வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும்
முனைவர் சி. சேதுராமன்
13. நண்பன் செய்த துரோகம்
நரித்தனம், குள்ளநரித்தனம் என்று மனிதர்களின் செயல்பாடுகளுக்கு விலங்குகளின் செயல்பாடுகளைச் சேர்த்து நாம் வழக்கில் வழங்கி வருகிறோம். நம்முடைய செயல்பாடுகளுக்கு விலங்குகளின் செயல்பாடுகளை இணைத்து விலங்குகளின் பெயர்களிலேயே அதனைக் குறிப்பிடலாமா? விலங்குகள் தங்களுடைய வாழ்க்கைப் போராட்டத்தில் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம்... ஆனால்... ஆறறிவு படைத்த மனிதன் அப்படி நடந்து கொள்ளலாமா...?
விலங்குகள் அதனுடைய இயல்பில் வாழ்ந்தால்தான் அது உயிர் வாழ முடியும். ஆனால் மனிதன் அவனோட இயல்பில் வாழ்கிறானா? என்றால் இல்லை... மனிதனும் சமுதாய விலங்கு என்பதால் விலங்குகளின் தன்மை மனிதனுக்குள்ளும் இருக்கிறது. விலங்குகளின் செயலை மனிதனை வைத்துச் சொல்வது இல்லை... ஆனால், மனிதனுடைய செயல்களை விலங்கின் பெயரில் குறிப்பிட்டுச் சொல்கிறோம்... இதுதான் விந்தையிலும் விந்தை...
ஏன் துரோகத்திற்கும் நயவஞ்சகத்திற்கும் நரியையே உதாரணமாச் சொல்கிறார்கள்...? ஏன் சிங்கத்தைச் சொல்வதில்லை? சிங்கம் பசித்தால் விலங்குகளை நேருக்கு நேராக எதிர்த்து நின்னு தாக்கிக் கொல்லும்... ஆனால், நரி அப்படிக் கிடையாது... விலங்கினை நேருக்கு நேராக எதிர்த்துக் கொல்லாது. மறைந்து, பதுங்கி இருந்து ஏமாற்றிக் கொன்று தின்னும். அதனால்தான் நரியை நயவஞ்சகத்திற்கு உதராணமாகச் சொல்கின்றனர்.
ஆமாம், சிலர் நம்மைப் பார்த்து நடிப்பார்கள்... அந்த நடிப்பு நம்புகிற மாதிரி இருக்கும்... அதை நம்பிப் போனால், பின்னால் அவர்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்...
ஒரு கதை சொல்கிறேன் கேளுங்க...
ஆற்றுக்கு நடுவில் பெரிய மணல் திட்டு ஒன்று இருந்தது. அந்த மணல் திட்டுல ஒரு பெரிய நாவல் மரம் இருந்தது. அதில் ஒரு குரங்கு இருந்தது.
அந்தக் குரங்கு நாவல் மரத்தில் இருக்கிற பழத்தைத் தின்றுவிட்டு நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருந்தது.
அந்த ஆற்றில் பெரிய முதலை ஒன்று இருந்தது. அது ஓய்வெடுப்பதற்காக அந்த மணல் மேட்டுக்கு வரும். அப்படி வரும் போது குரங்கைப் பார்த்துப் பேசிவிட்டுப் போகும். குரங்கு நாவல் பழங்களைப் பிடுங்கி அந்த முதலைக்கும் கொடுக்கும். இப்படியே இருந்ததால் முதலையும் குரங்கும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். இருப்பினும், குரங்கை முதலையிடமிருந்து சிறிது விலகி எச்சரிக்கையாகவே இருந்தது.
ஒருநாள் முதலை குரங்கு கொடுத்த நாவல் பழத்தை எடுத்துக் கொண்டு போய் தன்னுடைய மனைவியிடம் கொடுத்தது. அதைத் தின்ற பெண் முதலை மிகவும் ருசியாக இருக்கிறது, இந்தப் பழமே இப்படி ருசியாக இருந்தால், இந்தப் பழத்தைத் தின்று வாழ்கிற குரங்கின் ஈரலும் கறியும் எப்படி இருக்கும்? என்று நினைத்தது.
