தனது கடையின் கடந்த ஒரு மாதக் கணக்கு வழக்கின் பிரிண்ட் அவுட்டை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார் அப்ரார் ஷெரீப். வயது 65. உயரம் 170செமீ. தொழுது தொழுது அவரது உடலிலும் முகத்திலும் தேஜஸ் கூடியிருந்தது. புன்னகை முகம் மருதாணி அப்பிய தாடி அவரது மஹல்லாவில் இருக்கும் பள்ளிவாசலுக்கு அவர்தான் முத்தவல்லி. யார் எந்த உதவி கேட்டாலும் பொருத்தமானவருக்குப் பொருத்தமான உதவி செய்வார். உதட்டில் அல்லாஹ் அல்லாஹ் என உச்சரித்து விட்டு, உள்ளத்தில் கசடுடன் திரிய மாட்டார். அவருக்கு மறுமை எவ்வளவு முக்கியமோ அதே அளவு இம்மையின் வெற்றியும் முக்கியம்.
வெளிவாசலில் யாரோ “பாய்!” என அழைத்தனர்.
வெளிவாசலுக்கு வந்தார் “என்னப்பா?”
“உங்களுக்கு ஒரு கூரியர் வந்திருக்கு!”
கையெழுத்திட்டு அந்தக் கவரை வாங்கினார் முத்தவல்லி. அனுப்புநர் முகவரியைப் பார்த்தார். பள்ளியின் இமாம் ஹுசைன் கனி பாகவிதான் கூரியரை அனுப்பியிருந்தார். பெறுநர் அனுப்புநர் முகவரி தவிர்த்து மீதி இடங்களில் ரோஜாப்பூக்களை வரைந்திருந்தார்.
பாரேன்… சின்ன ஸ்கூல் பையன் மாதிரி ரோஜாப்பூக்கள் வரைஞ்சிருக்காரு…
தினமும்தான் பல தடவை நானும் அவரும் நேராச் சந்திச்சுக்கிறோமே.. விஷயத்தை நேர்ல சொல்லாம எதுக்குக் கூரியர் அனுப்பி இருக்காரு?
இமாம் பதவியை ராஜினாமா பண்ணுகிறாரோ?
மகன் மகள் கல்விச்செலவுக்குப் பணஉதவி கேப்பாரோ?
நேரே சொல்லமுடியாத டெலிகேட் விஷயத்தைக் கடிதத்தில் விரிவாக விளக்கமாக எழுதியிருப்பார்…
கவரைப் பிரித்தார்.
அதில்-
“பள்ளிவாசல் முத்தவல்லி அப்ரார் ஷெரீப் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
சில பல விஷயங்களை நேரில் பேச சங்கோஜப்பட்டுதான் இந்த விரிவான கடிதம் எழுதி இருக்கிறேன்.
நான் இந்தப் பள்ளியில் இமாமாக சேர்ந்து 16வருடங்கள் ஆகின்றன.
சில பல சீர்திருத்தங்களை நம் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கலாம் என அபிலாஷிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.
இந்தச் சீர்திருத்தங்களை முத்தவல்லியாகிய நீங்கள் நம் பள்ளியில் அமுல்படுத்தினால் வெகுசீக்கிரம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றும்.
நான் விரும்பும் சீர்திருத்தங்களை பத்து அம்சங்களாகக் கீழே விரித்துள்ளேன்.
1. பொதுவாக ஒரு பள்ளியில் ஒரு இமாமும் ஒரு மோதினாரும் இருப்பார்கள். இருவருமேப் பள்ளிவாசலுக்கு நேர்ந்து விடபட்டவர்கள் போல 24மணி நேரமும் பள்ளியில் இருக்க வேண்டியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் கொத்தடிமைகள். பள்ளிவாசல் பணி தவிர, வேறு பணிகளே அவர்களுக்கு இருக்காதா? அவர்களுக்கென்று தனித்தனியாக குடும்பங்கள் இருக்காதா? மனைவியோடும் குழந்தைகளோடும் அவர்கள் சில மணி நேரம் செலவு பண்ண விரும்பமாட்டார்களா? அரசுப் பணியில் இருப்பவர்களுக்கும் தனியார் பணியில் இருப்பவர்களுக்கும் வாரவிடுமுறை, சிறுவிடுப்பு, மருத்துவவிடுப்பு, ஈட்டிய விடுப்பு, ஈட்டல் இல்லாத விடுப்பு என பல விடுப்புகள் அனுமதிக்கப்படுகின்றன. பள்ளி இமாமுக்கும் மோதினாருக்கும் வாரம் ஒரு நாள் விடுமுறை தாருங்கள். வருடத்திற்கு 12நாள் சிறுவிடுப்பு 7நாள் மருத்துவவிடுப்பு அனுமதியுங்கள்.
