பஜ்ரு தொழுகைக்குப் பின் அப்துல் லத்தீப் தேநீர் விடுதிக்குச் சென்றான். அங்கு லத்தீப்பின் நண்பர்கள் காத்திருந்தனர். முஸ்லிம் நண்பர்களுக்கு அழகிய முகமன்கள் பரிமாற்றம். பிற சமயச் சகோதரர்களுக்கு “வணக்கம்!” கூறினான். தேநீர் அருந்திக் கொண்டே அனைவருடனும் கை குலுக்கினான். “உங்கள் அனைவருக்கும் சர்வதேச நண்பர்கள் தின வாழ்த்துகள்!”
“வாழ்த்துகள் லத்தீப்!”
“நம்முடைய நட்பு ஆயுட்கால நட்பாய் வளர்ந்து பரிணமிக்கட்டும்!”
ஆறு தேநீருக்குக் காசு கொடுத்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டான் அப்துல் லத்தீப்.
கால் செருப்பை அதற்குரிய மரஅடுக்கில் வைத்துவிட்டுக் கால் கழுவினான் அப்துல் லத்தீப். வீட்டிலுள்ள அனைவருக்கும் ஸலாம் கூறினான்.
படித்துக்கொண்டிருந்த மகன் யாகூப் பத்ருதீனிடம் திரும்பினான். “இன்னைக்கி என்ன தினம் தெரியுமா?”
“தெரியாதுத்தா!”
“இன்னைக்கி நண்பர்கள் நாள்… உன் நண்பர்கள் யாருக்கும் நீ வாழ்த்து கூறவில்லையா? உன் நண்பர்கள் யாரும் உனக்கு வாழ்த்து கூறவில்லையா?”
“நான்தான் யார் கூடவும் பழகிறதில்லையே.. வீட்டை விட்டா பள்ளிக்கூடம்… பள்ளிக்கூடத்தை விட்டா வீடு…”
“அப்படி இருக்கக்கூடாது மகனே... உறவுகளை விட நட்பு மேன்மையானது!”
நிமிர்ந்தான் யாகூப் பத்ருதீன்.
மகனை கனிவாக அரவணைத்து அவனது முகத்தருகே தன் முகத்தை வைத்துப் பேசினான் லத்தீப்.
“நட்பின் முக்கியத்துவத்தைப் பற்றி உலக அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதனை முதலில் பார்ப்போம்!”
“சொல்லுங்கத்தா!”
“ஒரே சிந்தனையில் இருக்கும் இரண்டு உடல்கள்தான் நட்பு. ‘வெளிச்சத்தில் தனியாக நடப்பதை விட இருட்டில் ஒரு நண்பருடன் நடப்பது சிறந்தது’ என்கிறார் ஹெலன் கெல்லர்.
‘ஒரு விசுவாசமான நண்பர், பத்தாயிரம் உறவினர்களின் மதிப்பு மிக்கவர்’ என்கிறார் யூரிப்லிட்ஸ்.
‘நல்ல நண்பர்கள் ஆன்மாக்களை மலர வைக்கும் தோட்டக்காரர்கள்’ என்கிறார் மார்செல் ப்ரூஸ்ட்.
‘உங்கள் நண்பரானவர் நீங்கள் அன்போடு விதைத்து, நன்றியுடன் அறுவடை செய்யும் உங்கள் வயல்’ என்கிறார் கலீல் ஜிப்ரான்.
‘அனைவருக்கும் நண்பராக இருப்பவர்கள் யாருக்கும் நண்பரல்ல’ என்கிறார் அரிஸ்டாட்டில்.
‘என்னிடம் உள்ள சிறந்தவற்றை வெளிக் கொண்டு வருபவரே எனது சிறந்த நண்பர்’ என்கிறார் ஹென்றிபோர்ட்.
‘நல்ல நண்பன் ஒரு நூலகத்துக்கு சமம்’ என்கிறார் கலாம்.
‘உண்மையான நட்பு என்பது, தாய் தந்தையின் மறுஉருவம். இறைவனும் தவமிருக்கும் வரம் அது’ என்கிறார் ஒரு அறிஞர்.
‘நல்ல நட்பு கிடைக்கும் போது ஆயுள் ஒன்று கூடும். நல்ல நட்பை இழக்கும் போது ஆயுள் இரண்டு குறையும்’ என்கிறார் இன்னொரு அறிஞர்.
“உலக அறிஞர்கள் சொல்வது இருக்கட்டும் நம் மார்க்கம் என்ன சொல்கிறது அத்தா?”
“முஸ்லிம்களின் முதல் நண்பன் அல்லாஹ். இரண்டாவது நண்பர் நபிகள் நாயகம். மூன்றாவது நண்பர்கள் ஈமான் கொண்ட முஸ்லிம்கள் என அல்லாஹ் கூறுகிறான்!”
