நோமா என்றால் புதுப்பிக்க முடியாத உயிரணுவின் காயம், புண் சார்ந்த வாயழற்சி எனப் பொருள். ஆங்கிலத்தில் 'Necrotizing Ulcerative Stomatitis' என்பர். காலம் காலமாக பற்சொத்தை ஈறுநோய்கள் இருந்து வந்தாலும் அமிலம் சார்ந்த உணவுகளாலும் எதுக்கலிப்பாலும் பல் அரிப்பு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. நிரந்தரப் பற்களைப் பாதிக்கும் கடைவாய் வெட்டுப்பல் குறை உப்புச்சேர்க்கை (Molar Incisor Hypomineralisation) வாய் நலத்தைப் பாதிக்கும் ஜோக்ரன் நோய்த்தொகை (Sjogren’s Syndrome), உலர் வாயையும் நோய்த் தொற்றுகளையும் பரிசளிக்கும். பற்கள் இல்லாத பல்முளையாமை (Anodontia) அரியமரபியல் ஒழுங்கீனம். கண், முகம், பல் மற்றும் இதய அமைப்புகளைப் பாதிக்கும் ஒரு அரிய மரபணு கோளாறான Oculofaciocardiodental (OFCD) எனும் பல் நோயும் அண்மையக் காலத்து வரவுகளாக இருக்கின்றன.
சரி, நோமா பற்றித் தெரிந்து கொள்வோம்.
நோமா ஒரு கொடுமையான மின்னல் வேகத்தில் ஊடுருவும் வாய் மற்றும் முகத்தின் இழைய அழுகல் நோய். இந்த நோய் பெரும்பாலும் வறுமையில் வாடும் சத்துணவு கிடைக்காத சுயசுத்தம் பேணாத ஏழைக் குழந்தைகளைத்தான் அதிகம் பீடிக்கிறது.
நோமா நோய்க்கு ஐந்து நிலைகள் உள்ளன.
1. உடனடி புதுப்பிக்க முடியாத ஈறு அழற்சி நிலை (Acute Necrolizing Gingivitis Stage)
2. நீர்க்கோர்வை (Oedema Stage)
3. இழைய அழுகல் நிலை (Gangrenous Stage)
4. தழும்பு நிலை (Scarring Stage)
5. நோய்த்தாக்கப் பின் விளைவுகள் (Sequclae Stage)
நோமா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாய் மற்றும் முகத்திசுக்கள் அழுகிப் போயிருக்கும்.
வைரப்புன்னகை
மேலே கீழே பக்கவாட்டில்
மினுமினுக்கப் பல் துலக்கு.
முன்னும் பின்னும் ஈறுகளுக்குள்,
தூரிகையால் ஓவியம் போடு.
வருடம் தோறும் மருத்துவரிடம் சென்று,
வாய் சுத்தம் செய்து கொள்.
பளபளக்கும் புன்னகையுடன்
ஒளிரட்டும் உன் முகம் மகிழ்வோடு!
- செயற்கை நுண்ணறிவு நுட்பம் தந்த கவிதை
|
நோமா என்பது கிரேக்க வார்த்தை. நோமாவை ஆங்கிலத்தில் Necrotizing Ulcerative Stomatitis என்பர். இது ஒரு அபாயகரமான நோய் சமயங்களில் மரணத்தைக் கூட பரிசளிக்கும். வெப்பமண்டல மிக வெப்பமண்டல நாட்டுக் குழந்தைகளே அதிகம் நோமா நோயால் பாதிக்கப்படுகின்றனர். மெதுவாக மென்திசு சருமப்புண்ணாக ஆரம்பித்து உடனடி திசு மரண ஈறுஅழற்சியாக மாறுகிறது. இந்த நோய் மென்திசுக்களையும் எலும்புகளையும் அழிக்கிறது. முக அமைப்பை சிதைத்து முக செயல்பாடுகளை பலவீனப் படுத்துகிறது நோமா.
ஆரம்ப நிலையில் நோமாவை கண்டுபிடித்து ஆன்டிபயாட்டிக் சரிவிகித சத்துணவு உதவியால் கட்டுப்படுத்தலாம். உடல் மற்றும் சமூக பின்விளைவுகளை தடுக்கலாம். நோமா பேக்டீரியா கிருமிகளால் உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும் நோயியல் நிலை ஆகும்.
* சைட்டோகைன் புயலை நோமா உருவாக்குகிறது.
* வாய்ப் பகுதி சளி ஜவ்வு வீக்கம் உண்டு பண்ணுகிறது. (Oral Mucous Inflammation)
* நோமாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த குழந்தைகளுக்கு முக அமைப்பு சிதைந்தே இருக்கும்.
நோமா ஒரே ஒரு நோய்க்கிருமியால் உருவாகும் நோய் அல்ல. பல கிருமிகள் கூட்டு சேர்ந்தே தாக்குகின்றன. (Polymicrobal Infection)
* ப்யூஸோபேக்டீரியம் இனத்தைச் சேர்ந்த எப் நெக்ரோபோரம்
* ஸ்ப்பைரோகைட்ஸ் (Borrelia Vincentii)
* பிரிவோட்டெல்லா வகை ஆக்ஸிஜனை பயன்படுத்தாத பேக்டீரியா
நோமா நோய் இரண்டிலிருந்து ஆறு வயது வரையிலான குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த வாய் சுகாதாரம் பேணாத சத்துணவு உண்ணாத மற்ற நோய்களால் பீடிக்கப்பட்ட குழந்தைகளே நோமாவின் இலக்கு.
