நூஜ்ரே மதீனா தனது பனிரெண்டு வயது மகள் பாத்திமா சப்ரினுடன் ஜுஆம்மா தொழுது முடித்தாள்.
துஆவின் முடிவில் ‘ஸல்லலாஹு வஅல முஹம்மது ஸல்லலாஹு அலைவ ஸல்லம்’ என ஸலவாத் ஓதினாள் நூரே மதினா.
உடன் சேர்ந்து ஸலவாத் ஓதினாள் சப்ரின்.
இருவரும் அவரவரின் தொழுகைக் கம்பளத்தை மடித்து வைத்தனர்.
பாத்திமா சப்ரின் அம்மாவின் கைகளைப் பணிவாய் பற்றிக் கொண்டாள்.
“நான் சில கேள்விகள் கேட்கவிரும்புகிறேன் அம்மா!”
“கேளு சப்ரின்”
“ஸலவாத்து என்றால் என்ன?”
“ஸலவாத்து என்றால் நபிகள் நாயகத்தின் மீதான பிரார்த்தனையும் வாழ்த்தும் எனப் பொருள்படும். ஸலவாத் என்பது ஸலாத்தின் பன்மை வடிவமாகும். அரபு மொழி வல்லுநர்கள் ஸலவாத் என்கிற வார்த்தையின் அர்த்தம் அந்த வார்த்தையை யார் பயன்படுத்துகின்றனர்? யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது? என்பதைப் பொறுத்து மாறுபடும் என்று கணிக்கின்றனர்!”
“அம்மா! நபிகள் நாயகம் இறைச்செய்தியை மக்களிடம் சேர்த்த தபால்காரர். அவருக்கு ஸலவாத் கூறவேண்டிய அவசியமில்லை என நம் மதத்தில் ஒரு பிரிவினர் கூறுகின்றனரே… அது சரியா?”
“நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில் அரபு மக்களிடம் ஒரு அழகிய முன் மாதிரி மனிதராகத் திகழ்ந்தார். நபிகள் நாயகம் மூலமாக உலக மக்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டலை அல்லாஹ் வழங்கியுள்ளான். அல்லாஹ் தனக்குத் தந்த அந்தப் பொறுப்பைச் சரியான முறையில் நிறைவேற்றினார் நபிகள் நாயகம். அல்லாஹ்வின் செய்தியில் கடுகளவு கூட்டவும் குறைக்கவும் இல்லாமல் அப்படியே நம்மிடம் ஒப்டைத்தார்கள். நரக நெருப்பிலிருந்து நம்மை விடுதலை செய்யும் உன்னத வழியை நமக்குக் காட்டினார். மக்கள் நேர்வழி அடைய எண்ணற்றத் துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டார் நபிகள் நாயகம். நமது பெற்றோர் மற்றும் உலக மக்கள் அனைவரையும் விட நபிகள் நாயகத்தின் மீது நாம் அன்பு வைப்பது நம் கடமை. அதன் ஒரு பகுதியாகவே நபிகள் நாயகத்தின் மீது வாழ்த்தும் பிரார்த்தனையும் ஓதி மகிழ்கிறோம்!”
“நபிகள் நாயகம் நம்மை விட படித்தரங்கள் உயர்ந்தவர். உயர்ந்தவருக்குத் தாழ்ந்தவர் வாழ்த்தும் பிரார்த்தனையும் சொல்லலாமா?”
“உண்மையில் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ளவரும் உயர்ந்தவருக்காக துஆ செய்யலாம், உயர்ந்தவரும் தாழ்ந்தவருக்கு துஆ செய்யலாம். இருவகை துஆகளையும் இஸ்லாம் வரவேற்கிறது!”
“நம்முடைய ஸலவாத்தால் நபிகள் நாயகத்துக்கு என்ன கிடைக்கும்?”
“சொர்க்கத்தில் வஸீலா என்கிற பதவி ஒன்று உண்டு. அதை ஒரே ஒரு அடியாருக்கு அல்லாஹ் வழங்க இருக்கிறான். அந்தப் பதவியை அடையும் ஒரு நபராக நான் இருக்க விரும்புகிறேன். உங்கள் வாழ்த்தும் பிரார்த்தனையும் எனக்கு வஸீலா பதவி கிடைக்க உதவட்டும்’ என்கிறார் நபிகள் நாயகம்!”
“நான் இதுவரை இதனைக் கேள்விப்பட்டதில்லை!”
