நல்லதை விரும்புவோரும் உண்டு. நல்லவர்களையும் நல்லனவற்றையும் விரும்பாதவர்களும் உண்டு. சிலபேர் நல்லவனாக நடித்து நல்லவர்களை ஏமாற்றித் துரோகம் செய்வதுண்டு. அதற்குக் காரணம் என்ன? எல்லாம் சுயநலம்தான். சிலருக்கு நல்லது செய்தாலே பிடிக்காது... நல்லது செய்பவர்களை எப்படியாவது ஒழித்து விட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிவார்கள்...
மகாபாரதத்தில் ஒரு கதை வருகிறது. அதைக் கேளுங்க...
சுயநலம் கொண்டவர்கள் எப்படி நல்லவர்களை வீழ்த்துகிறார்கள் என்பதை விளக்கப் பீஷ்மர் சொன்ன கதைதான் இது.
முன்னொரு காலத்தில் புரிகை என்னும் நகரில் பௌரிகன் என்னும் மன்னன் இருந்தான். முற்பிறவியில் செய்த கர்மப் பயனால் அடுத்த பிறவியில், ஒரு சுடுகாட்டில் நரியாகப் பிறந்தான். நரி தன் முற்பிறவியைப் பற்றி எண்ணி வருத்தம் கொண்டது. அது பிறர் தரும் மாமிசத்தை உண்பதில்லை. பிற உயிர்களுக்குத் துன்பம் தருவதில்லை. உண்மையையே பேசி வந்தது. விரதம் நியமங்களைத் தவறாமல் நிறைவேற்றி வந்தது. மரத்திலிருந்து தாமே உதிர்ந்த கனிகள்தாம் அதன் உணவு. அது விலங்காகப் பிறந்திருந்தாலும் ஒழுக்கத்தில் சாதுக்களைப் போல் விளங்கிற்று. தான் பிறந்த சுடுகாட்டை விட்டு வேறிடம் சென்று வசிக்க அது விரும்பவில்லை.
இந்த நரியின் போக்கைக் கண்ட மற்ற நரிகள், நரிகளுக்கு உள்ள பொதுவான வாழ்க்கை முறையையே அது மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்திக் கூறின. “சாதுக்களுக்கு விதிக்கப் பட்ட ஒழுக்கத்தை விட்டுவிட்டு நீ நரிக்குரிய பண்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். மயானத்தில் இருந்து கொண்டு மாமிசத்தை வெறுக்கக் கூடாது. நாங்கள் உண்பதை உனக்குத் தருகிறோம். சாதியின் இயல்புக்கு ஏற்ப நடந்துக் கொள்” என்றன.
மன அடக்கமும் பொறுமையும் உள்ள அந்த நரி இனிய சொற்களால் பதில் உரைத்தது. “பிறப்புக் காரணமாக நான் நரிகளுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை மேற்கொள்ள மாட்டேன். எந்தக் குலமாய் இருந்தாலும் ஒழுக்கத்தைப் போற்ற வேண்டும். எதைச் செய்தால் நம் இனத்தின் புகழ் பெருகுமோ, அதையே நான் செய்ய விரும்புகிறேன். சுடுகாட்டில் நான் வசிப்பது குற்றமாகாது. ஆத்மாதான் நல்ல செயல்களுக்குக் காரணமாக இருக்கிறது. ஒருவர் வாழும் இடத்திற்கும் ஒழுக்கத்திற்கும் தொடர்பு இல்லை. பிறப்பு ஒருவருடைய ஒழுக்கத்திற்குக் காரணம் அன்று. ஒழுக்கம்தான் குலத்தை உயர்த்துகிறது. ஆத்மாதான் நல்ல செயல்களையும், கெட்ட செயல்களையும் செய்யத் தூண்டுகிறது. வசிக்கும் இடம் அன்று. ஆசிரமத்தில் இருக்கும் ஒருவன் அடாத செயல் புரிகிறான். ஆசிரமத்தில் இல்லாத ஒருவன் அறம் செய்கிறான். ஆகவே இருக்குமிடம் முக்கியமில்லை. நரியாகப் பிறந்ததால் - சுடுகாட்டில் வசிப்பதால் - மாமிசம் உண்ண வேண்டும் என்பதில்லை. ஆதலால் உங்கள் ஆலோசனைகளை என்னால் ஏற்கமுடியாது” என்று கூறிற்று.
