அழகிய மினார்களுடன் அந்தப் பள்ளிவாசல் கம்பீரமாய் நிமிர்ந்திருந்தது. ஒரு மினாரின் உச்சியில் பச்சைநிறக் கொடி பறந்தது.
பள்ளிவாசலின் வெளிவாசலில் ஒரு சிறுவன் வந்து நின்றான். அவனின் பெயர் கேசவன். வயது பத்து, ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். சிரித்த முகம். கார்ட்டூனிஸ்ட் மதனின் ரெட்டைவால் ரெங்குடு கதாபாத்திரம் போலவே இருப்பான். குறும்பானவன். இணக்கமானவன். பார்த்த நொடியிலேயே நூறு வருட அன்யோன்யம் குழைத்துப் பேசுவான். எல்லாரையும் எதாவது ஒரு உறவு முறைச் சொல்லால் அழைப்பான். தாத்தா, பாட்டி, அங்கிள், ஆன்ட்டி, அண்ணா, தம்பி இப்படி...
கேசவன் சைக்கிளில் வந்திருந்தான். சைக்கிளின் பின்புறம் ஒரு மீன் தொட்டி கட்டப்பட்டிருந்தது.
“பாய்! பாய்! பள்ளிவாசலுக்குள்ள யாராவது இருக்கீங்களா?”
பலமுறை கூவியபிறகு மோதினார் வெளிப்பட்டார்.
“அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாசாமி!”
“வஅலைக்கும் ஸலாம். நான் அல்லாசாமி அல்ல. தொழுகைக்கு பாங்கு சொல்லி அழைக்கும் மோதினார்!”
“நீங்கதான் இந்தப் பள்ளிவாசலுக்கு ஹெட்டா?”
“ஏன்ப்பா கேக்கற?”
“சொல்லுங்க மோதினார்!”
“எனக்கு மேலே இமாம் இருக்கிறார். இமாமுக்கு மேலே முத்தவல்லி இருக்கிறார். நாங்கள் மூவரும் அல்லாஹ்வின் அடிமைகள்!”
“முத்தவல்லியையும் இமாமையும் கூப்பிடுங்க... நான் அவங்ககிட்டப் பேசனும்!”
“என்ன விஷயமாக இருந்தாலும் என்கிட்டச் சொல்லு நான் அவங்ககிட்டச் சொல்லிக்கிறேன்!”
“ஸாரி மோதினார்... தலைமைகிட்டதான் பேசுவேன்!”
கைபேசி எடுத்து இருவரையும் அழைத்தார் மோதினார்.
இமாமும் முத்தவல்லியும் வந்து சேர்ந்தனர்.
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“ரொம்ப அழகா ஸலாம் சொல்றியேப்பா.. எங்கயிருந்து கத்துக்கிட்ட?”
“என் முஸ்லிம் பிரண்ட்ஸ்கிட்டயிருந்து!”
“உன் பெயர் என்ன?”
“கேசவன்!”
“நீ கூப்பபிட்ட நாங்க வந்துட்டோம்... எதுக்காகக் கூப்ட்ட?”
“பள்ளிவாசலில் தொழுறவங்க தொழப் போறதுக்கு முன்னாடி கைகால் முகம் கழுவுவாங்களாமே...”
“ஆமா...”
“தொழுகையாளிகள் மூஞ்சி கை கால் கழுவுறதுக்கு உங்கப் பள்ளிவாசல்ல ஒரு தடாகம் இருக்குமாமில்ல...?”
“ஆமா... அந்த நீர்த் தடாகத்தை ஹவுஜ்னு சொல்வோம்…”
“ஹவுஜ், பெரும்பாலும் சதுரமாகத்தான் இருக்கும். ஆழம் தேவையையும் பாதுகாப்பையும் பொறுத்தது...”
“ஹவுஜ்ல மீன் விட்ருக்கீங்களா...?”
“ஒன்றிரண்டு மீன்கள் இருக்கும்!”
“என்னுடைய ஹாபி என்ன தெரியுமா? மீன்தொட்டிலில் வண்ணவண்ண மீன் வளர்க்கிறதுதான்...”
“சரி அதுக்கென்ன?”
“நான் சைக்கிள்ல ஒரு மீன்தொட்டி கட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். அதில பத்து வகை வளர்ப்பு மீன்கள் ஜோடிஜோடியாக் கொண்டு வந்திருக்கிறேன் பார்க்கிறீர்களா...?”
“காட்டு!”
“இதோ தங்கநிற மீன்.. இது பெயர் ‘கோல்ட்பிஷ்’. ரொம்ப அமைதியானது தொட்டில வளர்றதை விட ஹவுஜ்ல வேகமாப் பெருசா வளரும்!”
“உன்னுடைய வளர்ப்பு மீன்களை எங்ககிட்ட விக்க வந்தியாக்கும்”
“அவசரப்படாதிங்க... இந்த வகை மீனை பீட்டாஸ் என்பாங்க. குட்டியா துறுதுறுப்பா கறுப்பா இருக்ற, இந்த மீனை ‘குப்பீஸ்’ என்பாங்க. இது ரெயின்போ ஸார்க். கருநீல நிறத்தில் இருக்கிறது ‘பிளிகோஸ்’ மேல நீலம் கீழ சிவப்பு நிறம் உள்ள மீன்கள் ‘கார்டினல் டெட்ராஸ்’ கறுப்பு வெள்ளை கோடுகள் கொண்ட ஏன்ஜல் பிஷ். மஞ்சள் கறுப்பு நிறத்தில் நீந்தும் மோபீஸ். தலைநுனியில் உருண்டை உள்ள பிளவர் ஹார்ன்ஸ் மொத்தத்தில் பத்துவகை ஜோடி வளர்ப்பு மீன்கள் கொண்டு வந்திருக்கேன். சிலவகை மீன்களை சிலவகை மீன்களோடு ஜோடி சேக்கக் கூடாதுன்னுவாங்க. அது தண்ணி தொட்டில ஹவுஜ் மிகப்பெரிய நீந்துமிடம். அதது நீந்த, வாழத் தகுந்த இடமிருக்கு!”
