ஆயிஷா நகர். இரண்டாவது குறுக்கு வீதி. இலக்கம் 61.
ஓட்டிவந்த பைக்கை நிறுத்தி ஸ்டாண்டிட்டார். ஜியாவுதீன் முகமது. மூட்டிய நண்டு மார்க் லுங்கி கட்டி இடுப்பில் சுருட்டி விட்டிருந்தார். கைலியின் கீழ்ப்பகுதி கணுக்காலுக்கு மேலே. சந்தனநிற ஜிப்பா. தலையில் வெள்ளைநிற துணித்தொப்பி. கண்களில் சுருமா. மீசை இல்லாத மருதாணி பூசிய தாடி.
“யா அல்லாஹ்I” என ஆலாபித்தார்.
வாசலின் அழைப்பு மணியை அமுக்கினார். கதவு திறந்து கொண்டது. “அஸ்ஸலாமு அலைக்கும். உள்ளே வரலாமா?” மூன்று தடவை கேட்டார்.
“வஅலைக்கும் ஸலாம்… உள்ள வாங்கI” ஒரு குரல் வரவேற்றது.
300 சதுர அடியில் அந்த வீடு அமைந்திருந்தது. சிறு தடுக்கு மறைப்பில் சமையலறை வரவேற்பறை படுக்கையறை எல்லாம் ஒரே அறைக்குள். உள்சுவர்கள் புகையடித்து கறுத்திருந்தன.
“நீங்கதான் யூசுப் சித்தீக்கா?”
“ஆமாம்I”
கரண்டியுடன் நின்றிருந்த பெண்ணை பார்த்து “இவங்க உங்க மனைவியா?”
“ஆமாம்… உக்காருங்க..” ஒரு உடைந்த பிளாஸ்டிக் சேரை போட்டார் யூசுப் சித்தீக். ஜியாவுதீன் முகமது அமர்ந்தார்.
“உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆகுது?”
“இருபது வருஷம்”
“சொந்த ஊர்?”
“தேவகோட்டை… கோயம்புத்தூர் வந்து பதினைஞ்சு வருஷமாகுது”
“உங்களுக்கு எத்னி குழந்தைகள்?”
“ஒரே பையன்தான்… வயசு பதினெட்டு ஆகுது. பெயர் சையத் அமீர். ப்ளஸ்டூ முடிச்சிருக்கான்”
“என்ன மார்க்?”
“எண்பத்தியஞ்சு சதவீதம் எடுத்திருக்கான்”
“இப்ப அவன் எங்கே?”
“என் மனைவி சமோசா தயாரிப்பா… தினம் ஆயிரம் சமோசா ரெடி பண்ணி மொத்த வியாபாரிக்கு கொடுத்திருவோம்.. அரநூறு போ கிடைக்கும்.. சரக்கை டெலிவரி பண்ண மகன் சைக்கிள்ல போயிருக்கான். நான் தள்ளுவண்டில வாழைப்பழம் விக்றேன்”
“இது சொந்தவீடா வாடகை வீடா?”
“வாடகைவீடுதான். வாடகை மூவாயிரம் ரூபா…”
“எந்த பள்ளிக்கு தொழப் போவீங்க?”
“ஆயிஷா நகர் அஞ்சாவது குறுக்கு வீதில இருக்ற பள்ளிக்குதான் தொழப் போவேன்”
“பள்ளிக்கு மாதாமாதம் சந்தா தொகை கட்றீங்களா?”
“மாசம் நூறு ரூபா கட்ரோம்…’
“உங்க மகன் தொழுவானா?’
“தொழுவான் பாய்I”
“உங்களுக்குக் குடிப்பழக்கம், புகைபிடிக்கும் பழக்கம் உண்டா?”
“அய்யய்யோ.. அதெல்லாம் எனக்கு அறவே ஆகாது”
“சரி மறைக்காம சொல்லுங்க... உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கு?”
“வொய்ப்போட பத்து பவுன் நகையை வித்துத்தான் சமோசா வியாபாரம் பண்ரோம். எங்களுக்கு வேற கடன் கிடையாது. சிக்கனமான வாழ்க்கை எங்க வாழ்க்கை”
“நீங்க என்ன படிச்சீங்க?”
“எட்டாவது”
“உங்க மனைவி?”