அந்த நரியின் ஒழுக்கம் மிக்க வாழ்க்கை காடெங்கும் உள்ள விலங்குகளால் பாராட்டப்பட்டது. ஒரு அரசப் புலி அந்த நரியைப் பற்றிக் கேள்விப்பட்டு வியப்புற்றது. அத்தகைய ஞானம் நிறைந்த நரியை அமைச்சராக ஏற்க விரும்பியது. நரியை நோக்கி, “நண்பனே! உன் புகழை நான் அறிவேன், என்னுடன் இருந்து விடு. எனக்கு நல்வழி காட்டு. உனக்கு என்ன வேண்டுமோ அதை உண்ணலாம். நான் பிறந்த புலி ஜாதி கொடூரமானது. ஆயினும் நீ என் இதயத்தில் இடம் பெற்று விட்டாய். என் சொல்லை மறுக்காமல் ஏற்றுக் கொள்” என்று கேட்டுக் கொண்டது.
வலிமை மிக்க புலியை நோக்கி நரி பணிவுடன், “வேந்தனே! உன் பெருமைக்கு ஏற்ப பேசினாய். தருமத்தில் விருப்பம் உள்ளவரை நீ தேர்ந்தெடுப்பது நியாயமானதே! நீதியில் அன்பும் தருமத்தில் பற்றும் நன்மையில் விருப்பமும் உள்ளவர்களை நீ கண் போல போற்ற வேண்டும். தந்தையைப் போல கருத வேண்டும். உன்னுடைய செல்வத்தில் திளைத்து இன்பம் பெற நான் விரும்பவில்லை. என்னுடைய போக்கு உன்னுடைய சேவகர்களுக்குப் பிடிக்காது. அவர்கள் கொடுமை செய்பவர்கள். நம்மிடையே மோதலை உண்டாக்குவார்கள். நீ நல்ல மனம் கொண்டு பாவிகளைக் கூட மன்னித்து விடுகிறாய். எல்லா நன்மைகளும் உன்னிடம் இருக்கின்றன. ஆனால் என் நிலைமையில் நான் திருப்தியடைகிறேன். எனக்குப் பதவி ஆசையில்லை. அரச சேவையையும் நான் அறியேன். அரச சேவையில் இருப்போர் பலவகையான நிந்தனைகளுக்கு ஆளாக நேரிடும். காட்டில் வசிப்பது விரத நியமங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. எனது வாழ்க்கை இனிமையாக இருக்கிறது. நல்ல தண்ணீர், நல்ல காய், கனி, கிழங்கு ஆகியவற்றை உண்டு விரதமேற்றிருக்கும் எனக்கு அச்சத்துடன் கூடிய அரச வாழ்வு வேண்டாம். அரச சேவையில் ஈடுபட்டு வீண் அபவாதத்திற்கு ஆளாகி நாசம் அடைந்தோர் பலர். எனக்கு அந்தப் பதவி வேண்டாம்" என்றது நரி.
ஆனால் புலியோ வற்புறுத்தி வேண்டிக் கொண்டது. அதனால் நரி ஒரு நிபந்தனை விதித்தது. புலியை நோக்கி, “நீ உரிய மரியாதையை என்னைச் சார்ந்தவருக்குத் தர வேண்டும். எனது வாழ்க்கை முறையை நான் தொடர்ந்து மேற்கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும். நான் யாரிடமும் கலந்து ஆலோசிக்க மாட்டேன். காரணம் பொறாமை உள்ளவர்கள் என் ஆலோசனையைத் திரித்துக் கூறுவார்கள். உன் இனத்தாரின் நடவடிக்கை பற்றி என்னிடம் நீ கேட்காமல் இருக்க வேண்டும். என் யோசனைகளைப் புறக்கணிக்கும் அமைச்சர்களை நீ தண்டிக்கக் கூடாது. அதுபோலவே சினம் கொண்டு என்னைச் சார்ந்தவர்களையும் நீ எதுவும் செய்யக் கூடாது” என்று கூறியது நரி.
புலி, நரி விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது. பின்னர் நரி அமைச்சர் பதவியை ஏற்றது.
