கவிக்கோ அப்துல் ரகுமான் நகர் பள்ளிவாசல்.
பள்ளிவாசலின் இடது பக்கம் ‘வெற்றிகரமான திருமணத்திற்கு ஆயத்தப்படுத்தும் இஸ்லாமிய ஆலோசனை மையம்’ என்கிற தனிக்கட்டடம் இருந்தது. தமிழுக்குக் கீழே ‘ப்ரீவெட்டிங் இஸ்லாமிக் கவுன்சலிங் சென்டர்’ என்கிற ஆங்கில நியான் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
கட்டடத்துக்கு வெளியே இருக்கும் வேப்பமரத்தடியில் குலாம்நபி ஆசாத் நின்றிருந்தான். வயது 24, 170செமீ உயரம் சுருள் தலைகேசம். உடல் மொழியில் இளமை துள்ளாட்டம் போட்டது. நீலநிற ஜீன்ஸும் வெள்ளைநிற டிசர்ட்டும் அணிந்திருந்தான். அவனுடன் இரு உறவினர்கள் வந்திருந்தனர்.
தனது இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கினார் முத்தவல்லி பாப்பாஜான் ஷாகுல்ஹமீது. இரும்புப் பெண்மணியான அவருக்கு வயது 65. 176செமீ உயரம் திராவிடநிறம் தொலைதூரக் கல்வி மூலம் முதுகலை சமூகவியல், முதுகலைப் பட்டயப்படிப்பு வழிகாட்டல் மற்றும் ஆலோசனை, முதுகலைபட்டய படிப்பு குற்றவியல் மற்றும் தடயஅறிவியல் விஞ்ஞானம், இளம்முனைவர் சமூகவியல் படித்து முடித்தவர். கணவர் இறந்து பத்து வருடங்கள் ஆகின்றன. இந்தப் பத்து வருடங்களில்தான் ஏழெட்டுப் பட்டங்களைப் படித்துப் பெற்றார் பாப்பாஜான்.
கடந்த பத்து வருடங்களில் பாப்பாஜான் இருநூற்றுக்கும் மேற்பட்ட மணமகன்கள், மணமகள்களுக்குத் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை வழங்கி, அந்தத் திருமணங்களை உறுதிபடுத்தி இருக்கிறார்.
முத்தவல்லி அறை.
அறையில் இரு சிசிடிவி கேமிராக்கள். ஒன்று முத்தவல்லியின் இருக்கையிலிருந்து எதிராளி இருக்கை பார்வைக்கு. இன்னொன்று எதிராளி இருக்கை பார்வையிலிருந்து முத்தவல்லியின் இருக்கை பார்வைக்கு.
அறைக்குள் பிரவேசித்தான் குலாம் நபி ஆசாத். “அஸ்ஸலாமு அலைக்கும் முத்தவல்லி!”
“வஅலைக்கும் ஸலாம் ஆசாத். எதிரில் அமர்!”
அமர்ந்தான்.
“உனக்கும் ஜனாப் இஸ்மாயில் சேட் மகள் ருக்ஷானாபேகத்துக்கும் திருமணம் நடக்கப் போவதாகக் கேள்விபட்டேன். அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் அதற்கடுத்த இரண்டு மாதங்களில் திருமணம் இல்லையா?”
“ஆமாம்!”
“இந்தத் திருமணம் திருமணத் தகவல் மையம் மூலம் நடக்கிறதா, உள்ளூர் தரகர் மூலம் நடக்கிறதா, உறவினர் மூலம் நடக்கிறதா ஆசாத்?”
“உள்ளூர் தரகர் மூலம்!”
“நீ என்ன படித்திருக்கிறாய்?”
“முதுகலை மின்னணுப் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறேன்!”
“என்னப் பணி செய்கிறாய்?”
‘ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக!”
“என்ன சம்பளம்?”
“மாதம் முப்பதாயிரம்!”
“உன் வருமானத் தகவலை மணமகள் வீட்டாரிடம் சொன்னாயா?’
“இன்னும் சொல்லவில்லை!”
“சொல். தரகர் உனக்கு சம்பளம் 75000 எனக் கூறியிருக்கலாம்!”
“வாய்ப்புண்டு”
“மணப்பெண் என்ன படித்திருக்கிறார்!”
“பிஎஸ்ஸி செவிலியர் படிப்பு”
“தற்சமயம் மணப்பெண் வேலை பார்க்கிறாரா?”
“இல்லை!”
