வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும்
முனைவர் சி. சேதுராமன்
15. நம்பிக்கை இழக்க வைத்த துரோகம்
வள்ளுவர் தீமை தீப்போன்று தீங்கிழைக்கும் என்றதுடன் தீமைத் தீயைவிட அச்சம் தரக்கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளார். துரோகமும் அதைப் போன்றதுதான். தீ பற்றியதை மட்டுமே அழிக்கும். ஆனால் தீமையாகிய துரோகம் அது கண்ணில் காண்பதையெல்லாம் அழித்துவிடும். அதனால்தான் துரோகம் செய்ய அஞ்சவேண்டும் என்கிறார்கள். ஒருமுறை துரோகத்துக்குத் துணை போய்விட்டால், பின்னர் அப்படியே அதில் தொடர்ந்து துணிந்து இறங்கிடுவார்கள்.
நாம் நேர்மையா இருந்து எதைச் சாதித்தோம்? என்று நினைத்துக் கொண்டு துரோகமே வெற்றிபெறத் துணையானது என்று கருதி அதனைப் பின் தொடருபவர்கள் பலர். அதிலும் பலர் தங்களுக்கு உதவி செய்தவர்களையே துரோகம் செய்து அழிப்பார்கள்... இதுதான் கொடுமையிலும் கொடுமை. தன்னிடம் உதவி பெற்றவன் தனக்கே துரோகம் செய்து தன்னோட அழிவுக்குக் காரணமா இருக்கிறான் என்பது தெரிந்தும் அதனையும் பொறுத்துக் கொண்டு, அதற்காக நன்றியில்லாமல் நடந்து கொண்ட அவனுக்கு எந்தவிதமான பழியும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தியாகம் செய்தவர்களும் இந்தப் பூமியில் அவதரித்திருக்கின்றார்கள். அவர்கள் செய்வது துரோகம் என்றாலும் அதனைச் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டு அழிவைத் தேடிக் கொள்ளும் புண்ணியர்கள் சிலரும் இங்கு அவதரித்துள்ளனர்.
பெரியபுராணத்தில் ஒரு கதை
சோழநாட்டில் எயினனூர் எனும் ஊரில் ஏனாதி என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் அரசர்களுக்குப் வாள் பயிற்சி அளிக்கும் ஆசிரியராக இருந்து மிகுந்த புகழ் பெற்றார். ஏனாதி உறவினனாகிய அதிசூரன் என்பவனும் அந்தத் தொழிலைச் செய்து கொண்டிருந்தான். ஆனால், அவனால ஏனாதி போன்று பேரும் புகழும் பெற முடியவில்லை. அதனால் அந்த அதிசூரன் ஏனாதியைக் கண்டு பொறாமை கொண்டான். நாளடைவில், அந்தப் பொறாமையே பகைமையாக மாறியது. அவன் பலமுறை ஏனாதியிடம் சென்று வாள் போரிட்டான். ஆனால், அனைத்திப் போரிலும் அவன் தோல்வியையே சந்தித்தான். இதனால், என்ன சூழ்ச்சி செய்தால் ஏனாதியை வீழ்த்தலாம் என்று யோசித்தான்.
அதிசூரன் நேர்மையாகப் போரிட்டால் ஏனாதியை வீழ்த்த முடியாது என்று தெரிந்த அவன் அவரைத் துரோகத்தால்தான் வீழ்த்த வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வழிகளில் ஈடுபட்டான். ஏனாதி சிவபெருமான் மேல் மிகுந்த பக்தியுடையவர். சிவனடியார்களைக் கண்டால் சிவனைக் கண்டது போல் மிகுந்த மகிழ்ச்சியடைவார். சிவனடியார்களுக்குத் தனது தொழில் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு தொண்டுகள் செய்து வந்தார்.
இதைத் தெரிந்திருந்த அதிசூரன் ஏனாதியை வீழ்த்த சிவனடியாராக வேடமிட்டு வந்து தனது முகத்தைக் கேடயத்தால் மறைத்துக் கொண்டு வாள் போருக்கு அவரை அழைத்தான். அதிசூரனின் கபட நாடகத்தை அறியாத ஏனாதி அவனோடு போர்புரிவதற்காகச் சென்றார்.
