மனிதமனம் விந்தையானது. மனித மனமானது தான் சார்ந்திருக்கும் பொருளோடு உறவாடி, அதன் தன்மைகளை உடன் பெற்றுவிடுவது. சார்ந்திருக்கும் பொருள் மாற்றமடைந்தால் மனமும் தன் தன்மையில் மாறிவிடுகிறது. சிகப்பு நிறம் பிடிக்கிறது என்றால் சிகப்பு நிறப்பொருள்களையே மனம் தேடுகிறது. சில நாள்களில் யாரோ ஒருவர் சொல்ல நீல நிறம் பிடித்துவிடுகிறது. இதற்குப் பின் நீலநிறமே தன் நிறமாக மாறிவிடுகிறது. இப்படித்தான் மனித மனமும் அப்போதைக்கப்போது தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது.
நல்லவர்களோடு சேர்ந்தால், அவர்களுடன் நூலகத்திற்குச் செல்கிறது. வல்லவர்களுடன் சேர்ந்தால் அவர்களுடன் தொழில் பழகப் போகிறது. அல்லவர்களுடன் சேர்ந்தால் தீய பழக்கங்களுக்கு ஆளாகிவிடுகிறது. மீட்டு எடுக்கமுடியாமல் அதல பாதாளத்திற்கு தீமைக்குழியில் விழுந்து விடுகிறது.
விஷமுள்ள பாம்புகள் புற்றுகளில் வசிக்கின்றன. விஷமில்லாப் பாம்புகளுக்கு புற்று அவசியம் இல்லை. நல்ல பாம்பு வாழ புற்று தேவை. ஏன் அதற்குப் புற்று தேவை? அதன் தீய குணத்தை அறிந்த மனிதன் அது புற்று இல்லாமல் இருந்தால் அதனைக் கொன்று ஒழித்துவிடுவான். அதனிடம் மனிதனைக் கொல்லும் விஷம் இருக்கிறது. பாம்பு பெரிதா, மனிதன் பெரிதா? என்ற போட்டியில் யாரும் வென்றுவிடலாம்.
தண்ணீர்ப்பாம்பு தண்ணீரிலேயே கிடக்கின்றது. அதற்கு விஷமில்லை. எனவே அதனை மனிதர்கள் துன்புறுத்துவதில்லை.
இந்தக் கருத்தை இன்னும் வேறுமாதிரி அணுகலாம். மனதில் வஞ்சம் இருப்பவர்கள் மறைந்து வாழ்வார்கள். மனதில் வஞ்சனை இல்லாதவர்கள் ஒளிவு மறைவு இல்லாமல் வாழ்வார்கள். நல்லபாம்பிடம் விஷம் என்ற வஞ்சனை உள்ளது எனவே அது மறைந்து வாழ்கிறது. ஆனால் தண்ணீர் பாம்பிடம் விஷம் இல்லை. அது மறைந்து வாழ வேண்டிய அவசியமில்லை.
அப்படியானால் மறைந்து வாழ்பவர்கள் எல்லாம் வஞ்சனையாளர்களா? என்று ஒரு கேள்வியை எழுப்பலாம். அதனை இன்னும் கூர்மைப்படுத்தி நம்மோடு வஞ்சனையாளர்கள் மறைந்து இருக்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டால் எச்சரிக்கை உணர்வோடு நாம் இருக்க முடியும். வஞ்சனை செய்பவர்கள் வெளிப்பட நான் வஞ்சனை செய்பவன் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பேசி இருவரையும் மோதவிட்டு, தான் வேடிக்கை பார்க்கும் மறைமுக மனிதர்கள் அவர்கள். அவர்களை இனம் காணுவது மிகவும் கடினம். பகைத் தீயை வளர்த்த அவர்கள் அந்தத் தீயின் சுவாலையில் எரிந்துபோனவர்கள், சாம்பலில் நின்று கொண்டு சோககீதம் பாடுவார்கள். இதனையே;
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பார் கரவார்
கவரவிலா நெஞ்சத்தவர்
என்று பாடுகிறார் ஔவையார்.
எத்தனை பெரிய உண்மை. கரவுடையார் தம்மைக் கரப்பார். கரவிலா நெஞ்சத்தவர்கள் தம்மை மறைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நெஞ்சத்தில் வஞ்சனை உடையவர்கள் தம்மை மறைத்தே வஞ்சனைத் தீயை மூட்டுவர். இவர்களா செய்தார்கள்? என்று உலகமே ஆச்சரியப்படும் அளவிற்கு அவர்களின் மறைமுகச் செயல்பாடுகள் இருக்கும்.
நல்லபாம்பின் உவமையைக் காட்டி நெஞ்சில் கரவுடையார் தன்மையை ஔவையார் பாடுகின்றார். நெஞ்சில் வஞ்சகம் இல்லாதவர்கள் என்ன பயனைப் பெறுவார்கள் என்றால் அதற்கு ஒரு பட்டியல் தருகிறார் ஔவையார்.
நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்
என்பது அப்பட்டியல்.
வஞ்சனை இல்லாதவர்கள் நீர், நிழல் நிரம்பிய வயல்களைப் பெறுவர். பொதி பொதியாக நெல் போன்ற தானியங்களைப் பெறுவர். நல்ல புகழைப் பெறுவர். சிறப்பான வாழ்வினை வாழ்வர். நீடித்த ஆயுள் கிடைக்கும். ஊர் கிடைக்கும். பேர் கிடைக்கும்.
இத்தனையும் வஞ்சகம் செய்வார்க்குக் கிடைக்காது என்பதுதானே பொருள். எனவே நிலமும் பொதியும், நீடித்த ஆயுளும் வேண்டுமானால் வஞ்சனையை நாடாதே மனமே என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.
மறையாமல் வாழ்பவர்களே என்றைக்கும் சரித்திரத்திலும் மக்கள் மனதிலும் மறையாமல் வாழ்பவர்கள் ஆவர்.