அந்தப் பெண் முதலை தன்னோட விருப்பத்தைக் கணவனிடமும் தெரிவித்தது. “அந்தக் குரங்கை எப்படியாவது எனக்கு இரையாகக் கொண்டு வந்து கொடுங்கள், அதனுடைய இதயத்தைச் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. இல்லையெனில் உங்களிடம் பேசவே மாட்டேன்...” என்று சொல்லிவிட்டது.
இதைக் கேட்ட ஆண் முதலை, “அந்தக் குரங்கு என்னோட நல்ல நண்பன். அவனை நான் எப்படிக் கொல்ல முடியும்? அத்துடன் அப்படி நினைக்கிறதே எனக்குப் பாவமாக இருக்கிறது.” என்றது.
அதற்குப் பெண் முதலை அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு அந்தக் குரங்கோட இதயம் வேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டது.
ஆண் முதலை, “என்னால் என் நண்பனைக் கொல்ல முடியாது. நான் அவனை இங்கு கூட்டிக் கொண்டு வருகிறேன்... நீ வேண்டுமானால், அவனைக் கொன்று உன் விருப்பம் போல் சாப்பிடு” என்று சொல்லிவிட்டது.
மறுநாள் முதலை குரங்கைத் தேடிப் போனது. குரங்கு மரத்துமேல இருந்து முதலையைப் பார்த்தது. கரைக்கு வந்த முதலை குரங்கைப் பார்த்து நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். அதனால், நீ கீழே இறங்கி வா என்றது.
குரங்கு இறங்கி வந்து என்னவென்று கேட்டது.
அந்த முதலை, “நண்பா நீ கொடுத்த நாவல் பழத்தை என் மனைவி சாப்பிட்டு உடனே உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டாள். உனக்கு அவள் விருந்து வைக்க வேண்டுமாம். நீ வந்தால்தான் சாப்பிடுவேன் என்று பட்டினியாகக் கிடக்கிறாள். நீ உடனே என்னுடன் புறப்பட்டு வந்தால் அவளைப் பார்த்துவிட்டு வந்து விடலாம்” என்று சொன்னது.
குரங்கும் முதலை சொன்னதை நம்பி முதலையின் முதுகில் உட்கார்ந்து கொண்டு அதன் மனைவியைப் பார்க்கச் சென்றது.
ஆற்றுக்கு நடுவில் போன போது ஆண் முதலை, அதன் மனைவியின் ஆசையை வாய் தவறிச் சொல்லிவிட்டது. குரங்குக்குக் கோபம் வந்தது. இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நண்பா, இதை நீ என்னிடம் முதலிலேயே சொல்லாமல் போய் விட்டாயே... என்னோட இதயத்தைக் கழட்டி இப்பொழுதுதான் மரத்தில் காய வைத்தேன். நீ அவசரப்படுத்தியதால் அப்படியே வந்து விட்டேன். சொல்லியிருந்தால் அப்போதே அதை எடுத்துத் தந்திருப்பேன்” என்றது.
முதலை, “அட அப்படியா... சரி உன்னோட மரத்திடம் உன்னைக் கொண்டுபோய் விடுகிறேன். நீ அந்த இருதயத்தை எடுத்துக் கொண்டு வா...” என்று சொல்லியபடி கரைக்குக் கொண்டு போய் விட்டது.
குரங்கு ஓடிப் போய் மரத்து மேல் ஏறிக் கொண்டு முதலையைப் பார்த்து, “அட நயவஞ்சக முதலையே... யாராவது இதயத்தைக் கழற்றி வெளியில் வைப்பார்களா...? இப்படி உயிரை வாங்குகிற நண்பனோட நான் பழகிவிட்டேனே...? இனிமேல் உனக்கும் எனக்கும் எந்தவிதமான உறவும் வேண்டாம்... நீ உன்னோட வழியில் போ... நான் என்னோட வழியில் போகிறேன்...” என்றது.
