ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் போது, முதலில் எதிரிலிருப்பவரின் முகத்தைப் பார்ப்போம். அதனைத் தொடர்ந்து, அவர்கள் என்ன சொல்கிறார்? என்பதைக் கவனிப்பதற்காக, அவர்களது வாயைக் கவனிப்போம், வாயைக் கவனிக்கும் போது, அவர்களது பற்கள் பார்வைக்குத் தெரிகின்றன.
பொதுவாக, சிறு குழந்தைகளுக்கு மேல் வரிசையில் பத்துப் பற்களும், கீழ் வரிசையில் பத்துப் பற்களும் என்று மொத்தம் இருபது பால் பற்கள் இருக்கும். இளம் வயதினருக்கு 32 பற்கள் இருக்கும். மனிதரின் பற்களுக்குச் சரி, விங்குகளுக்கு... என்று நீங்கள் நினைப்பதும், எனக்குத் தெரிகிறது.
கவசம் உடைய சிற்றுயிரிக்கு 100 பற்கள், ராட்சச வெள்ளை நிறச் சுறாவிற்கு 35000 பற்கள், உப்பு நீர் முதலைகளுக்கு 80 பற்கள், பாட்டில் மூக்கு டால்பின்களுக்கு 250 பற்கள், பூனை மீன்களுக்கு ஆயிரம் பற்கள், சிறிய பழுப்பு நிற வௌவாலுக்கு 38 பற்கள், ஊதாக் கடல் அர்ச்சினுக்கு ஐந்து வரிசைகளில் பற்கள், புல்லுரு தவளை மீனுக்கு 100 பற்கள், யானைக்கு வாழ்நாளில் மிகப்பெரிய எடை கூடிய ஆறு செட் கடைவாய்ப்பற்கள், எறும்புத் தின்னிகளுக்கு, பறவைகளுக்கு, கடல் குதிரைகளுக்கு, பிளாட்டிபஸ்ஸுக்கு, மண்புழுவுக்கு, திமிங்கலங்களுக்கு, ஜெல்லி மீனுக்கு, ஆக்டோபஸ்களுக்கு, நட்சத்திர மீன்களுக்கு, ஆமைகளுக்கு, பவளப்பாறை உயிரிகளுக்கு, சிலந்திகளுக்கு, வாத்துகளுக்கு, விலாங்கு போன்ற மீன்களுக்குப் பற்கள் கிடையாது.
ஒரு இளம் வயது ஆணுக்கோ, பெண்ணுக்கோ 32 பற்களுக்குக் கூடுதலாய்ப் பற்கள் இருந்தால் அதனை ஹைபர்டான்சியா (Hyperdontia) என்பர். ஒரு வாலிப வயது ஆணுக்கோ ஒரு பெண்ணுக்கோ 32 பற்களுக்கு குறைவாய் பற்கள் இருந்தால் அதனை ஹைபோடான்சியா (Hypodontia) என்பர். ஒருவருக்கு குறைவான கூடுதலான பற்கள் ஒரே வாய்க்குள் அமைந்திருந்தால் அதனை ஹைபோ ஹைபர்டான்சியா (Hypo Hyperdontia) என்பர். இதனை Oligo-Pleiodontia எனவும் அழைப்பர். இரண்டு துருவ வகைப் பிரச்சனைகளும் உள்ளவர்கள் ஜனத்தொகையில் 0. 002 - 3. 1 சதவீதம் பேர். ஹைபர்டான்சியா உள்ளவர்கள் உலக மக்கள் தொகையில் 0. 15 சதவீதம். மூன்றாவது கடைவாய் பற்கள் இல்லாத ஹைபோடான்சியா நபர்கள் ஜனத்தொகையில் 1. 6 சதவீதத்திருந்து 9. 6 சதவீதம் பேர் உள்ளனர்.
ஹைபர்டான்சியா சராசரிக்கு கூடுதலாய் பற்கள் ஒருவருக்கு அமைய கீழ்க்கண்ட காரணங்கள் இருக்கலாம்.
* மரபியல் காரணம் - குடும்ப உறுப்பினர்களிடையே பரவலாய் காணப்படும்.
* ஜெனிடிக் சின்ட்ரோம்கள் கார்டனர் சின்ட்ரோம் (Gardener Syndrome) – தோல் கட்டி, மலக்குடல் வளர்ச்சி, மண்டையோடு வளர்ச்சியுடன் கூடுதல் பல் வளர்ச்சி தொடர்புடையது. கிளைடோகிரானியல் டைசோஸ்டோசிஸ் (Cleidocranial Dysostosis)
வைரப்புன்னகை
”காலைக் கதிரவன் தொட்டால்
உன் பற்கள் –
வைரத் துளிகள் போல
மின்னுகின்றன.
புன்னகை விரியும் தருணம் –
என் இதயத்தில்
ஒளி பொங்கும் திருவிழா.
ரோஜா நிற ஈறுகளின் மென்மை
மலரின் இதழைப் போல்,
உன் சுவாச நறுமணம்
வானவில் வர்ணம் போல
என் உள்ளத்தை நிரப்புகிறது.
