இரவு எட்டு மணி.
எழுதப் போகும் ‘கிதாபு’ இஸ்லாமிய சிறுகதைக்கான தகவல் குறிப்புகளை எடுத்து முடித்திருந்தேன்.
தவிர, எனக்கு நட்பான ஷாகுல்ஹமீது ஜலாலி, முகமது ஹதீஸ், வாகிதியார் ஆர்கானிக் விவசாயம் பண்ணும் இஸ்மாயில் போன்றோரிடமும் கிதாபு பற்றி நிறையப் பேசினேன்.
சிறுகதையில் வரும் இரு பெண் கதாபாத்திரங்களுக்குப் புதுமையான பெயர்கள் வைத்தேன்.
சிறுகதையின் சுருக்கத்தை ஐந்தே வாக்கியங்களில் எழுதி வைத்தேன்.
ஆறுமணி நேர உழைப்புக்கு பின் முகநூலில் பிரவேசித்தேன்.
டி.கே. கலாப்ரியாவின் ஒரு கவிதையை ரசித்தேன்.
“மரத்தடியில்
சற்றே ஓய்வெடுத்து
மறுபடியும் நடக்கிறான்
தொலைந்து போயிருந்த
நாடோடியின் நிழலை
மீண்டும் கண்டு கொள்கிறது
வெயில்”
கவிதையில் சில நிமிடங்கள் லயித்துவிட்டு உள்டப்பிக்குப் போனேன். ஒரு தகவல் என் கவனத்தை ஈர்த்தது.
‘அஸ்ஸலாமு அலைக்கும் பாய். நான் ஷகீக் முகமது துபாயிலிருந்து பேசுகிறேன். என்னைத் தெரிகிறதா? 45ஆண்டுகளுக்கு முன் நாம் திண்டுக்கல் முகமதியாபுரம் ஐந்தாவது தெருவில்தான் வசித்தோம்.
“வஅலைக்கும் ஸலாம். ஞாபகம் இல்லையே தம்பி?”
“என்ன இப்டி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க. எங்கத்தா பயர் சர்வீஸ் ஸ்டேஷன்ல வொர்க் பண்ணினார். எங்கம்மா ஒரு அழகான இல்லத்தரசி. எங்கள் பெற்றோருக்கு நாங்கள் இரண்டேக் குழந்தைகள். மூத்தது அக்கா இரண்டாவது நான்”
“கோவித்துக் கொள்ளாதீர்கள் எனக்கு ஞாபகமில்லை...”
“தினமும் குறைந்தது இரண்டு தடவைகளாவது எங்கள் வீட்டுக்கு வந்து விடுவீர்கள். அப்போது குட்டியூண்டாக கோரை தலைமுடி கேசத்தோடு இடுங்கிய கண்களுடன் துறுதுறுப்பாய்க் காட்சியளிப்பீர்கள். நிறைய நேரம் எங்கள் வீட்டில் சாப்பிட்டும் உள்ளீர்கள். நீங்கள் திணடுக்கல் செயின்ட் மேரீஸ் ஸ்கூலில் அப்போது பத்தாம் வகுப்பு படித்தீர்கள்”
“எல்லாம் சரி... உங்கள் அக்கா பெயர் என்ன?”
“மஞ்சிமா ராணி”
பட்படாரென்று என் மனவெளியில் ஒரு வாணவேடிக்கை பூத்தது. என் கூடாரத்துக்குள் வானவில்கள் தோப்பு.
நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னான விஷுவல்கள் ஸ்ப்ளாஷ் ஸ்ப்பளாச்சின.
மஞ்சிமா ராணி முப்பரிமாண உருவமாய் மனக்கண்ணில் தெரிந்தார். என்னை விட அவருக்கு வயது மூன்று அதிகம். அப்பா இஸ்லாமியர். அம்மா பிராமணப்பெண். காதல் திருமணம். இஸ்லாமியப் பேரரழகும், பிராமணீயப் பேரழகும் கலந்து மஞ்சிமா ராணி ஜொலிப்பார். பெற்றோர் மூத்தப் பெண் குழந்தைக்கு இந்துப் பெயரும் இரண்டாவது ஆண் குழந்தைக்கு முஸ்லிம் பெயரும் வைத்திருந்தனர். மஞ்சிமா ராணி பேச ஆரம்பித்தால் நாள் கணக்கில் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
மஞ்சிமா ராணியின் அழகிலும் பேச்சிலும் அவர்கள் வீட்டு தயிர்சாதத்திலும் ஈர்க்கப்பட்டு அவர்கள் வீட்டுக்கு அடிக்கடிச் செல்வேன்.