போர் கடுமையாக நடந்தது. முகத்தை தனது கேடயத்தால் மறைத்துக் கொண்டே அதிசூரன் போரிட்டான். ஒரு கட்டத்தில் ஏனாதியின் கை ஓங்கியது. அதிசூரனைக் கீழேதள்ளி வாளால் வெட்ட முற்பட்ட போது தனது முகத்தை மறைத்து வைத்திருந்த கேடயத்தை அவன் எடுக்கவே அதனைப் பார்த்த ஏனாதி திடுக்கிட்டார். இறைவனின் அடியவரை அல்லவா நாம் கொல்ல நினைத்தோம். இது தவறல்லவா என்று எண்ணி அவனைக் கொல்லாமல் தனது ஆயுதத்தை கீழேபோட்டுவிட்டார். இதனை,
“கண்டபொழுதே கெட்டேன்
முன்பிவர் மேற்காணாத
வெண்டிரு நீற்றின் பொலிவு
மேற்கண்டேன்; வேறினியென்?
அண்டர் பிரான் சீரடியார்
ஆயினார் என்று மனங்
கொண்டு இவர்தங் கொள்கைக்
குறிவழி நிற்பேன் என்று”
நிராயுதபாணியாக நின்றார் ஏனாதி.
நிராயுதபாணியாக நின்ற ஏனாதியை அதிசூரன் எழுந்து வந்து மீண்டும் போரிட அழைத்தான். சிவனடியாராக இருக்கும் இவனுடன்
போரிடுவதா? என்று சிந்தனையுடன் இருந்த நாயனாரைக் கொல்வதற்கு வாளைச் சுழற்றி வந்தான் அதிசூரன். ஆயுதம் இன்றி போரிடாது நின்ற தன்னைக் கொன்றால் சிவனடியாருக்குப் பழி ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சிய ஏனாதி நாயனார், வாளை எடுத்துக் கொண்டு அதிசூரனோடு போரிடுவதைப் போன்று நடித்தார்.
இதற்காகவே காத்திருந்தவனைப் போன்று நின்றிருந்த அதிசூரன் வாளால் ஏனாதியை வெட்டிக் கொன்றான். வஞ்சத்தாலும் துரோகத்தாலும் ஏனாதியைக் கொன்றான் அதிசூரன். ஏனாதி அதனைப் பற்றிச் சிறிதும் கவலையுறவில்லை. சிவனடியாருக்கு ஊறுநேராவண்ணம் தாம் நடந்து கொண்டதை எண்ணி மகிழ்வாகவே கீழே சரிந்தார். அவரின் பக்தித் திறத்தைக் கண்ட சிவபெருமான் ஏனாதிக்கு அருள்புரிந்து அவர் நாயன்மார்களில் ஒருவராக இடம் பெற அருள் புரிந்தார்.
இதேபோல், ரோமாபுரியில் வாழ்ந்த ஆஸ்ட்ரகாத் என்ற இனத்திற்கு முகவரி கொடுத்த தியோடெரிக் என்பவருக்குத் துரோகிகள் தொடர்ந்து துரோகம் செய்து வந்தனர். அந்த நல்லவரை நம்பிக்கை இழக்க வைத்தது துரோகம்... துரோகம் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றது. ஆனால், அதன் முறைகள்தான் வேறுபடுகிறது. ரோமப்பேரரசின் போர்ப்படையாகிய ரோமன் லீஜன் என்பது அக்காலத்தில் மிகச் சிறந்த படையாக விளங்கியது. சில நூற்றாண்டுகளாகத் தோல்வியே அடையாமல் வெற்றிக்கு மேல் வெற்றி அடைந்த படை. ஆனால் ரோமப் பேரரசைச் சுற்றிலும் பார்பேரியன் என்று ரோமர்களால் கருதப்பட்ட வாண்டல், கால், ப்ரேங்க், விஸிகாத், ஆஸ்ட்ரகாத் போன்ற பல குடியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களால்தான் முடிவில் ரோமப் பேரரசு அழிந்தது.
