வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும்
முனைவர் சி. சேதுராமன்
12. சமையல்காரன் செய்த துரோகம்
தனக்கு இலாபம் வருகிறது என்று தெரிந்து கொண்டாலே போதும். அவர்கள் எந்தத் துரோகத்தையும் செய்யத் துணிந்து விடுகிறார்கள். இவர்கள் துரோகம் செய்யக் கூடியவர்கள், இவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள் என்று யாரையும் நாம் கணித்து விட முடியாது. எந்த நேரத்தில், எப்படி மாறுவார்கள் என்று எவரையும் எண்ணிப் பார்க்க முடியாது. தனக்குத் தேவையானது கிடைக்கும் என்று சொன்னாலே, மனிதன் எதையும் செய்யத் தயாராகி விடுகிறான். அவனுக்கு அவன் செய்வது துரோகமாகத் தெரியாது... அது அவன் வாழ்க்கையின் முன்னேற்றமாகத் தெரிகிறது. தன்னோட வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளப் பிறரை நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் செயலில் முழு மூச்சாக மனிதர்கள் இறங்கி விடுகிறார்கள்.
அவர்களுக்குத் தாங்கள் செய்வது பாவச் செயலாகத் தெரிவதில்லை. அதனைத் தங்களின் தீரச் செயலாக நினைத்துக் கொள்கிறார்கள். முடிவில் அவர்கள் அந்த வஞ்சனையினாலேயே அனைத்தையும் இழந்து உயிரையும் விடுகிறார்கள். பஞ்சதந்திரக் கதைகளில் ஒரு கதை நினைவுக்கு வருகிறது...
ஒரு குளத்தில் நிறைய மீன்கள் வாழ்ந்து கொண்டு இருந்தன. அந்தக் குளத்தில் ஒரு நண்டும் இருந்தது. நண்டும் மீன்களும் நல்ல நண்பர்களாக இருந்தனர். அந்தக் குளத்துக்கு ஒரு பெரிய கொக்கு ஒன்று வந்தது. அந்தக் கொக்கு அங்கிருக்கும் சிறு சிறு பூச்சிகளையும் பெரண்டைக் குஞ்சுகளையும் தின்று போய்க் கொண்டிருந்தது.
அந்தக் கொக்குக்கு திடீரென்று ஒரு ஆசை. எப்படியாவது இந்தக் குளத்தில் இருக்கிற மீன்களைப் பிடித்துத் தின்று விட வேண்டுமென்கிற அந்த ஆசை நிறைவேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குளத்திலிருக்கும் மீன்களுக்கு நண்பர்களாக இருக்கிற நண்டு அந்த மீன்களைக் கொக்குப் பிடித்துத் தின்னமுடியாமல் செய்து கொண்டிருந்தது. கொக்கு எப்படியாவது இந்த மீன்களையும் நண்டையும் ஏமாற்றிக் கொன்று தின்று விடவேண்டுமென்று நினைத்தது. அதற்காக தனித் திட்டம் ஒன்றையும் தீட்டியது.
ஒரு நாள் கொக்கு நண்டைப் பாத்து, “இந்தக் குளத்தில் இருக்கிற மீன்களைப் பிடிக்கப் போவதாக இந்த ஊரில் இருப்பவர்கள் பேசிக் கொள்கிறார்கள்... பாவம் இந்த மீன்களெல்லாம் இந்த ஊர்க்காரர்களின் உணவாகப் போகிறது...” என்று சொன்னது.
இதைக் கேட்டதும் நண்டும் சின்ன மீன்களும் மிகவும் பயந்து போயின. உடனே அந்த நண்டு, “நீ உண்மையைத்தான் சொல்கிறாயா… இல்லை, இந்த மீன்களைக் கொல்வதற்கான வழியைத் தேடுகிறாயா...?” என்று கேட்டது.
அதற்கு அந்தக் கொக்கு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, “சத்தியமாக... உண்மையைத்தான் சொல்கிறேன்... இந்த ஊர்க்காரர்கள் நேற்று பேசிக் கொண்டிருந்ததை என் காதால் கேட்டேன்... அதனால்தான் உன்னிடம் அந்தத் தகவலைச் சொல்லி, மீன்களை எச்சரிக்கலாமென்று நினைத்தேன்...” என்று சொல்லிவிட்டுப் பறந்து போய் விட்டது.