அமைச்சரவையில் இடம் பெற்ற நரி புகழத்தக்க செயல்களைச் செய்து வந்தது. அதனால் அமைச்சர் அவையில் இருந்த மற்ற புலிகள் பொறாமையில் புழுங்கின. கொஞ்சம், கொஞ்சமாக நரியின் செயல்களைக் குறை கூறத் தொடங்கின. உள்ளத்தில் பகையும், உதட்டில் நட்பும் கொண்டு பழகத் தொடங்கின. எப்படியேனும் நரியின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் எனக் கருதிய அவை பலப்பல கதைகளைக் கூறிப் பொருள் ஆசை காட்டி மனத்தை மாற்ற முயற்சி செய்தன. முடியவில்லை. எப்படியும் நரியைத் தீர்த்துக் கட்டுவது என்ற முடிவுக்கு வந்தன.
அவை விலங்குகளுக்கு அரசனான புலிக்குத் தயாரித்து வைக்கப் பட்டிருந்த மாமிசத்தைத் தந்திரமாக நரியின் வீட்டில் வைத்து விட்டன. அதனால் பசியுடன் இருந்த அரசனுக்கு உரிய நேரத்தில் மாமிச உணவு கிடைக்கவில்லை. அரசப் புலியும் திருடனைத் தேடி வருமாறு ஆணை பிறப்பித்தது. அந்த நேரத்தில் நரியின் புகைப் புலிகள் அதன் மீது பழியைச் சுமத்தின. மாமிச உணவை, மிகச் சிறந்த மேதாவி என்று தன்னைக் கருதிக் கொண்டிருக்கும் உம் அமைச்சனான நரி திருடிக் கொண்டுப் போய்த் தன்னிடத்தில் வைத்துக் கொண்டது என்று கூறின.
நரியின் திருட்டுச் செயல் கேட்ட அரசப் புலி சினம் கொண்டது. உடன் நரியின் பகைப் புலிகள் “இத்தகைய அற்பத்தனமான திருட்டு நரி எதைத்தான் செய்யாது? நீங்கள் நினைப்பது போல அந்த நரி அறிவு மிக்கது அல்ல. நாணயமானதும் அல்ல. தருமம் என்னும் பெயரில் அதருமம் செய்வதில் வல்லமை மிக்க நரியை எப்படித்தான் அமைச்சராக தேர்ந்தெடுத்தீரோ... தங்களுக்குரிய மாமிசத்தைத் தன் வீட்டில் ஒளித்து வைத்திருக்கும் அந்த நரிக்கு விரதம் ஒரு கேடா?அந்த நரிதான் மாமிசத்தைத் திருடியது என்பதை நிரூபிக்க இப்போதே போய் அதனைக் கொண்டு வருகிறோம்” என்று கூறி அப்படியே கொண்டு வந்தன.
அது கண்ட அரசப் புலி நரியைக் கொல்லத் தீர்மானித்தது.
இதனை அறிந்த புலியின் தாய் தன் மகனை நோக்கி, “மகனே... நன்கு ஆலோசித்துப் பார். வஞ்சனையாளர்களின் பேச்சை நம்பாதே... ஒரு வேலையைச் செய்பவரிடையே பொறாமை ஏற்படும். அந்தப் பொறாமை படிப்படியாகக் குரோத எண்ணத்தை வளர்க்கும். அதன் விளைவுதான் இப்போது நடப்பதும்... நன்கு யோசித்துப் பார். விரத சீலமுள்ள நரியா மாமிச உணவை நாடும்...? திருடும்...? பொய், மெய் போலவும், மெய் பொய் போலவும் சில சமயங்களில் தோற்றம் அளிக்கும். அவற்றை ஆராய்ந்து அறிதல் மன்னனின் கடமை. ஆகாயம் கவிழ்ந்த வாணலியின் உள்பாகம் போலக் காட்சியளிக்கும். மின்மினிப் பூச்சிகள் நெருப்புப் பொறிகள் போல் தோன்றும். உண்மையில் ஆகாயத்தில் வாணலியின் தோற்றமும் இல்லை. மின்மினிப் பூச்சிகளிடம் நெருப்பும் இல்லை. எதையும் எண்ணிப் பார்த்து உண்மையைக் காண வேண்டும். அரசன் தன் மக்களில் யாரையும் கொல்ல முடியும். இது பெரிய காரியம் அன்று. உண்மை காண்பதுதான் பெரிய செயல். உண்மையைக் கண்டுபிடி. பாவிகளான மற்ற அமைச்சர்களின் பேச்சைக் கேட்காதே. பழுது எண்ணும் மந்திரிகளின் பேச்சைக் கேட்டால் உனக்கு அழிவு நிச்சயம் ஏற்படும். மேலான நரியைப் பகைக்காதே” என்று கூறிற்று.