“நாம் நமக்காகச் செய்யும் பிரார்த்தனையை விட, நாம் பிறருக்காக செய்யும் பிரார்த்தனைகள் விரைவில் பலிக்கும். ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் உம்ரா செய்ய மக்கா சென்ற போது ‘உமது துஆவில் நம்மை மறந்து விடாதீர்கள்!’ என நபிகள் நாயகம் அவரிடம் கேட்டிருக்கிறார்!”
“ஸலவாத் என்பது நபிகள் நாயகத்தை இறைவனுக்குச் சமமாக வைத்துப் பார்ப்பதா?”
“தெய்வீக ஆசிர்வாதமே ஸலவாத். நபிகள் நாயகம் இறைத்தூதர் ஸ்தானத்தை விட ஒரு துளி உயர்ந்த ஸ்தானத்தையும் விரும்பவில்லை. தன்னை ஓவியமாக வரைவதையும் தடை செய்தார். ஈஸா நபிகளுக்கும் நபிகள் நாயகத்துக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் இதுதான். இறைச்செய்தி திருக்குர்ஆன். நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் ஹதீஸ். நடமாடும் திருக்குர்ஆனாக நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இருந்தது!”
“ஸலவாத்தை பற்றி ஹதீஸ் என்ன கூறுகிறது?”
“நாம் நபிகள் நாயகத்தின் மீது ஒருமுறை ஸலவாத் சொன்னால், இறைவன் நம் மீது பத்துமுறை ஸலவாத் சொல்கிறான் (அதாவது பத்து நன்மைகள் அருள்கிறான்)
“வெள்ளிதோறும் நபிகள் நாயகத்தின் மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள் அது மலக்குகள் மூலம் நபிகள் நாயகத்திற்கு அறிவிக்கப்படுகிறது”
“பிரார்த்தனைக்கு முன்னும் பின்னும் ஸலவாத் ஓதப்படாவிட்டால் அந்த பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படுவதில்லை!”
“நபிகள் நாயகம் அவரது 63வது வயதில் இறந்து விட்டார். இறந்த பின் நாம் கூறும் ஸலவாத்கள் அவரை எப்படிப் போய்ச் சேரும் அம்மா?”
“நபிமார்களின் உடல்கள் அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கி விட்டான். அதாவது நபிமார்களின் உடல்கள் மக்கிவிடாது. அதனால் நபிகள் நாயகம் மூமின்களின் ஸலவாத்களை தொடர்ந்து காதுறுவார்!”
“நபிகள் நாயகத்தின் மீது ஸலவாத் கூறுவது நபிகள் நாயகம் காலத்திலேயே இருந்ததா? தன் மீது ஸலவாத் கூறபடுவது பற்றி நபிகள் நாயகத்தின் கருத்து என்ன?”
“ஒரு சம்பவம் கூறுகிறேன் கேள். உபை இப்னு கஃப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்திடம் ஒரு கேள்வி கேட்டார். ‘இறைத்தூதரே! ஒரு நாளில் கால்பகுதி ஸலவாத் ஓதுதல் போதுமானதா?’
அதற்கு நபிகள் நாயகம் ‘உங்கள் விருப்பம் இருந்தாலும் அதிகப்படுத்துதல் உமக்குச் சிறந்தது’ என்றார். நபி தோழர் மீண்டும் ‘அப்படி என்றால் ஒருநாளில் அரைபகுதி ஸலவாத் ஓதுதல் போதுமானதா?’ என்றார்.
அதற்கு நபிகள் நாயகம் ‘உங்கள் விருப்பம் இருந்தாலும் அதிகப்படுத்துதல் உமக்குச் சிறந்தது’ எனப் பகர்ந்தார். மீண்டும் நபிதோழர் ‘ஒரு நாளில் முக்கால் பகுதி ஸலவாத் ஓதவா?’ என்றார். ‘உங்கள் விருப்பம் ஆனாலும் அதிகப்படுத்துதல் நமக்கு சிறந்தது’ என்றார் நபிகள் நாயகம். நான்காவது முறையாக நபிதோழர் ‘ஒருநாள் முழுக்க ஸலவாத் ஓதவா’ என்றார். அதற்கு நபிகள் நாயகம் ‘உமது கவலைகள் அகன்று பாவங்கள் மன்னிக்கப்படும்’ என முத்தாய்ப்பாக கூறி நபிதோழரின் சந்தேகத்தை போக்கினார்கள்!”