2. பள்ளிவாசலுக்கு ஒரு துணை இமாமை நியமியுங்கள். அவர் ஆலிம் படிப்பை முடித்து ஐந்து வருடங்கள் தாண்டாமல் இருக்கட்டும். சுழற்சி முறையில் நான், துணை இமாம், மோதினார் வாரவிடுமுறை எடுத்துக் கொள்கிறோம். நான் வாரவிடுமுறையை ஞாயிறு அன்று அனுபவித்தால், துணை இமாம் வியாழன் அன்று, மோதினார் செவ்வாய் அன்று அனுபவிக்கட்டும். மாதத்தில் ஒரு நாள் ஜும்ஆ தொழுகையை துணை இமாம் நடத்தட்டும்.
3. மோதினாராக ஒரு இளம்நிலை ஆலிமை நியமியுங்கள். இமாமும் துணை இமாமும் இல்லாத நாட்களில் தொழுகையை அவர் நடத்தும் திறன் அவருக்கு அமைந்திருக்க வேண்டும். இமாம், மோதினார், துணை இமாம் மூவருமே சமமான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் யாரின் மீதும் உப்பு மூட்டை ஏறக்கூடாது.
4. எங்களுக்குத் தரப்படும் சம்பளம் அரசுப்பணி ப்யூனின் சம்பளத்துக்கு சமமாகவாகவது இருக்கட்டும். வருடாவருடம் எங்களுக்கு இன்கிரிமென்ட் தாருங்கள். ரம்ஜானுக்கு ரம்ஜான் எங்களுக்குப் போனஸ் கொடுங்கள்.
5. வருடத்திற்கு ஒரு முறை எங்களுக்கு முழு உடல் பரிசோதனை பல் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
6. நாங்கள் மார்க்கத்தைப் பற்றி கட்டுரைகளோ, கதைகளோ, கவிதைகளோ எழுதியிருந்தால் அவற்றைப் பள்ளிவாசல் செலவில் பதிப்பியுங்கள்.
7. வருடத்திற்கு ஒரு முறை நாங்கள் குடும்பத்துடன் நூறு கிலோ மீட்டர் தூரத்திற்குள் சுற்றுலா சென்று வர ஸ்பான்ஸர் செய்யுங்கள்.
8. எங்கள் மகன் மகள் மேற்படிப்புக்குக் கல்விக்கடன் சிபாரிசு செய்யுங்கள்.
9. பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் இமாம், துணைஇமாம், மோதினார் பங்கு பெற்று கருத்துகளை சமமாய்ப் பகிர்ந்து கொள்ள ஆவண செய்யுங்கள்.
10. எங்களது ஜும்ஆ பயான்களை யூட்யூப்பில் பதிவிட அனுமதியுங்கள்.
இப்போதைக்கு இது போதும் என நம்புகிறேன்.
என்னுடைய கடிதம் அதிகப் பிரசங்கிதனமானது எனக் கருதிவிடாதீர்கள். இறைப்பணி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் ஓய்வும். இறைப்பணி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மனைவியும் குழந்தைகளும்.
இமாம் பணியின் இறுக்கத்தை தளர்த்துங்கள். அவரவரின் ஆசாபாசங்களை தலை முழுக வேண்டும். நாம் மட்டும் வசதி வாய்ப்புகளில் சுகபோகங்களில் திளைப்போம் என்கிற சுயநலம் கூடவே கூடாது.
இமாம் ஒரு பொம்மலாட்டப் பொம்மை அல்ல. அவரைப் பல கயிறுகள் கொண்டு ஆட்டுவிக்க. இமாம்களுக்கு போதியச் சுதந்திரமும் சம்பளமும் கொடுத்துப் பாருங்கள். இமாம் பணிக்கு மிக சிறப்பானவர்களாகப் போதுமான அளவுக்குக் கிடைப்பார்கள்.
நான் கேட்ட பத்து அம்சங்களில் குறைந்தது ஐந்து அம்சங்களையாவது நிறைவேற்றித் தந்தீர்கள் என்றால் மிக மகிழ்வேன்.
நாம் செய்து கொடுத்தால் பிற மஹல்லா முத்தவல்லிகளுக்கு மறைமுக நெருக்கடி ஏற்படுமோ என ஐயுறாதீர்கள்.
இறைவனுக்கு உவப்பானது என நம்பினால் தைரியமாக இந்தச் சீர்திருத்தங்களைக் கையில் எடுங்கள் நன்றி வஸ்ஸலாம்.
இடம்: கோவை. என்றென்றும் இறைப்பணியில்
நாள்: 11.01.2023. இமாம் ஹுசைன் கனி பாகவி
- கடிதத்தை முத்தவல்லி தன் முகத்தில் பொத்தினாற் போல வைத்து யோசித்தார்.
நிர்வாகிகள் கூட்டம் ஆரம்பித்தது.
இமாமின் கடிதத்தை நிர்வாகிகள் அனைவரும் படித்தனர்.
பொருளாளர் “என்ன முத்தவல்லி... நம்ம இமாம், இமாம் பணிக்கு முன் கம்யூனிஸ்ட் கட்சில இருந்திருப்பாரோ?”
“நியாயத்தை கேட்டா கம்யூனிஸ்ட் முத்திரையா?”