அந்த ஆண் முதலை வெட்கித் தலைகுனிந்தபடி தண்ணீருக்குள் சென்றது.
இந்த முதலை மாதிரியே ஒருவன் இருந்தான். ஆனால், முதலை மாதிரி இல்லாமால் கூட இருந்தே நண்பனைக் காட்டிக் கொடுத்து அவனோட சாவுக்கும் காரணமாக ஆகி விட்டான். அந்த நயவஞ்சக நண்பனின் பெயர் என்ன தெரியுமா? அவன்தான் அனந்த நாராயணன். வீரன் பூலித்தேவனைக் காட்டிக் கொடுத்த துரோகி. அந்தத் துரோகியின் கதையைத் தெரிந்து கொள்வோமா...?
புலித்தேவன்
பாளையக்காரர்கள் ஆட்சிமுறையினால் பாண்டிய நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றில் ஒன்று நெற்கட்டான் செவல் பாளையம். இப்பாளையம் மற்ற பாளையங்களை விடப் பெரியது; தலைமை வகிக்கும் பாளையமாகவும் விளங்கியது. இந்தப் பாளையத்தின் மன்னராக விளங்கியவரே சித்திரபுத்திரத் தேவர். இவருக்கும் சிவஞானநாச்சியாருக்கும் 1.9.1715-ல் பிறந்தவர் புலித்தேவன். இவரைப் பூலித்தேவன் என்றும் அழைப்பர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காத்தப்பப் புலித் தேவர் என்பதாகும். இப்பெயர் அவரது குலதெய்வத்தின் பெயராகும். இவர் மக்களைத் தாக்கி வருத்திய புலி ஒன்றைக் கட்டி உயிருடன் பிடித்து வந்ததால் மதுரையை ஆண்ட விஜயராங்க சொக்கநாத நாயக்கர் வடகாத்தான் புலித்தேவன் என்று அழைத்தார். அன்று முதல் இவரது பெயர் புலித்தேவன் என்றே வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புலித்தேவன் 12 வயதில் நெற்கட்டான் செவல் பாளையத்தின் இளவரசரானார். இவரது மனைவியார் பெயர் கயல்கண்ணி இலட்சுமி நாச்சியார் என்பதாகும். இக்கயல்கண்ணி நாச்சியாரும் போர்க்கலையில் தேர்ச்சி பெற்றவராவார். தென்னிந்தியாவில் நாயக்க மன்னர்களின் பலம் குன்றிய காரணத்தால் முஸ்லீம் மன்னர்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. பல குழுக்களாகச் செயல்பட்ட நவாப்புகள் எனப்பட்ட முஸ்லீம் ஆட்சியாளர்களுக்குள் வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது. ஆற்காட்டு நவாப்பான முகம்மது அலிக்கும் வாலாஜா நவாப்பான சந்தா சாகிப்புக்கும் இடையே கடுமையான போர் ஏற்பட்டது.
ஊர் இரண்டு பட்டதால் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்களுக்குக் கொண்டாட்டமாகிப் போனது. அவர்கள் இப்போர்களில் தலையிட்டனர். ஆற்காட்டு நவாப்பாகிய முகம்மது அலிக்கு ஆங்கிலேயர்கள் ஆதரவு கொடுத்துப் போர்ச் செலவிற்காகவும் பணம் கொடுத்து வெற்றி பெறச் செய்தனர். வெற்றிபெற்ற முகம்மதலியிடம் கடன் பணத்தைக் கேட்க வேறுவழியறியாத அவர் தன்னாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரிவசூல் செய்யும் உரிமையைக் கொடுத்தார். வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் ஆட்சியாளர்கள் ஆனார்கள்.வரிவசூல் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் இராபர்ட் கிளைவை நியமித்தனர். இவர் 1753-ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து செயல்பட்டார். இவரது உதவியாளரான இன்னிஸ் துரை என்பவர் வரிவசூல் செய்வதற்காக திருநெல்வேலிச் சீமைக்கு வந்தார். இவர் பல பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்துவிட்டு நெற்கட்டான் செவல் பாளையத்திற்கு வந்து வரியைக் கேட்டான். அவனால் வரிவசூல் செய்ய முடியவில்லை.
