை நனறாக ஆழ்ந்து பாருங்கள். எது உண்மை? எது பொய்? என்று தெரியும்.
'காட்டிக் கொடுத்தான்' என்னும் சொல் வரலாற்று ஏடுகளில் சமீபகாலத்தில் திணிக்கப்பட்ட சொல்லாகும்! கட்டபொம்மன் பிடிபட்டது புதுகோட்டையில்தான் என்பதையும் அவரை ராஜா விஜயரகுநாத தொண்டைமான் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த விவரங்களையும் எள்ளளவும் மறுப்பதற்கில்லை. ஆனால் கட்டபொம்மனைத் தொண்டைமான் காட்டிக் கொடுத்தார் என்று சொல்வது சரிதானா? காட்டிக் கொடுத்தல் என்னும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் 'Betrayal' என்பதாகும். இச்சொல்லுக்கு ஆங்கில அகராதி கீழ்க்கண்டவாறு பொருள் தருகிறது. 'To deliver into the hands of an enemy by treachery in violation of trust' அதாவது "அடைக்கலம் என்று அண்டி வந்தவரை" தனது லாப நோக்கங்களுக்காக நயவஞ்சகமாக அவரது எதிரியிடம் ஒப்படைக்கும் செயல் எனப் பொருள் கொள்ளலாம்.
கட்டபொம்மன் தொண்டைமானிடம் அடைக்கலம் கேட்டு வரவில்லை. அப்படி நிகழ்ந்ததாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. அப்படி நடந்திருக்கவும் வாய்ப்பும் இல்லை. தொண்டைமான் ஆங்கிலேயரின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்ட அவர்களின் ஆதரவாளர் என்பது அப்போது நாடறிந்த செய்தி. இது கட்டபொம்மனுக்கும் தெரிந்திருக்குமல்லவா? இந்நிலையில் அவர் எப்படித் தொண்டைமானிடம் பாதுகாப்பை நாடியிருக்க முடியும்? தொண்டைமானிடம் கட்டபொம்மன் அடைக்கலம் கேட்டு வந்தார் என்று சிலர் எழுதியிருப்பது அவர்களுடைய கற்பனைக் கதை!
கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு எதிரி. ஆங்கிலேயர் தொண்டைமானுக்கு நண்பர்கள். எதிரிக்கு எதிரி நண்பன். நண்பனுக்கு எதிரி எதிரி என்பது காலம் காலமாக நாம் கண்டுவரும் அரசியல் ராஜதந்திர சித்தாந்தம் அல்லவா? முடியுடைய மூவேந்தர் காலந்தொட்டு இன்றைய நாள் அரசியல் வரை, அரசியல்-பதவிப் போட்டிகள் காரணமாக தந்தையும் மகனும், சகோதரனும் சகோதரனும், உறவினரும் உறவினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் அழித்துக் கொண்ட நிகழ்ச்சிகள் ஏராளமாக உண்டல்லவா? இவற்றிற்கெல்லாம் அரசியல் ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொண்டைமான் ஆங்கிலேயரின் மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர். கட்டபொம்மன் புதுக்கோட்டை எல்லையில் ஒளிந்திருப்பது, கலெக்டர் லூசிங்டன் கடிதம் எழுதிய பிறகே தொண்டைமானுக்குத் தெரிய வருகிறது. (ஆங்கிலேயரின் கடிதங்கள் கூட கட்டபொம்மன் தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்திருந்தான் என்று குறிப்பிடவில்லை என்பதும் இங்கு நோக்கத்தக்கது) மேலாண்மை வகிப்பவருக்கு கட்டுப்பட்டு கட்டபொம்மனைக் கண்டுபிடித்து (ஆங்கிலேயரிடம்) ஒப்படைத்தது எப்படிக் காட்டிக் கொடுத்ததாகும் ஏனெனில் இது போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் அப்போதைய அரசியலில் சர்வ சாதாரணமானவை.
இதற்குப் பிறகும் ஒரு கேள்வி எழக்கூடும், கோரிக்கை விடுத்தவன் அந்நிய நாட்டான், நம்மவனை - கட்டபொம்மனைத் தொண்டைமான் பிடித்துக் கொடுக்கலாமா?
இது பற்றி விருப்பு வெறுப்பு இன்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகும். அக்கால அரசியல் சூழ்நிலை, வரலாற்றுப் பின்னணி தமிழகத்தை ஆண்டுவந்த சிற்றரசர்கள் மற்றும் பாளையக்காரர்களின் அரசியல் நடவடிக்கைகள், அவர்களுக்குள் இருந்த உறவு மக்களுக்கும் இதுபோன்ற ஆட்சியாளர்களுக்கும் இருந்த உறவு ஆகிய அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தபின்பே இந்தச் செயலின் தன்மையை எடை போட முடியும்.
