கூடைப்பந்து உள்ளரங்கம். ஏற்கனவே விளையாடிக் கொண்டிருந்தவர்கள் பந்துகளால் ‘பாங்’, ‘பாங்’ சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
மூன்று பெண்கள் விளையாட்டுச் சாதனங்களுடன் கூடிய பையைத் தூக்கி வந்தனர்.
ஹிஜாப் அணிந்த சவ்பியா. முஸ்லிம் பெண் வயது 19. 165செமீ உயரம். குல் மொஹர் பூக்கள் நிறம். கச்சித பல் வரிசை. கத்தி மூக்கு. சாந்தியும் சமாதானமும் உணர்ந்த கண்கள்.
கூடைபந்தாட்டத்துக்கென்றேப் பிறந்த கைகளும் கால்களும்.
ஆஷிர்யா இந்து பெண் வயது 19. 160செமீ. உயரம் அம்மன் முகம். சிவகண்கள் நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு.
மெலனியா கிறிஸ்துவப்பெண். வயது 19. 160செமீ உயரம் மாநிறம் ரேஸ் குதிரை முகம்.
“நாம் விளையாட இன்னும் அரைமணிநேரம் உள்ளது!” பையிலிருந்து மெலனியா மூன்று பச்சை நிறப் பழங்களை எடுத்தாள்.
“ஹேய் இது அவக்காடோ பழம்தானே?”
“ஆம் தமிழில் ஆனைக்கொய்யா அல்து வெண்ணெய் பழம் என்பார்கள். ஆளுக்கொன்று சாப்பிடுவோம்!”
மெலனியா தனக்கு ஒரு பழம் வைத்துக் கொண்டு இரு பழங்களைத் தோழிகளிடம் நீட்டினாள்.
சவ்பியா வேண்டாமென்று மறுத்தாள். “எனக்குப் பழம் வேண்டாம் நான் நோன்பு”
“யாருகிட்டடி பொய் சொல்ற? ரம்ஜான் நோன்பு இப்ப வராதே!”
“நான் இருப்பது ஆஷுரா நோன்பு. இன்றும் நாளையும்!”
“அது சரி, நோன்பு என்றால் என்ன?”
“நோன்பு என்பது பொதுவாக குறிப்பிட்ட நேரத்துக்கு உணவு உண்ணாமை அல்லது உணவைக் குறைத்தல். இது ஒரு சமயச்சடங்கு. உண்ணாநிலை மற்றும் பிற புலன் அடக்கக் கட்டுப்பாடு மனிதருக்கு நல்லது!” சவ்பியா.
“ரம்ஜான் நோன்பு கேள்விபட்டிருக்கிறேன். அதென்ன ஆஷுரா நோன்பு?”
“ஆஷுரா தினம் மொஹரம் மாதத்தின் பத்தாவது நாளைக் குறிக்கும். அரபு மொழியில் அஷரா என்பது பத்தைக் குறிக்கும். இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதம் மொஹரம் ஆகும். எங்களைப் பொறுத்தவரை மொஹரம் மாதம் மிகமிகப் புனிதமானது!”
“அப்படியா?”
“அல்லாவின் மாதம் மொஹரம். முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா நபிகளையும், அவரது தோழர்களையும் கடலைப் பிளந்து இறைவன் பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான். அதேக் கடலில் பிர்அவ்னையும், அவனது படை வீரர்களையும் இறைவன் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாய் மூஸா நபியின் சமூகத்தினர் ஆஷுரா நோன்பு நோற்றார்கள்.
“பிரளயத்தின்
போது நூஹ்நபிகளின் கப்பல் கரை ஒதுங்கி மக்கள் பாதுகாப்பாய்க் கரை இறங்கினர். அதற்கு நன்றி செலுத்தும் விதமாய் கரை ஒதுங்கிய மக்கள் ஆஷுரா நோன்பு வைத்தனர்.
“ஆஷுரா நாளில்தான் வானம், பூமி, சூரியன், சந்திரன், சுவனம் நரகம் படைக்கப்பட்டன. முதல் மழை ஆஷுரா நாளில்தான் பெய்தது. ஆதம் ஹவ்வா படைக்கப்பட்டது ஆஷுரா நாளில். அவர்கள் சுவர்க்கம் சென்றதும் இதே நாளில். இத்ரீஸ் நபிகள் வானுக்கு உயர்த்தப்பட்டதும் இதே நாளில். யூனுஸ் நபிகள் மீனின் வயிற்றிலிருந்து உயிருடன் திரும்பியதும் இதே நாளில். கிபி 680ல் கர்பலா போரின் போது நபிகள் நாயகத்தின் பேரன் ஹுசைன் இபின் அலி கொல்லப்பட்டார். அந்த ஆஷுரா நாளில் ஷிபா முஸ்லிம்கள் துக்க ஆர்ப்பாட்டம் கொள்கின்றனர்!”