“இப்ப நாம வசூலிக்கிற சந்தா தொகையை வைத்துப் பள்ளிவாசல் வரவு செலவைக் கவனிக்க விழி பிதுங்குது. இமாம் சொல்றதை எல்லாம் செய்யனும்னா சந்தாத் தொகையை இரட்டிப்பாக்கனும் அல்லது மும்மடங்காக்கனும். மக்கள் கொடுக்க மாட்டாங்க!”
“யதார்த்தத்தை ஜமாஅத் மக்களுக்கு விளக்கிச் சொல்லி, சந்தாவை இரட்டிப்பு ஆக்குவோம். இமாம், துணைஇமாம், மோதினாருக்குத் தரவேண்டிய சில சலுகைகளுக்கு நாமே சில ஸ்பான்ஸர்களை பிடிப்போம்...”
“துணை இமாம் நியமிச்சா ஆறேழு மாசத்திலயே இமாமுக்கும் துணை இமாமுக்கும் ஈகோயுத்தம் ஆரம்பிச்சிடும்”
“எப்பவும் நெகடிவ்வா யோசிக்கக்கூடாது, பாசிட்டிவ்வா பார்ப்போம். 16 வருஷ சர்வீஸ் கொண்ட சீனியர் இமாமை இளையவர் குருவாகத்தான் பாவிப்பார். பொறுப்பைப் பகிர்ந்தளிக்க மூத்தவர் தயாராக இருக்கும் போது எப்படி ஈகோ யுத்தம் வரும்?”
“சரி ஆலிமுக்கு படித்தவர் எப்படி மோதினார் பணிக்கு வருவார்?”
”கூடுதல் சம்பளமும் சமமான அதிகாரமும் கிடைத்தால் ஆலிம்கள் மோதினார் பணிக்குக் கட்டாயம் வருவார்கள். ஒரு மாறுதல் புதிதாக ஆரம்பிக்கும் போதுதான் சிறுசிறு தயக்கமயக்க குழப்பங்கள் வரும். மாறுதல் நின்று நிலைபெற்றுவிட்டால் சூழ்நிலை சுமுகமாகும்!”
“போனஸ் கேக்கிறார்!”
“இமாமுக்கு பத்தாயிரம், துணை இமாமுக்கு அய்யாயிரம், மோதினாருக்கு 7500ரூபாய், ரம்ஜானுக்கு போனஸ் கொடுப்போம்..
”
“ரம்ஜான் நேரத்தில் மஹல்லாமக்கள் இமாம் மோதினாருக்கு விரும்பி சிறுசிறுதொகைகள் கொடுப்பார்களே...”
“விரும்பிக் கொடுக்குப்படும் அன்பளிப்புகளைக் கணக்கில் சேர்க்கக்கூடாது!”
“தமிழ்நாட்டிலுள்ள அனைத்து இமாம்களையும் ஒன்று சேர்த்துச் சங்கம் ஆரம்பிச்சிருவாரோ நம்ம இமாம்?”
சிரித்தார் முத்தவல்லி.
“என்னென்ன மாதிரி எல்லாம் நம்ம இமாமைச் சந்தேகப்படுறீங்க? மார்க்கத்துக்கு விரோதம் இல்லாம சங்கம் ஆரம்பிக்க முடியும்னா இமாம் சங்கம் ஆரம்பிச்சிட்டு போகட்டுமே...”
“இமாமின் கோரிக்கைகளில் எங்களுக்கு முழு உடன்பாடு இல்லை. உங்க கருத்துகளைக் கண்ணியபடுத்த இமாமின் கோரிக்கைகளைக் காகித அளவில் அங்கீகரிக்கிறோம்…”
சிரித்தார் முத்தவல்லி.
இமாமுக்கு தூதஞ்சல் வந்திருந்தது.
ஹுசைன் கனி பாகவி கவரை பிரித்தார் அதில்-
பள்ளிவாசல் இமாம் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் கடிதத்தை படித்தேன். உங்கள் கருத்துகள் எனக்கு முழுக்க உடன்பாடே. பள்ளிவாசலின் பொருளாதாரச் சூழ்நிலையை அனுசரித்து உங்கள் கோரிக்கைகளை வரிசையாக நிறைவேற்றுவோம். முதல் அம்சமாக வரும் மாதத்திலிருந்து நம் பள்ளிக்குத் துணைஇமாம் நியமிக்கப்படுவார். உங்களுக்கான வாரவிடுமுறை துணைஇமாம் பணி சேர்ந்ததிலிருந்து ஆரம்பிக்கிறது.
எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன்.
என்றென்றும் இறைப்பணியில்
அப்ரார் ஷெரீப்
(முத்தவல்லி)
அடுத்தநாள் இமாமும் முத்தவல்லியும் நேருக்கு நேர் பார்த்து அழகிய முகமன் கூறிக்கொண்டனர்.
“அழுத குழந்தைதான் பால் குடிக்கும் இமாம்... பாலை அஜீரணமாகாமல் துப்பி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இமாம்!” என்றபடி கிளம்பினார் முத்தவல்லி.
இஸ்லாம் கோகினூர் வைரமாய் பிரகாசித்தது.