முகம்மது இப்ராகிம் நகர் பள்ளிவாசல்.
முத்தவல்லி திவான் தனது அறைக்குள் அமர்ந்திருந்தார். நிர்வாகிகளும் இமாம் ஒலியுல்லா பாகவியும் அறைக்குள் நுழைந்தனர்.
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“பேசத் தொடங்கலாமா நண்பர்களே?”
“தாராளமாக!”
“நம் பள்ளிவாசலில் ஆறு இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் வைத்துள்ளோம். தொழுமிடம், ஒளு செய்யும் இடம், பள்ளிக்கு வெளியே வாகனங்கள் நிறுத்துமிடம், கபர்ஸ்தான், மதர்ஸா வகுப்பறை மற்றும் முத்தவல்லி அறை. மானிட்டர் திரை என் அறையில்தான் உள்ளது!”
“நான் கூட ஒரு பள்ளிவாசலில் இத்தனை சிசிடிவி கேமிராக்கள் எதற்கு என யோசித்தேன். ஆனால் அதன் பயன்பாட்டைக் கடந்த ஒரு வருடமாகக் கண்டு வருகிறேன். தமிழ்நாட்டிலுள்ள எல்லா மசூதிகளிலும் சிசிடிவி பொருத்தலாம்!” என்றார் ஒரு நிர்வாகி.
“வாகனத் திருட்டைத் தடுத்துள்ளோம். பள்ளிக்குள் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என ஒரு கணக்கு கிடைக்கிறது. இன்னும் பல பயன்பாடுகள்!”
“தவிர, நம் மசூதியில் பயோமெட்ரிக்கருவி பொருத்தியுள்ளோம்!”
“ஆமாம்!”
“தற்சமயம் பஜ்ரு தொழுகைக்கு வருகிறவர்கள் மட்டும் பயோமெட்ரிக் வைக்கிறார்கள்!”
“ஐந்து நேர தொழுகைக்கும் பயோமெட்ரிக் கொண்டு வரவேண்டும்!”
“பார்ப்போம். நம்ம மஹல்லாவில் மொத்தம் எத்தனை சந்தாதாரர்கள் உள்ளனர்?”
“மிகச்சரியாக 800பேர். இவர்களில் அறுபதுபேர் சந்தா ஒழுங்காக செலுத்துவதில்லை. இரண்டு மூணு மாசமாக பாக்கி இருக்கிறது...”
“வெள்ளிக்கிழமை ஜுஆம்மா தொழுகைக்கு எத்தனை பேர் வருகிறார்கள்?”
“எண்ணூறு பேரும் வருகிறார்கள். தவிர, பக்கத்து மஹல்லாக்களிலிருந்து கூட ஆட்கள் வருகிறார்கள்!”
முத்தவல்லி மானிட்டர் திரையில் பஜ்ரு தொழுகை சம்பந்தபட்ட காட்சிகளை ஓடவிட்டார்.
மோதினார் மைக்கில் பாங்கு சொல்கிறார்.
இமாம் தென்படுகிறார்.
தொழுகையாளிகள் ஒவ்வொருவராய் வருகின்றனர்.
இமாம், மோதினார், முத்தவல்லி, நிர்வாகிகள் சேர்த்து மொத்தம் 21பேர் தொழுகின்றனர். சில நாட்களில் ஒன்றிரண்டு பேர் குறைகின்றனர். சில நாட்களில் ஒன்றிரண்டு பேர் கூடுகின்றனர். பஜ்ரு தொழுகைக்கு பின் ஒரே ஒரு தொழுகையாளி மட்டும் பள்ளியில் அமர்ந்து திக்கிர் எடுக்கிறார்.
“அவர் பெயர் சுல்தான் வயது 72. உலர்ந்த பழங்கள் மற்றும் பருப்புகள் விற்பனை செய்தவர். நீரழிவு நோய் காரணமாக இடதுகாலில் புண் உண்டு. அதன் மீது கட்டு போட்டிருப்பார். சேரில் அமர்ந்து தொழமாட்டார் தரையில்தான் தொழுவார். மரபுகளிலும் சம்பிரதாயங்களிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அதிகம் பேசமாட்டார். சகதொழுகையாளிகளைக் கண்டு புன்னகைப்பார். கதர் மொடமொட சட்டை போட்டிருப்பார். கட்டிக்கோ ஒட்டிக்கோ வேட்டி…” என்றார் இமாம்.
