பள்ளிவாசல்.
ஜும்ஆ தொழுகை முடிந்தது. நபிகள் நாயகத்தின் மீது ஸலவாத்து ஓதி முடித்தவுடன் தொழுகையாளிகள் எழுந்து அவசரஅவசரமாய்ப் பள்ளியை விட்டு வெளியேற முற்பட்டனர்.
பூகம்பப் புள்ளியிலிருந்து பறவைகளும் மிருகங்களும் வெளியேற யத்தனிப்பது போல இருந்தது அவர்கள் செய்கை.
தாமதமாக வந்தோர், உபரி இரண்டு ரக்காயத்துகள் தொழுவோர் ஆங்காங்கே தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
வெளியேறும் தொழுகையாளிகள் இன்னும் தொழுது கொண்டிருப்பவர்களை இடித்துக் கொண்டும் மிதித்துக் கொண்டும் தொழுது கொண்டிருப்போரின் முன்னிருக்கும் கைபேசிகளை, மூக்குக் கண்ணாடிகளை, கர்ச்சிப்களை மிதித்துச் சிதற்றிக் கொண்டும் இருந்தனர்.
பார்வைக்கு அவர்கள் புல்டோசர் போலக் காட்சியளித்தனர். அவர்கள் மாலையில் அவசரஅவசரமாய் வீடு திரும்பும் கோவேறுக் கழுதைகளை நினைவூட்டினர்.
மோதினார் பின்னுக்கு ஓடி வந்தார்.
தொழுகையாளிகளின் குறுக்கே நெடுக்கே மிதித்தோடுபவர்களில் ஒருவரைப் பிடித்தார். “நில்லுங்க பாய்!”
“வீட்ல மட்டன் குழம்பும் நெய்ச்சோறும் சிக்கன் சிக்ஸ்டி பைவும் காத்துக்கிட்டு இருக்கு. தடுத்துத் தொலையாதிங்க மோதினார்!”
“உங்க பேர் ஜவஹருல் ஹக்தானே?”
“ஆமாம். கரக்ட்டா ஞாபகம் வச்சிருக்கீங்களே?”
“மாதாமாதம் சந்தாத் தொகை வசூல் பண்ண வரும் போது மிஸ்கீனை விரட்ற மாதிரி பிஹேவ் பண்ணுவீங்களே… உங்களை மறக்கமுடியுமா?”
“ஹிஹி!”
“நீங்க ஒண்ணும் ‘ஈராயிரம் குழவி இல்ல… நாப்பது வயதான பொறுப்பான மனிதர். செருப்புக் கடை வைத்திருக்கிறீர்கள். உங்கக் கடைககுள்ளிருந்து ஒரு கஸ்டமர் கடை செருப்புகளை மிதித்து சிதற்றியபடி வெளியேறினால் மகிழ்ச்சியாகப் பார்த்து ரசிப்பீர்களா?”
“செருப்புக்கடையும் பள்ளிவாசலும் ஒன்னா மோதினார்?”
“பள்ளிவாசல் இறைவனின் இல்லம். பள்ளிவாசல் விஷயத்தில் நீங்க எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் செயல்படவேண்டும்?”
“ஜும்ஆ தொழுகைக்கு இவர்கள் லேட்டாக வந்தது இவர்கள் தப்பு. சுன்னத்தாக இரு கூடுதல் ரக்காயத்துகளை இவர்கள் ஏன் தொழவேண்டும்? நாங்கள் போகும் பாதையில் இவர்கள் ஏன் குறுக்கேத் தொழுகிறார்கள்?”
மௌலவி ஷேக்முகமது காஸிமி வந்து சேர்ந்தார். “என்ன பிரச்சனை மோதினார்?”
மோதினார் கூறினார்.
இமாம் ஜவஹருல் ஹக்கிடம் திரும்பினர். “நீங்கள் செய்வது சரிதானா பாய்? ‘தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர் அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாட்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும்’ என்கிறது ஒரு நபிமொழி. உங்களைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த மூன்று வருடங்களில் இருபதுக்கும் மேற்பட்ட தடவைகள் தொழுகையாளிகளை மிதித்து விட்டுச் சென்றிருக்கிறீர்கள். மிதிக்கும் போது உங்களுக்கு அற்பசுகம் கிடைக்கிறது என நம்புகிறேன்!”
