மதுரையைத் தலைநகரமாக கொண்ட பாண்டிய நாட்டை மலையத்துவ பாண்டியன் ஆண்டு வந்தான். குழந்தை பாக்கியம் இல்லாத அவன் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் செய்தான். அதன் பயனாக அவனுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்தக் குழந்தைக்கு மூன்று தனங்கள் (மார்பகம்) இருந்தன.
இதனால் மன்னனின் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். அப்போது வானத்தில் இருந்து ஒரு அசரிரீ ஒலித்தது. “அந்தக் குழந்தை சாதாரனமானது அல்ல; தெய்வக் குழந்தை. அவள் தனக்கு உரிய மணவாளனை என்று சந்திக்கிறாளோ அப்போது அவளது மூன்றாவது தனம் தானாக மறையும்” என்றது அந்த அசரிரீ குரல்.
சமாதானம் அடைந்த மலையத்துவராஜன் தனது மகளுக்கு தடாதகை என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். அவளை ஒரு பெண்ணாக வளர்க்க விரும்பவில்லை. அவளுக்கு சகல வித்தைகளையும் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தான். தடாதகையும் எல்லா வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தாள். வீர மங்கையாக திகழ்ந்த அவளது கண் மீனைப் போன்று இருந்ததால் அவளை “மீனாட்சி” என்றும் அழைத்தார்கள்.
நாளடைவில் மன்னனுக்கு வயதானதால் நாட்டை ஆளும் பொறுப்பை மகள் மீனாட்சியிடம் ஒப்படைத்தான். அவள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் தன் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த எண்ணினாள். அதற்காக அண்டை நாட்டோடு போரிட்டாள். வெற்றி கண்டாள். எட்டு திக்கும் அவளின் ஆளுகைக்கு உட்பட்டது.
இறுதியாக இமயத்தையும் கைப்பற்ற நினைத்தாள். அது சிவபெருமானின் கோட்டை. அதை மானிடராய் பிறந்தவர்களால் வெல்ல முடியுமா? மீனாட்சியால் அனுப்பப்பட்ட போர் வீரர்கள் அனைவரும் தோல்வியைச் சந்தித்தனர். இறுதியாக மீனாட்சி நேரடியாக சிவபெருமானை சந்திக்க வில்லேந்தி சென்றாள்.
சிவனை சந்தித்த போது திடீரென்று அவளின் மூன்றாவது தனம் மறைந்தது. அப்போது தான் அவளுக்கு சிவபெருமானே தன் வருங்கால கணவர் என்பதை உணர்ந்தாள். நாணி தலை குனிந்தாள். அப்போது சிவபெருமான், தானே முறைப்படி மதுரைக்கு வந்து திருமணம் செய்வதாக கூறி மீனாட்சியை அனுப்பி வைத்தார்.
ஒரு நல்ல நாளில் பெண் பார்க்க வந்து திருமணத்துக்கு நாள் குறித்தனர். மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவ கனங்கள் மதுரைக்கு வந்தனர். விண்ணுலகை மிஞ்சும் வகையில் இந்த மண்ணுலம் விழாக்கோலம் பூண்டிருந்தது. புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சி அளிக்கும் சிவபெருமான், அந்தக் கோலத்தில் இருந்து மாறி, ஒட்டுமொத்த அழகையும் உள்ளடக்கிய சுந்தரேசுவரராக மதுரைக்கு மாப்பிள்ளையாக வந்தார். மீனாட்சியின் கழுத்தில் தாலி கட்டினார்.
திருமணம் முடிந்ததும் விருந்து தடபுடலாக நடந்து. நாட்டின் அரசிக்கு திருமணம் என்றால் சும்மாவா? மலை போல் சாதம் சமைக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு பகுதியே காலியாகி இருந்தது. இதனால் வேதனை அடைந்த மீனாட்சி சிவபெருமானிடம், “உலகை ஆளும் நீங்கள் என்னை மணக்க வந்ததால் மாப்பிள்ளை வீட்டாருக்கு எந்தக் குறையும் வைக்கக் கூடாது என்பதற்காக இவ்வளவு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தோம். ஆனால் இப்படி சாதம், பலகாரம் எல்லாம் மீதமாகிவிட்டதே” என்றாள்.
உடனே சிவபெருமான் குண்டோதரர்கள் இருவரை வரவழைத்து சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவைச் சாப்பிடச் சொன்னார். அவர்கள் இருவரும் அனைத்தையும் ஒரு நொடியில் வயிற்றுக்குள் தள்ளினர். அவர்களுக்கு குடிக்கத் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தது. தண்ணீர்... தண்ணீர்... என்று கேட்டனர். இதனால் சிவபெருமான் தன் கையை வைத்து ஒரு நதியை உருவாக்கினார். அதன் மூலம் குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர். சிவபெருமான் குண்டோதரர்களுக்காக கையை வைத்து கொண்டு வந்த தண்ணீர் தான் இப்போதைய வைகை ஆறு.
சிவபெருமான் நேரடியாக வந்து மீனாட்சியை மணந்ததால் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் போது நடைபெறும் திருக்கல்யாணம் அந்த விழாவின் முத்தாய்ப்பான நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. அன்று வடக்கு ஆடி வீதியில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு திருக்கல்யாணம் நடத்தப்படும். கோவில் பட்டர் ஒருவர் மீனாட்சி அம்மனின் பிரதிநிதியாகவும், இன்னொரு பட்டர் சுந்தரேசுவரரின் பிரதிநிதியாகவும் இருந்து இந்த திருமணத்தை நடத்துவார்கள்.
திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சி அம்மன் கோவிலில் தடபுடல் விருந்து நிகழ்ச்சியும் நடக்கும். ஏராளமானோர் இந்த விருந்தை சாப்பிட்டுவிட்டு மொய் எழுதிச் செல்வார்கள்.