நண்டுக்கும் கொக்கு சொன்னது உண்மையாக இருக்கும் என்பது போல் தோன்றியது.
மறுநாள், அந்தக் கொக்கு அந்தக் குளத்துக்கு வந்தது. அது நண்டைப் பார்த்து, “இந்த மீன்களைக் காப்பாற்ற என்ன முடிவு செய்திருக்கிறாய்?” என்று கேட்டது.
நண்டு, “இந்த மீன்களைக் காப்பாற்ற எனக்கு ஒரு வழியும் தோன்றவில்லை. நீயே நல்லதொரு யோசனையைச் சொல்” என்று கொக்கிடமே கேட்டது.
அந்தக் கொக்கு நயவஞ்சகமாக, நமக்கு நல்ல உணவு கிடைக்கப் போகிறது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “இங்கிருந்து சென்றால் சிறிது தூரத்தில் ஒரு குளமிருக்கிறது. அந்தக் குளத்தில் தண்ணீர் நிறைய இருக்கிறது. அங்கு மீன்கள் அதிகமில்லை... நான் வேண்டுமானால், ஒவ்வொரு மீனாக இங்கிருந்து தூக்கிக் கொண்டு போய் அந்தக் குளத்தில் விட்டுவிட்டு வருகிறேன். நீ விருப்பப்பட்டால் உன்னைக் கூட முதலில் அங்கு கொண்டு போய் விடுகிறேன்” என்றது.
நண்டுக்கும் கொக்குவின் யோசனை நல்ல யோசனையாகத் தோன்றியது. நண்டு தனது நண்பர்களான மீன்களிடம் கொக்குவின் யோசனையைத் தெரிவித்தது. மீன்களும் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டன.
மீன்கள் ஒவ்வொன்றாக வந்து நின்றன. கொக்கு ஒவ்வொரு மீனாகத் தூக்கிக் கொண்டு போய் ஆசை தீர சாப்பிட்டது. தன்னுடைய பசி தீரவும் மீதமிருந்த மீன்களை அடுத்த நாட்களில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தபடி அங்கிருந்த பாறை ஒன்றில் காயப் போட்டு வைத்தது.
கடைசியாக நண்டு மட்டும்தான் மிஞ்சியிருந்தது. கொக்கு மனதிற்குள் இந்த நண்டையும் கொன்று தின்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டது. கொக்கு அந்த நண்டைத் தூக்கிக் கொண்டு பறந்து போனது. அப்படிப் பறந்து போய்க் கொண்டிருந்த போது, கீழே பாறையில் தன்னுடைய மீன் நண்பர்களைக் கொன்று பாறையில் காயப் போட்டிருந்ததைப் பார்த்தது. தானும் நண்பர்களும் கொக்கால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதைத் தெரிந்து கொண்டது.
நண்டு தன்னையும், மீன் நண்பர்களையும் ஏமாற்றிய கொக்கைப் பலி வாங்கும் நோக்கத்துடன் கொக்குவிடம் பேசியபடி அதன் கழுத்தைத் தன் கால்கள் இறுக்கி நெறிக்கத் தொடங்கியது. கொக்கு நண்டுவின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் இறந்து கிழே விழுந்தது.
நண்டுக்கும் மீன்களுக்கும் துரோகம் செய்த கொக்கு இறந்து போனது.
இந்தக் கொக்கு மாதிரி ஒரு சமையல்காரன் செய்த துரோகத்தால் மாவீரன் ஒருவன் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டான். சமையல்காரன் செய்த துரோகத்தைப் பற்றிப் பார்ப்போமா...?
தீரன் சின்னமலை
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் என்னுமிடத்தில் 1756-ஆம் ஆண்டு பிறந்தவர் தீர்த்தகிரி. இளம் பருவம் முதலே போர்க்கலைகளில் வல்லவராகத் திகழ்ந்தார் தீர்த்தகிரி. தம் பகுதியில் இருக்கும் ஆயிரம் இளைஞர்களைத் திரட்டி கொங்குநாட்டில் ஒரு படையை உருவாக்கி அவர்களுக்குப் போர்ப்பயிற்சி அளித்தார்.