“யூகம் பண்ணிப் பேசாதீர்கள் இமாம். உரிய நேரத்தில் வந்து தொழுகையை ஜமாஅத்தோடு சேர்ந்து முடித்துவிட்டு வீடு திரும்புவோருக்கு தாமதமாக வந்து தொழுபவர் வழி விடக் கூடாதா? தொழுகையாளியை மிதித்துவிட்டு யாரும் போகாமலிருக்க எதாவது வழிவகை நம் மார்க்கத்தில் செய்யப்பட்டிருக்கிறதா?”
“ஏன் இல்லை? ‘சுத்ரா’ என்கிற விதிமுறை இருக்கிறது. தொழக்கூடியவர் தனக்கு முன்னால் கடந்து செல்வோரைத் தடுக்கும் நோக்கில் தனக்கு முன்பாக வைக்கும் பொருள் ’சுத்ரா’ எனப்படும்!”
“சுத்ராவை பற்றி விரிவாக கூறுங்கள் இமாம்!”
“தொழக்கூடியவர் தனக்கு முன்னால் சுத்ரா வைப்பது கட்டாயமாகும். ‘ஒரு சுத்ராவை நோக்கியே அன்றி நீ தொழாதே. உனக்கும் உனது சுத்ராவுக்கும் மத்தியில் எவரையும் கடந்து செல்வதற்கு நீ விட்டு விடாதே’ என்றிருக்கிறார் நபிகள் நாயகம்…”
“ஓஹோ!”
“பெருநாள் தொழுகைக்கு நபிகள் நாயகம் கிளம்பினால் ஒரு ஈட்டியை எடுத்து வருமாறு கட்டளையிடுவார்கள். அது அவர்களுக்கு முன் வைக்கப்படும். அவர்கள் அதனை நோக்கித் தொழுவார்கள்” என்கிறது புகாரி, முஸ்லிம்!
“நல்ல தகவல்!”
“ஸலமத் இப்னுல் அக்வஃ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பாலைவனத்தில் பயணம் செய்யும் போது தொழுதால் கற்களைப் பொறுக்கி அவற்றை அடுக்கி அதனை நோக்கித் தொழுவார்கள்!”
“சுத்ராவுக்கு நீள அகல உயர கட்டுப்பாடு இருக்கிறதா?”
“சுத்ராவின் ஆகக்குறைந்த உயரம் ஒட்டகத்தில் அமர்ந்து செல்வதற்குப் பயன்படுத்தப்படும் சாய்வுக் கட்டையின் உயரமாகும்!”
“சாய்வுகட்டையின் உயரத்தை அடிக்கணக்கில் சொல்லுங்கள் இமாம்!”
“ஏறக்குறைய ஒரு அடி உயரம்”
“சுத்ராவாக எது எதைப் பயன்படுத்தலாம்?”
“அந்தக் காலத்தில் அம்பு, ஈட்டி போன்ற மெல்லியப் பொருட்களோ சுவர் போன்ற மிக விசாலமான பொருளோ சுத்ராவாகப் பயன்பட்டது. இந்தக் காலத்தில் வாக்கிங் ஸ்டிக், செல்போன், கைக்கடிகாரம், தொழுகைவிரிப்பு முதலியவற்றை சுத்ராவாக பயன்படுத்தலாம்… இக்கால மக்கள் சுத்ராவாக வைக்கும் பொருட்களைத்தான் சர்வ சாதாரணமாக மிதித்து விட்டுப் போகிறார்கள்!”
“சுத்ராவுக்கும் தொழக்கூடியவருக்கும் மத்தியில் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்?”
“நான்கடி இருக்கலாம்!”
“இன்னும் புரியும்படி சொல்லுங்கள் இமாம்!”
“சுஜுது செய்தால் தலைக்கும் சுத்ராவுக்கும் மத்தியில் ஒரு ஆடு கடந்து செல்லும் அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும்”
“சுத்ராவாக ஒரு எல்லையைக் கோடு போடலாமா?”
“செல்லுபடியாகாது ஜவஹருல் ஹக்!”
“நாங்கள் தொழுகையாளிகளை மிதித்துவிட்டு இடித்துவிட்டு அவர்களின் பொருட்களை உதைத்துச் சிதற்றிவிட்டு போனால் அவர்களின் தொழுகை கூடுமா?”
“பெண், கழுதை, கறுப்பு நாய் ஆகியன தொழுகையாளிக்கு முன் கடந்து சென்றால் தொழுகையாளியின் தொழுகை துண்டிக்கப்படும்”
“தொழுபவரை ஏற்கனவே தொழுதவர் கடந்து போனால் தொழுகையாளி அவரைத் தடுக்கலாமா?”