“வருடத்தில் நான் கூட சில நாட்கள் பஜ்ரு தொழ பள்ளிக்கு வரவில்லை. இமாம் மோதினார் கூட சில நாட்கள் தங்கள் ஊர்களுக்கு போய்விட்டனர். மொத்தம் 13பேர் வருடம் முழுக்க பஜ்ரு தொழ, பள்ளிக்கு வந்திருக்கின்றனர்!”
“ஓ...!”
“ஆங்கில வருடகணக்கில் சுல்தான் பாய் 365நாட்களும் பஜ்ரு தொழ வந்திருக்கிறார். மைதீன் பாய் 360நாட்கள். காதர்பாய் 355நாள். பக்ரூதீன் பாய் 352நாள். சித்திக்பாய் 350நாள். நூர்பாய் 348நாள். ஹஸன்பாய் 346நாள். அத்தாவுல்லா பாய் 345நாள். நத்தர்ஷா பாய் 342நாள். அபுபக்கர்பாய் 340நாள். முதல் பத்து தொழுகையாளிகளின் பஜ்ரு தொழுகை கணக்கு இதுதான்!”
“தொழுகை வருகைப் பதிவுக் கணக்கில் எங்களைச் சேர்க்கவில்லையா?”
“மதிப்பீடு செய்பவர்களுக்கு யார் மதிப்பெண் போடுவார்கள் மோதினார்!”
“அதுவும் சரிதான்!”
“அடுத்தவாரம் இஸ்லாமிய நாட்காட்டியின் படி மொஹரம் மாதம் பிறக்கிறது. வருடம் முழுக்க பஜ்ரு தொழுகைக்கு வந்த முதல் பத்து தொழுகையாளிகளை பரிசு கொடுத்து கண்ணியப்படுத்தப் போகிறேன்!”
“பரிசு என்ன சோப் டப்பாவா?” ஒரு நிர்வாகி.
“காலம் நேரம் பார்க்காத உங்க நகைச்சுவை எரிச்சலூட்டுகிறது. வருடத்தின் 365 நாட்களும் பஜ்ரு தொழுகைக்கு வந்த சுல்தான் பாய்க்கு இருபதாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள பரிசு. இரண்டாமிட மைதீன்பாய்க்கு பத்தாயிரம் ரூபா பொருள் பரிசு. மூன்றாமிட காதர் பாய்க்கு ஐந்தாயிரம் ரூபா பொருள் பரிசு. மீதி ஏழு தொழுகையாளிகளுக்கு ஆயிரம் ஆயிரம் ரூபா பொருள் பரிசு!”
“இப்படி எந்த மஹல்லாவிலாவது தொழுகையாளிகளுக்கு தொழுததற்கு பரிசு கொடுத்திருக்கிறார்களா?”
“மதரஸாவில் ஒழுங்காக படிக்க வருகிற ஓதற பிள்ளைகளுக்கு சைக்கிள் கூட பரிசு கொடுத்திருக்கிறார்கள்...”
“தொழ வருகிற தொழுகையாளிகளுக்கு பரிசு கொடுப்பது, தவறான முன்னுதாரணம் ஆகி விடாதா?”
“பரிசுகளும் அன்பளிப்புகளும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவைதானே?”
“எனக்கென்னவோ மனம் ஒப்பவில்லை!”
“வருடத்தின் 365நாட்களும் பஜ்ரு தொழுத ஒரு வயதான தொழுகையாளியை கண்ணியப்படுத்துவதில் ஒரு தவறும் இல்லை மோதினார்”
“இருபதாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள பரிசுப் பொருளாக, எதைக் கொடுக்கப் போகிறீர்கள் முத்தவல்லி?”
முத்தவல்லி சிரித்தார். “கற்பனைக் குதிரையை தட்டி விடாதீர்கள். பரிசுப்பொருள் நிச்சயம் ஐ போன் அல்ல. ஒரு விலையுயர்ந்த தொழுகை கம்பளம், ஒரு தஸ்பீஹ் மணிமாலை, அஜ்வா பேரீச்சம் பழம் ஒரு கிலோ, சுகர்டெஸ்ட் பிபி டெஸ்ட் கிட், ஜிப்பாதுணி 25மீட்டர் வெள்ளை வேட்டிகள் பத்து, ஒரு ஸ்மார்ட் வாட்ச், மார்க்கம் தொடர்பான புத்தகங்கள், ஒரு வாக்கிங் ஸ்டிக் இதர இதர…”
“பரிசுப் பொருட்கள் பட்டியல் மிகச்சிறப்பு!”