அரசப் புலி ஆலோசித்துப் பார்த்தது. நரியின் மீது பழி சுமத்துதல் தவறு என உணர்ந்து கொண்டது. நரியை அணைத்துக் கொண்டது.நீதி நெறி உணர்ந்த நரிக்கு மான உணர்வு மிகுந்தது. பழிக்குப் பின் இனியும் உயிர் வாழ விரும்பவில்லை. உண்ணா நோன்பு இருந்து உயிர் துறக்க விருப்பம் கொண்டது. ஆனால் புலி நட்பு முறையில் கண்ணீர் பெருக்கி நரியை அவ்வாறு செய்யாமல் தடுக்க முயன்றது. ஆனால் நரியோ தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்தது. அது புலியை நோக்கி, "ஆரம்பத்தில் நீ என்னை நன்கு மதித்தாய். பிறகு பிறரின் சொல் கேட்டுப் பழி சுமத்தி அவமானப்படுத்தினாய். பதவியிலிருந்து நீக்கினாய். மீண்டும் பதவி பெற்றால் என் மீது உனக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்? நானும் எப்படி பழையபடி நம்பிக்கை கொள்ள முடியும்? முதலில் பாராட்டிப் பதவியில் அமர்த்திய பின் குறை கண்டு பழி சுமத்துதல் அரச நீதி ஆகாது. இனிமேல் நீயும் என்னிடம் பழையபடி இருக்க முடியாது. நானும் மனம் கலந்து பழக முடியாது. நண்பர்களும் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். பிளவு ஏற்பட்ட பிறகு ஒன்று கூடுதல் கடினம்” என்பன போன்ற நீதிகளைக் கூறிய பின் புலியிடம் விடை பெற்றுச் சென்றது நரி. ஆயினும் மன நிம்மதி இழந்து, உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்து சுவர்க்கம் அடைந்தது' என்று கூறினார் பீஷ்மர்.
துரோகிகளால் நல்லவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்?
இப்படித்தான் தாய்நாட்டுக்காகப் போராடிய மாவீரர் ஒருவரை மீர்சடக் என்பவன் துரோகத்தால் வீழ்த்தினான். இந்த மீர்சடக் என்பவனை மிர்சாதிக் முகம்மது மிர்னாதிக் என்றும் அழைப்பார்கள். இவன் உயர் அதிகாரியாக, தீரன் திப்புசுல்த்தானின் நம்பிக்கைக்கு உரிய ஆளாக இருந்தான். ஆனால், இதே மீர்சடக் பெருந்துரோகியாக மாறிட்டான். அது ஒரு பெரிய துரோகம்... பணத்துக்காவும் பதவிக்காகவும் பச்சோந்தியாக மாறி எதிரிகளின் எண்ணம் ஈடேறுமாறு செய்தான் துரோகி மீர்சடக்.
1750-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் நாள் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள தேவனகள்ளி என்னுமிடத்தில் ஹைதர்அலிக்கும் அவரது இரண்டாவது மனைவி பாத்திமாவிற்கும் முதல் மகனாகப் பிறந்தார் திப்பு சுல்த்தான். திப்புவின் தந்தை மைசூர் மன்னரின் படையில் போர்வீரராகவும் சுயமாக ஒரு சிறிய போர்ப்படையினையும் வைத்திருந்தார். திப்புவின் தாயாரின் இயற்பெயர் ஃபகர்உன்நிஸா என்பதாகும். இவரின் தந்தையான சாகில் தாரிக் என்பவர் ஆந்திராவில் உள்ள கடப்பா என்னும் பகுதிக்கு ஹைதராபாத் நிஜாமினால் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர். சாதாரண படைவீரரான ஹைதர் அலியின் வீரம் திறமை ஆகியவற்றை அறிந்து அவரைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தார் ஃபர்உன்நிஸா.