“அப்படி என்றால் பிற சமயச் சகோதர்களை நண்பர்களாகக் கொள்ளக்கூடாதா?”
“நாத்திகம் பேசுபவர்களுடன் நட்பு பாராட்டாதே. உன் மத விழுமியங்களை, கோட்பாடுகளை மதிக்கும் பிற சமய்ச் சகோதரர்களுடன் நட்பாகு!”
“நம் சமயத்தில் இருந்து நீங்க சொன்னதுக்கு ஆதாரம் காட்ட முடியுமா அத்தா?”
“ஓ தாரளமாக... இஸ்லாமை தழுவாத முத்திம் இப்னு ஆதி, நபிகள் நாயகத்தின் சிறந்த நண்பர். நபிகள் நாயகத்தின் மாமா அபுதாலிப். இவர் இறுதி வரை இஸ்லாமைத் தழுவவில்லை. ஆனால் நபிகள் நாயகத்தின் அன்புக்குரியவராய் இருந்தார். அதனால், அவர் இறந்த ஆண்டு சோகத்தின் ஆண்டு என வர்ணிக்கப்பட்டது!’‘
“எல்லாரையும் நண்பராக்க வேண்டுமா?”
“கட்டாயமில்லை அனைவரையும் புன்முறுவலுடன் கடந்து விடலாம். சரியான பொருத்தமான நண்பர் கிடைக்கும் வரை!”
“மகிழ்ச்சி!”
“யாரையும் நண்பனாக்கி, சகோதரனாக்கிக் கொள்ளாத மனிதன் உலகின் மிக பலவீனமாக மனிதன். அப்படி நண்பர்கள் இல்லாதவனை அவனுடையச் சொந்த நிலத்திலேயே அந்நியனாக தன்னந்தனியனாக பாவிக்கப்படுவான்’ என்கிறது இஸ்லாம்.
“சரியாகச் சொன்னீர்கள் அத்தா!”
“அல்லாஹ் இப்ராகீம் நபிகளை நண்பனாக ஏற்றுக் கொண்டிருந்தான். அதனால்தான் நண்பன் கட்டிய கபாவை நட்புக்காக பாதுகாத்து 200கோடி முஸ்லிம்களுக்கு புனிதத்தலம் ஆக்கினான். இறைவன் நட்புக்கு காட்டிய மரியாதை இது!”
“நபிகள் நாயகத்துக்கு நெருங்கிய நண்பர் யார்?”
“அபுபக்கர் அப்துல்லாஹ் இப்னு அபூ குஹாபா. அவருக்கு அபூபக்ரு அஸ்-ஸித்தீக் என்கிற புனைப்பெயரும் உண்டு. முதன் முதலாக இஸ்லாத்தை தழுவியவர். நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு முதல் கலிபாவாக இவரேப் பதவி வகித்தார்”
“ஆண்கள் பெண்களுடன் நண்பர்கள் ஆகலாமா?”
“ஆண்களும் பெண்களும் நட்பாவதை இஸ்லாம் உற்சாகப்படுத்துவதில்லை. ஆண் - பெண் நட்புகளுக்குள் எப்படியாவது பாலினக் கவர்ச்சி புகுந்து விடும்...”
தலையாட்டினான் யாகூப் பத்ருதீன்.
“இமாம் அபூஹனிபா நுஃமான் இப்னு தாபித் ரஹிம ஹுல்லாஹுவிடம் ஒருவர் ‘உங்கள் வயதென்ன? என கேட்கிறார். நான்கு மதஹபு இமாம்களில் ஒருவரான அபூஹனிபா தனக்கு வயது ஐம்பது என கூறாமல் இரண்டு என்கிறார். கேள்வி கேட்டவர் திகைக்கிறார். இமாம் கூறுகிறார் ‘ஜாபர் இப்னு அபிதாலிப்(ரலி) யுடன் நட்புறவு கொண்ட பிறகுதான் பிறந்தேன். அதனால் என் வயது இரண்டு. உண்மையான நட்புக்கு இமாம் தரும் மரியாதையைப் பார்த்தாயா யாகூப் பத்ருதீன்!”
“அற்புதமான செயல்பாடு!”
“இறைவன் படைத்த மிருகங்களில் ஏழு மிருகங்கள்தான் சொர்க்கம் போகும். நாய் எச்சில்பட்டால் ஏழு தடவை கழுவவேண்டும். நாயின் எச்சில் ‘நஜீஸ்’ குகைவாசிகளுடன் நட்பாக இருந்த நாய் சொர்க்கம் போகும் என்றார் நபிகள் நாயகம்!”
“புண்ணியம் செய்த நாய்!”
“இன்னும் சொல்கிறேன் கேள்...”
“சொல்லுங்கத்தா!”
“ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப்(ரலி) மெக்கா நகரத்துக்குள் புகும் போது இறைவனிடம் ‘நல்ல நண்பனை லேசாக்கித்தா!” என வேண்டுகிறார்.
அவருக்கு கிடைத்த நண்பர் யார் தெரியுமா? அபு ஹுரைரா ரலியல்லாஹு தஅலா அன்ஹு. எத்தனை பொருத்தமான நண்பரை அல்லாஹ் ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப்புக்கு அன்றைக்குத் தந்தான்!”
“உண்மைதான் அத்தா!”
“அப்துல் ரகுமான் இப்னு அவ்பு மரணத்தருவாயில் தனது வறுமையில் வாடும் நண்பனுக்கு இரண்டு லட்சம் தங்கக்காசுகளை வஸியத் செய்தார். எவ்வளவு பெரிய உதவி?”
“நல்ல நண்பன் என நினைத்து ஒருவனுடன் பழகுகிறோம். அவன் கெட்டவனாக இருந்து விட்டால்?”
“உணவு சாப்பிடும் போது, நல்ல நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடவேண்டும். நண்பரின் குணநலன்கள் நல்லதோ கெட்டதோ தொற்றுநோய் போல நம்மை ஒட்டிக் கொள்ளும். கெட்ட நண்பரால் வீழ்ந்தவர் கோடி. உன் நண்பனைப் பற்றிச் சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்கிற ஆங்கிலச் சொலவடையைக் கேள்விப்பட்டிருப்பாய். நண்பனைத் தேர்ந்தெடுக்கும் போது பெரும் கவனம் தேவை. தங்கத்தை உரசிப் பார்ப்பது போல, உரசிப் பார்க்க வேண்டும். மனத்தராசில் வைத்து நண்பனை எடை போட வேண்டும்...”
“நானும் உரசி பார்ப்பேன், எடை போடுவேன்!’‘
“தவறு செய்யும் நண்பனைத் தனிமையில் கடிந்துரைத்துத் திருத்த வேண்டும். தவறு செய்யும் ஸஹாபிகளுக்கு நபிகள் நாயகம் ஸலாம் சொல்ல மாட்டார். போருக்கு வராமல் ஏமாற்றிய கஃப் இப்னு மாலிக் (ரலி) குடன் நபிகள் நாயகம் ஐம்பது நாட்கள் பேசாமல் இருந்திருக்கிறார். மற்ற ஸஹாபிகளும் ஏன் கஃப் இப்னு மாலிக் (ரலி)யின் மனைவியும் மாலிக்குடன் பேசவில்லை. ஐம்பது நாட்களுக்குப் பிறகு இறைவசனம் இறங்கி மாலிக் மன்னிக்கப்பட்டிருக்கிறார்!”
“ஓ...!”
“இயற்கை நண்பன் இயற்கை விரோதி என யாரும் கிடையாது. நம்மின் நடத்தைதான் நண்பர்களையும் விரோதிகளையும் தீர்மானிக்கிறது. நல்ல நட்பு, பசிக்கு ஹலாலான உணவு. நல்ல நட்பு நோயை முழுமையாய் குணமாக்கும் அருமருந்து யாகூப்! உனக்கு ஒரு மாதம் எடுத்துக் கொள். அதற்குள் உனக்கான நண்பனைத் தேர்ந்தெடு!”
“அப்படியேச் செய்கிறேன் அத்தா!”
ஜுஆம்மா தொழுகை. தொழுகை முடிந்து துஆ ஓதும் போது யாகூப் பத்ருதீன் முன் வரிசை தொழுகையாளிகளை நோட்டமிட்டான்.
பத்து வயது சிறுவன் ஹிதாயத்துல்லா கண்ணில் பட்டான். தொழுகையாளி நோன்பாளி படிப்பாளி பெரும் கெட்டிக்காரன் பெற்றோரை மதிப்பவன். ஹிதாயத்துல்லாவை நான்கு வருடங்களாகக் கவனித்து வருகிறான் பத்ருதீன்.
ஸலவாது ஓதி முடித்து வரும் ஹிதாயத்துல்லாவைக் கட்டியணைத்து முஸாபஹா செய்தான் யாகூப் பத்ருதீன். ஹிதாயத்துல்லா காதுகளில் கிசுகிசுத்தான் பத்ருதீன் ‘என்னை நண்பனாக ஏற்று கொள்வாயா?”
“நானும் உன்னை நான்கு வருடங்களாக கவனித்து வருகிறேன். நீயும் என்னை நண்பனாக ஏற்றுக் கொள்வாயா?”
“மாஷா அல்லாஹ் நிச்சயமாக!’‘ மலக்குகள் இருவர் இதயத்திலும் நட்புப் பாலம் அமைத்தனர்.