புதுக்கோட்டை ஒரு சுதந்திரமான அரசு அல்ல, ஆங்கிலேயரின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ஒரு சிற்றரசு. மேலாண்மைக்கு கட்டுண்டு கிடப்பதுதானே அரசியல் சித்தாந்தம். ராஜா விஜயரகுநாதத் தொண்டைமானின் அப்போதைய நிலையும், அவர் வாழ்ந்த காலத்தின் அரசியல் சூழ்நிலையையும் பார்க்கிற போது கட்டபொம்மன் விஷயத்தில் அவர் செயல்பட்ட விதத்தில் எவ்விதத் தவறும் இருப்பதாக கூற முடியாது என்று ஒரு ஆய்வாளர் கூறுகிறார். (சிரஞ்சீவி - புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு 1980. பக்கம், 105)
தற்போதைய அரசியல் விழிப்புணர்ச்சிகளை வைத்து இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை ஒப்பிட்டுக் கூறுவது ஏற்புடையதாகாது. சுதந்திரம் தேசியம் நம்நாடு நம்மவர் போன்ற உணர்வுகளெல்லாம் அறியாத காலம் அது. கட்டபொம்மன் காலத்தில் ராஜா விஜயரகுநாத தொண்டைமான் காலத்தில் தென்னாட்டில் இருந்த பெரும்பாலான சுதேச மன்னர்களும், பாளையக்காரர்களும் ஆங்கிலேயரின் நன்மதிப்பைப் பெற எதுவும் செய்யத் தயாராக இருந்தனர். ஆங்கிலேயரைக் பிடிக்கவில்லை என்றால் டச்சுக்காரரையோ பிரெஞ்சுக்காரரையோ அண்டி உதவி வேண்டிய பரிதாபமான சூழ்நிலையுந்தான் அக்கால சுதேச மன்னர்களிடமும் பாளையக்காரர்களிடமும் காண்கிறோம். ஆகவே ஐரோப்பிய நாட்டினரின் தலைமையின் கீழேயே நமது நாட்டு மன்னர்களும் சிற்றரர்களும் அணி திரண்டு நிற்கவேண்டிய கட்டாய சூழ்நிலை இருந்தது. ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் பூலித்தேவருக்கும் கூட ஆங்கிலேயரை எதிர்க்க டச்சுக்காரர்களின் உதவியை நாடினர் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன (yusufhkhan letter to Madras Council 15.6.1760 MCC. Vol 8. P 194 - 195, 205 - 218) பேயை விரட்ட பிசாசைத் துணைக்கு அழைத்த கதையல்ல இது? இருப்பினும் இது போன்ற அரசியல் சூழல் அப்போது தவிர்க்க முடியாததாக இருந்தது என்பதையும் நாம் ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.
சில உண்மை நிகழ்ச்சிகளையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இதே காலகட்டத்தில் புதுக்கோட்டையை அடுத்துள்ள தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்களும் ஆங்கிலேயருக்கும் நிலவிய அரசியல் மேலாண்மைத் தொடர்பை சற்று காண்போம். கட்டபொம்மன் பிடிபட்ட பிறகு, கட்டபொம்மனின் சகோதரர் சிவத்தையா தஞ்சாவூர் மன்னர் சரபோஜிக்கு கடிதம் எழுதி தமக்கு ஆதரவளிக்கும் படி கோருகிறார். சிவத்தையாவின் கடிதத்தைக் கொண்டுவந்த தூதுவன் அந்தக் கடிதத்தை சரபோஜியின் மந்திரியான தத்தாஜியிடம் கொடுக்க, தத்தாஜி கடிதம் கொண்டு வந்தவனைச் சிறையில் தள்ளிவிட்டு அக்கடிதத்தை ஆங்கிலேயருக்கு அனுப்பி வைக்கிறார். "ஆங்கிலேயருடன் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் பல ஒப்பந்தங்களைச் செய்து கொண்டனர். ஒவ்வொரு ஒப்பந்தத்தாலும் மராட்டிய மன்னர்கள் சுய உரிமையை இழத்தல், படைக் குறைப்பு, ஆங்கிலேயப் படைகளைத் தஞ்சாவூரில் இருக்கச் செய்து அவற்றின் பராமரிப்பிற்குப் பெருந்தொகை அளித்தல், நவாபுடன் தொடர்பு கொள்ளும் நிலையில் ஆங்கிலேயரின் வழியே தொடர்பு கொள்ளுதல், வெளிநாட்டுக் கொள்கையை ஆங்கிலேயரின் சொற்படியே அமைத்துக் கொள்ளுதல், ஆங்கிலேயரின் நண்பர்க்கும் பகைவர்கட்கும் இவர்களும் நண்பரும் பகைவருமாதல் ஆகிய கட்டுப்பாடுகளுக்கு இடையே அகப்படலாயினர். நேரிடையாகவோ, மறைமுகமாகவோ இங்ஙனம் ஆங்கிலேயருக்கு அடங்கி அவர் வழி ஒழுகவேண்டி வந்தது. (கே. எம் வெங்கடராமையா. தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும், சமுதாய வாழ்க்கையும் - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 1984 பக்கம் 59) இப்படி ஆங்கிலேயரின் நன்மதிப்பைப் பெற சுதேச மன்னர்கள் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டு செயல்பட்ட நிகழ்ச்சிகள் பலவாகும்.