மைசூர் மன்னர் வரிவசூலிப்பதற்காகக் கொங்கு மண்டலத்திற்குப் படைகளை அனுப்பி மக்களிடமிருந்து கட்டாயமாக வரிவசூலிக்கச் செய்தார். இதனால் மக்கள் அவலத்திற்கு உள்ளானார்கள். மக்கள் சின்னமலையிடம் தங்களின் துன்பத்தைத் தெரிவிக்கவே, சின்னமலை மக்களின் துன்பம் துடைக்க தனது படையுடன் புறப்பட்டுச் சென்று மைசூர் திவானையும் படைத் தளபதியையும் தாக்கி அவர்களிடமிருந்த பொருள்களைப் பறிமுதல் செய்தார்.
இதனால் சினமுற்ற மைசூர்ப் படைத்தளபதி தனது படைகளைக் கொண்டு சின்னமலையைத் தாக்கினார். அப்போது படைத்தளபதியின் முன்னர் திடீரெனத் தோன்றி நேருக்கு நேர் நாம் மோதலாம். என்னுடன் மோதுவதற்கு வாருங்கள் என்று கூறவே அதிர்ச்சியடைந்த தளபதி நீ யார் எனக் கேட்க அதற்கு சின்னமலை, “தீர்த்தகிரி மலைக்கும் சிவன் மலைக்கும் இடையில் நிற்கும் சின்னமலை நான்தான்” எனக் கூறினார். இதனைக் கேட்ட மைசூர்த் தளபதி மிரண்டு விட்டார்.
மைசூர்த் தளபதியை மிக எளிதாக வென்றார் சின்னமலை. சின்னமலையிடமிருந்து மைசூர்த் தளபதியும் திவானும் தப்பித்து மைசூருக்கு ஓடினர். இதனால் கொங்கு மண்டலம் முழுவதும் சின்னமலையின் புகழ் பரவியது. இவர் பெற்ற வெற்றி இவரைக் கொங்கு மண்டலத்தின் தளபதியாகவும் ஆட்சியாளராகவும் உயர்த்தியது. பாளையக்காரர் நிலைக்கு உயர்ந்த தீர்த்தகிரிக் கவுண்டர் என்றழைக்கப்பட்ட இவர் மைசூர்த் தளபதியை வென்ற பிறகு தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டார்.
ஆங்கிலேயர் எதிர்ப்பு
மைசூர் அரசர் ஹைதர் அலியின் மறைவிற்குப் பின்னர் அவரது மகன் திப்புசுல்தான் சின்னமலையுடன் சுமுகமான உறவைப் பேணினார். திப்புசுல்த்தான் சின்னமலையைக் கொங்குநாட்டின் தளபதியாக அங்கீகரித்தார். திப்புசுல்த்தான் ஆங்கிலேயர்களுடன் போரிட்ட போதெல்லாம் அவருக்குச் சின்னமலை படையுதவி செய்தார். அவருடன் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்தார்.
திப்புசுல்த்தானின் சித்தேஸ்வரம் வெற்றிக்குச் சின்னமலை உறுதுணையாக இருந்தார். இப்போரில் மேலப்பாளையம் கோட்டையை ஆங்கிலேயர்களிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார் சின்னமலை. ஆங்கிலேயரின் வஞ்சனையால் திப்புசுல்த்தான் வீரமரணம் அடைந்தார். அவரது மறைவிற்குப் பின்னர் கொங்குநாட்டின் சுதந்திரமான பாளையக்காரராக சின்னமலை ஆட்சி செய்தார்.
சின்னமலை ஓடைநிலை என்ற இடத்தில் சிறிதாக ஒரு கோட்டையினைக் கட்டி அதில் நிரந்தரமாகத் தங்கினார். 1801- 1802 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த பாளையக்காரர்களின் எழுச்சியில் சின்னமலை முக்கியப் பங்காற்றினார். அப்போது ஆங்கிலேயருடன் ஏற்பட்ட போரில் மருதுபாண்டியருடனும், திண்டுக்கல் கோபாலநாயக்கருடனும், கேரளாவின் கேரளவர்மா உள்ளிட்டோருடன் இணைந்து செயல்பட்டார். போரின் முடிவில் அனைத்துத் தலைவர்களும் தோல்வியடைந்த போது சின்னமலையும் தோல்வியைத் தழுவினார்.