‘எக்கா எக்கா’ என்றபடி அவரின் தாவணியைப் பிடித்துக் கொண்டு சுற்றி வருவேன்.
மஞ்சிமா ராணி என்னை ‘டேய்’ என்றும் ‘கறுத்த முஸ்லிம் பய்யா’ என்றும் அபூர்வமாய் ‘நாசரு’, ‘சம்சுசன்’ என்றும் சில நேரங்களில் ‘கனவுகளைத் தூக்கித் திரிபவனே’ என்றும் அழைப்பார்.
தலைக்கேசத்தை கோதி விடுவார். வலிக்காமல் காதைத் திருகுவார். உள்ளங்கையில் காற்று வைத்து முதுகில் அடிப்பார்.
பெரிய சீப்பை எடுத்துக் கொண்டு நடுவகிடு, இடவகிடு, வலவகிடு எடுத்துப் பலவிதமாய் வாரி விடுவார்.
பெற்றோரின் காதல் திருமணம் தந்த தீவாந்திர தனிமையைக் கண்ணீருடன் விவரிப்பார்.
அடுத்த இரு வருடங்களில் எங்கள் குடும்பம் தஞ்சாவூருக்குக் குடி பெயர்ந்தது. தொடர்பு அறுந்தது. அடுத்தடுத்து எங்கள் குடும்பத்தில் பற்பல சூறாவளிகளும் பூகம்பங்களும் சுனாமிகளும் அரங்கேறின. எங்கள் பெற்றோர் பிரிந்தனர். அவரவர் புதிய துணை தேடிக்கொண்டனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுகாதார அதிகாரியாகப் பணியில் சேர்ந்தேன். 37வருடப் பணிக்கு பின் 2018 ல் பணி ஓய்வு பெற்றேன். மகனின் திருமணத்துக்குப் பின் மகன் குடும்பத்துடன் கோவையில் வசிக்கிறோம்.
இடையில் மஞ்சிமா ராணியைப் பற்றி யோசிக்க நேரமில்லை.
பணி... பணி.... எழுத்து... எழுத்து... எழுத்து... குடும்பம்... குடும்பம்... மனைவி வகிதா என்னுடைய எல்லாக் கோப்பைகளையும் அன்பால் பரிவால் சாதுரியத்தால் நிரப்பினாள். பூரிதமானது வாழ்க்கை.
“என்ன பதிலே காணோம் அண்ணன்?”
“தம்பி.. ஞாபகம் வந்திருச்சு நீ நல்லாருக்கியா? உன்னைப் பற்றி, உன் அக்கா பற்றி, உன் பெற்றோர் பற்றிய தற்போதைய நிலை பற்றிக் கூறு”
“பெற்றோர் இருவருமே இறந்துட்டாங்க. நான் இருபது வயதுல துபாய்க்கு வந்திட்டேன். எலக்ட்ரீஷியனாக இருக்கிறேன். காதல் திருமணம் மனைவி இஸ்லாத்துக்கு வந்து விட்டார். எங்களுக்கு இரு குழந்தைகள். அவர்கள் இங்கேயேப் படித்தார்கள். அவர்களுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டேன். 32 வருடமாக துபாய்தான் என் சொந்த மண். நினைத்த போதெல்லாம் உம்ரா போய் வந்து விடுவேன். இதுவரை 60க்கும் மேற்பட்ட உம்ராக்கள். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து போவேன்”
“மகிழ்ச்சி”
“உங்கள் கைபேசி எண் கொடுங்கள்”
திறன்பேசி எண்ணும், புலன எண்ணும் கொடுத்தேன்.
“மாஷா அல்லாஹ்”
“உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் ஸலாம்”
“உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் ஸலாம்”
“அவ்வளவுதானே?”