“ஆறாவது படிச்சிருக்கா…”
“ப்ளஸ்டூவோட உங்க பையன் படிப்பை நிறுத்திட்டு சமோசா வியாபாரத்ல முழுசா எறக்க வேண்டியதுதானே?”
“எண்ணெய் பிசுக்கும் கரும்புகையும் எங்களோடு போகட்டும். எங்க பையனைப் படிக்க வைப்போம். கல்வியும் பதவியும் அதிகாரமும்தான் முஸ்லிம்களின் இறக்கை”
“என்ன படிக்க வைக்கப் போறீங்க?”
“இளங்கலை மருத்துவப் பரிசோதனை கூட தொழில்நுட்பம் படிக்க ஆசைப்படுரான். எங்க மகன். மூன்று வருட கோர்ஸ். வருஷம் ஒரு லட்சம் பீஸ். படிச்சு முடிச்சவுடனே வேலை கிடைக்கும். வருடத்திற்கு இரண்டு லட்சத்திலிருந்து நாலு லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்”
“நுழைவுத்தேர்வு எழுதனுமில்ல?”
“நெஸ்ட் அல்லது செட் அல்லது சியூஇடி எழுதனும்.. எழுதி பாஸ் பண்ணிட்டான்… அட்மிஷன் கார்டும் வந்திருச்சு. பணம் கட்டச் சொல்லி... இந்த மாசம் 31ஆம் தேதி கடைசித்தேதி. அதுக்குள்ள பணம் கட்டலேன்னா அட்மிஷன் கேன்ஸலாகி விடும்”
“யார்கிட்டயும் பணம் கேட்டிருக்கீங்களா?”
“சொந்தம் பந்தம் நட்புவட்டத்திலக் கேட்டுப் பார்த்தோம். பெரிய தொகைன்ன உடனே ஓடி ஒளியுராங்க.” யூசுப் சித்தீக் அழுதார்.
“சமோசா தயாரிச்சு டெலிவரி பண்ற முதலாளிகிட்ட கேட்டு பாத்தீங்களா?”
“ஆயிரம் ரெண்டாயிரம் தரலாம். அதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியாதுன்றார்’
“பைத்துல் மால்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?”
“இல்லை”
“முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக ஒரு மஹல்லாவில் உருவாக்கப்படும் நிதி நிறுவனமே பைத்துல் மால் ஆகும். இதனைப் பணத்துடைய வீடு அல்லது பொதுக்கருவூலம் என்றும் சொல்வர்.
பைத்துல்மால் என்கிற சொற்பிரயோகம் முதலாம் கலீபா அபூபக்கர் ரலி காலத்திலேயே வழக்கத்துக்கு வந்துவிட்டது. ஆரம்பத்தில் மதீனாவில் உள்ள ஸனஹ் என்ற இடத்தில் பைத்துல் மால் நிறுவப்பட்டு மதீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பைத்துல் மாலின் அழகிய முன்மாதிரி நபிகள் நாயகம்தான். இஸ்லாமிய மக்களை வட்டி என்கிற சைத்தானிடமிருந்து விடுவிக்கிறது. பைத்துல் மால். மாணவர்களுக்கு கல்விநிதி உதவி, நோயாளிகளுக்கு மருத்துவச் செலவு, அனாதைக் குழந்தை பராமரிப்பு, சிறைவாசி குடும்பங்களுக்கு நிதிஉதவி, முதிர்கன்னி பெண்களுக்கு திருமண உதவி செய்கிறது”
“நம்ம மஹல்லால பைத்துல் மால் இருக்கா?”
“என்ன கேள்வி கேக்றீங்க பாய்.. தமிழ்நாட்டிலுள்ள அறுபது சதவீதம் பள்ளிவாசல்களில் பைத்துல்மால் நிறுவப்பட்டுள்ளது”
“பைத்துல் மாலுக்கு எந்த வழியில் வருமானம் வருகிறது?”
“பொதுவாக பைத்துல் மால்களுக்கு ஜக்காத், போரில் தோற்றவரின் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு, புதையல் கிடைத்தால் அதில் ஐந்தில் ஒரு பங்கு, அன்பளிப்பு, நன்கொடைகள், வஸியத் செய்யப்பட்ட சொத்துகள், வரி, உரிமையாளர் இல்லாத பொருட்கள், வாரிசு இல்லாதோரின் சொத்துகள், அபராதம் வழியாக வருமானம் ஒரு காலத்தில் வந்தது. இப்பொழுது மேற்சொன்னவற்றில் பாதி வழிகளில் வருகிறது...”