“நன்கு கவனியுங்கள். திருமணத்திற்குப் பின் வேலைபார்க்கப் போவதில்லை என மணமகள் முடிவெடுத்திருந்தால் பரவாயில்லை. ஆனால், வேலைக்குப் போயேத் தீருவேன் என மணப்பெண் முடிவெடுத்திருந்தால் மழுப்பலாக பதில் சொல்லாமல் தெளிவாக முடிவெடுங்கள். பொய் வாக்குறுதி ஆபத்தானது. என்னைக் கேட்டால் பெண்கள் மார்க்கத்தை மீறாமல் தாராளமாக வேலைக்குப் போய் வரலாம். ஹிஜாப் அணிந்து கொண்டு லாரியே ஓட்டலாம்!”
“திருமணத்திற்கு பின் மணப்பெண் வேலைக்குப் போகக்கூடாது என என் பெற்றோர் கூறுகின்றனர். வேலைக்குப் போவேன் என மணமகளும், வேலைக்கு அனுப்புவோம் என பெண்ணின் பெற்றோரும் கூறுகின்றனர்!”
“வாழப்போவது நீதானே? மனைவியை வேலைக்கு அனுப்பக்கூடாது என்றால், படிக்காத பெண்ணை மனைவியாக வரித்துக்கொள். முட்டல் மோதல்களுடன் திருமணத்திற்குள் பிரவேசிக்காதே. திருமணம் என்பது ஒரு இணை ஆண் - பெண்ணின் சங்கமம். இந்துக்கள் திருமணத்தை ஒரு தர்மமாகக் கருதுகின்றனர். முஸ்லிம்கள் திருமணத்தை ஒரு ஒப்பந்தமாகக் கருதுகின்றனர். இஸ்லாமியத் திருமணங்கள் பாலியல் உறவுகளைச் சட்டபூர்வமாக்குவதற்கும், குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதற்கும் போடப்படும் ஒப்பந்தங்கள் என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்!”
தலையாட்டினான் குலாம் நபி ஆசாத்.
“மணமகளை நேரில் பார்த்தாயா?”
“ஒருமுறை நேரில் பார்த்தேன்!”
“பேசினாயா?”
“என்னைப் பிடிக்கிறதா என கேட்டேன், மௌனமாகத் தலையசைத்தாள்!”
“உனக்குப் பெண் தோழிகள் உண்டா?”
“படித்த இடத்திலும் பணியிடத்திலும் உண்டு!”
“யாரையும் காதலிக்கிறாயா?”
“இல்லை!”
“மனைவி சினிமா நடிகை மாதிரி இருக்க வேண்டும் எனக் கற்பனை செய்திருக்கிறாயா?”
“இல்லை!”
“இஸ்லாமியத் திருமணங்களில் மூன்று நிலைகள் உள்ளன ஆசாத். ஒன்று சட்ட நிலை. ஒப்பந்தத்தைப் போலவே ஒரு முன்மொழிவு. இருதரப்பு சம்மதம் முக்கியம். மோசடி, வற்புறுத்தல், பலாத்காரம், செல்வாக்கு மூலம் சம்மதம் பெறக்கூடாது. ஒரு இளம் பெண்ணைப் பாதுகாவலர் திருமணம் செய்து கொண்டால், முதிர்ந்த வயதில் திருமணத்தை நிராகரிக்க இளம் வயதுப் பெண்ணுக்கு உரிமை உண்டு. மார்க்கத்துக்கு உட்பட்டு மணமகன் - மணமகள் விருப்பத்திற்கேற்ப நிக்காஹ் நாமா எழுதப்படலாம்”
“உண்மைதான் முத்தவல்லி!”
“இரண்டு சமூக நிலைகள். இஸ்லாமியத் திருமணங்கள் இல்லற வாழ்வைத் தொடங்க, மனைவி, குழந்தைகளைப் பொறுப்பாகக் கவனித்துக் கொள்ள மனித இனத்தை நிலைநிறுத்த கற்பு, இருவரிடத்திலும் அன்பு, பாசம், அமைதி பெற நடத்தப்படுகின்றன!”
“ஆம்!”
“மூன்றாவதாக சமய நிலை. இஸ்லாமியத் திருமணங்கள் சமய ரீதியாக ‘இபாதத்’ அல்லது ஒருபக்தி செயலாகக் கருதப்படும். மனைவி, குழந்தைகளுக்கான பொறுப்பை ஏற்கும் தகுதியுடைய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் திருமணம் அவசியம் என்றார் நபிகள் நாயகம். சமூகத்தை அசுத்தம் மற்றும் ஒழுக்கக் கேட்டிலிருந்து நிக்காஹ் காப்பாற்றுகிறது.
“நான் நன்கு அறிவேன்!”