நோமா நோயின் போது, கீழ்க்காணும் அறிகுறிகள் தெரிகின்றன.
* சிவந்து வீங்கிய இரத்தம் கசியும் ஈறுகள்.
* வாய் துர்நாற்றம்
* மிகையாய் எச்சில் ஊறுதல் ஒழுகுதல்.
* வலி, காய்ச்சல் மற்றும் எடைக் குறைவு.
* பற்கள் இழப்பு
* புண் மற்றும் முக வடிவம் மாறுதல்
நோமா நோய்க்கு ஆரம்பநிலையில்,
1. அமாக்ஸிலின் மற்றும் மெட்ரோநெய்டோஸோல் சிகிச்சை.
2. புரதசத்து அதிகமுள்ள அதிக கலோரி உள்ள விட்டமின், ஏ,சி,பி காம்ப்ளக்ஸ் உள்ள உணவு.
3. வாய் சுகாதாரம் பேணுதல். குளோஹெக்சிடைன் அல்லது உப்பு நீர் வைத்து வாய் கொப்பளித்தல், மென்மையான பல் தூரிகையால் தினம் இருமுறை பல் துலக்கல்.
போன்ற சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
நோமா நோய் யாருக்கு வரும்?
முத்துப்பாண்டி, கடையநல்லூர்
நோமா என்கிற பல் மற்றும் முகம் சார்ந்த நோய் மத்திய வர்க்கக் குழந்தைகள், பணக்காரக் குழந்தைகளுக்கும் வராது என்கிறார்களே, உண்மையா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
எந்த ஒரு நோயும், ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரையோ அல்லது பணக்காரர்களையோ அணுகாது என்றோ, அணுகும் என்று சொல்வதற்கில்லை. எந்தவொரு நோயும், எவருக்கு வேண்டுமானாலும் வந்துவிடும். உடல் நலத்தைப் பேணாதவர்களுக்குத்தான் நோய்கள் அதிகம் வந்து சேர்கின்றன. வரும் முன் காப்போம் என்பதை அனைவரும் கடைப்பிடிப்பது நல்லது. சரிவிகித சத்துணவு, வாய் நலம், இரு ஆண்டுகளுக்கொரு முறையாவது பற்களைச் சோதித்துப் பார்த்தல் போன்றவைகள்தான் நோமா உட்பட எந்தவொரு நோயையும் வராமல் தடுக்கும். நோய்க்கு பணம், இனம் எனும் எந்தவிதமான பாகுபாடுகளுமில்லை.
|
நோய் முற்றிய நிலையில்,
1. தேவைப்பட்டால் முகப்பகுதியில் காணப்படும் செத்துப்போன திசுக்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றல்.
2. சிதைவடைந்த முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சீர்படுத்துதல். உண்ணுதல் பேசுதலை எளிமையாக்குதல்.
போன்ற சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
நோமா நோய் சார்ந்த விசாலமான கவனிப்பு எனும் போது,
* உணவில் சத்துப் பற்றாக்குறை, தட்டம்மை, மலேரியா, எலும்புருக்கி நோய், ஹெச்ஐவி நோய்களை கட்டுப்படுத்துதல்.
* நோமா நோயிலிருந்து தப்பிப்பவர்களுக்கு நீண்ட கால கண்காணிப்பு தேவை.
* அவர்களின் வாய் சுகாதாரத்தை தொடர்ந்து மேம்படுத்துதல்.
என்பவை செய்யப்படுகின்றன.
1994 ஆம் ஆண்டில் உலகச் சுகாதார அமைப்பு நோமா நோயைக் கட்டுப்படுத்த திட்டங்களை வகுத்தது. அந்தத் திட்டம் உலக முழுமைக்கும் பிராந்திய ரீதியாகவும் செயல்படுத்தப்பட்டது. உலகச் சுகாதார நிறுவனம் 11 ஆப்பிரிக்க நாடுகளில் பிராந்திய நோமாக் கட்டுப்பாடு திட்டத்தை அமுல்படுத்தியது. இதன் மூலம் நோமா பற்றிய விழிப்புணர்ச்சி நோமா நோயால் தப்பித்தவர்களின் ஒருங்கிணைப்பு செயல்படுத்தப்பட்டது. உலக சுகாதார நிறுவனம், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நோமாவைப் புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய்கள் பட்டியலில் சேர்த்ததுள்ளது. STAG- NTD என்கிற குழு தான் நோமாவை பட்டியலில் சேர்க்கப் பரிந்துரை செய்தது. நோமா பற்றிய இணையதளக் கல்வி ஆங்கிலம், பிரஞ்சு, ஹாசா, ஹிந்தி மொழிகளில் கிடைக்கிறது. மொத்தத்தில் நோமா என்கிற முகம் மற்றும் வாய்பகுதி நோயைத் தடுக்கப் போராடுவோம்.