“என் அக்காவை பற்றி நீங்கள் ஒரு வார்த்தை கேட்கவில்லையே”
“சொல்”
“அவருக்குத் திருமணமாகி விட்டது. அவருக்கு மூன்று குழந்தைகள். அவர் தற்சமயம் ராஜபாளையத்தில் வசிக்கிறார். அவரைப் பார்க்க வருடம் ஒருமுறை நாங்கள் இந்தியா வருவோம். அவர் கைபேசி எண் - - - - - - - - - - ”
“நன்றி தம்பி”
“ஒரு விஷயம் என் மனம் முழுக்க தித்திக்கிறது. சித்தி கொடுமையிலிருந்து தப்பித்து தன்னந்தனியனாய் போராடி ஒரு மகத்தான எழுத்தாளனாக விஸ்ரூபித்து நீங்கள் நிற்பதைப் பார்த்துப் பூரிக்கிறேன். குடும்பத்துடன் எங்கள் வீட்டுக்குத் துபாய்க்கு வாருங்கள். துபாயைச் சுற்றிப் பார்க்கலாம்…”
“பார்ப்போம் அஸ்ஸலாமு அலைக்கும்”
“வஅலைக்கும் ஸலாம்”
மஞ்சிமா ராணியின் பத்து இலக்க எண்ணை வருடிக் கொடுத்தேன். இப்போது அவருக்கு 66 வயதாக இருக்கும். ஆள் எப்படி உருமாறி இருக்கிறாரோ? பல யோசனைகளில் உழன்ற நான் தூங்க விடிகாலை ஆயிற்று.
ஒரு வாரத்துக்குப்பின்…
நானே மஞ்சிமா ராணியின் எண்ணை அமுக்கினேன்... எதிர்முனை உயிர்த்தது.
“வணக்கம் மஞ்சிமாராணியக்கா இருக்காங்களா?”
“நீங்கள் யார்?” எரிச்சல் குரல் சீறியது.
“நான் ஆர்னிகா நாசர்”
“அஸ்ஸலாமு அலைக்கும் வரஹிமத்துல்லாஹி பராக்காத்துக்கூ… நீங்கள் சொல்லும் மஞ்சிமாராணி ராபிதா ஆகி நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. நான் அல்லாஹ்வின் அடிமை...”
“எப்படி இருக்கிறீர்கள் அக்கா?”
“கணவர் இன்னொரு திருமணம் செய்து பிரிந்து போய் விட்டார். மூன்று மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து விட்டேன். ஒரு மகள் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன். உன் குடும்பம் என்ன செய்கிறது?”
“என் மனைவி வகிதா. மூத்த மகள் ஜாஸ்மின் நான்கு டிகிரிகள் படித்தாள். ஸாப்ட்வேர் இன்ஜினியருடன் பெங்களூருவில் வசிக்கிறாள். மகள் வழி ஒரு பேத்தி ஒரு பேரன். மகன் பல் மருத்துவர் மருமகளும் பல் மருத்துவர். மகன் வழி ஒரு பேரன் உண்டு. கோவையில் ஓய்வூதிய வாழ்க்கையுடன் கூடிய எழுத்துப்பணி தொடர்கிறேன்”
“எழுத்தாளரா நீ? ஹராம் ஹராம்... இறைவனுக்கு இணை வைக்கும் பணியை தொடரவேத் தொடராதே. அடுத்த தடவை என்னுடன் நீ பேசுவதாய் இருந்தால் எழுத்தைத் தலை முழுகி இருக்க வேண்டும்”
இஸ்லாம் என்கிற ஆலமரத்துக்கு வரும் சில புதிய பறவைகள் இப்படித்தான் ஆரவார கூச்சலிடும் -அக்காவின் பத்வாவை நண்பர் ஷாகுல்ஹமீது ஜலாலியுடன் பகிர்ந்தேன். சிரித்தார்.
“அறியாமையுடன் பேசி இருக்கிறார். உங்கள் இலக்கியம் மக்களை உன்னதப்படுத்தும் செய்தி கேளிக்கையை உள்ளடக்கியது. உங்களது இஸ்லாமிய நீதிக்கதைகள் மிகச்சிறந்த தாவா பணி. தொடர்ந்து இயங்குங்கள்”
- கனத்த இதயத்துடன் மஞ்சிமா ராணி எனப்பட்ட ராபிதாவின் கைபேசி எண்ணை கைபேசி புத்தகத்திலிருந்து நீக்கினேன்.
“நாட்டின் பிரதமரே வந்து இனி நீ எழுதக்கூடாதுன்னு கட்டளையிட்டாலும் கேக்க மாட்டார். என் புருஷன். ஒரு மஞ்சிமா ராணியின் உளறலையா பொருட்படுத்துவார்? ஹி வில் காலப் டில் ஹிஸ் லாஸ்ட் பிரத்” ஆணித்தரமாக அறிவித்தாள் வகிதா.