மருத்துவர் ‘நபிஸா ஆஸாத் எம்.பி.பி.எஸ்., எம்.டி ஸைக்கியாட்ரி’ நியான் போர்டைப் பார்த்தவாறே ஓட்டி வந்த இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி ஸ்டாண்டிட்டார் மௌலானா ஸாதாத் பாகவி. வயது 45. உயரம் 165 செ.மீ. திராவிட நிறம். சந்தன நிற ஜிப்பாவும் சங்கு மார்க் லுங்கியும் உடுத்தியிருந்தார்.
வரவேற்பாளினி நிமிர்ந்தாள்.
“டாக்டரைப் பார்க்கனுமா?”
“ஆமா…”
“இந்தாங்க டோக்கன்... உங்க டோக்கன் நம்பர் எட்டு. பெயர் மற்றும் கைபேசி எண் சொல்லுங்க!” சொன்னார் இமாம்.
டோக்கனை வாங்கிக் கொண்டு காத்திருப்பு வரிசையில் அமர்ந்தார்.
வாய்க்குள் திக்கிர் எடுக்க ஆரம்பித்தார்.
ஒருமணி நேரத்துக்கு பிறகு வரவேற்பாளினி, “டாக்டர் கூப்பிடுறாங்க… உள்ள போங்க!” என்றாள்.
கதவை மும்முறை நளினமாகத் தட்டிவிட்டு உள்ளேப் போனார் ஸாதாத் பாகவி. ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவர் வரவேற்றார்.
“அஸ்ஸலாமு அலைக்கும்!”
“வஅலைக்கும் ஸலாம்!”
பெண் மனநல மருத்துவருக்கு வயது முப்பதிருக்கும். கத்திப் புருவங்கள் கல்விக் கண்கள் கச்சித மூக்கு மார்க்கம் அறிந்த வாய்.
“உக்காருங்க இமாம்!”
எதிரில் அமர்ந்தார்.
“நான் மனநல நிபுணரா பிராக்டிஸ் ஆரம்பிச்சு நாலு வருஷமாகுது. ஒரு இமாம் ஆலோசனைக்கு வந்திருப்பது இதுவே முதல் முறை”
அவதியாய் சிரித்தார் இமாம்.
“உங்களைப் பற்றிச் சொல்லுங்க இமாம்!”
“என் பெயர் ஸாதாத் அலி, என் சொந்த ஊர் தாழையூத்து. வறுமையான குடும்பத்தில் பிறந்தேன். என் தந்தை ஒரு லாரி டிரைவர், எங்கள் பெற்றோருக்கு ஆறு பிள்ளைகள், மூத்தவன் நான். எனக்குப் பின் மூன்று தங்கைகள், இரண்டு தம்பிகள். நான் ப்ளஸ் டூ வரைதான் படித்தேன். முதலில் சிறுசிறு பள்ளிவாசல்களில் இமாமாக இருந்த நான், நான்கு வருடங்களுக்குப் பின் ராஜபாளையம் பள்ளிவாசலில் இமாமாகப் பணியில் சேர்ந்தேன். எங்கள் ஊர்க்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன். அவர் இளங்கலை ஆங்கிலம் படித்தவர், எனக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான், மகள் ஆறாம் வகுப்பு படிக்கிறாள்...”
எழுதிக்கொண்டாள் நபிஸா ஆஸாத்.
“இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை”
இடது கையால் தாடியை அரக்கப்பரக்கத் தேய்த்து விட்டுக் கொண்டார் இமாம். லேசாக அவரது கண்கள் கலங்கின.
“யாரும் என்னை மதிக்க மாட்டேங்கிறாங்க டாக்டர்!”
“புரியல… யார் உங்களை மதிக்கல? உங்க மனைவியா? உங்க மகன், மகளா? உங்க மஹல்லா மக்களா? உங்க முத்தவல்லியா? இல்ல, மாற்று மதச் சகோதர்களா?”
“மேற்சொன்ன எல்லாரும்தான் டாக்டர்!”
“ஒவ்வொருத்தரா பாப்பம். மொதல்ல உங்க மனைவி, அவங்க எதனால உங்களை மதிக்க மாட்டேங்கிறாங்க?”
“என்னை விட அதிகம் படிச்சிருக்கா. எனக்குப் பள்ளிவாசல்ல கொஞ்சமா சம்பளம் தராங்க. வீட்டுக்கும் மனைவிக்கும் நான் ஒதுக்கும் நேரம் மிகமிகக் குறைவு. சொந்த வீடு இல்லை. நகைநட்டு மிகமிகக் குறைவு!”