1755-ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் ஹோரன் என்பவர் முகம்மது அலியின் தளபதி மாபூஸ்கான் என்பவனின் துணையுடன் புலித்தேவனின் கோட்டையை முற்றுகையிட்டான். இவர்களின் கூட்டுப்படையைப் புலித்தேவன் விரட்டியடித்தார். இந்தப் போரில் வெற்றிபெற்ற புலித்தேவன், “ஆங்கிலக் கம்பெனியாரின் ஏஜெண்ட்டுகள் தனது பாளையத்தின் எல்லைக்குள் நுழைவதற்கு அனுமதி கிடையாது” என்று அறிவித்தார்.
புலித்தேவன் வெற்றி
புலிதேவனின் இந்த அறிவிப்பு தனக்கு விடுக்கப்பட்ட சவால் எனக் கருதினான் இராபர்ட் கிளைவ். அவன் மாபூஸ்கான், ஹோரன் ஆகியோர் தலைமையில் மீண்டும் புலித்தேவனை எதிர்க்கப் பெரும்படையை அனுப்பினான். புலித்தேவன் இப்படையை வரும் வழியிலேயே எதிர்த்துத் தாக்கினார்.
போர் உக்கிரமாக நடைபெற்றது. உத்திரக் கோட்டை என்ற இடத்தில் நடைபெற்ற இப்போரில் புலித்தேவன் வெற்றி பெற்றார். ஆங்கிலத் தளபதி தோல்வியை ஒப்புக் கொண்டான். புலித்தேவனின் மாபெரும் எழுச்சியைக் கேள்வியுற்ற ஆற்காட்டு நவாப் தங்கத்தட்டு ஒன்றையும் வீரவாள் ஒன்றையும் பட்டுத்துணியில் சுற்றிப் பரிசாக அனுப்பி வைத்தார்.
1755 முதல் 1767 வரை தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் புலித்தேவன் ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்துப் போரிட்டார். புலித்தேவர் திருவாங்கூர், களக்காடு, ஸ்ரீவைகுண்டம், பாஞ்சாலங்குறிச்சி, வடகரை உள்ளிட்ட பாளையக்காரர்களை ஒருங்கிணைத்து கூட்டணி அமைத்து ஆங்கிலேயரை எதிர்த்த முதல் வீரராக விளங்கினார். பல போர்களில் தோல்வியைக் கண்ட ஆங்கிலேயர்கள் அவரைச் சூழ்ச்சியாலும் நயவஞ்சகத்தாலும் வெற்றிகொள்ள முனைந்தனர். ஆங்கிலேயர்கள் மருதநாயகம் என்ற கான்சாகிப்பைத் தளபதியாக நியமித்துப் போரில் ஈடுபட்டனர். மருதநாயகம் கடுமையாகப் போராடினான். புலித்தேவனுக்கு எதிராகப் பெருங்கூட்டணி ஒன்றை உருவாக்கினான். புதிய பீரங்கிகளின் உதவியுடன் 1761-ஆம் ஆண்டு புலித்தேவனை வெற்றிகொண்டான்.
மருதநாயகம் கைகளில் சிக்காது தப்பிச் சென்ற புலித்தேவன் தனது படைகளை ஒருங்கிணைத்துக் கொண்டு கடலாடிக் கோட்டைக்குள் பதுங்கியிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மருதநாயகம் நெற்கட்டான் செவல், பனையூர், வாசுதேவநல்லூர் ஆகிய கோட்டைகளை இடித்துத் தரைமட்டமாக்கினான். இதற்கிடையில் மருதநாயகத்திற்கும் ஆங்கிலேயர்களுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 1764-ஆம் ஆண்டு மருதநாயகம் தூக்கிலிடப்பட்டான். இச்சமயத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட புலித்தேவன் வாசுதேவநல்லூர் கோட்டையைக் கைப்பற்றி அதனைப் பலப்படுத்தினார்.