திப்புசுல்த்தான் தனது தந்தையிடம் இந்தியப் போர்க்கலையையும் தனது தந்தையின் இராணுவத்தில் பணியாற்றிய பிரெஞ்சு அதிகாரி ஒருவரிடம் மேல்நாட்டுப் போர்க்கலையையும் கற்றுக் கொண்டார். இளம் வயதிலேயே திப்புசுல்த்தான் தந்தையுடன் சேர்ந்துகொண்டு ஆங்கிலேயருக்கு எதிராகப் பல போர்களில் ஈடுபட்டார்.
1766-ஆம் ஆண்டு திப்புசுல்த்தான் தனது 15-அவது வயதில் தனது தந்தையினால் கேரளாவில் நடைபெற்ற போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 1769-ஆம் ஆண்டுவரை நடைபெற்ற முதல் மைசூர்ப் போரின் போது தனது 16-ஆம் வயதில் தளபதியாகப் படை நடத்திச் சென்றார் திப்புசுல்த்தான்.
1775 முதல் 1782 வரை நடைபெற்ற முதல் ஆங்கிலேய மராட்டியப் போர்களிலும் திப்புசுல்த்தான் பங்கு கொண்டார். மராட்டியத்திடமிருந்து சில பகுதிகளைப் பெற்று மைசூர் அரசோடு இணைத்தனர். இப்போர்களின் முடிவில் ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. இதனால் பலம் பெற்ற ஆங்கிலேயர்கள் ஹைதர் அலியையும் திப்புசுல்த்தானையும் எதிர்த்தனர். ஆனால் அவர்களுக்கு அஞ்சாது இருவரும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டனர்.
1769-ஆம் ஆண்டு முதலாம் மைசூர்ப் போர் முடிவுக்கு வந்த போது ஆங்கிலேயர்கள் திப்புவுடன் சமாதான உடன்படிக்கைக்கு முன்வந்தனர். இந்த உடன்படிக்கையின் போது திப்பு உடனிருந்தார். ஆங்கிலேயர்களுக்காகப் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட போது ஹைதர் அலியின் சார்பில் கலந்து கொண்ட திப்புவின் திறமையையும், அரசியல் அறிவையும் ஆங்கிலேயர்கள் கண்டு வியப்படைந்தனர். இந்த உடன்படிக்கையின் போது சமாதானம் செய்பவராகக் கலந்து கொண்ட ஹைதராபாத் நிஜாம் திப்புவின் மீது கொண்ட ஈடுபாட்டினால் ஹைதராபாத் நகருக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 6000 படைவீரர்களுடன் திப்பு நிஜாம் அரசவைக்கு நல்லெண்ணத் தூதுவராகச் சென்றார்.
நிஜாம் திப்புவிற்கு ஃபரே அலிகான், நவாப்உத்தவுலா போன்ற சிறப்புகளை வழங்கினார். திப்பு இச்சிறப்புகளை தனது 18-ஆவது வயதிலேயே பெற்றார். 1780-ஆம் ஆண்டு செப்டம்பரில் காஞ்சிபுரத்தை அடுத்து நடைபெற்ற பொல்லலார் போரில் ஆங்கிலப்படை முற்றிலும் அழிக்கப்பட்டது. கர்னல் பெய்லி, அவருக்குத் துணையாக வந்த சர்ஹெக்டர் மன்றோ போன்றோர் படுதோல்வி அடைந்தனர். இது திப்புவிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
ஆங்கிலேயர்கள் தங்களது ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சென்னைக்கு ஓடினர். கர்னல் பெய்லி திப்புவால் கைதுசெய்யப்பட்டார். இது இந்தியாவில் ஆங்கிலேயர்கள் அடைந்த மாபெரும் தோல்வியாகும். திப்பு 1781-ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து சித்தூர்க் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டார். சென்னைக்கு அருகிலிருந்த கோட்டையை இழந்ததை ஆங்கிலேயர்கள் பெரிய தோல்வியாகக் கருதினர். 1782-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் நாள் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள அன்னக்குடி என்னுமிடத்தில் நடந்த போரில் ஆங்கிலப் படையினைரை எதிர்த்துப் போரிட்டுத் தோற்கடித்தார். ஆங்கிலப் படையினரையும் தளபதியையும் ஆங்கிலேயர்களையும் திப்பு சிறைப்படுத்தினார். ஆங்கிலேயர்களின் அனைத்து ஆயுதங்களையும் தனதாக்கிக் கொண்டார். இங்ஙனம் மாவீரராக இளமையிலிருந்தே திப்பு விளங்கினார்.