சின்னமலையை அடக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பெரும்படை கொண்டு 1804-ஆம் ஆண்டு ஓடைநிலைக் கோட்டையினைத் தாக்கினர். ஆங்கிலேயரின் கடும் தாக்குதலுக்கு அக்கோட்டையால் ஈடுகொடுக்க முடியவில்லை. கோட்டை இடிந்து வீழ்ந்தது. சின்னமலை அக்கோட்டையிலிருந்து வெளியேறி பழனிமலையை அடுத்துள்ள கருமலைக் காட்டில் பதுங்கி இருந்து ஆங்கிலேயர் மீது கொரில்லாத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தினார்.
சமையல்காரனின் துரோகம்
இதனால் ஆங்கிலேயர் படைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியது. ஆங்கிலேயர்கள் எவ்வாறேனும் சின்னமலையைக் கைது செய்துவிட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டனர். சின்னமலையின் அன்றாட நடவடிக்கைகளை ஆங்கிலேயர்கள் கண்காணிக்கத் தொடங்கினர்.
சின்னமலை பகலில் மலைப்பகுதிகளில் கொரில்லாப் போரில் ஈடுபடுவதும் இரவில் மலை அடிவாரத்தில் உள்ள ஒரு வீட்டில் இரவு உணவு உண்டு உறங்குவதுமாக சின்னமலை இருப்பதை ஒற்றர்கள் வாயிலாக அறிந்து கொண்டனர். சின்னமலையின் விசுவாசமான சமையற்காரன் நல்லப்பன் என்பவன்தான் சின்னமலைக்குச் சமையற்காரனாக இருந்து உணவு சமைத்துக் கொடுத்துவந்தான்.
ஆங்கிலேயர்கள் தங்களது வஞ்சக வலையை விரித்தனர். அவர்களின் திட்டப்படி சமையல்காரனாகிய நல்லப்பனை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நல்லப்பனுக்குப் பதவியும் பணமும் தருவதாகக் கூறினர். பணத்தையும் பதவியையும் கண்ட நல்லப்பன் சின்னமலையிடம் கொண்ட விசுவாசத்தையும் மறந்து ஆங்கிலேயர்களின் கைக்கூலியாக மாறினான்.
சின்னமலையைக் கைது செய்ய நல்லப்பனுக்கு வஞ்சகமான ஒரு செயல்திட்டத்தை வகுத்துக் கொடுத்தனர். அதன்படி செயல்படுவதாக நல்லப்பன் ஆங்கிலேயருக்கு வாக்குக் கொடுத்தான்.
ஒருநாள் மாலையில் இரவு உணவிற்காக சின்னமலையும் அவரது சகோதரர்களும் வீடு வந்து சேர்ந்தனர். அப்போது அங்கு வந்த நல்லப்பன் அனைவரும் உணவுண்ண வருமாறு அழைத்தான். அவர்கள் உண்ண வரும்போது, அவர்களின் தோள்களில் இருந்த துப்பாக்கிகளைக் கீழே வைக்குமாறு கூறினான். இதனைக் கேட்ட சின்னமலை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தத் துப்பாக்கிகள் எங்களுடனேயே இருக்கட்டும் என்றார்.
அதனைக் கேட்ட நல்லப்பன், “இந்த வீட்டில் நான் சமையல்காரனாக இருக்கும் வரை எதிரிகள் யாரும் இங்கு நுழைய முடியாது. உணவு உண்ணும் போது உடலில் எதையும் தாங்கிப் பிடிப்பது உண்ணும் உணவிற்குச் சிறிதும் பொருத்தமானது அல்ல” என்று நயவஞ்சகமாக அன்புடன் பேசினான்.
அவனின் பேச்சை நம்பிய சின்னமலையும் அவரது சகோதரர்களும் துப்பாக்கிகளை வீட்டின் ஓரிடத்தில் வைத்துவிட்டு உணவு உண்பதற்காக அமர்ந்தனர். உணவு எடுப்பதற்காகச் சமையல் அறையின் உள்ளே சென்ற சமையல்காரன் வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்து அங்கே பதுங்கி இருந்த ஆங்கிலேயர்களை அழைத்து வந்தான்.