நாடோடி இனத்தின் தலைவன்
ஆஸ்ட்ரகாத் என்ற ஒரு இனம் ரோமாபுரியில் இருந்தது. இது ஒரு நாடோடி இனமாகும். இந்த இனத்திற்கென்று நாடும் இல்லை சிறு வீடும் இல்லை. ரோம் நாடு முழுமையும் இவர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட இனத்தில் மாபெரும் வீரனாக வந்து தோன்றியவன் தியோடெரிக். அவன் பிறந்த போது அந்த இனம் இரு பிரிவுகளாகப் பிளவுபட்டிருந்தது. ஒன்றிற்கு மன்னன் தியோடெரிக்; மற்றொன்றிற்கு ட்ரையாரிஸ் என்பவன் மன்னனாக இருந்தான். இவர்கள் இருவரும் ரோமாபுரியில் வாழ்ந்து வந்த குறுநிலத் தலைவர்களாவர். இவர்களையெல்லாம் தன் ஆளுகைக்குள் வைத்திருந்தவன் ரோமாபுரியின் பேரரசன் ஜெனோ ஆவான். இவனோ பேராசைக்காரன். தன்னலத்திற்காக எதையும் செய்பவன். இவன் இக்குறுநிலத் தலைவர்களை ஒழித்துக்கட்டத் திட்டமிட்டான்.
அவர்களிருவரும் தலைவர்களாக நீடிப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. இதனை அறிந்த ட்ரையாரிஸ் ஜெனோவை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டான். ட்ரையாரிஸை அடக்கக் கருதிய மன்னன் ஜெனோ அதற்கான துருப்புச் சீட்டாகத் தியோடெரிக்கைப் பயன்படுத்தினான். ஒருவனை வைத்து மற்றொருவனை அழிக்கும் செயலில் ஈடுபட்டான் மன்னன். அந்த இனத்தவனைக் கொண்டே அந்த இனத்தினரை அழிக்கும் வஞ்சகச் செயலில் தீவிரமாக இறங்கி அதில் வெற்றியும் பெற்றான்.
ஆஸ்ட்ரகாத் மக்களின் செயல்
போர்க்களத்தில் தியோடெரிக்கை இறக்கிவிட்ட ஜெனோ அவனுக்கு எந்தவிதமான படைஉதவியையும் செய்யவில்லை. ஆனால் தியோடெரிக் காட்டுத்தீப்போன்று முன்னேறினான். போர்க்களத்தில் அம்மக்கள் தங்களுக்குள் மோதி சின்னாபின்னாமாகச் சிதைந்துவிடுவர் என்று ஜெனோ வேடிக்கை பார்த்தான். ஆனால் அவன் நினைத்ததைப் போன்று ஏதும் நடக்கவில்லை. அம்மக்கள் தங்களை உணர்ந்து இருபிரிவினரும் ஒன்றிணைந்து கைகலப்பில் ஈடுபடாமல் கட்டிப்பிடித்துத் தங்களின் அன்பைப் பகிர்ந்து கொண்டனர். இதனை அறிந்த ரோமாபுரியின் தளபதி அவர்கள் மீது கடுமையாகத் தாக்குதலை நடத்தப் படைகளை ஏவினான். இதனால் ஆஸ்ட்ரகாத் இன மக்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது.
ரோமபுரியின் தளபதி தியோடெரிக்கைக் கொல்லத் தன் படைகளுக்குக் கட்டளையிட்டான். ஆனால் அவர்களிடம் இருந்து தந்திரமாகத் தியோடெரிக் தப்பிச் சென்றான். தியோடெரிக் அடிபட்ட பாம்பாக மாறினான். ஜெனோவின் துரோகத்தை எண்ணி எண்ணிச் சினமுற்றான். அவனுக்குத் துணைபோன துரோகிகளை வேரறுக்க வேண்டும் என்று தனக்குள்ளேயே கருவிக் கொண்டான்.
