மனித மூளை பொதுவாக மூன்று பவுண்ட் அல்லது 1300 முதல்1400 கிராம் எடை இருக்கும். ஓர் ஆண் அல்லது ஒரு பெண்ணின் உடல் எடையில் இரண்டு சதவீத எடை கொண்டது மூளை. மூளையின் எடை தனி மனிதர், பாலினம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் சிறிய அளவில் மாறும். ஒரு பெண்ணின் மூளை, ஆணின் மூளையை விட 200 கிராம் எடை குறைவாக இருக்கும். புதிதாகப் பிறந்த குழந்தையின் மூளை எடை 350 முதல் 400 கிராம் வரை இருக்கும். ஒரு மனித மூளையில் 86 பில்லியன் ந்யூரான் செல்கள் இருக்கும். மனித மூளையின் நினைவுத்திறன் 2.5 பீட்டாபைட்ஸ் (2.5 மில்லியன் ஜிஹாபைட்ஸ் அல்லது 250கோடி மெஹாபைட்ஸ்) எனும் அளவில் இருக்கும். இது 300 வருடம் தொடர்ந்து
விடியோ பதிவு செய்வதற்குச் சமம்.
நியூரான்கள் மின் மற்றும் வேதியல் சமிக்ஞைகள் மூலம் மூளை மற்றும் உடல் முழுவதும் தகவல்களைப் பரப்புகின்றன. நியூரான்கள் மூளையின் தகவல் செயலிகள். எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் முதல் இயக்கம் மற்றும் உணர்வு வரை அனைத்தையும் செயல்படுத்தும் சமிக்ஞைகளை அனுப்புதல் பெறுதல் மற்றும் தொடரச் செய்தல் ஆகியவை நியூரான் பணிகளாக இருக்கின்றன.
நியூரான்களின் கீழ்க்காணும் மூன்று வகைகளில் தங்கள் செயல்களைச் செய்கின்றன.
* புலன் நரம்புகள் - இந்த நியூரான்கள் கண்கள், காதுகள், தோலில் உள்ளவை போன்ற உணர்வு ஏற்பியிலிருந்து தகவல்களை மூளைக்கு எடுத்துச் செல்கின்றன.
* மோட்டார் ந்யூரான்கள் - இந்த நியூரான்கள் மூளையில் இருந்து தசைகளுக்கு சமிக்ஞைகளைக் கடத்துகின்றன. இதனால் இவை சுருங்கி இயக்கத்தை உருவாக்குகின்றன.
* இன்டர் நியூரான்கள் - இந்த நியூரான்கள் மூளை மற்றும் முதுகுத் தண்டுக்குள் உள்ள மற்ற நியூரான்களை இணைத்து, சிக்கலான சுற்றுகளில் இடைத்தரகராகச் செயல்படுகின்றன.
நியூரான்கள் நான்கு வகைப்படும்.
* ஒரு முனைப்போக்கு நியூரான் (Unipolar)
* இரு முனைப்போக்கு நியூரான் (Bipolar)
* பல முனைப்போக்கு நியூரான் (Multipolar)
* போலி ஒரு முனைப்போக்கு நியூரான் (Pseudo Unipolar)
எப்படி...?
”இரண்டே இதழ்களால்
இத்தனைப் பூக்களை
எப்படி நீ விரிக்கிறாய்?
அத்தனைப் பூக்களிலும்
அன்பின் வண்ணத்தை
எப்படித்தான் குழைக்கிறாய்?
ஒற்றைச் சிரிப்பாலே
கொத்துப் பூக்களை
எப்படி நீ உதிர்க்கிறாய்?”
- அல்லி பாத்திமா
|
மனித மூளையை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
1. பெருமூளை (Cerebrum)
2. சிறுமூளை (Cerebellum)
3. மூளைத்தண்டு (Brainstem)
பெருமூளை இரு அறைக் கோளங்களாய்ப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு பிரிவுகளாகப் பிரிந்துள்ளன.
* முன்மடல் பெருமூளை (Frontal Lobe) - ஆளுமை, முடிவெடுக்கும் திறன், விருப்பமுள்ள இயக்கம்.
* உச்சிப்பக்கமடல் பெருமூளை (Parietal Lobe) - தொடு உணர்ச்சி, வலி, தட்பவெப்பம், புலன் சார்ந்த செய்திகள்.
* பக்கவாட்டு மடல் பெருமூளை (Temporal Lobe) - ஒலி உணர்தல், நினைவுத்திறன் மற்றும் மொழி உணர்வு.
* பிடரி மடல் பெருமூளை (Occipital Lobe) - பார்வை.
சிறுமூளை மூளையின் பின்பக்கம் அமைந்துள்ளது. நகர்ச்சியை ஒருங்கிணைக்கிறது. தோரணை மற்றும் உடல் சமநிலை பேணுகிறது.