நிலைமையை உணராத நிலையில் சின்னமலையையும் அவரது சகோதரர்களையும் ஆங்கிலேயர்களின் படைவீரர்கள் சூழ்ந்து கொண்டனர். நல்லப்பன் என்ற நயவஞ்சகனின் துரோகத்தின் வாயிலாகத் தாங்கள் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டதை அவர்கள் உணர்ந்தனர். இந்த நிலையிலும் சின்னமலையின் வேலையாள் ஆங்கிலேயர்களிடம் இருந்து தப்பிவிட்டான்.
தூக்குத் தண்டனை
சின்னமலையின் தம்பி கெளாதர் நல்லப்பன் மீது கோபமுற்று அவனைத் தாக்கவே துரோகி நல்லப்பன் அங்கேயே இறந்து வீழ்ந்தான். கைது செய்யப்பட்ட சின்னமலையும் அவரது சகோதரர்கள் கெளாதர், தம்பி ஆகியோரும் சங்ககிரிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். ஆங்கிலேய அரசு ஜெனமேன், மார்வுல், ஹோர், பேக்ஹி கேர்ட் ஆகியோர் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து விசாரணையை நடத்தியது. அப்போது தப்பியோடிய கருப்பனும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டான்.
கொங்கு நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டால் விட்டுவிடுவதாக ஆங்கிலேயர்கள் கூறினர். மேலும் வரித்தொகையினையும் குறைத்துக் கொள்வதாகவும் மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பு தருவதாகவும், புதிய கோட்டையைக் கட்டித் தருவதாகவும் ஆசை வார்த்தைகளைக் கூறினர்.
சின்னமலை ஆங்கிலேயர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து நிராகரித்தார். ஆங்கிலேயர்கள் சின்னமலை, அவரது சகோதரர்கள், அவரது வேலையாள் கருப்பன் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதித்தனர்.
அதன்படி சங்ககிரிக் கோடடையின் வெளியே உள்ள புளிய மரத்தில் 1805ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் நாள் ஆடி பதினெட்டாம் நாளன்று சின்னமலையையும் அவரைச் சார்ந்தோரையும் தூக்கிலிட்டனர். அந்நால்வரும் தூக்குக் கயிறைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு புளியமரத்தில் இருந்து குதித்து இறந்தனர். நல்லப்பன் என்ற துரோகியால் மாவீரர்கள் மாண்டனர். அவர்கள் மாண்டாலும் அவர்களது தியாகம் மக்களின் மனதில் என்றென்றும் நிலைத்து நின்று நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டது.
துரோகிகளுக்குத் தற்காலிக வெற்றியே கிடைக்கும். அதுவும் நீர்க்குமிழிபோல் அழிந்துவிடும். துரோகிகள் துரோகத்தாலேயே வீழ்வர். துரோகம் சங்கிலித் தொடர் போன்றது. அந்தச் சங்கிலித் தொடரில் சிக்கிக் கொண்டவன் அதிலிருந்து மீளமுடியாது அதிலேயே மூழ்கி இறந்து விடுவான். அதனால் யாரையும் சுலபமாக நம்பிவிடக் கூடாது. கவனமா இருந்து செயல்பட வேண்டும்.
மிகப் பெரிய வீரர்கள் எச்சரிக்கையோடு இல்லாவிட்டால் அவர்களைப் பாராட்டுவதைப் போன்று கவிழ்த்து விடுவதற்கு அதிகமான ஆட்கள் காத்திருக்கிறார்கள். அதனால்தான் எப்போதுமே எந்தத் திசையிலிருந்தும் நம்மை வீழ்த்துவதற்கான முயற்சிகள் நடக்கலாம் என்று கருதி அனைவரது நடவடிக்கைகளையும் மிகவும் ரகசியமாகக் கண்காணிப்பது அவசியம். நல்ல நண்பர்களாகத் தோன்றுபவர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை. நயவஞ்சகர்களாக இருப்பர். அப்படித்தான் நண்பனாக இருந்து, நயவஞ்சகனா மாறிய ஒருவன் ஒரு மாபெரும் வீரரைக் காட்டிக் கொடுத்தான். அந்த வீரர் அந்த நண்பனின் நரித்தனத்தை உணராமல் அவனை நம்பினார்... அவர் யார்...? அவரைக் காட்டிக் கொடுத்த நயவஞ்சகமான துரோகி யார்...? என்று அறிந்து கொள்ள அடுத்த பகுதி வரை காத்திருப்போம்...

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.