மருது சகோதர்கள் ஆங்கிலேயரை முழு மூச்சாக எதிர்ப்பதாகக் கூறி திருச்சி பேரறிக்கையை (16.6.1801) வெளியிட்ட பின்னும் (Revenue Sundries Vol. 26/16.6.1801. pp 441 - 70) 24.7.1801ல் கவர்னர் கிளைவுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் (Revenue Consultation Vol. 110 p. 1861 - 1869) தாங்கள் ஆங்கிலேயருக்கு கட்டூப்பட்டு கிஸ்தி செலுத்தி வந்த வரலாற்றையெல்லாம் நினைவு கூர்ந்து, ஆங்கிலேயரின் நட்பை நடும் பாணியில் எழுதி இருப்பதோடு பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களையும் குறைகூறி எழுதியுள்ளனர். அவர்களது ஆங்கிலேய எதிர்ப்பு இயக்கத்தில் ஏன் இந்த முரண்பாடு என்பதை ஆராய வேண்டாமா?
பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பிய கட்டபொம்மனைப் பிடிக்க எட்டயபுரம் பாளையக்காரரின் படைகள் பின் தொடர்ந்து சென்றதாகவும் முதலில் கட்டபொம்மன் சிவகங்கைக்குச் சென்றதாகவும், பின்பு, அங்கிருந்து புதுக்கோட்டை காட்டுப் பகுதிக்கு வந்ததாகவும் தெரியவருகிறது (Radhakrishna Iyer S. - A General History of Pudukkottai State- P.304) இச்செய்தி ஆராயப்பட வேண்டியதாகும். புரட்சிப் பாளையக்காரர்களின் கூட்டணியில் கட்டபொம்மனும் இருந்தார். ஆகவே அவர் மருது சகோதரர்களின் ஆதரவைத் தேடி சிவகங்கை சென்றிருக்க வாய்ப்புண்டு. ஆனால் முதலில் சிவகங்கை சென்று பின் அங்கிருந்து புதுக்கோட்டைக் காட்டுப் பகுதிக்கு வந்து ஏன் ஒளிந்து கொள்ள வேண்டும் அப்படியானால் அவருக்கு அங்கு (சிவகங்கையில்) ஆதரவு கிடைக்கவில்லையா?
அக்கால இந்திய அரசியலில் ஐரோப்பிய நாட்டினரின் ஆதிக்கப் போட்டிகளில் ஆங்கிலேயர் தங்களது சக்தியை நிலைநாட்டி, நாட்டையே தங்களது ஏகபோக சொத்தாக பிரகடனப் படுத்திக் கொண்ட நிலையில், நமது நாட்டு(சுதேச) மன்னர்களும் சிற்றரசர்களும் பாளைக்காரர்களும் தங்களது பாதுகாப்பிற்கும் தங்களது குடிகளின் நலன் பாதுகாக்கப்படவும் நிலையானதொரு நேச சக்தியை நாடுவது இயற்கையே இந்த வகையில் புதுக்கோட்டை ஆங்கிலேயரை தனது நட்புக்குத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது.
இங்கு ஒன்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். தொண்டைமான் மன்னர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மன் தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்த காலத்தில் (1799) தொடர்பு ஏற்படவில்லை என்பதும், அதற்கு முன்பே அதாவது 1755-ஆம் ஆண்டிலேயே இவர்களுக்கிடையே ஒரு அரசியல் உடன்படிக்கை அடிப்படையில் உறவு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் அது.
கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுப்பதற்காக, புதிதாக ஆங்கிலேயர்களுடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை. கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்ததினாலேயே தொண்டைமானுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டன என்று கூறுவது வரலாற்றைச் சரியாகப் படிக்காதவர்களின் கூற்றாக அமைகிறது. இதற்கு முன்பே இந்தியாவில் வேறெந்த சமஸ்தானங்களும், சிற்றரசுகளும் இல்லாத பல சலுகைகள் தொண்டைமானுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. 1755-ஆம் ஆண்டுக்கு முன்பே ஆற்காடு நவாபின் மேலாண்மையை ஏற்று ஆட்சி செலுத்திய தொண்டைமான் மன்னர்கள் ஆற்காடு நவாப் ஆங்கிலேயரின் பக்கம் சேர்ந்து கொண்டபோது, தொண்டைமானும் ஆங்கிலேயர் பக்கம் சேர்ந்தார் என்பது தெரிய வருகிறது. இந்நிலையில் (அக்கால அரசியல் சூழ்நிலையில்) மேலாதிக்கம் வகித்த ஆங்கிலேயரின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்தது அரசியல் ரீதியாக ஏற்புடையதுதான் என்பது விளங்கும்.