மூளைத்தண்டு மூளையையும் முள்ளந்தண்டு வடத்தையும் இணைக்கிறது.
சுவாசம், இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், தூக்கம் – விழிப்பு சுழற்சி, அனிச்சைச் செயல்கள், இருமல் தும்மல் மற்றும் விழுங்கல் போன்ற பணிகளைக் கவனிக்கிறது.
மனித மூளையின் ஒட்டுமொத்தச் செயல்பாடுகள் எனும் போது,
* நினைவுகளை கட்டுப்படுத்துகிறது.
* நினைவுத்திறன்
* உணர்வுகள்
* தொடு உணர்ச்சி
* பார்வை
* சுவாசம்
* பசி
மற்றும் உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.
பல் மருத்துவம் சார்ந்த கட்டுரைத் தொடரில் மனித மூளையைப் பற்றி இவ்வளவு செய்திகள் ஏனென்று கேட்கலாம்.
அல்சைமர் நோய் அல்லது நரம்பியல் சிதைவு நோய் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நரம்பியல் சிதைவு நோயின் ஏழு அறிகுறிகள் இருக்கின்றன.
* தினசரி வாழ்க்கையை பாதிக்கும் வண்ணம் நினைவுத்திறன் இழப்பு
* திட்டமிடுதலில் அல்லது பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் குழப்பம்.
* வேலைகளை முடிக்க திணறுதல்
* இடம் நேரம் பற்றிய குழப்பம்.
* காட்சி படிமங்களை புரிந்து கொள்வதில் திணறல்.
* வார்த்தைகளில் சிக்கல்.
* பொருட்களை தவறுதலாக வைத்து தொலைத்தல்.
நரம்பியல் சிதைவு நோய்
ராம் பிரசாத், கோவை.
நரம்பியல் சிதைவு நோய் வந்த ஒருவரை குணப்படுத்த பல் மருத்துவத்தில் மருந்து இருக்கிறதா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
அல்சைமர் நோயைக் குணப்படுத்த அல்லது கட்டுப்படுத்த பல் மருத்துவம் சார்ந்த மருந்துகள் ஏதுமில்லை. Donepezil, Galantamine, Rivastigmine, Memantine மற்றும் மனநோய் தடுப்பு, பதட்ட குறைப்பு, வலிப்பு எதிர்ப்பு மருந்துகளும் பொது மருத்துவத்தில் நோயாளிக்குக் கொடுப்பர். இதில் வாய் சார்ந்த பக்க விளைவுகள் உண்டு. வரும்முன் காப்பே நல்லது. வாய் சுத்தம் பேணி நரம்பியல் சிதைவு நோயிலிருந்து தற்காத்துக் கொள்வது சிறந்தது.
|
அல்சைமர் நோய் டிமென்ஷியா நோயின் ஒருவகையாகும். நரம்பியல் சிதைவு நோய்க்கு மரபியல் தொடர்ச்சி, தனிமனித வாழ்க்கை முறை, சுற்றுப்புறச் சூழல் காரணிகள் காரணமாக இருக்கலாம். அதை விட மிக முக்கியமானது ஈறு நோய். ஈறுநோய் நரம்பியல் சிதைவு நோய்க்கு ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. நரம்பியல் சிதைவு நோய் பொதுவாக 60 வயது அல்லது 60 வயதுக்கு மேற்பட்டோரைத் தாக்குகிறது. அந்த நோயால் தாக்கப்படுபவர்கள் வாய்ச் சுத்தம் இல்லாதவர்களாக இருப்பர். வாயில் காணப்படும் பேக்டீரியாக்களில் ஒன்று போர்பைரோமோனாஸ் ஜிஞ்சிவாலிஸ் (Porphyromonas Gingivalis). ஈறுநோய் தொற்றின் வீக்கமுற்ற மூலக்கூறுகளும் போர்பைரோமோனாஸ் ஜிஞ்வாலிஸ் கிருமியும், மூளைக்குப் பயணித்து நரம்பியல் வீக்கத்தை உருவாக்குகின்றன.
பொதுவாக, பல் மருத்துவர்கள் பற்குழிகளை நிரப்ப மெர்க்குரி நியூரோடாக்ஸின் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவர். மெர்க்குரி வகை பற்குழி நிரப்பிகள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. போர்பைரோமோனாஸ் ஜிஞ்வாலிஸ் கிருமி முடக்குவாதத்தையும் உருவாக்கும். பல் சுத்தம் பேணாது இந்தியாவின் 88 லட்சம் நரம்பியல் சிதைவு நோயாளிகளில் ஒருவர் ஆகாமலிருக்க, ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரிடம், பல் மருத்துவச் சோதனை செய்து கொள்வது அனைவருக்கும் நல்லது.