இந்தச் சமயத்தில் ட்ரையாரிஸ் மீண்டும் ஜெனோவோடு கிளர்ச்சி செய்வதற்காகக் கிளம்பினான். அப்போது நடந்த போரில் ஜெனோ கடுமையாகத் தாக்குதலுக்கு ஆளாகி இறந்தான். அவனது மகனை தியோடெரிக் விருந்துக்கு அழைத்துக் கொன்று தீர்த்தான். இப்போது ஆஸ்ட்ரகாத் இனத்திற்கு தியோடெரிக் மட்டுமே தலைவனாக விளங்கினான். ஏதிலிகளாகத் திரிந்த அந்த மக்களுக்கு நல்வாழ்வைக் கொடுக்கும் பெருங்கடமை தியோடெரிக் மேல் விழுந்தது. பல்வேறு கிளர்ச்சிகள் ரோமாபுரியில் நடைபெற்றதால் அது வலுவிழந்து காணப்பட்டது. ஆஸ்ட்ரகாத் இனமும் அவ்வாறே நசிந்து கிடந்தது.
ஜெனோவின் சூழ்ச்சி
தியோடெரிக்கையும் அவன் இனத்து மக்களையும் அழிக்கக் கருதி உடன்படிக்கை என்ற வஞ்சக வலையை விரித்தான். ஆனால் அது ஏற்படாமல் போனது. தனது படைத்தளபதியான ஒடாவசீரைப் பெரும்படையுடன் தியோடெரிக்கை அழிக்க அனுப்பினான். தியோடெரிக் தோற்றால் அது அவனது இனத்து மக்களுக்கு அடிக்கப்படும் சாவுமணியாக அமையும். தியோடெரிக் வென்றால் ரோமாபுரியின் மன்னனாவான். ஆஸ்ட்ரகாத் மக்கள் ஆளும் வர்க்கத்தினராக மாறுவர்.
இறுதியில் கடுமையான போர் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்டது. ஒடாவசீர் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி போர்க்களத்தில் இருந்து ஓட்டம் எடுத்தான். மேலும் வெரனோவிற்குப் பின்வாங்கி முகாமிட்டான். அங்கிருந்த பாலத்தைத் தகர்த்தான். திரும்பிப் போக வழியில்லாமல் வீரர்கள் போரில் ஈடுபடுவர் என்று தப்புக் கணக்குப் போட்டான் ஒடாவசீர். ஆனால் அவன் கணக்குப் பிழையானது. அவனது படைகளைக் கிழித்துக் கொண்டு தியோடெரிக்கின் படைகள் ஆக்ரோசமாக நுழைந்து படைகளைச் சின்னாபின்னப்படுத்தியது. இதனைக் கண்டு அஞ்சி ஒடாவசீர் புறமுதுகிட்டு ஓடினான். அவனது படையின் நிர்வாகியான டூஃபா என்பவன் ஜெர்மானியப் படையினருடன் தியோடெரிக்கிடம் சரணடைந்தான்.
அவர்களை தியோடெரிக் தன்னுடைய படைகளுடன் இணைத்துக் கொண்டான். ஆனால் டூஃபா சரணடைந்தது உண்மையில் சரணடைந்தது அல்ல; அவை வெறும் நடிப்பு. அந்நடிப்பைப் பார்த்து தியோடெரிக் ஏமாந்துபோனான். ஒடாவசீரை முற்றிலும் அழிப்பதற்காக டூஃபாவின் படைகளை அனுப்பினான் தியோடெரிக். ஆனால் டூஃபாவும் அவனது படைகளும் ஒடாவசீரைக் கண்டதும் கட்டி ஆரத்தழுவிக் கொண்டனர். டூஃபாவுடன் சென்ற ஆஸ்ட்ரகாத் படைகளை ஜெர்மனிய வீரர்கள் ஆடுகளைப் போன்று வெட்டிப் பலியிட்டனர்.