புலித்தேவன் தலைமறைவு
புலித்தேவனின் எதிரிகளுள் முக்கியமானவராகத் திகழ்ந்த ஆற்காட்டு நவாபின் சகோதரன் மாபூஸ்கான் தனது சகோதரனுடன் ஏற்பட்ட மோதலினால் உயிருக்குப் பயந்து புலித்தேவனிடம் அடைக்கலம் கேட்டு அவரிடம் வந்து தங்கினான். வந்தவன் தனது எதிரியின் தம்பி என்று அறிந்து அவனுக்கு அடைக்கலம் கொடுத்து அவன் வணங்குவதற்கு ஒரு பள்ளிவாசலையும் புலித்தேவன் கட்டிக் கொடுத்தார்.
இதனிடையே புலித்தேவனை அழித்தொழிக்கக் கருதிய ஆங்கிலேயர்கள் 1767-ஆம் ஆண்டு பெரும்படையொன்றைத் திரட்டி அதனைத் தளபதி காம்பெல் என்பவனின் தலைமையில் வாசுதேவநல்லூர்க் கோட்டையை முற்றுகையிட அனுப்பினர். அவனும் பெரும் பீரங்கிப் படையுடன் வந்து முற்றுகையிட்டான். இடைவிடாது பெய்த மழையினால் கோட்டைப் பலவீனமாகவே அதனைக் கைவிட்டுப் புலித்தேவன் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தலைமறைவானார்.
புலித்தேவன் தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் அவரது மனைவியும் குழந்தைகளும் இருந்த வீட்டிற்கு ஆங்கிலேயர்கள் தீயிட்டனர். இதில் அவரது மனைவி கயல்கண்ணி நாச்சியார் இறந்தார். அவரது குழந்தைகள் காப்பாற்றப்பட்டு அவரது நண்பர்களால் இரகசியமாக வளர்க்கப்பட்டனர்.
புலித்தேவன் மலையில் இருந்த குகைகளில் தனது ஆதரவாளர்களுடன் தங்கினார். அவருடன் பல போர்வீரர்களும் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஊர் மக்கள் காட்டிற்குச் செல்பவர்களைப் போன்று நார்ப் பெட்டிகளில் உணவினை எடுத்துக் கொண்டு போய்ப் பாறை மீது வைத்து வந்தனர். அப்படி வைக்கப்பட்ட பாறையே இன்று சோறு ஊட்டும் பாறை எனப் பெயர்பெற்றது. அங்கு பகலில் வைக்கப்படும் சோற்றினை இரவு நேரத்தில் குகைகளுக்கு எடுத்து வந்து போர்வீரர்கள் உண்டு வந்தனர்.
படைவீரர்களுடன் குகையில் தஙகியிருந்த மாவீரன் புலித்தேவன் ஒற்றர்கள் மூலம் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை நாள்தோறும் அறிந்து வந்தார். நாட்டு மக்களிடையே நாட்டுப்பற்று ஊட்டும் கோடாங்கிப் பாடல்களைப் பாடச் செய்து வந்தார் புலித்தேவன். நாட்டு மக்கள் விவசாய வேலைகளில் இறங்கி உற்பத்தியைப் பெருக்கி வயிறார உண்டு வாழ்ந்தனர். மக்களின் அமைதியான வாழ்க்கையைக் கண்ட ஆங்கிலேயர் புலித்தேவனுக்கும் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அறிந்தனர். எப்படியும புலித்தேவனைப் பிடித்துவிடவேண்டும் என்று வஞ்சக எண்ணத்துடன் செயல்பட்டனர்.
நண்பனின் துரோகம்
ஆற்காட்டு நவாப்பும் ஆங்கிலேயரும் சேர்ந்து புலித்தேவனை எதிர்த்துப் பல போர்களை நடத்தியும் அவரை வெற்றி கொள்ளமுடியவில்லை. அதனால் புலித்தேவனின் நெருங்கிய நண்பனான அனந்த நாராயணனிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரைத் தங்கள் வயப்படுத்தினர். ஆங்கிலேயரின் ஆசையில் மயங்கிய அனந்த நாராயணன் புலித்தேவரைப் பிடித்துக் கொடுக்கச் சம்மதித்தான்.