ஆகவே புதுக்கோட்டை தொண்டைமான் - கட்டபொம்மன் வரலாற்று நிகழ்வுகளை அக்காலச் சூழலையும் அரசியல் ஆதிக்கப் போராட்டங்களையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால் 'காட்டிக் கொடுத்தான்' தொண்டைமான் என்பது வரலாற்றுச் சான்றுகளுக்கு முரணானது என்பதும் அரசியல் சிந்தாந்தங்களுக்கு ஒவ்வாதது என்பதும் விளங்கும். கட்டபொம்மனை மிகைப்பட உயர்த்திக் காட்டுவதற்காக கதை, நாடகங்கள் எழுத முனைந்த சில புத்தக ஆசிரியர்கள் அரைகுறைச் செய்திகளின் அடிப்படையில் "தொண்டைமான் காட்டிக் கொடுத்தான்" என்றும் புதுக்கோட்டையைக் "காட்டிக் கொடுத்த ஊர்" என்றும் எழுதி வருவது நல்ல வரலாற்றுச் செய்தியாகுமா? இது போன்ற ஆதாரமற்ற வாசகங்கள் வரலாற்று ஏடுகளிலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்பதே நடுநிலை வரலாற்று ஆய்வாளர்களின் எண்ணமாக இருக்க முடியும். (நன்றி: ஆதாரம் டாக்டர் ஜெ. ராஜாமுகமது எழுதிய 'புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' நூல்)
இதுதான் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் அப்படீன்னு சொல்றது... பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து கூடவே வந்து காட்டிக் கொடுத்து துரோக வேலை செய்த எட்டப்பனைப் பழி சொல்லாது புதுக்கோட்டை மன்னரைப் பழி சொல்லலாமா? வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் இத்தகைய வீண் பழியைக் கூற மாட்டார்கள். தான் செய்த துரோகத்தால் வரலாற்றில் இடம் பிடித்தவன் எட்டப்பன் என்பதைப் பற்றி…
வீரர்கள் என்றும் சாவதில்லை... அவர்கள் வாழ்கிறார்கள். துரோகிகள் இறந்து இறந்து வாழ்கிறார்கள். துரோகிககள் என்றும் தூற்றப்பட்டுக் கொண்டே வாழ்கிறார்கள்… ஆனால் நாட்டின் மானம் காத்த வீரர்களை மக்கள் என்றென்றும் நினைவில் நிறுத்தி வாழ்த்திக் கொண்டே இருக்கின்றனர். இன்றும் காட்டிக் கொடுப்பவர்களை மக்கள் வழக்கில், “என்ன எட்டப்பன் வேலை பாக்குறீயா..?” என்று குறிப்பிடுவதைப் பார்க்கலாம்…
சொலவடையிலும் நடைமுறையிலும் இத்தகைய எட்டப்பர்களை மக்கள் பழித்துரைத்துக் கொண்டே இருக்கின்றனர்… விடுதலைக்காகப் பாடுபட்டுத் தங்களின் இன்னுயிரை ஈந்த வீரமும் வீரர்களும் வீழ்வதில்லை; மாறாக அவர்கள் மக்களின் எண்ணத்திலும் நினைப்பிலும் வரலாற்றிலும் என்றென்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். உண்மையை எப்பொழுதும் மறைக்க முடியாது.
பணத்துக்காகவோ பொருளுக்காகவோ விசுவாசமாக உள்ள மனிதர்களும் துரோகியா மாறிப் போயிடாறாங்க. அவங்க செய்யற துரோகம் நம் மனசுல ஆறாத ரணமா மாறிப் போயிடுது. ஆமாங்க… ஒருத்தன் சமையல்காரன் மிகவும் விசுவாசத்தோடு ஒரு வீரரிடம் பணிபுரிந்தான், அவன் நல்லவன் அப்படீன்னு அந்த மாவீரன் நெனச்சாரு... ஆனால் அவன், அவரது நம்பிக்கைக்கு ஏற்ப நடக்கவில்லை. பணத்தாசை பிடிச்சுத் துரோகிய மாறிவிட்டான். அப்படிப்பட்ட துரோகி யாரு...? என்று தாங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. அதற்கு அடுத்த பகுதி வரை காத்திருங்கள்...

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.