“நீ கொண்டு வந்திருக்கும் மீன்களை என்ன செய்யனும்ன்ற?”
“சரியான கேள்வி. நான் இந்த மீன்களைப் பள்ளிவாசல் நீர் தடாகத்துக்குப் பரிசளிக்க விரும்புகிறேன்!”
“இந்த மீனெல்லாம் என்ன விலை பெறும்?”
“எட்டாயிரம் பத்தாயிரம் பெறும்!”
“பத்து வயசு பையனுக்கு இது பெரிய தொகை இல்லையா?”
“தினம் அஞ்சுநேரம் முஸ்லிம் மக்கள் சாமி கும்பிட வருவாங்க. ஒரு நேரத்துக்கு 200பேர்னா அஞ்சு நேரத்துக்கு ஆயிரம் பேர். ஆயிரம் பேர் உபயோகிக்கிற நீர் தடாகத்தை நான் கொடுக்கிற மீன்கள் தினம்தினம் சுத்தப்படுத்தும் அல்லவா? அந்த சந்தோஷம் கோடி ரூபாயை விடப் பெருசு... நான் கொடுக்கற மீன்கள் குட்டி போட்டு குட்டி போட்டு பெருகிக்கிட்டே இருக்கும்தான். நான் பெரியவனாக ஒருநாள் சாகிற வரைக்கும் ஏன் அதுக்குப் பிறகும் கூட இந்த மீன்கள் என் பேரை சொல்லிக்கிட்டே இருக்கும்...”
“ஏ அப்பா... என்னம்மா சிந்திக்கிற?”
“நன்றி!”
“நாங்க இந்த மீன்களை வாங்க மறுத்திட்டா?”
“வருத்தப்படுவேன்... அழுவேன்!”
“நாங்க எதாவது காசு குடுத்தா வாங்கிக்கிவியா?”
“மாட்டேன்!”
காட்சியமைப்புக்குள் ஒருமஹல்லாவாசி உட்பட்டார். அவர் கேசவனைப் பிடித்து முன்னும் பின்னும் திருப்பி பார்த்தார்.
“நீ மாரிமுத்து மகன் கேசவன்தானே?”
“ஆமா...”
வந்தவர் முத்தவல்லியிடம் திரும்பினார். “எதுக்காக இவன் இங்க வந்திருக்கிறான்?”
“அவனோட வளர்ப்பு மீன்களை நம்ம ஹவுஜ்க்கு பரிசளிக்க விரும்புகிறான்!”
“போனவாரம் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது ஒரு நபர் குறுக்கேப் புகுந்து இஸ்லாமைப் பற்றி அவதூறாகப் பேசினார். நாம் போலீஸுக்கு போன் செய்தோம். போலீஸ் அவரை பிடித்துப் போனது. மூன்று நாள் லாக்கப்பில் இருந்த அவர் நேத்து ஜாமீன்ல வந்திட்டார். அவருடைய மகன்தான் இந்தப் பையன் கேசவன். இவனை நம்பாதிங்க... இவன் கொடுக்கிற மீன்களை வாங்காதிங்க...!”
“ஆமா... நான் மாரிமுத்துவின் மகன்தான். தந்தை செய்த தப்புக்கு பிராயசித்தம் தேடி வந்தேன். என் தந்தையின் சார்பாக நான் மன்னிப்பு கேக்கிறேன். என் தந்தையை மன்னித்து விடுங்கள். காவல் நிலைய அதிகாரிகளும் என் தந்தையின் நண்பர்களும் என் தந்தைக்குத் தகுந்த அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். என் தந்தையை நீங்கள் மன்னித்து விட்டீர்கள் என்றால் அவர் மீதான புகாரை வாபஸ் பெறுங்கள்...!”
இமாம்! முத்தவல்லி, மோதினார் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“பிற மதங்களை நம்புகிறோமோ இல்லையோ, மதிக்கக் கற்றுக் கொள்வோம். உன் தந்தையின் மீது எங்களுக்குக் கோபமில்லை. உடனேப் புகாரை வாபஸ் பெறுகிறோம்!”
“நன்றி!”
“நீ கொண்டு வந்த மீன்களை இப்போதே ஹவுஜில் விடலாம்...”
“மிக்க நன்றி சிறு வேண்டுகோள்...”
“என்னப்பா?”
“தினம் ஒரு முறையாவது ஹவுஜில் இட்ட மீன்களை வேடிக்கை பார்க்க நான் வருவேன் அனுமதிப்பீர்களா...?”
“தாராளமாக வா...”
“மீன் உணவு போட அனுமதிப்பீர்களா?”
“போட்டுக் கொள்!”
மீன்களைக் கொண்டு போய் நீர்த் தடாகத்தில் விட்டான் கேசவன். மீன்கள் பல திசைகளில் பாய்ந்து நீந்தின.
புகாரை வாபஸ் பெற்றுக்கொண்ட இமாம், இஸ்லாம் பற்றிய இரு புத்தகங்களை மாரிமுத்துவிடம் கையளித்தார்.
“நாங்கள் எப்படித் தொழுகிறோம் என்பதை பார்க்க விரும்பினால் பின்வரிசையில் நின்று பாருங்கள் தம்பி... எங்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை... மதங்களால் நாம் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனிதநேயத்தால் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்…” என்றபடி கை குலுக்கினார்.