“ஓ… இவ்வளவு பின்னணிகள் கொண்டதா ஆஷுரா நோன்பு?”
“தாவூத் நபியின் பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ஆஷுராதினம். சுலைமான் நபிக்கு அரசாங்கம் மீண்டது இதே நாள். இப்ராகீம் நபி பிறந்ததும் கலீல் பட்டம் சூடப்பட்டதும் இதேநாள். ஹிள்ரு நபியின் அறிவை அதிகப்படுத்தியது ஈஸாநபியை விண்ணகத்துக்கு உயர்த்தியது இதேநாள். ஆஷுராநாளில் தான் உலகம் முடிவுறும் என்பது எங்கள் நம்பிக்கை. இந்துகளின் சரஸ்வதிபூஜை போல குழந்தைகளுக்கு கல்வி தொடங்கி வைக்க அருமையான நாள் ஆஷுரா தினம்!”
“ஆஷுரா நோன்பில் என்னென்ன செய்வீர்கள்?”
“ஆஷுரா நாளில் நோன்பு நோற்போம். தர்மம் செய்வோம். அழுக்குப் போகக் குளிப்போம். கண்களுக்கு சுருமா ஈஷிக்கொள்வோம். அனாதைகளின் தலைகளை தடவிக் கொடுப்போம். மார்க்க அறிஞர்களைச் சென்று காண்போம். குடும்பபத்தினருக்கு செலவு செய்வோம். நகம் வெட்டிக் கொள்வோம். நபில் தொழுவோம். குல்ஹுவல்லாஹ் சூரத்தை ஆயிரம் முறை ஓதுவோம்.
“ஆஷுரா நாளில் உறவுகளுக்கும் ஏழைகளுக்கும் பரிமாறி உண்டால் ஆண்டு முழுக்க பரக்கத் பெருகும். ஆஷுராவின் இரவில் விழித்திருந்து வணங்கும் வழக்கமுடையோர் மரணிக்கும் முன் மரணம் அறிவிக்கப்படுவர்”
“ரம்ஜான் நோன்பை போல ஆஷுரா நோன்பு கட்டாயமா?”
“ஆஷுரா நோன்பு கட்டாயக்கடமை அல்ல. ஆஷுரா என்பது ஹிப்ருமொழிச் சொல். யூதர்களின் தீஷ்ரி மாதத்தின் பத்தாவது நாள் ஆஷுரா ஆகும். ஆஷுரா நோன்பு நோற்றால் கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படும் என்றார் நபிகள் நாயகம். புனித கபாவுக்கு புதியதிரை ஆஷுரா நாளன்றேப் போடப்படுகிறது!”
“சிறப்பான தகவல்கள் சவ்பியா!”
“ரம்ஜான் நோன்பு விடுபட்டால் களா செய்து வேறொரு நாளில் நோன்பு வைக்கலாம். ஆஷுரா நோன்பை களா செய்யமுடியாது. ஆஷுரா நாளில் நோன்பிருப்பவருக்கு 16000 உயிர்த் தியாகிகளுடைய 16000 ஹஜ் பயணிகளுடைய நன்மை அளிக்கப்படும். ஆஷுரா இரவில் விழித்திருந்து வணங்கி அன்றைய பகலில் நோன்பு இருந்தவருக்கு 60 ஆண்டு கால வணக்கப் பலன் கிடைக்கும். ஒரு திர்ஹாம் சதகா செய்தால் 700000 திர்ஹாம் நன்மை. நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தால் ஷஹீது அந்தஸ்து!”
ஆஷிர்யா நிமிர்ந்தாள். “எனக்கொரு சந்தேகம் சவ்பியா!”
“கேள்!”
“ஒரு வருடத்தில் எத்தனை நோன்புகள் தான் வைக்கிறீர்கள்?”
“நல்ல கேள்வி. வருடம் முழுக்க நோன்பு வைப்பது இஸ்லாமுக்கு முரணானது. ஒருநாள் விட்டு, ஒரு நாள் வருடத்தில் பாதிவருடம் அதிகபட்சம் நோன்பு இருக்கலாம். ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு வைப்போம். துல்ஹஜ் ஒன்பதாம் தேதியில் அரபா நோன்பு வைப்போம். முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா 9, 10ல் நோன்பு வைப்போம். ஷாபான் மாதத்தில் உபரி நோன்புகள் வைப்போம். ரஜப் மாதத்தில் மூன்று நோன்பு. தாவூத் நபி நோன்பு வைக்கலாம். வாலிபர்கள் திருமணம் ஆவதற்கு முன் மனவலிமை பெற நோன்பு வைக்கலாம். வெள்ளிக்கிழமையில் இரு பெருநாட்களில் சனிக்கிழமைகளில் நோன்பு வைக்கக்கூடாது. ஹாஜிகள் அரபா நாளில் நோன்பு வைக்கக்கூடாது. ரமலான் மாதத்தில் முப்பது நோன்பு வைக்க வேண்டும். நோன்பின் போது மனைவியுடன் கூடினால் இருமாத நோன்பு. வைக்க வேணடும். ஆஷிர்யா உங்கள் இந்து மதத்தில் இருக்கும் உண்ணாவிரதச் சடங்குகளை விவரியேன்!”