“ஸலவாத்கள் மொத்தம் எத்தனை இருக்கின்றன அம்மா!”
“நாற்பது வகை ஸலவாத்கள் உள்ளன சப்ரின்!”
“எந்த ஸலவாத் சிறப்பானது?”
“தொழுகையின் கடைசி அமர்வில் ஓதுகின்ற தரூதே இப்ராகீம் ஸலவாத் சிறப்பானது!”
“நாற்பதுவகை ஸலவாத்களின் பட்டியல் கூறு அம்மா”
“சில முக்கியமான ஸலவாத்களை கூறுகிறேன். நூரனியா ஸலவாத், முனஜ்ஜியா ஸலவாத், சையதினா அலி ஸலவாத், ஸாயித் ஸலவாத், ஜவ்ஹரத் அல் கமால் ஸலவாத், ஸலாத்துன் நாரியா, ஸலவாத் இமாம் ஸபி, அல் அஸகந்தாரி ஸலவாத், தாருத் ஸிபா, உலுல் அஸ்ம், ஸலாத் ஐ திபியா இன்னும் பல ஸலவாத்கள் உள்ளன. நபிகள் நாயகத்தை கனவில் காண ஒரு ஸலவாத் இருக்கிறது. அதனை 71முறை ஓதினால் நபிகள் நாயகம் கனவில் வருவார். நோய் குணமாக ஒரு ஸலவாத் இருக்கிறது!”
“தரூதே இப்ராகீம் ஸலவாத் கூறுங்கள் அம்மா!”
“அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லாய்த்த அலா இப்ராஹிம் வஅலா ஆல இப்ராஹிம் இன்னக்க ஹமீதும் மஜித்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆல முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹிம் வஅலா ஆலி இப்ராஹிம் இன்னக்க ஹமீதும் மஜித்!’
“இரண்டு ஸலவாத்களை தமிழில் மொழிபெயர்த்து கூறுங்கள் அம்மா!”
“ஓ இறைவனே! நபிகள் மீதான பிரார்த்தனைகளை வாழ்த்துகளை அங்கீகரிப்பாயாக. உன் வேலைக்காரன் உன் இறைத்தூதன் உன் இறைச் செய்தியாளன் அமைதியையும் வாழ்த்தையும் எல்லா நேரங்களிலும் எல்லா கணங்களிலும் பெறுவாராக!”
“ஓ அல்லாஹ் எங்கள் முகமது நபியை ஆசிர்வதியும். அவரே இதற்குமுன் மூடியிருந்த முத்திரையிட்ட ஆன்மிகப் புதிர்களை விடுவித்தவர். அவரே உண்மையால் உண்மையை ஜெபிக்க வைத்தவர். எங்களுடைய இறைப் பாதைக்கு அவரே வழிகாட்டி அவரது குடும்பத்தாரை இரட்சி. அதுவே நபிகள் நாயகத்தின் உன்னதத்திற்குப் பெருமை சேர்க்கும்!”
“என்னுடைய சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதில் அளித்தீர்கள் நன்றி அம்மா!”
“விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்தது இஸ்லாம் இங்கு ஏன்? எதற்கு? எப்படி? - என கேள்விகள் கேட்டுத் தகுந்த பதில்கள் பெறலாம்!”
“உண்மைதான் அம்மா!”
“கேள்விகள் கேட்ககேட்கப் பதில்கள் பெறப்பெற உன் அறிவு விசாலமாகும். மதச்சடங்குகளை அர்த்தப்பூர்வமாய் உணர்ந்து செய்வது சாலச்சிறந்தது!”
“பிரில்லியன்ட்!”
“ஸல்லாஹு வஅலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைவ ஸல்லம்…” என ஓதத் தொடங்கினாள் அம்மா.
தானும் ஓதத் தொடங்கினாள் பாத்திமா சப்ரின்.
ஸலவாத் ஓதும் கோரஸ் பூமிப்பந்தின் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. டெஸிபல் சிறிதும் தேயாமல்.
நொடிக்கு நொடி ஸலவாத்தின் டெஸிபல் கூடிக்கொண்டேதான் போகிறது!
சொர்க்கத்தின் வஸீலா பதவி நபிகள் நாயகத்துக்குத்தான் என அல்லாஹ் சொல்லாமல் சொல்லிக் கருணை சிரிப்பு பூக்கிறான்!