இதனைக் கண்டு தியோடெரிக் சோர்ந்துவிடவில்லை. விசிகாத் மக்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். இரட்டிப்பு பலத்துடன் ஒடாவசீர் மீது பாய்ந்தான் தியோடெரிக். ஆனால் அதிலும் தப்பித்து ஓடினான் ஒடாவசீர். இதில் தியோடெரிக் வெற்றிபெற்றான். முக்கியமான பகுதிகளைக் கைப்பற்றி ஒடாவசீர் படைக்கு உணவுப் பொருள்கள் செல்வதைத் தடுத்தான். கடற்கரைப் பகுதியை வளைத்த ரோந்துப் படையினர் நீர் வழியாகவும் உணவு செல்வதைத் தடுத்து நிறுத்தினர். ஜெர்மானிய மக்களும் படைகளும் சோர்ந்து போயினர். பட்டினியால் துவண்ட அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. ஒடாவசீர் சரணடைந்தான்.
தியோடெரிக் எதிரியை மன்னித்து ஒடாவசீருடன் இத்தாலியின் அரசாட்சியைப் பங்குபோட்டுக் கொண்டான். இதற்கு ஒடாவசீரும் சம்மதித்தான். இரவு நட்பிற்கு அடையாளமாக விருந்து நடைபெற்றது. தியோடெரிக் மனதை டூஃபாவின் துரோகமும் ஜெனோவின் துரோகமும் அரித்தன.
இரவு பலமான காவலோடு ஒடாவசீர் விருந்துக்கு வந்தான். அவனை அன்போடு தியோடெரிக் அழைத்துச் சென்றான். இருந்தாலும் ஒடாவசீர் டூஃபாவுடன் சேர்ந்து தனது இன மக்களை வளைத்துக் கொண்டு கொன்றது தியோடெரிக்கின் மனதில் நிழலாட, ஒடாவசீர் திரும்பிய போது, தியோடெரிக் தனது உடைவாளை உருவி இவன் முதுகெலும்பற்ற பிராணி; கோழை என்று கூறிக் கொண்டே ஒடாவசீரை இருகூறாக வெட்டிக் கொன்றான். மற்றொரு துரோகியான டூஃபாவையும் வேறொரு வீரன் கொன்றான். துரோகிகள் அழிந்தனர்.
நாடே இல்லாமல் தவித்த ஆஸ்ட்ரகாத் மக்களுக்கு இருக்க வீடும் அடையாளத்திற்கு நாடும் தியோடெரிக்கால் கிடைத்தது. துரோகிகள் தனக்குத் துரோகமிழைத்தாலும் அதனைத் தன் சாமர்த்தியத்தால் வென்று தன் இனமக்களை முன்னேற்றினான் தியோடெரிக். துரோகங்கள் தொடர்கதை போன்றது. ஒரு முறை செய்துவிட்டால் அது தொடர்ந்து கொண்டே இருக்கும். அத்துரோகத்தைக் கண்ட நல்லவர்கள் கூட தங்களது நம்பிக்கையை இழப்பார்கள். இதற்கு தியோடெரிக் வாழ்க்கையே சான்றாகத் திகழ்கின்றது. நல்லவர்களைக் கூட துரோகம் நம்பிக்கை இழக்க வைக்கின்றது.
துரோகத்திற்கு இன்ன இடம், இன்ன இனம் என்றில்லை. எல்லா இடங்களிலும் எல்லா இனத்திலும் துரோகம் என்பது உண்டு. உலகத்திலேயே அன்பைப் போதித்தவர். உலக மக்கள் பலரும் அவருடைய வழியைப் பின்பற்றி நடக்கின்றனர். அவரால் தோற்றுவிக்கப்பட்ட மதம் உலகெங்கிலும் பரவி ஒளிவீசிக் கொண்டிருக்கின்றது. உலக மக்களை அன்பால் அவர் அரவணைத்தார். அப்படி அன்பால் அரவணைத்த அவர் பிறந்த குலமே துரோத்தின் பிறப்பிடமாகியது... அவர் யார்? அங்கு நடந்த துரோகம் என்ன...? என்று தெரிந்த கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அடுத்த பகுதி வரை காத்திருங்கள்...

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.