“இரண்டாவது பரிசிலும், மூன்றாவது பரிசிலும் பரிசு பொருட்களின் எண்ணிக்கை குறையும் ஆறுதல் பரிசுகள் அனைத்தும் ஆயிரம் ரூபாய் பெறுமான முள்ள வாட்சுகள்...”
“பரிசுப் பொருள் வாங்க மொத்தம் 42000ரூபாய் ஆகும். பள்ளி பணத்திலிருந்துதானே பரிசுப் பொருட்கள் வாங்கப்போகிறீர்கள் முத்தவல்லி?”
“என்னுடைய சொந்தப்பணம் 50000ரூபாயை பரிசுபொருட்கள் வாங்கத் தனியாக ஒதுக்குகிறேன். மீதி எட்டாயிரம் ரூபாய் இருக்கிறது அல்லவா? ஐந்தாயிரம் ரொக்கப் பணம் இமாமுக்கு, மூவாயிரம் மோதினாருக்கு இவை இரண்டும் பரிசில் சேராது ஊக்கத்தொகையில் சேரும்!”
“ஒரு யோசனை முத்தவல்லி!”
“என்ன மோதினார்?”
“வருகிற மொஹரம் மாதத்திலிருந்து பஜ்ரு தொழ வரும் தொழுகையாளிகளுக்கு சுடச்சுட்ட இஞ்சி டீ வழங்கலாம்!”
“யோசிப்போம்!”
“இன்னொரு யோசனை முத்தவல்லி!”
“சொல்லுங்க!”
“ஒரு மஹல்லாவில் பஜ்ருவும் இஷாவும் தொழ வராத தொழுகையாளிகளுக்கு இருபது இருபது ரூபாய் தண்டத் தொகை போட்டார்கள்...”
“அது மாதிரி!”
“அதுமாதிரி பஜ்ரு தொழ வராதவங்களுக்கு தலா நூறு ரூபாய் தண்டம் போட்டால் என்ன? தண்டத்தொகைப் பணத்தை வைத்து வருடம் முழுக்க வரும் தொழுகையாளிகளுக்கு பரிசு வழங்கலாம்!”
“யாருக்கும் தண்டனையோ அபராதமோ விதிக்க நமக்கு உரிமை இல்லை. அனைத்தையும் அல்லாஹ் பாத்துப்பான்!”
“நீங்கள் திட்டமிட்டபடி தொழுகையாளிகளுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து விடலாம் முத்தவல்லி!” அனைவரும் சேர்ந்து சொல்லினர்.
மொஹரம் ஒன்று. பஜ்ரு தொழுகை தொழுது முடித்த சுல்தான் பாயை முஸாபஹா செய்தார் முத்தவல்லி.
“வருடம் முழுக்க பஜ்ரு தொழ வந்த உங்களைச் சிறப்பிக்க விரும்புகிறோம். மேம் ஸாஹிப்.. இந்தாருங்கள் எங்கள் பரிசுப் பொருட்கள்...”
சுல்தான் பாய் பரிசுப் பொதியை புறம் தள்ளினார். “தொழுகையாளிகளுக்கு கையூட்டு தருகிறீர்களா? இஸ்லாமின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான தொழுகையை நிறைவேற்றப் பரிசு எதற்கு? நான் வாங்க மாட்டேன், என்னை விட்டு விடுங்கள். உங்கள் அன்புக்கு நன்றி!”
முத்தவல்லி ஒரு நொடி யோசித்தார். “நன்றி சுல்தான் பாய். சுல்தான் பாயின் முதல்பரிசு, இரண்டாமிட மைதீன் பாய்க்கு. இரண்டாமிட பரிசு, மூன்றாமிட காதர் பாய்க்கு. மூன்றாம் பரிசு ஆறுதல் பரிசுகளுடன் இணைக்கப்பட்டு எட்டு ஆறுதல் பரிசுகள் தலா 1500 ஆக வழங்கபடுகின்றன!”
அயர்ந்து குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த கணவனின் முகத்தைக் கனத்த தலையணையால் தாக்கினாள் மனைவி, “எந்திரிய்யா பஜ்ரு தொழுகைக்கு போமய்யா... இருபதாயிரம் பெறுமானமுள்ள பரிசுப் பொருட்களை வீட்டுக்கு அள்ளிக் கொண்டு வாருமய்யா...”
மகள் ஒரு குடம் குளிர்நீரை தந்தையின் முகத்தில் கொட்டினாள். “எந்திரிச்சு பஜ்ரு தொழுகைக்கு போங்கத்தா!”