“உங்களில் ஒருவர் மனிதர்களிடமிருந்து தன்னைத் தடுக்கக்கூடிய ஒரு சுத்ராவை நோக்கித் தொழும் போது எவராவது அவருக்கு முன்னிலையில் கடந்து செல்ல நாடினால் தொழுகையாளி அவரைத் தடுக்கட்டும். அவர் மாறு செய்தால் தொழுகையாளி அவருடன் சண்டையிடட்டும். ஏனெனில், தொழுகையாளிக்குச் சிரமம் கொடுத்த அவன் சைத்தான் ஆவான் என்கிறது புகாரி முஸ்லிம்!”
“என்னை சைத்தான் என்கிறீர்கள்!”
“ஒருவரின் தொழுகையின் குறுக்கே ஒரு கால்நடை அல்லது ஒரு சிறிய குழந்தை வந்தால் அச்சந்தர்ப்பத்தில் தொழுகையாளி சுத்ராவை முன்னோக்கி நகர்த்தி கால்நடையை அல்லது குழந்தையை தொழுகையாளிக்குப் பின்னால் செல்லுமாறு பாதை அமைத்துத் தரவேண்டும்!”
“நல்ல யோசனை!”
“இமாமுடைய சுத்ரா பின்னால் தொழுபவர்களுக்கும் சுத்ரா ஆகும்”
“நீங்கள் சொன்னதை அனைத்தையும் கேட்டுக் கொண்டேன். இனி தொழுகையாளிகளுக்குக் குறுக்கே நெடுக்கேப் போக மாட்டேன். நான் கறிச்சோறு சாப்பிட போகலாமா?” இமாமின் முகம் இறுகியது.
“இதேக் குற்றத்தை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தெரிந்தேச் செய்து வருகிறீர்கள். அதனால், உங்களுக்குத் தண்டனை கொடுக்கத் தீர்மானித்திருக்கிறேன். உங்களின் தண்டனை மற்றவர்களுக்கும் பாடமாகட்டும்!”
“என்ன தண்டனை? தொழுகையாளிகளின் குறுக்கேச் செல்லமாட்டேன் என ஆயிரம் தடவை எழுதித் தரவா? அல்லது முட்டிக்கால் போடவா?”
“வன்முறையான தண்டனை எதுவும் இல்லை!”
“பின்ன?”
“நீங்க தினமும் பள்ளிக்குத் தொழ வருகிறீர்கள். தினமும் லுஹர் தொழுகைக்குப் பிறகு இரண்டு மணிநேரம் அஸர் தொழுகை வரை பள்ளிவாசலில் அமர்ந்து திக்ர் எடுக்க வேண்டும் இப்படி நாற்பது நாட்கள் நீங்கள் மொத்தம் எண்பது மணி நேரம் பள்ளியில் தங்க வேண்டும்!”
“இது அநியாயம்!”
“எண்பது மணிநேரம் திக்ர் எடுப்பது உங்களுக்கு நன்மைதானே?”
“முத்தவல்லியிடம் முறையிடுவேன்!”
முத்தவல்லி வந்து சேர்ந்தார். நடந்தததை முழுவதும் கேட்டார்.
“இமாமின் பத்வா நியாயமானதே. இதில் நான் தலையிட மாட்டேன்!”
“வேறு பள்ளிக்குத் தொழப் போய் விடுவேன்!”
“அங்கிருக்கும் நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிப்போம். பத்வா நிறைவேறாமல் உங்களை அங்கும் தொழ அனுமதிக்க மாட்டார்கள்!”
“என் வியாபாரம் பாதிக்கும்!”
“இறைக்கோபத்தைச் சாந்திபடுத்துங்கள்!”
நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான்கு தொழுகையாளிகள் இமாமிடம் வந்தனர்.
“குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்கிறது. நாங்களும் தொழுகையாளிகளின் குறுக்கே நெடுக்கேப் போனவர்கள்தான். ஜவஹருல் ஹக் மீதான பத்வா எங்களுக்கும் பொருந்தும். நாங்களும் எண்பது மணிநேரம் பள்ளியில் தங்கி திக்ர் எடுக்கிறோம்!”
“மகிழ்ச்சி. தொழுகையாளிகள் அவசரக் கொழுக்கட்டைகளாய் இல்லாமல் பொறுமைசாலிகளாக இருந்தால், அவர்களின் உடலுக்கும் ஆன்மாவுக்கும் நல்லது. நிதானம் கரும்மிளகு போன்று மருத்துவக் குணம் கொண்டது!”
காட்சியமைப்புக்குள் வர்ணஜாலங்கள் பூத்து மத்தாப்புகளாய்ச் சிதறின.