ஆங்கிலேயர்களின் திட்டத்தின்படி அனந்த நாராயணன் புலித்தேவனுக்கு இரகசிய ஓலை ஒன்றை அனுப்பினான். அதில், “கம்பெனியாரை விரட்டியடிக்கப் புதிதாக ஆயுத சாலை ஒன்றினைத் தான் அமைத்திருப்பதாகவும், அதனை வந்து பார்வையிட்டுவிட்டுத் தனக்கு ஆலோசனை வழங்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டான்.
ஓலையைப் படித்த புலித்தேவனுக்கு ஆச்சரியம். எப்போதும் பகைவனை எதிர்த்துப் போரிடப் படையுடன் வருமாறு நண்பரிடமிருந்து ஓலை வரும் என்றால் இன்று ஆயுத சாலையைப் பார்வையிடும்படி ஓலை வந்துள்ளதே என்று எண்ணி எல்லாம் சங்கர கோமதித் தாயே உன்னுடைய செயல் என்று புலித்தேவன் மனதில் எண்ணிக் கொண்டு தூதுவனிடம் நாளை வருவதாகக் கூறி அனுப்பினார். இரவில் அவரது கனவில் கோமதி சங்கரர் தோன்றி, “நீ விரைவில் ஜோதியில் கலக்கும் நேரம் வந்துவிட்டது” என்று கூறி மறைந்துவிட்டார்.
மறுநாள் அனந்த நாராயணன் குறிப்பிட்டிருந்த ஆயுதசாலைக்குச் சென்றார் புலித்தேவன். நாராயணன் புலித்தேவனுக்கு ஆயுதசாலையைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தான். அப்போது இரும்புக் கூண்டிற்குள் இருந்த ஆயுதங்களைப் பார்க்குமாறு கூறிப் புலித்தேவனை அதனுள் போகுமாறு கூறி அதனுள் புலித்தேவன் சென்றவுடன் தந்திரமாக இரும்புக் கூண்டின் கதவைச் சாத்தி அடைத்து விட்டான்.
நண்பனின் துரோகச் செயலைக் கண்ட புலித்தேவன், “நண்பா அனந்த நாராயணா ஏன் என்னை அடைத்து விட்டாய்? திறந்துவிடு” என்று கேட்க அந்நயவஞ்சகனோ, “நண்பரே என்னை மன்னித்து விடுங்கள். கம்பெனியார் உம்மைப் பிடித்துக் கொடுத்தால் எனக்குப் பெரும்பதவியையும் பொற்காசுகளையும் கொடுப்பதாகக் கூறியுள்ளனர்” என்றான்.
நரித்தனம் மிக்க நயவஞ்சகனின் துரோகத்தால் வெகுண்ட புலித்தேவன், “நாராயணா! கேவலம் பதவிக்காகவும், பணத்திற்காகவும் உண்மையான நண்பனைக் காட்டிக் கொடுக்கிறாய். உனக்கு வெட்கமாக இல்லை... உன்னைக் குறை சொல்லிப் பயனில்லை. எல்லாம் சிவனின் சித்தப்படிதான் நடக்கும்” என்று கூறிவிட்டுக் கூண்டுக்குள் மவுன நிலையில் மகிழ்வுடன் இருந்தார் புலித்தேவன்.