“உங்க குழந்தைகள், ஏன் உங்களை மதிக்கல?”
“அவங்களை அவங்க விரும்பின பள்ளியிலச் சேர்க்க முடியல அவங்க கேட்டதை என்னால வாங்கித் தர முடியல…”
“மஹல்லா மக்கள்?”
“பொண்டாட்டி பிள்ளைகள் மதிக்காததுக்கு தகுந்த காரணங்கள் இருக்கு. மஹல்லா மக்கள் என்னை ஏன் இளப்பமா பாக்றாங்கன்றதுக்கு ஒரு காரணமும் இல்லை !”
“மஹல்லா மக்கள் உங்களை இளப்பமா பாக்றாங்கன்றது உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“ஸலாம் சொல்றதில அலட்சியம். என் ஜுஆம்மா தொழுகைப் பயான்களை காது கொடுத்துக் கேட்கமாட்டாங்க. அவங்க வீடுகள்ல மௌலது பாத்தியா ஓதனும்னா என்னை கூப்பிட மாட்டாங்க. வெளியூர் இமாம்களைத்தான் கூப்பிடுவாங்க. அவங்க என்னைப் பார்க்கறப் பார்வையில் ஒரு இளக்காரம் தொனிக்கும்!”
“முத்தவல்லி மற்றும் பள்ளி நிர்வாகிகள்?”
“நான் எதாவது ஒரு விஷயத்தில் எதாவது ஒரு அபிப்ராயம் கூறினால், முத்தவல்லி ‘உங்களுக்கு ஒண்ணும் தெரியாது ஹஜ்ரத் - சும்மா இருங்க’ன்னு என்னை அடக்கிருவாரு. அடிக்கடி முத்தவல்லி ‘ஹஜ்ரத்! உங்களுக்கு கொடுக்கற சம்பளத்ல பாதி கொடுத்தாப் போதும் மணி மாதிரி புது ஆலிம்கள் அல்லது படிச்ச இமாமா போட்ரலாம்’ என்பார்!”
“மாற்றுமதச் சகோதரர்கள்?”
“எங்களோடு நெருங்கிப் பழக மாட்டேங்கறீங்க. உங்கக் கண்ணுல, எங்களைப் பார்க்கும் போது, ஒரு வேற்றுமை தெரியுது. நாங்க வேற, நீங்க வேறன்ற தோரணைல பழகுறீங்க’ன்னு... மாற்று மதச் சகோதரர்கள் என்னைக் குறை சொல்கின்றனர்!”
சிரித்தாள் நபிஸா ஆஸாத்.
“வேற?”
“எங்கப் பள்ளிக்கு ஒரு மலேசியன் ரிட்டர்ன் இமாம் வந்திருந்தார். அவருக்கு மஹல்லா மக்களும், முத்தவல்லியும் ராஜஉபசாரம் பண்ணுறாங்க. ஜுஆம்மா தொழுகையை அவர் நடத்திப் பயான் பண்ணினார். அவர் என்னை ஒரு கரப்பான் பூச்சியைப் பார்ப்பது போல அசூயையாகப் பார்ப்பார். என்னைக் கூப்பிடும் போது ‘எலப்பைய்’ என கூப்பிடுவார். எங்க பள்ளிக்கு மாசாமாசம் ரெண்டு மூணு நாள் விஜயம் பண்ணுவார். பண்டிகை நாட்களில் அவருக்கு வழக்கப்படும் ஹதியா ஒரு லட்சத்தைத் தாண்டி விடும்!”
“லெப்பை என்பது தென்தமிழ்நாட்டு வார்த்தை. அவர் அதனை அலட்சியமாக ‘எலப்பைய்’ என கூப்பிடுகிறார் போலும்!”
“ஆமாம்”
“உங்கள் பிரச்சனைகளைத் தொகுத்து பார்த்தால் ஒரு பழமொழி எனக்கு நினைவுக்கு வருகிறது.
“உள்ளூர் மாடு விலை போகாது.’ உங்களுக்கு இருக்கும் ப்ராப்ளம் யூனிவர்சல் ப்ராப்ளம். முதலில் உங்கள் மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவி, உங்களை விட மூன்று வருடம் அதிகம் படித்து டிகிரி வாங்கியுள்ளார். நீங்கள் ஏழு வருடம் படித்து ஆலிம் பட்டம் வாங்கினதை அவர் கணக்கில் சேர்த்துக் கொள்ளவில்லை. நீங்கள் தபால் மூலம் தொடர்ந்து ஐந்து வருடம் படித்து முதுகலைப்பட்டம் பெறுங்கள். மனைவியுடனும் குழந்தைகளுடனும் இருக்கும் நேரத்தைக் குறைந்தது ஆறு மணி நேரமாக்குங்கள். எதாவது ஒரு பகுதிநேரப் பணி செய்து உபரி வருமானத்தை உருவாக்குங்கள்”
“சரி!”
“மிகமிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது இமாம். பர்ஸ்ட் இம்ப்ரஷ்ஷன் இஸ் பெஸ்ட் இம்ப்ரஷ்ஷன் என்பார்கள். தலைமுடியையும் தாடியையும் வாரத்துக்கு ஒருமுறை ட்ரிம் செய்யுங்கள். நேர்த்தியான ஆடை அணியுங்கள். தரமான அத்தர் உபயோகியுங்கள். உங்களிடம் சொல்லப்படாத ஒரு வசீகரம் ஒளிந்திருப்பதாகக் காட்டிக் கொள்ளுங்கள். மஹல்லா மக்களிடம் கடுஞ்சொல் பயன்படுத்தாதீர்கள். உங்கள் அரபி உச்சரிப்பை மேம்படுத்துங்கள். ஒரு ஆராய்ச்சி கட்டுரை தயாரிப்பது போல தயாரித்து ஒரு டிரன்டியான விஷயத்தை குறிப்புகளுடன் பயான் செய்யுங்கள். வாராவாரம் உங்க பயான்களை பதிவு செய்து வாட்ஸ்அப் குரூப்புகளுக்கு அனுப்புங்கள். பின்னூட்டம் பாருங்கள், யூட்யூப் சானல் ஆரம்பித்து உங்க அடையாளத்தைக் கூட்டுங்கள். தினம் தினம் மார்க்க விஷயங்களிலும் உலக விஷயங்களிலும் உங்களை மேம்படுத்திக் கொண்டே வாருங்கள்”
“முயற்சிக்கிறேன் டாக்டர்!”
“மலேசியன் ரிட்டர்ன் இமாம் உங்க பள்ளிக்கு வந்தால் ‘சிங்கத்தின் குகைக்கு வந்திருக்கும் சிங்கமே... உனக்கு விருந்தோம்பல் செய்கிறேன். அத்துடன் திருப்தியுறு.. என்னை இளப்பமாக பார்க்காதே’ என்கிற பாவனையை உங்கள் உடல்மொழியில் காட்டுங்கள். பறையகடவு என்கிற கேரள கிராமத்தில் பிறந்த மாதா அமிர்தானந்த மயி ஆன்மிகவாதியாக சமூகச் சேவையாளராக மாறி, அவரது கிராமத்தினரால் தலையில் தூக்கி கொண்டாடப்பட்டார். உள்ளூர் மாடு வெளியூர் ஜல்லிக்கட்டுகளில் ஜெயித்து வந்தால் உள்ளூரில் ராஜமரியாதை. மாற்று மதச் சகோதரர்களை காபிர் என்கிற அருவெறுப்பு பார்வை பார்க்காதீர்கள். அவரவர் மதம் அவரவருக்கு... அவர்களிடமிருந்து நாலு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். ஆளுமை திறன் மற்றும் தன்னம்பிக்கை வளர்க்க மதரஸாவில் தனி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். கைத்தொழில்கள் மற்றும் பிறமத விழுமியங்கள் கோட்பாடுகள் மதரஸா மாணவர்களுக்கு அறிமுகபடுத்தப்பட வேண்டும்”
“உண்மைதான் டாக்டர்!”
“மார்க்கக்கல்வி, பொதுக்கல்வி, வாழ்க்கைக்கல்வி மூன்றையும் கற்று தினசரி சவால்களுக்கு பயன்படுத்தினால் வெற்றி பெற்ற மனிதர் ஆகிவிடலாம்!” என்றாள் நபிஸா ஆஸாத்.
ஒரு வருடத்திற்கு பின்…
மௌலானா ஸாதாத் பாகவியின் யூட்யூப் சானல் ஐந்து லட்சம் சந்தாதாரர்களை பெற்றது.
இமாமின் சம்பளம் இரட்டிப்பானது. மஹல்லா மக்கள் நட்சத்திர இமாம் என ஸாதாத் பாகவியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்.
மலேசியன் ரிட்டர்ன் இமாம் “அஸ்ஸலாமு அலைக்கும் மேம்சாஹிப்!” என்றார் தனது முகத்துக்கு நேராக வலது கை குவித்து.