ஒரு நீலநிற மாருதி கிராண்ட் விட்டாரா கார் இமாம் அஹமது கபீர் பாகவியின் வீட்டின் முன் போய் நின்றது.
பின்னிருக்கையிலிருந்து சுபைர் ஜமால் ஹிம்மத் இறங்கினார். வயது 52. உயரம் 165செமீ. இரட்டை தாடி கனத்த திரேகம். 90கிலோ எடை இருப்பார். பைஜாமா குர்தா அணிந்திருந்தார். தலையில் எம்ப்ராய்டரி பூக்களுடன் கூடிய துணித்தொப்பி. டன்ஹில் சிக்னேச்சர் கலெக்ஷன் சென்ட் பூசியிருந்தார். கண்ணில் இருந்த குளிர்கண்ணாடியை கழற்றி அதற்குரிய சிறு பெட்டியில் வைத்து மூடினார்.
வீட்டுவாசலின் அழைப்புமணியை அமுக்கினார்.
முப்பது நொடி கரைசலுக்கு பிறகு கதவு திறந்து கொண்டது.
“அஸ்ஸலாமு அலைக்கும் இமாம்”
“வஅலைக்கும் ஸலாம்… ” வரவேற்றார் அஹமது கபீர் பாகவி.
“என்னைத் தெரிகிறதா?”
“இல்லையே…”
“நான் அல்மிராஜ் ஹஜ் அண்ட் உம்ரா சர்வீஸஸ் நடத்தும் சுபைர் ஜமால் ஹிம்மத். எங்கள் ஏஜென்ஸியின் தலைமையகம் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ளது. தவிர தமிழ்நாட்டில் எங்களுக்கு ஆறு கிளை
அலுவலகங்கள் உள்ளன. கும்பகோணம், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சென்னை. கடந்த இருபது வருடங்களாக எங்கள் ஏஜென்ஸி சிறப்பாக இயங்கி வருகிறது. இதுவரை 5000 ஹாஜிகள் எங்கள் வழியாக உம்ரா செய்திருக்கின்றனர் 1450 ஹாஜிகள் ஹஜ் நிறைவேத்தி இருக்கின்றனர்”
“உக்கார்ந்து பேசலாம் சுபைர் சாஹிப்”
இருவரும் எதிர்எதிரே அமர்ந்தனர்.
“இமாம்I உங்களுக்கு சொந்தஊர் எது?”
“காயல்பட்டினம்”
“உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?”
அஹமது கபீர் பாகவிக்கு வயது 49. நபித்தோழர்களின் சாயல், அறிவைத் தேடும் கண்கள். மார்க்கம் பேசும் வாய். மார்க்கத்தில் எந்த விஷயத்தை பற்றி விளக்கம் தேவைப்பட்டாலும் அஹமது கபீர் பாகவியை தான் மற்ற இமாம்கள அணுகுவர்.
“மகன் மின்னணு பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறான். மகள் ஆலிமா படிப்பு படிக்கிறாள்”
“உங்களுக்கு உங்கள் பள்ளிவாசலில் என்ன சம்பளம் தருகிறார்கள்?”
“மாதம் பத்தாயிரம்…”
“வாடகைவீடா, சொந்தவீடா?”
“வாடகை வீட்டில்தான் இருக்கிறோம். சொந்தவீடு கட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்”
“நான் எதற்கு வந்திருக்கிறேன் என்பதனை யூகித்திருப்பீர்கள். இருந்தாலும் நானே சொல்கிறேன்… நம்மிடம் ஒரு இமாம் கடந்த பதினான்கு வருடங்களாக இருந்தார். அவர்தான் ஹாஜிகளுக்கு வழிகாட்டியாகவும் மார்க்க விஷயங்களை தெளிவுபடுத்துவராகவும் இருந்தார். அவர் முறுக்கிக் கொண்டு வேறொரு ஹஜ் அண்ட் உம்ரா சர்வீஸஸ்க்கு போய் விட்டார்”
“சரி”
“இதுவரை நீங்கள் ஒரு தடவையாவது ஹஜ் போயிருக்கீங்களா இமாம்?”