ஆங்கிலேயர்கள் புலித்தேவனின் கைகளில் விலங்குகளை மாட்டிப் பாளையங்கோட்டைக்குக் கொண்டு சென்று சிறையில் அடைக்கக் கருதினர். அதன்படியே புலித்தேவனை அழைத்துக் கொண்டு செல்லும் வழியில் சங்கரன் கோயில் ஊர் இடையில் வந்ததும், அவ்வூரில் எழுந்தருளியிருக்கும் சங்கரர் கோமதி கோயிலுக்குள் சென்று வழிபட்டு வரத் தன்னை அனுமதிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆங்கிலேயர்கள் தக்க பாதுகாப்புடன் அவரைக் கோயிலுக்குள் அனுப்பி வைத்தனர். புலித்தேவன் கோயிலுக்குள் சென்று இறைவனை நினைத்து,
“உன் கமலத்தையென் நாவறியாய்
உமை சங்கரனே புகலக் கேண்மின்
தீங்குபுரி மூவாசையினைச் சிக்கி
உழலும் அடியேன் தன்னை
ஓங்கருள் சூழ்உலகமதில் உனையன்றி
எனைக் காக்க ஒருவருண்டோ
ஈங்கெழுந்தருள் புரியும் இன்ப வாரிதியே
இறைவனே போற்றி போற்றி”
என்று பாடினார்.
அப்போது கோவிலுக்குள் புகை மண்டலம் எழுந்தது. அதனோடு ஒரு பேரொளிக்குழம்பும் வெளிச்சத்துடன் எழுந்தது. அதில் புலித்தேவனின் கைவிலங்குகள் தனாக அறுந்து விழுந்தன. அக்கணமே புலித்தேவன் ஜோதியினுள் இரண்டறக் கலந்து சிவனுடன் ஐக்கியமாகிவிட்டார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களும் அவர்களது படைவீரர்களும் திகைத்துப் போய் நின்றனர்.
அனைவரும் புலித்தேவனை வாழ்த்தினர். அவர் மறைந்தாலும் அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நின்று ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. துரோகிகள் அற்ப வாழ்வினை வாழ்ந்தாலும் அறமே அவர்களைக் கொன்று தீர்க்கும். புலித்தேவனின் வரலாற்றையும் அவர் இறைவனுடன் ஐக்கியமானதையும்,
“ஈடில்லாப் புகழ் புலி ஆயிரத்தெழு நூற்றி அறுபத்தேழில்
இதமான ஆடியீரைந்தாம் தேதி
கோதிலா அமர பட்சம் குருவாரம் தன்னில்
குணமுடைய பூசை நட்சேந்திர நாளில்
பேர் புகழும் சங்கரன் கோயில் ஆலயத்தில்
பிரபலமாகி லிங்க சோதி தன்னுள்
பார்புகழும் தென்னாட்டுப் பூலி ஞானி
பண்புடனே பரமபதம் சேர்ந்ததன்றே
வாழ்க பூலி வழ்க தமிழ் வாழ்க கலை வாழ்க அரசு
வாழிய வாழியவே…..”
என்கிற கதைப்பாடல் எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றது.
எதனால் நரித்தனம், குள்ளநரித்தனம் என்று சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டீர்களா...? வீரர்கள் வாழும்போது வஞ்சிக்கப்பட்டாலும் அவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகும் மக்களால் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் நவஞ்சகர்கள் உயிருள்ளவரை ஆடம்பரங்களை நாய் போல் அனுபவித்துவிட்டு மாண்ட பிறகு மக்களின் கால்களுக்கு அடியில் மிதிபட்டு மிதிபட்டு பலமுறை மாண்டுகொண்டே இருக்கிறார்கள். இதுதான் வரலாறு.
இதைவிட இன்னொரு துரோகச் செயல் வரலாற்றில் கறையை ஏற்படுத்தியிருக்கிறது… அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா...?
ஆமாம்... அமைச்சராக இருந்தவனும், நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தவனும் தன்னை நம்பியவருக்குப் பெருந்துரோகம் செய்தான். உலகத்திலேயே முதன் முதலில் ராக்கெட் தொழில் நுட்பத்தைப் போர்க்களத்தில் அறிமுகப்படுத்திய ஒரு மாவீரன் வீழ்வதற்காகச் சோரம் போயினர்… அத்துரோகிகள் யார் என்று தெரிந்து கொள்ள தாங்கள் ஆசைப்படுவது தெரிகிறது... அடுத்த பகுதி வரை பொறுமை காத்திருங்கள்...

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.