“ஓஹோ”
“நம் ஜமாஅத்தில் இரண்டாயிரம் சந்தாதாரர்கள் உள்ளனர். நாம் பைத்துல் மால் நிறுவி எட்டு வருடங்கள் ஆகின்றன. பைத்துல் மாலுக்கு ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், இரு நிதி ஆலோசகர்கள் உள்ளனர். நம் பைத்துல் மாலின் வங்கி இருப்பு ஐம்பது லட்சம். வருடத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வரை தகுதியான ஏழைகளுக்கு பைத்துல்மால் பணஉதவி செய்கிறது. சிலருக்குக் கடன்கள் கொடுக்கிறார்கள். இரண்டு சாட்சிகளுடன் கூடிய கடன் பத்திரம்… ஒரு லட்சம் கடன் வாங்கினால் மாதம் ஐயாயிரம் வீதம் 20 மாதங்களுக்கு கட்ட வேண்டும்…”
“நல்ல சிஸ்டமாயிருக்கே…”
“பைத்துல் மால்கள் நடத்துவதிலும் சில இடங்களில் தில்லுமுல்லுகள் நடக்கின்றன. பைத்துல் மால்கள் நூறு சதவீதம் வெற்றி பெற்றால் இஸ்லாமிய வங்கிகள் வெகுசீக்கிரம் இந்தியாவில் ஆரம்பிக்கப்படும். நம் பைத்துல் மாலில் ஒரு லட்சம் அழகிய கடன் வாங்கி மாதம் ஐயாயிரம் வீதம் இருபது மாதங்கள் திருப்பிச் செலுத்துங்களேன்..”
“மாதம் இரண்டாயிரம் கட்டலாம் அய்யாயிரம் கட்ட முடியாதுI”
மகன் சையத் அமீர். வீட்டுக்குள் பிரவேசித்தான். அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“சரி உங்களுக்கு வருடாவருடம். ஒரு லட்ச ரூபாயை ஜக்காத் தொகையிலிருந்து தர வேண்டியதுதான்”
“எங்களுக்கு ஜக்காத் கொடுப்பதைப் போட்டோ எடுத்து பத்திரிகைல போடுவீங்களா? இன்னார் பையனுக்குக் கல்வி கட்டணம் செலுத்தி உள்ளோம்னு பள்ளிவாசல் ஒலிபெருக்கில அறிவிப்பீங்களா?”
“மாட்டோம்… பைத்துல்மாலிடம் நீங்கள் பணம் பெறுவது பரமரகசியமாய்ப் பாதுகாக்கப்படும்”
“நீங்கள் சொன்னால் பைத்துல்மால் கேட்டு என் மகனுக்குக் கல்விக் கட்டணம் தருவார்களா?”
“கட்டாயம் தருவார்கள்”
“உங்களுக்குப் பத்து சதவீத கமிஷன் தரவேண்டி இருக்குமோ?”
ஜியாவுதீன் முகமது சிரித்தார். “அல்லாஹ் எனக்கு தேவையானதைக் கொடுத்திருக்கிறான் பைத்துல் மால் பணத்துக்கு ஆசைப்படமாட்டேன்”
“பைத்துல் மாலில் நீங்கள் என்ன பொறுப்பு வகிக்கிறீர்கள் பாய்?”
“ஸ்பை... உளவாளி… பைத்துல் மால் நிதிஉதவிக்கு தகுதியானவர்களை உளவு பார்த்து பொருத்தமான ஏழைகளுக்கு சிபாரிசு செய்வதே என் வேலை. சையத் அமீர். நீ படித்து முடித்து வேலைக்கு போன பின் பத்து ஏழை முஸ்லிம்களைக் கை தூக்கி விடு… செய்வாயா?”
“இறைவனின் மீது ஆணையாகச் செய்வேன் பாய்” என்றான் சையத் அமீர்.
மேடுகளும் பள்ளங்களும் இல்லாத சரிசமர் சமவெளியாகட்டும்... முஸ்லிம் சமுதாயம்...