“இல்லை”
“நாங்கள் வருடத்திற்கு ஆறு ட்ரிப்கள் உம்ராவும் ஒருதடவை ஹஜ்ஜும் ஹாஜிகளை கூட்டி சென்று வருகிறோம். ஒரு ட்ரிப்புக்கு ஐம்பதிலிருந்து நூறு பேர். உம்ராவுக்கு ஒரு ஹாஜிக்கு ஒரு இலட்சத்தி பத்தாயிரமும் ஹஜ்ஜுக்கு ஒரு ஹாஜிக்கு ஆறரை லட்சமும் சார்ஜ் பண்ணுகிறோம். மக்கத்தில் ஹாஜிகளை காபாவிலிருந்து 200மீட்டர் தூரத்தில் இருக்கும் ஜஹ்ரத்துல் மினாவில் தங்க வைக்கிறோம், மதினாவில் 150மீட்டர் தூரத்தில் இருக்கும் முக்தாரா கோல்டனில் தங்க வைக்கிறோம். ஒவ்வொரு ஹாஜிக்கும் ஒரு இஹ்ராம் செட், பெல்ட், ஐந்துலிட்டர் ஜம்ஜம் தண்ணீர், பாஸ்போர்ட் பௌச் காம்பளிமென்ட்ரியாக தருகிறோம். நமது சிறப்பம்சங்கள் ஹரமுக்கு அருகில் தங்குமிடம், அதிக இபாதத்துக்கு முன்னுரிமை அனுபவம் வாய்ந்த வழிக்காட்டி மற்றும் சுவையான தமிழக அசைவஉணவுகள் ஆகும். எட்டு திறன்பேசி எண்களுடன் இயங்குகிறோம். ஹாஜிகளுக்கு தகவல் தொடர்புக்கு ஐஎம்ஓ செயலி பதிவிறக்கம் செய்து தந்து விடுவோம்…”
“இதெல்லாம் ஏன் என்னிடம் கூறுகிறீர்கள்?”
“எங்களுக்கு உடனடியாக ஒரு இமாம் வழிகாட்டியாக தேவை. உங்களைப்பற்றி கேள்விப்பட்டோம். எங்களது ஹஜ் அண்ட் உம்ரா சர்வீஸஸ்க்கு மிக பொருத்தமாக இருப்பீர்கள்… நீங்கள் வழிகாட்டியாக இருக்க சம்மதித்தால் உங்களுக்கு ஒரு உம்ரா ப்ரி. பத்து ஹாஜிகளை பிடித்து கொடுத்தீர்கள் என்றால் உங்கள் மனைவிக்கும் ஒரு உம்ரா ப்ரீ. தவிர ஒருவருடத்தில் நான்கைந்து ட்ரிப்புகளுக்கு நீங்கள் வழிகாட்டியாக
இருந்தால் தனியாக பணப்பயனும் உண்டு”
தனக்கு விருப்பம் இல்லாத முகபாவம் காட்டினார் அஹமது கபீர் பாகவி.
“எனக்கு தெரிந்து எத்தனையோ இமாம்கள் மலேசியா சிங்கப்பூர் சென்று கடைகளில் பாத்தியா ஓதி பள்ளிகளில் ஹதியா வாங்கி லட்சக்கணக்கான சிங்கப்பூர் டாலர்களுடன் இந்தியா திரும்புகின்றனர். ஒரு சிங்கப்பூர் டாலர் 63.18 இந்திய ரூபாய்க்கு சமம்...”
“எனக்கு அதில் விருப்பமில்லை”
“எங்களுக்கு நீங்கள் வழிகாட்டியாக வந்தால் மக்காமதீனா நகரத்திலும் தமிழ்நாட்டிலும் படு பேமஸாகி விடுவீர்கள். உங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்து விடும்...”
“எனக்கு இமாம் அந்தஸ்து போதும்”
“இந்தக் காலத்துக்கு பொருந்தாத இமாம் நீங்கள்”
“வழிகாட்டி பணி என்றால் நான் என்னென்ன செய்ய வேண்டி இருக்கும்?”
“இது நல்ல கேள்வி. அனைத்து வித மார்க்க விளக்கங்களையும் நீங்கள் தமிழிலும் உருதுவிலும் சொல்ல வேண்டும். ட்ரிப்பில் ஒரு வழிகாட்டி, ஒரு மருத்துவர், ஒரு சமையல்காரர் வருவார். வழிகாட்டியாக இருக்கும் நீங்கள் உணவு பரிமாறலுக்கு தேவைப்பட்டால் உணவு பரிமாற வேண்டிவரும். மொத்தத்தில் உங்களை ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக பயன்படுத்துவோம்”
“ஒரு இமாமை எடுபிடி ஆக்குகிறீர்கள்?”
“என்ன இமாம் இப்படி பேசுகிறீர்கள்? ஹாஜிகள் அல்லாஹ்வின் விருந்தாளிகள். அல்லாஹ்வின் விருந்தாளிகளுக்கு உடலாலும் மனதாலும் சேவை செய்வது பெரும் பாக்கியம்”
“இரண்டு காரணங்களுக்காக உங்கள் ஆபரை மறுக்கிறேன்”
“ஏன்?”