“இந்து மத புரணத்தில் 27வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்து மதம், பௌத்தம், சமண மதங்களில் துறவு மரபுகளின் ஒரு அம்சம் விரதம். யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் ‘உணவைத் தவிர்ப்பதை விட, மேலான தவம் ஏதுமில்லை’ என்கிறார். சந்திரமாதத்தின் 12நாட்களில் நோன்பு வைப்பது சிறப்பு என்கிறார் பீஷ்மர். சீக்கிய மதம் உண்ணாவிரதத்தை ஆன்மிகச் செயலாகக் கருதுவதில்லை. ஐந்து வகை தானியங்களை உண்ணாமல் நோன்பிருப்பது தாவோயிஸம் …”
“இந்துமதத்தில் உள்ள விரதங்களை அட்டவணைப்படுத்து ஆஷிர்யா...”
“பாவை நோன்பு, ஆதித்ய விரதம், சங்கட சதுர்த்தி விரதம், சோமவார விரதம், வரலட்சுமி விரதம், ஸ்ரீவித்யா விரதம் போன்ற பல விரதங்கள் இந்து மதத்தில் உள்ளன. ஏகாதசி, பிரதோஷம், பூர்ணிமா போன்ற நாட்களில் இந்துகள் விரதமிருப்பர். தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் இஷ்ட தெய்வத்தைப் பொறுத்து வாரத்தின் சில நாட்கள் இந்துக்கள் விரதமிருப்பர். சிவபக்தர்கள் திங்கட்கிழமை விஷ்ணு பக்தர்கள் வியாழக்கிழமை, மாரியம்மனுக்கு செவ்வாய் கிழமை, அனுமனுக்கு சனிக்கிழமை நோன்பிருப்பர். திருமணமான பெண்கள், கணவரின் நீண்ட ஆயுளுக்கான கர்வா சௌத் நோன்பிருப்பர். சில உபரி தகவல்கள். ஜப்பானியர்கள் இறைச்சி உண்ணும் புத்தபாவத்துக்குத் தண்டனையாக மூன்று நாள் விரதமிருப்பர். காந்திஜி உண்ணாவிரதத்தை அநீதிக்கு எதிராக வலிமையான ஆயுதமாக்கினார். ஜைனர்கள் நிவிஹார் உபவாஸ், உபவாஸ், பேலா(சாத்) தேலா(ஆஸ்தம்) பயசனா ஏகாசனம், ராத்ரிபோஜன் தியாகம் போன்ற விரதங்கள் மேற்கொள்கின்றனர். சமண சமயத்தவர் வீடு பேறு அடைய ‘சல்லேகனை’ எனும் உண்ணாவிரதம் இருந்து உயிர் விடுகின்றனர். மெலனியா! உங்க மதத்து விரதங்களைப் பற்றிச் சொல்லேன்!”
“நாங்கள் தவக்காலம், யோம் கிப்பூர், திஷா பாவ், எஸ்தர் நோன்பு, கெடாவியா நோன்பு, தம்முஸின், 17வதுநோன்பு அப்போஸ்தலர் விரதம், உறவு விரதம் மேற்கொள்கிறோம். யூதர்கள் டெவெட்டின் பத்தாம்நாள் நோன்பு வைக்கிறார்கள். பஹாய் மதத்தினர் ஒவ்வொரு வருடமும் மார்ச்மாதம் 19நாட்கள் விரதம் இருக்கின்றனர்!’‘
மூன்று பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து, “ஆக மொத்தம் எல்லா மதங்களிலும் உண்ணா விரதங்கள் ஏதாவது ஒரு பெயரில் கடைப்பிடிக்கப்படுகின்றன. வயிற்றைப் பட்டினி போடுதல், ஜீரண உறுப்புகளுக்கும் நல்லது. மனதுக்கும் நல்லது. விரதம் ஏழைகளின் பட்டினியை ஆத்மார்த்தமாய் உணர செய்து மனிதம் வளர்க்கும். உண்ணாவிரதம் மனிதர்கள் இறைவனின் கன்னத்தில் கொடுக்கும் ஆன்மிக முத்தம்!”
“பசித்திரு விழித்திரு வணங்கிடு!” என்றாள் சவ்பியா.