- செயற்கை நுண்ணறிவு நுட்பம் தந்த கவிதை
|
* ஜெனிடிக் பிறழ்வுகள் - பற்கள் முளைப்பதற்கான ஜீன்களின் மாற்றம்.
* கர்ப்பக்காலத்தில் நோய்த்தொற்று.
* சுற்றுப்புறச் சூழல் நச்சுகள்.
* பல் தசைச்சவ்வின் அதீத முனைப்பு.
* மூதாதையர் பண்பு வெளிப்பாடு (Atavism)
* உதட்டு பிளவு மற்றும் மேலண்ண பிளவு.
* எலர்ஸ் டானியோஸ் சின்ரோம் (Ehlers Danios Syndrome)
* ஜி எல் ஏ மரபணு பிறழ்வால் ஏற்படும் பேப்ரி நோய் (Fabry Disease)
* மண்டை ஓடு, முகம், பற்கள் பாதிக்கும் மரபணு பிறப்புக் கோளாறு (Crouzon Syndrome)
* உபரி 21 குரோமோசோம் உள்ள டவுன் சின்ட்ரோம் (Down Syndrome)
ஹைபர்டான்சியா ஐந்து வகைப்படும்
1) இணை நிறைவான கூடுதல் பல் (Supplementary)
2) பீப்பாய் வடிவ கூடுதல் பற்கள் (Tuberculate)
3) கூட்டு தீங்கற்ற கட்டி (Compound Odontoma)
4) சிக்கலான அதே நேரம் தீங்கற்ற கட்டி (Complex Odontoma)
5) நுனி கூர்ப்பான அடி பற்கள் கனத்த கூடுதல் பற்கள் (Conical Shaped)
ஹைபர்டான்சியாவின் அறிகுறிகள் என்னென்ன?
* ஒரு இருக்கையில் முண்டியடித்து பத்து பேர் அமர்ந்திருப்பது போல பல் நெரிசல்.
* தொடர் வலி மற்றும் அசௌகரியம்.
* மெல்லுவதில் சிரமம்.
* கடிப்பதில் சிரமம்.
* பேச்சில் சிரமம்.
* பால் பற்களை முளைக்க விடாமல் தடுப்பு.
ஹைபர்டான்சியாவை வரும்முன் தடுக்க முடியாது. ஆனால் அதன் அறிகுறிகளை முன்னமே கண்டு தகுந்த சிகிச்சை தரலாம்.
ஹைபர்டான்சியாவுக்கான சிகிச்சைகள்
* அறுவை சிகிச்சை செய்து கூடுதல் பற்களை அகற்றுதல்.
* பற்சீரமைப்பு மற்றும் தாடை குறைபாடை சரி செய்தல்.
* முகத்தோற்றத்திற்கோ தினசரி செயல்பாடுகளுக்கோ எந்த சிரமமும் தராத கூடுதல் பல்லை அப்படியே விட்டுவிடலாம். அப்படியே விட்டுவிட பல் மருத்துவர் ஆலோசனை தேவை.
* ஒன்றுக்கும் மேற்பட்ட சிகிச்சைகளை ஒருங்கிணைத்தல்.
தெற்றுப்பற்கள் அகற்றலாமா?
எஸ். மஹதி, திண்டுக்கல்
எனக்கு மேல் வரிசைப் பற்களின் இரண்டு பக்கங்களிலும் தெற்றுப்பற்கள் இருக்கின்றன. அவற்றை அகற்றலாமா வேண்டாமா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
பற்களை அகற்றுவது பற்றி நீங்கள் ஒரு பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. தங்களுடையப் பற்களை எண்ணிம முறையில் எக்ஸ்ரே எடுப்பார். ஒட்டு மொத்தப் பற்களையும் அதன் நிலைகளையும் பல் மருத்துவர் ஆய்வு செய்து, பல் அகற்றுவதின் சாதக பாதங்களைக் கண்டறிவார். அதன் பின்பு, மருத்துவர் அந்தப் பற்களை அகற்றலாமா? வேண்டாமா? என்பது குறித்துச் சொல்வார். மருத்துவர் அகற்றலாம் என்று சொன்னால் மட்டுமே அகற்ற வேண்டும். நல்ல பல் மருத்துவரைச் சந்தித்து, பல் அகற்றுவது குறித்து முடிவு செய்யுங்கள்.
|
உங்களுக்கு ஒரு மெய்யான ஹைபர்டான்சியா நோயாளியைப் பற்றிக் கூறுகிறேன்.
பிரேசிலை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஹைபர்டான்சியா இருந்தது. அதாவது அவருக்கு 81 பற்கள் இருந்தன. அவரை பலவிதமாக சோதித்தனர்.
மரபியல் காரணமில்லை. சின்ட்ரோம்கள் ஏதுமில்லை. பல் சீரமைப்பு நிபுணர்களும் பல் கட்டும் மருத்துவர்களும் சேர்ந்து அச்சிறுமியின் கூடுதல் பற்களை அகற்றினர்.