“காரணம் ஒன்று- பள்ளிவாசல் இமாமாக இருந்து ஐவேளை தொழுகைகளை நடத்தி வைக்கிறேன். மகனுக்கும் மகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் பாக்கி இருக்கின்றன. சொந்தமாய் வீடு கட்டவேண்டும். உம்ரா சென்று செய்ய வேண்டிய இபாதத்துகளை இங்கிருந்தே செய்கிறேன். அதனால் உம்ரா செல்ல பெரிய நாட்டமில்லை”
“இரண்டாவது காரணம்”
“சொந்தக்காசில் நானும் என் மனைவியும் உம்ரா செல்ல வேண்டும். அது எப்போது நடக்கும் என்பதனை இறைவன் அறிவான்”
“எங்களுக்கு வழிகாட்டியானால் உங்கள் ஆவலாதிகள் எல்லாமே பூர்த்தியாகும். மகன் விரும்பியதை படிப்பான். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்கலாம். சொந்தமாய் வீடும் கட்டுவீர்கள். இருபது தடவைகளுக்கு மேல் உம்ரா செல்லும் பாக்கியம் கிடைக்கும்”
“எனக்கு வேண்டாம் சகோதரரே”
“உம்ரா அண்ட் ஹஜ் சர்வீஸஸ் நடத்தும் நாங்கள் பணத்தாசை பிடித்தவர்கள் எங்களிடமிருந்து கிடைக்கும் காசு பாவக்காசு. உம்ரா அல்லது ஹஜ் பயணத்தை ப்யூர் வியாபாரம் ஆக்கி விட்டோம் என அசூயைபடுகிறீர்களா இமாம்?”
“இல்லை இல்லை ஒரு ஹாஜி செலுத்தும் பணத்தில் உங்களுக்கு பத்தாயிரம் பணம் நிற்கலாம். ஹாஜிகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பாய் கூட்டி சென்று தமிழக உணவளித்து சிறப்பான இடத்தில் தங்க வைத்து பத்திரமாக தமிழ்நாடு கொண்டு வந்து சேர்க்கிறீர்கள். உங்கள் சேவையை மனமார பாராட்டுகிறேன். அதேநேரம் என்னுடைய போக்குக்கு உங்க ஆபர் ஒத்து வரவில்லை. என தயக்கமில்லாமல் கூறுகிறேன்”
“இமாம்I இதுதான் என் விசிட்டிங்கார்டு உங்கள் மனைவி மகனிடம் கலந்தாலோசித்து விட்டு உங்கள் முடிவைக் கூறலாம். நீங்கள் எங்க வழிகாட்டியாக வர சம்மதித்தால் உங்களுக்கு விலையர்ந்த அறிமுகப் பரிசு ஒன்றை அளிப்பேன்”
“சுபைர் பாய், என்னுடைய கருத்துதான் என் மனைவிக்கும் என் மகனுக்கும். யார் கண்டது. என் மகன் நல்ல பணிக்கு போய் அவன் செலவில் நாங்கள் உம்ரா போய் வருவோமா என்னவோ?”
“உங்களை போன்ற ஒரு இமாமை நான் இதுவரை பார்த்தவில்லை”
“இப்போதுதான் பார்த்து விட்டீர்களே...”
“நான் புறப்படுகிறேன் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ஒரு தெளிவை தரட்டும்”
“சுபைர் பாய்”
“என்ன இமாம்”
“உங்களுக்கு நான் உதவமுடியும். என்னை விட சீனியர் இமாம் ஒருவர் எனக்கு நண்பராக இருக்கிறார். அவர் பெயர் காசிம் முகமது பாசில். அவர் உங்களுக்கு வழிகாட்டியாக வர சம்மதிப்பார். அவரது திறன்பேசி எண் தருகிறேன். அவர் அய்யம்பேட்டையில் இமாமாக பணிபுரிகிறார். உங்கள் பணிக்கு என்னை விட மிகப் பொருத்தமானவர். நான் முதலில் அவரிடம் பேசி அவரை சம்மதிக்க வைக்கிறேன். அதன்பின் நீங்கள் அவருடன் பேசுங்கள்”
‘அட பிழைக்கத் தெரியாத மனுசா.. உனக்கு வந்த வாய்ப்பை யாருக்கோ மடைமாற்றுகிறாயே’ என்கிற பார்வை பார்த்து ‘சரி’ என்றார் சுபைர் ஜமால் ஹிம்மத்.
-அழகிய முகமன்கள் பரிமாற்றத்துக்கு பின் காசிம் முகமது பாசில் “நான் உங்கள் உம்ரா அண்ட் ஹஜ் சர்வீஸஸ்க்கு வழிகாட்டியாக வர சம்மதிக்கிறேன். பிரமாதப் படுத்தி விடலாம்…”
எப்போதும் போல இமாம் அஹமது கபீர் பாகவி பஜ்ரு தொழுகைய முன்னின்று நிறைவேற்றி விட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டு சுவற்றில் கபா ஒளிப்படம் அன்பாய் முறுவலித்தது.