“இஸ்லாமியத் திருமணங்களில் ஒரு தரப்பினர், ஒரு திட்டத்தை முன் வைக்க, மற்றொரு தரப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். சுன்னி முஸ்லிம்கள் திருமணத்தில் இரு ஆண் சாட்சிகள் தேவை. ஆண் சாட்சிகள் இல்லை என்றால் இருபெண் சாட்சிகள். ஷியா முஸ்லிம்களுக்கு சாட்சி தேவையில்லை . வளர்ப்புத்தாய், வளர்ப்புச் சகோதரி, தாய் அல்லது பாட்டி, மகள் அல்லது பேத்தி, மருமகள், மனைவியின் தாய், மகள், தந்தையின் மனைவி, மகனின் மனைவியை இஸ்லாமிய ஆண் திருமணம் செய்யக் கூடாது. நான்கில் ஒரு மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல் ஐந்தாவது மனைவி கூடாது”
“மணப்பெண் என் உறவுக்காரப் பெண் அல்ல...”
“இஸ்லாமியத் திருமணங்கள் தொடர்பாக மூன்று சட்டங்கள் இந்தியாவில் நடைமுறையில் உள்ளன. ஒன்று, முஸ்லிம் திருமணத்தைக் கலைக்கும் சட்டம் 1939. இரண்டு, முஸ்லிம் பெண்கள் விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1986, மூன்று, முஸ்லிம் பெண் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2019. முத்தலாக் சொல்வதை இஸ்லாமும் ஏற்கவில்லை. இந்தியத் தண்டனை சட்டமும் ஏற்கவில்லை. முத்தலாக் சொல்லும் ஆணுக்கு அபராதமும் மூன்று வருடத் தண்டனையும் உண்டு!”
“தலாக் என்கிற வார்த்தையை செலக்டிவ் அம்னேஷியாவில் மறந்து விடுகிறேன்!”
“நாலு மாதம் உடலுறவிலிருந்து விலகி நிற்பேன் என சத்தியம் செய்யாதே. மனைவியைத் தாய் மற்றும் மற்ற பெண்களுடன் ஒப்பிடாதே. விவாகரத்து செய்யும் உரிமையை மனைவிக்கு விட்டுக்கொடு. ஆணாதிக்கவாதியாக மனைவியை அடிமை போல் நடத்தாதே. உறவு முறையில் எதிர்பார்ப்புகளைக் குறை. மனைவியிடம் சில கெட்ட குணங்கள் இருந்தால், அவளின் சில நல்ல குணங்களுக்காக காதலி. உதவிப்பேராசிரியர் பதவியை நீயும், செவிலியர் பதவியை உன் மனைவியும் கழற்றி வைத்துவிட்டு, கருத்து வேறுபாடு இல்லாமல் நல்ல கணவன் மனைவியாக வீட்டுக்குள் வாழுங்கள். இப்போதைய முஸ்லிம் ஆண்கள் ஒரு திருமணத்திற்கு மேல் செய்வதில்லை. இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதில்லை. பெண் குழந்தைகளைப் படிக்க வை. இல்லற வாழ்வில் திருப்திப்படு. திருமணப்பந்தம் மீறிய உறவுகளில் சிக்கி விடாதே, குடிப்பழக்கம் புகைபிடிக்கும் பழக்கம் போதை பழக்கத்திலிருந்து ஒதுங்கி நில்...”’
“அப்படியேச் செய்கிறேன் முத்தவல்லி!”
“இறைவனின் அருளால் உன் மற்றும் ருக்ஷானா பேகத்தின் திருமண வாழ்க்கை மாபெரும் வெற்றியடையட்டும்!”
மதியம் இரண்டு மணி. மணமகள் ருக்ஷானாபேகம் வந்தாள். அழகிய முகமன்கள் பரிமாற்றம். மணமகனுடன் முத்தவல்லி நடத்திய நிகழ்பட உரையாடல் மணமகளுக்குப் போட்டுக் காட்டப்பட்டது.
ருக்ஷானாவிடம் நூறுகேள்விகள் கேட்டு, நூறு திருப்தியான பதில்கள் பெற்றார் முத்தவல்லி.
“ஆயிஷா (ரலி) அவர்களும், நபிகள் நாயகமும் வாழ்ந்த வாழ்க்கை போலொரு வாழ்க்கையை நீங்களிருவரும் வாழ்வீராக! ஆமீன் ஆமீன் ரப்பில் ஆலமீன்!”
முத்தவல்லி கண்கலங்கினார்.
‘இது மாதிரியான நிகழ்பட உரையாடல் வசதி என் மகள் காலத்தில் இருந்திருந்தால், என் மகள் ஒரு துன்பமயமான இல்லற வாழ்க்கையில் உழன்றிருக்க மாட்டாளே. இனி எந்த இஸ்லாமியத் திருமணமும் கலந்தாலோசனைகளுக்குப் பிறகு நடைபெறட்டும்”